எமது தாயகம் இலங்கையில், எழுத்தாளர்கள் – கலைஞர்கள்
மத்தியில் இலக்கியம் மற்றும் கலைத்துறைப்பணிகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அரச மட்டத்தில் பாராட்டு விருதுகள் வழங்கப்படுவதை அறிவீர்கள்.
அதற்காக இலங்கை கலாசார அமைச்சினால் சாகித்திய மண்டலம் என்ற அமைப்பும் தோன்றியிருந்தது. இந்த அமைப்பு கலாசார திணைக்களத்தின் கீழ் வருகிறது.
1967 ஆம் ஆண்டு நான் எழுதியிருந்த கிறீனின் அடிச்சுவடு என்ற நூலுக்கும் சாகித்திய விருது கிடைக்கவிருப்பதாக ஒரு செய்தி எனது காதில் விழுந்தது. அச்செய்தி நம்பகமாகவும் இருந்தது.
கலாசார திணைக்களத்தில் செயலாளராக அச்சமயம் பணியிலிருந்தவர் கே.ஜி. அமரதாச. இவர் தமிழ் அபிமானியாவார். தானாகவே தமிழை கற்றுக்கொள்ளவும் பேசவும் விரும்பியவர்.
பின்னாளில் இவர், மகாகவி பாரதியாரின் சில கவிதைகளையும் சிங்கள மொழியில் பெயர்த்தவர். இவர் பற்றி எனது நண்பர் முருகபூபதி எழுதிய கட்டுரைகள் மும்மொழியிலும் வெளிவந்துள்ளதையும் அறிவேன்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுடனும் நல்லுறவுகொண்டிருந்தவர்தான் அமரதாச.
ஒரு நாள் அவர், கொழும்பில் என்னை வீதியோரத்தில் கண்டுவிட்டு, “ அம்பி… உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. விரைவில் அச்செய்தி உங்களைத் தேடி வரும் “ என்று புதிர்போட்டார்.
“ என்னவென்று சொல்லுங்கள் ? “ எனக்கேட்டேன்.
“ அம்பி, நீங்கள் எழுதியிருக்கும் கிறீனின் அடிச்சுவடு புத்தகத்தை சாகித்திய மண்டலம் பரிசுக்குத் தெரிவுசெய்துள்ளது. விரைவில் உங்களுக்கு கடிதம் வரும். “ என்றார்.
“ அப்படியா… சரி…. வரும்போது வரட்டும் “ என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்துவிட்டு அகன்றேன்.
ஆனால், அவர் சொன்னவாறு எனக்கு கடிதம் ஏதும் வரவேயில்லை. நான் அதற்காக காத்திருக்கவும் இல்லை.
பின்னர்தான் அந்த சாகித்திய மண்டலத்திற்குள் என்ன நடந்திருக்கிறது…? என்பதை என்னால் அறியமுடிந்தது.
எனது நூல் சாகித்திய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது உண்மைதான் என்பதை தெரிந்துகொண்டேன். அந்த அமைப்பின் செயலாளர் பொய் சொல்லியிருக்கமாட்டார்.
அவ்வேளையில் அந்தப்பரிசின் தொகை ஆயிரம் ரூபாதான். பண்டிதமணி அவர்களுடைய நூலும் தெரிவுக்குட்பட்டிருந்ததனால், அந்த ஆயிரத்தை ஏன் பிரித்து அம்பிக்கும் பண்டிதமணிக்கும் கொடுக்கவேண்டும் என்று யோசித்துள்ளார்கள். அதனைவிட, பண்டிதமணி என்ற ஒரு பெரிய மனிதருக்கும் என்னைப்போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கும் ஒரே சமயத்தில் பரிசு கொடுப்பதா…? என்றும் அந்த மண்டலத்திலிருந்த சிலர் பேசியிருக்கிறார்கள்.
இச்செய்தியும் எனது காதுக்கு எட்டியது.
“ யாரொடு நோவேன்…. யார்க்கெடுத்து உரைப்பேன் “
நாம் பரிசுகள், விருதுகள் எதிர்பார்த்து கலை இலக்கியத்துறைக்கு வரவில்லை. எங்கள் மகா கவி பாரதிக்கு யார் விருதும் பரிசும் கொடுத்தார்கள்…?! நாமும் அவர் போன்று எழுத்து எமக்குத் தொழில் என்ற வாழ்வதற்கு வந்தவர்கள்தானே..?
பல வருடங்களுக்குப்பின்னர், கொழும்பு தமிழ்ச்சங்கம் எனது கொஞ்சும் தமிழ் என்ற நூலை வெளியிட்டது. அச்சங்கத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் 21 ஆவது வெளியீடாகவும் எனது நூல் வெளிவந்தது.
அதற்கு தமிழ் அறிஞர் க . சச்சிதானந்தன் எழுதிய கண்ணோட்டம் இதுதான்:
தமிழில் குழந்தைக்கவிதையின் வளர்ச்சியிலே ‘அம்பி என்ற சொல் ஒரு முக்கியமான இடத்தைப்பற்றிக்கொண்டது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே அது ஒரு ஒப்பற்ற இடத்தை எடுத்துக்கொண்டது. அம்பியின் குழந்தை பாடற்றொகுதியின் முன்னைய வெளியீட்டை முழுமையாகப் படித்துச்சுவைக்கும் பாக்கியம் பெற்ற எனக்கு, கையெழுத்துப்பிரதியில் தோன்றும் இந்தப்பாடற்றொகுதி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
முதலாவதாக குழந்தைக் கவிதைகளில் பல அம்சங்கள் இங்கு காணப்படுகின்றன. எடுக்கப்பட்ட பாடல்கள் குழந்தைகளின் நாட்டப் பொருள்களையே மையமாகக் கொண்டன. சிட்டு, மாரி, அழகு நிலவினிலே, விண்மணி, காலைப்பொழுது, பாமாவின் வீமா, பட்டம் ஆகியன இதற்கு எழுமானமாகக் காட்டக்கூடிய சில உதாரணங்களாகும்.
இரண்டாவதாக கவிதைகளில் அமைந்த மொழி, பிள்ளைப்பருவத்தில், ஏழு வயது வரையுள்ள சிறாரின் சொற்களஞ்சியத்தையும் மொழி அமைப்பையும் கொண்டது வியக்கத்தக்கதாகும். அடிதோறும் கருத்து முற்றுவது பிள்ளைகளின் இயல்புக்கு மிகப்பொருத்தமானது.
மூன்றாவதாக, பாடல்களின் வரி நீளம் குழந்தைகளின் கவன எல்லைக்குட்பட்டதாகவும், குழந்தை உளவியலின் அடிப்படைத் தத்துவத்தை மனதிற் கொண்டும் பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
நான்காவதாக, ஒவ்வொரு பாடலின் மொத்த நீளம் குழந்தை உள்ளத்திற்கு ஏற்றதாக உள்ளது.
ஐந்தாவதாக, ஒவ்வொரு பாடலும் புதுமையான
அமைப்பைக்கொண்டதாகும். மாரி, பறவைகள், பட்டம் என்பன மூன்றும் பலரால் எடுக்கப்பட்ட விடயங்களாயினும் இப்பொழுது அவை புதுமை வடிவத்தில் இங்கு ஆக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
ஒளி அடித்தது மின்னல்
இடி இடித்தது வானம்
துளி விழுந்தது தொப் தொப்
தூறல் மழைத்தூறல்
என்று வீண் சொற்களும், தேவையற்ற வருணனைகளும் இல்லாமல், மழைக்குரிய பிள்ளைகளின் மனப்பாடத்தை மிகவிரைவாகவும் தத்ரூபமாகவும் தீட்டுகிறார்.
தலை சுழன்றது தென்னை
தலை கவிழ்ந்தது வாழை
இலை சருகுகள் எல்லாம்
எடுத்துச் சென்றது வெள்ளம்
மாரி வந்தது மாரி
மாரி வந்தது மாரி
என்று மாரிக்கான மனப்பாடத்தை எவ்வளவு அழகாக கொண்டு வருகிறார்.
இவ்வாறு சொல்லிக்கொண்டு செல்கிறார் பண்டிதர் சச்சிதானந்தம்.

“ தமிழ் வளர்ச்சிக்காக பணிபுரியும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் பல்துறை பணிகளுள் நூற் பதிப்புப்பணியும் ஒன்றாகும். பயனுள்ள இருபது நூல்களை இச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்நூல், இச்சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவில் வெளிவருகிறது.
இந்நூலில் ஆசிரியர் கவிஞர் அம்பி அவர்கள் ‘அம்பிப்பாடல் ‘ நூல் மூலம் சிறந்த குழந்தை இலக்கிய கவிஞராக புகழ்பெற்றவர். ‘அம்பி பாடல் ‘ வெளிவந்தபின் ‘கொஞ்சும் தமிழ் ‘என்னும் இக்குழந்தை இலக்கிய நூலை எழுதினார்.
தமிழில் குழந்தை இலக்கியத்துறை வளர்வதற்காகத் தமிழ் வளர்ச்சியிலும் மிக்க ஆர்வம் உள்ள அம்பி அவர்கள் இந்நூல் இச்சங்கத்தின் வெளியீடாக வெளிவருவதற்கு அனுமதி வழங்கினார். இந்நூலை இச்சங்கம் வெளியிடுவதிற் பேருவகை எய்துகிறது. “
தமிழவேள் கந்தசுவாமி அவர்கள் 2008 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இன்றும் அவர் எனது நெஞ்சத்தில் வாழ்கிறார்.
அவராலும் பண்டிதர் சச்சிதானந்தம் அவர்களாலும் புகழாரம் பெற்ற எனது கொஞ்சும் தமிழ் நூலுக்கு இலங்கையில் சாகித்திய விருதும் பரிசும் 1992 ஆம் ஆண்டு கிடைத்தது.
அதனை எனக்கு வழங்கியவர் அச்சமயம் இலங்கை ஜனாதிபதியாக இருந்த திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க. கலாசார அமைச்சராகவிருந்தவர் திரு. லக்ஷ்மண் ஜெயக்கொடி. சாகித்திய மண்டல உறுப்பினர் பேராசிரியர் தில்லைநாதனும் அந்நிகழ்வில் உடனிருந்தார்.
அந்த சாகித்திய விருதை பெறுவதற்கு நான் சென்றிருந்தபோது, எனது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
1967 ஆம் ஆண்டில் கிடைத்திருக்கவேண்டிய அந்த விருது காலம் கடந்து 1992 ஆம் ஆண்டில் நான் எதிர்பார்க்காமலே குழந்தை இலக்கியத்திற்கு கிடைத்தது.
மருத்துவ தமிழ் முன்னோடி கிறீன் பற்றி எழுதி, அதற்கு சாகித்திய விருது கிட்டாது போயிருந்தாலும், பின்னாளில் கிறீனின் கல்லறையை அமெரிக்காவுக்கு சென்று பார்த்ததையும் அவருக்காக நினைவு முத்திரை வெளியிடுவற்கு ஆக்கபூர்வமாக உழைத்ததையும் , கொழும்பிலிருந்த அமெரிக்கத்தூதரகம் என்னை அழைத்து பாராட்டி உபசரித்து கௌரவித்ததையும் இப்பொழுது நினைத்துப்பார்க்கும்போது, இதுதான் விதியா…? என்றும் யோசிக்கத்தோன்றுகிறது.
அன்று, குழந்தை இலக்கியத்திற்காக நான் விருது பெற்றபோது, எனக்கிருந்த இதயத்துடிப்பு என்ன தெரியுமா..?
எமது குழந்தைகள் இனிய தமிழ் பேசவேண்டும். பேசப்பழகவேண்டும். இனிமையாகப் பேசி மகிழவேண்டும்.
நீங்கள் இனிய பாடல்கள் பாடவேண்டும். பாடப் பழகவேண்டும். இனிமையாக பாடி மகிழவேண்டும்.
நீங்கள் பாடல்கள் பாடி ஆடவேண்டும். பாடி ஆடப்பழக வேண்டும். பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும்.
நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும். அபிநயம் செய்யப்பழக வேண்டும். அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும்.
நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது, அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். புதிய சொற்களையும் அறிதல்வேண்டும்.
புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறல் வேண்டும்.
( தொடரும் )
No comments:
Post a Comment