உலகச் செய்திகள்


மலேசியாவின் லங்காவி தீவு அருகே ரொஹிங்கியர்கள் உயிருடன் மீட்பு

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபிற்கு 12 ஆண்டு சிறை

சென்டு நகர துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்

சீனாவின் 5 பிராந்தியங்களில் புதிய வைரஸ் கொத்தணிகள்

ஜெர்மனியில் இருந்து 12,000 அமெரிக்க துருப்புகள் வாபஸ்

விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு


மலேசியாவின் லங்காவி தீவு அருகே ரொஹிங்கியர்கள் உயிருடன் மீட்பு
மலேசியாவின் லங்காவி தீவு அருகே கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்பட்ட ரொஹிங்கிய அகதிகள் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் ஒரு சிறிய தீவிலிருந்த புதருக்குள் மறைந்திருந்ததாக மலேசியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிறன்று லங்காவி எல்லையில் சிறிய படகில் அகதிகள் சிலர் மலேசியாவிற்குள் செல்ல முயன்றனர். கள்ளத்தனமாக கடலில் இருந்து அவர்கள் கரைக்குச் செல்ல முயன்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சினர்.
ஆனால், அகதிகள் சிறிய தீவுக்குள் மறைந்து இருந்ததை தேடல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட ரொஹிங்கிய அகதிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் தொடர்பில், ரொஹிங்கிய அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அகதிகள் பெரிய படகில் இருந்து சிறிய படகிற்கு மாற்றப்பட்டு நாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழையத் திட்டமிடுவதாக அதிகாரிகள் கூறினர்.
மியன்மாரில் அடக்குமுறையை எதிர்கொள்ளும் ரொஹிங்கிய அகதிகளில் பெரும்பாலோருக்கு விருப்பமான புகலிடமாக மலேசியா கருதப்படுகிறது.
மலேசியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு இல்லை என்று தெரிந்தும் ரொஹிங்கிய அகதிகள் தொடர்ந்து கள்ளத்தனமாக அங்கு செல்ல முயன்று வருகின்றனர்.    நன்றி தினகரன் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபிற்கு 12 ஆண்டு சிறை
பல மில்லியன் டொலர்கள் கொண்ட ஊழல் வழக்குகளில் முதல் ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றங்காணப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது 12ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  
1மலேசிய அபிவிருத்தி பெர்ஹத் நிதியத்தின் நிதியில் இடம்பெற்ற திருட்டு தொடர்பிலேயே அவர் மீதான முதல் வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 210மில்லியன் ரிங்கிட் அபராதம் வழங்கவும் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.  
“இந்த வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கில் குற்றச்சாட்டுகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருப்பதை நான் கண்டறிந்தேன்” என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முஹமது மஸ்லான் முஹமது கசாலி அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.  
சுமார் ஈராண்டுகளுக்குப் பின்னர் நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகப் பல்வேறு நபர்களிடம் 1எம்.டி.பி முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். 
அதனையடுத்து முதல் ஊழல் வழக்கில் நஜிப் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.  
2009தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 42மில்லியன் ரிங்கிட் தொகை பரிமாற்றப்பட்டதை மையமாகக் கொண்டதாகவே நேற்றைய வழக்கு இருந்தது.  
எனினும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த நஜிப், நீதி ஆலோசகர்களால் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக தெரிவித்தார். நிதி மோசடி தொடர்பில் நஜிப் மேலும் சில வழக்குகளையும் எதிர்நோக்கியுள்ளார்.    நன்றி தினகரன் 


சென்டு நகர துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்
சீனாவுடனான முறுகல்
சீனா விடுத்த 72 மணி நேர காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து சென்டு நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராஜதந்திர பணியாளர்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.
அமெரிக்கா, ஹ_ஸ்டன் நகரில் இருக்கும் சீனத் துணைத் தூதரகத்தை கடந்த வாரம் மூடியதற்கு பதில் நடவடிக்கையாகவே அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டது. 
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலக்கெடு முடிவதற்கு முன்னர் அந்தக் கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறியதோடு, பெயர் பலகை அகற்றப்பட்டு, அமெரிக்க தேசிய கொடி கீழிறக்கப்பட்டது.காலக்கெடு முடிந்ததை அடுத்து சீன ஊழியர்கள் கட்டடத்திற்குள் நுழைந்ததாக சீன வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த 35 ஆண்டுகளாக திபெத் உட்பட மேற்கு சீனாவில் மக்களுடன் எமது தூதரகம் மையமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எமக்கு ஏமாற்றத்தை தருவதோடு சீனாவில் எமது ஏனைய தளங்கள் மூலமாக இந்த முக்கியமான பிராந்திய மக்களுக்கு எமது பயணத்தை தொடர முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க துணைத்தூதரகம் மூடப்பட்டபோது அங்கு உள்ளூர் குடியிருப்பாளர்கள் ஒன்று திரண்டு சீன கொடியை அசைத்தபடி செல்பி படங்களும் எடுத்துக் கொண்டனர்.  ஹஸ்டனில் இருக்கும் சீன துணைத் தூதரகம் ஒரு வேவு பார்க்கும் மையமாக இயங்குவதாக குற்றம் சுமத்தியே அமெரிக்கா அதனை மூட உத்தரவிட்டிருந்தது.   
பல விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு அண்மைக்காலத்தில் விரிசல் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி தினகரன் சீனாவின் 5 பிராந்தியங்களில் புதிய வைரஸ் கொத்தணிகள்
வட கிழக்கு சீனாவில் துறைமுக நகர் ஒன்றில் தோன்றிய புதிய கொரோனா வைரஸ் கொத்தணி ஏனைய மாகாணங்களுக்கு பரவி இருக்கும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றை கடுமையான முடக்க நிலை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த நாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
எனினும் அண்மைய வாரங்களில் சிறிய அளவிலான நோய்த் தொற்று சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சீனாவில் புதிதாக 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரல் தொடக்கம் நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையாக உள்ளது.
இதில் 57 பேர் வடமேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு தலைநகரான உரும்கியில் கடுமையான முடக்க நிலை அமுபடுத்தப்பட்டு மில்லியன் கணக்கான குடிமக்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாலியன் துறைமுக நகரில் ஆறு புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த கொரோனா கொத்தணி தற்போது ஐந்து பிராந்தியங்களில் ஒன்பது நகரங்களுக்கு பரவி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   நன்றி தினகரன் 


ஜெர்மனியில் இருந்து 12,000 அமெரிக்க துருப்புகள் வாபஸ்
ஜெர்மனியில் உள்ள சுமார் 12,000 அமெரிக்கத் துருப்புகளையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.  
ஐரோப்பாவில் அமெரிக்கத் துருப்புகளை வேறு இடத்தில் நிலைநிறுத்தும் ஒரு மூலோபாயத் திட்டமாக அமெரிக்கா இதனை வர்ணித்துள்ளது. இதன்படி சுமார் 6,400 துருப்புகள் அமெரிக்கா திரும்பவிருப்பதோடு ஏனையவை இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நேட்டோ நாடுகளில் நிலைநிறுத்தப்படவுள்ளன.  
பாதுகாப்புச் செலவு தொடர்பிலான நேட்டோவின் இலக்கை ஜெர்மனி பூர்த்தி செய்யத் தவறியதற்கான பதில் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனார்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  
எனினும் இதற்கு அமெரிக்க கொங்கிரஸ் அவையில் பரந்த அளவில் எதிர்ப்பு வெளியாகி இருப்பதோடு இது ரஷ்யாவின் பலத்தை அதிகரிக்கு என்று குறிப்பிட்டுள்ளது.  
இது தொடர்பில் ஜெர்மனி மூத்த அதிகாரிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.  
“இனியும் நாம் அவர்களுக்காக உறிஞ்சுபவர்களாக இருக்க முடியாது” என்று கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து இந்த முடிவை அறிவித்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.     நன்றி தினகரன் 


விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்குவிராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு-Virat Kohli-Tamannaah-Cricket Gambling
"இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களில் நடித்த கோலி, தமன்னா போன்றோரைக் கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4-ம் திகதி நடைபெறவுள்ளது.   நன்றி தினகரன் 


No comments: