மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
இருபதே சென்றுவா
இருபதொன்றே நன்றுவா
வந்திடும் கொரனாவை 
வராதுமே செய்துவா  !

நல்லன அளிக்கவா
வல்லன கொடுக்கவா
வெல்லுவோம் என்றிடும்
வீரத்தை உணர்த்தவா  !

மதுவினை ஒழிக்கவா
மங்கையர் காக்கவா
சதிகளை தடுக்கவா
சன்மார்க்கம் நிலைக்கவா !

அரசியல் சிறக்கவா
ஆட்சிகள் நிலைக்கவா
கயமைகள் விரட்டவா
கண்ணியம் காக்கவா  !

உழவர்கள் உயரவா
உழைப்பவர் சிரிக்கவா
கயவர்கள் ஓடவா
காமுகர் மடியவா  !

ஆணவம் அகலவா
ஆன்மீகம் பெருகவா
நாடெலாம் நலமுடன்
நாளுமே இருக்கவா   !

கற்றிடும் மாணவர்
கல்வியில் உயரவா
பெற்றவர் வாழ்விலே
பெருஞ்சுமை குறையவா  !

மழைவளம் சிறக்கவா
வரட்சியை விரட்டவா
மாநிலம் எங்கணும்
மங்கலம் பொங்கவா   !

No comments: