அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 47 –சாரங்கி – சரவண பிரபு ராமமூர்த்தி


சாரங்கி: நரம்புக்கருவி


சாரங்கி என்கிற நரம்பிசைக் கருவி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ளது. பயன்பாட்டில் இல்லை. ”தல விருட்சம் மூங்கில், ஆகமம் காமிக ஆகமம், இசைக்கருவி சாரங்கி ” என்பது இக்கோவில் பற்றியக் குறிப்பு. வயலின் போன்ற தோற்றமுடையது சாரங்கி இசைக்கருவி. 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கருவி மாலைப் பூசையின் போது நெல்லையப்பரின் உற்சவர் மண்டபத்தில் வாசிக்கப்பட்டது. தென் தமிழ்நாட்டில் உள்ள ஓதுவார்கள் இக்கருவியை தேவாரம் பாடும் பொழுதும் இசைத்ததாகத் தெரிகிறது. ”ஓதுவார் மரபு” என்கிற நூல் இந்த செய்தியைத் தெரிவிக்கின்றது. தற்பொழுது சுவடே தெரியாமல் மறைந்து விட்டது. 19ஆம் நூற்றாண்டின் மதுரகவி பாஸ்கர ராஜா நாட்குறிப்புகளின்படி மதுரையில் பல சாரங்கி கலைஞர்கள் இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தஞ்சையில் சாரங்கித் தெரு என்று ஒரு தெருவே உள்ளது.  ராஜஸ்தானில் இருந்து மராத்தியர் வழியே இக்கருவி  தஞ்சைக்கும் பிறகு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.  வேறு சிலர் இல்லை

இது தமிழரின் இசைக்கருவி தான் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும்
சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன் வடபகுதியில் இசைக்கப்பட்டு தற்போது வழக்கொழிந்து போன ஒரு நரம்பு இசைக்கருவியாக சாரங்கி விளங்கியதாத் தெரிகின்றது. இத்தகைய பழமை வாய்ந்த சாரங்கி ஒன்று அராலி பகுதியில் பழமையை பாதுகாக்கும் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அதை மாதிரியாக வைத்து ஆச்சாரியார் அமரசிங்கம் நர்த்தனன் என்பவர் சாரங்கியை மீளுருவாக்கம் செய்துள்ளார்.  

சாரங்கியை ஒத்த ஒரு மிகவும் தொன்மையான இசைக்கருவி கேரளத்தில் புழக்கத்தில் உள்ளது. சாரங்கியை விட அமைப்பில் மிகவும் எளியது இக்கருவி. புள்ளுவன் வீணை என்று பெயர். புள்ளுவன் பாட்டு மற்றும் சர்ப்பம் துள்ளல் ஆகிய சடங்கியல் கலை வடிவத்தில் புள்ளுவன் வீணையும் புள்ளுவன் குடம் என்கிற மண் இசைக்கருவியும் இசைக்கப்படும். வயலின் போன்று இது வில் போன்ற பகுதியால் மீட்டி இசைக்கப்படும்.

 

காணொளி:

https://www.youtube.com/watch?v=JJY4yeC9_8I

 

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

No comments: