எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 03 விமர்சனங்கள் – எதிர்வினைகளின் ஊடாக பயணித்த படைப்புகள் ! முருகபூபதி


எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் 1972 ஜூலை மாதம் முதல் வாரத்தில் மல்லிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது கதையாக நான் எழுதியது அந்தப்பிறவிகள்.
இச்சிறுகதையும்  நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்  சமூகத்தின் பேச்சுவழக்கிலேயே அமைந்திருந்தது. இதனை பூரணி காலாண்டிதழுக்கு அனுப்பியிருந்தேன்.
அதனை மூலப்பிரதியிலேயே படித்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழின் ஆசிரிய பீடத்திலிருந்த நண்பர் மு. கனகராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மற்றும் ஒரு சிறுகதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். அதன்பெயர் தரையும் தாரகையும். இச்சிறுகதையும் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி வெளியானது.
பூரணி காலாண்டிதழ். ஆகையால் அதற்கு அனுப்பியிருந்த அந்தப்பிறவிகள் சிறுகதை, அதன் இரண்டாவது இதழிலேயே வெளியானது. அம்மாதம் ( 1972 )  ஒக்டோபர் என நினைக்கின்றேன்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக  அமைந்திருந்த ராஜேஸ்வரி பவானுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கேதான் ஈழத்து இலக்கிய இதழ்களையும் தமிழக நூல்களையும் வாங்குவேன். அதனால் அதன் உரிமையாளரின் புதல்வனும் எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவர் 1977 ஆம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்தின்போது வெள்ளவத்தையில் கொல்லப்பட்டார்.  அவரை 1972 முதல் நன்கு அறிவேன்.
பூரணி இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கும் தகவலையும் அவர்தான் எனக்குச்சொன்னார். அந்த சைவ உணவகத்தில் காசாளர் மேசைக்கு முன்பாக பரப்பி வைத்திருந்த இலக்கிய இதழ்களுக்கு மத்தியில் பூரணி இரண்டாவது இதழையும் கண்டு வாங்கினேன்.  அதன் முகப்பு அட்டையில் பெனடிக்ற் பாலன், சட்டநாதன், கிருஷன் சந்தர் ஆகியோருட்பட  நன்கு  அறியப்பட்ட  மேலும் சில   எழுத்தாளர்களின் பெயர்களுடன் எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டேன்.

அடுத்தடுத்து  எனது மூன்று சிறுகதைகள் மல்லிகை, புதுயுகம், பூரணி ஆகிய இதழ்களில்  வெளிவந்ததையடுத்து, எனது தாய் மாமாவின் மகள் தேவசேனாவும் ஒரு சிறுகதையை எழுதி பூரணி இதழுக்கு அனுப்பினார். அச்சிறுகதையும் நீர்கொழும்பு பிரதேச
மீனவர் சமூகத்தின் பேச்சுமொழியை இலக்கியத்திற்கு வரவாக்கியிருந்தது. அதன் பெயர் தேவைகளின் நிமித்தம்.
எமது மச்சாள் தேவசேனா, பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்தாற்றல் மிக்கவர். பாடசாலை மலர்களிலும் எழுதியிருக்கிறார்.  அவரது தமிழ் ஆசிரியரும் எழுத்தளாருமான தங்கரத்தினம் ( புனைபெயர் நகுலன் ) அவர்களும் ஏற்கனவே  கன்னிப்பெண்,  இப்படி எத்தனை நாட்கள்  முதலான சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருப்பவர்.
தினபதி நாளிதழ்  அக்காலப்பகுதியில் அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளை வெளியிட்டு வந்தமையால்,  தேவசேனாவின் ஒரு சிறுகதையும் ஆசிரியர் தங்கரத்தினம் அவர்களின் பரிந்துரையுடன்  தினபதியில் வெளியாகியிருந்தது.
எனது சிறுகதைகள்  எவருடைய பரிந்துரையுமின்றி அடுத்தடுத்து மூன்று இதழ்களில் வெளிவந்தமையால், எமது மச்சாள் தேவசேனா  எனக்கு தொடர்ந்தும் ஊக்கமளித்துவந்தார்.
எனது இலக்கிய வாழ்க்கையில் நான் இவரையும் மறக்கமுடியாது. இவர் பின்னாளில்,  1974 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்.
1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ் வெளியீட்டு அரங்கு எமது சூரிய வீதி இல்லத்தில் நடந்தபோது,  அவர்தான் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது மற்றும் ஒரு சிறுகதை -  அவர்கள் நடக்கிறார்கள் – புதுயுகம் இதழிலும் வெளிவந்திருக்கிறது.
அக்காலப்பகுதியில் மல்லிகையில், ஜீவா  தனது நீண்ட கால நண்பரும் இலக்கிய உலகில் அடங்காத பேரோசையாகவும் திகழ்ந்த ஜெயகாந்தனை கடுமையாக விமர்சித்து,  “ஒரு படைப்பாளியை பற்றி இன்னொரு சிருஷ்டியாளனின் பார்வை  “ என்ற தலைப்பில் ஒரு தொடரை எழுதுவதற்கு ஆரம்பித்திருந்தார்.
அந்தத் தொடர் நிறைய வாதப்பிரதிவாதங்களையும் எழுப்பியிருந்தன.  சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த அடிநிலை மக்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்து, ரகுநாதனின் சாந்தி மற்றும் விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, ஜீவானந்தத்தின் தாமரை முதலான இதழ்களில் எழுதிக்கொண்டிருந்த ஜெயகாந்தன், மத்தியதர  - மேல்மட்ட மக்கள் குறித்து ஆனந்தவிகடனில் முத்திரைக்கதைகள் எழுதத் தொடங்கியதும் ஜீவாவுக்கு வந்த ஆவேசம் எமக்கெல்லாம் வியப்பாகவிருந்தது!  ஜெயகாந்தனின் வர்க்கப்பார்வை குறித்து ஜீவா சந்தேகம் எழுப்பிவந்தார்.
ஜெயகாந்தனும்  அக்காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே வெளியிட்ட வண்ணமிருந்தார்.  ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் தோழர்கள் ஜீவானந்தம், பாலதண்டாயுதம் ஆகியோரின் நெருங்கிய தோழராக விளங்கிய ஜெயகாந்தன், ஆனந்தவிகடன் எழுத்தாளராக மாறியதும்,   “ தான் எந்தக்கட்சிக்கும் தாலி கட்டிக்கொண்டவன் அல்ல  “ என்று சுதந்திரமாக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசத் தொடங்கியிருந்த காலம்.
மல்லிகையில் ஜீவாவின் கருத்துக்களினால் கோபமுற்றிருந்த எங்கள் மச்சாள் தேவசேனா, தேவி என்ற புனைபெயரில் அந்தத் தொடருக்கு மல்லிகையில் எதிர்வினையாற்றியிருந்தார்.
ஜீவாவிடமிருந்த  மாற்றுக்கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும் நல்ல பண்பினால், அந்த எதிர்வினையும் மல்லிகையில் வெளியானது.  அதனைப்படித்திருந்த யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவரும் இலக்கிய வாசகருமான செல்வி ராஜம் தேவராஜன், ஜீவாவின் கருத்துக்களுக்கு  சார்பாக  தேவிக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.
இந்த ராஜம்தேவராஜன்தான், யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பிரபல சட்டத்தரணியாக விளங்கும் ரங்கன் தேவராஜனின் மூத்த சகோதரி. ராஜம்,  பின்னாளில் லண்டனுக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்.
எனினும் இதுவரை காலத்தில் தேவி என்ற தேவசேனாவும் ராஜம் தேவராஜனும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. பேசிக்கொண்டதும் இல்லை. பின்னாளில் நான்தான் யாழ்ப்பாணம் சென்றவேளையில் போதனா மருத்துவமனையில் ராஜம் அவர்களை சந்தித்து பேசியிருக்கின்றேன். அவரது தம்பி ரங்கன் வீரகேசரியில்  நான் பணியாற்றிய காலத்தில் எம்முடன் பணியாற்றிக்கொண்டே சட்டமும் படித்து சட்டத்தரணியானார்.
அக்காலப்பகுதியில்  இதழ்களில் எதிர்வினைகள் வருவதற்கு நாட்கள்,  வாரங்கள், மாதங்கள்… ஏன் காலாண்டு இதழ்களில் மூன்று  மாதங்கள்  கூட எடுக்கும். ஆனால், இன்றோ  மின்னஞ்சல் - முகநூல் – கலாசாரம் வந்தபின்னர் உடனுக்குடன் – மறுகணமே எதிர்வினைகள் அவதூறுகளுடனும் பொருளற்றும் தனிநபர் தாக்குதல்களாகவும் வெளிவருகின்றன.
பூரணியில் எனது அந்தப்பிறவிகள் சிறுகதை வெளியாகி சில நாட்களில் அதன் ஆசிரியர் என்.கே. மகாலிங்கம் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.
எனது அச்சிறுகதை குறித்து ஒரு எதிர்வினை எழுத்தில் வந்திருப்பதாகவும். அதனை அடுத்த பூரணி இதழில் வெளியிடுவதற்கு முன்னர், என்னை அழைத்து காண்பித்து எனது பதிலையும் சேர்த்து வெளியிட விரும்புவதாகவும் அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.
நான் அக்கடிதம் கண்டு,  மறுநாளே கொழும்பில் சப்பாத்துவீதியில் அமைந்திருந்த அவருடை வீட்டிற்குச்சென்று அக்கடிதத்தை வாங்கி வாசித்து ஆச்சரியப்பட்டேன்.
அந்தப்பிறவிகள் யாருடைய பிறவிகள்..? என்ற தலைப்பில் அந்த நீண்ட கடிதம் எழுதப்பட்டிருந்தது. கொழும்பு – 12 – பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து அநு. வை. நாகராஜன் என்பவர் எழுதியிருந்தார். அவர் ஆசிரியர் எனவும் இலக்கிய வாசகர் எனவும் கொழும்பு ரோயல் கல்லூரியில் பணியாற்றுபவர் எனவும் பூரணி ஆசிரியர் மகாலிங்கம் அப்போது சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
குறிப்பிட்ட அநு. வை. நாகராஜன் எனக்கு எதிராக வைத்திருந்த குற்றச்சாட்டின் சாராம்சம்:
தம்மஜாகொட என்ற பிரபல சிங்கள நாடக இயக்குநர்  சிங்கள பிரதேசங்கள் எங்கும்  பல தடவைகள் மேடையேற்றிய பிரபல்யமான நாடகமான மூதுபுத்து கதையைத்தான் நான் தழுவி அந்தப்பிறவிகள் சிறுகதையை எழுதியிருக்கின்றேன் என்றும், அந்த நாடகம் ஒரு மாஸ்டர் பீஸாக சிங்கள மேடைகளில் ஏறி மிளிர்ந்து கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் அக்கடிதத்தின் தொடக்கத்தில்,  “ பூரணி இதழ் இரண்டில் திரு. முருகபூபதி எழுதிய  ‘அந்தப்பிறவிகள்  ‘ படைப்பாற்றல் இலக்கிய வர்க்கத்தின் ஒரு சிறந்த கதை. வரவேற்கக்கூடிய ஒரு சிறப்பம்சம்  “ என்றும் பதிவுசெய்திருந்தார்.
அத்துடன் என்னை ஒரு வளர்ந்த எழுத்தாளன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த வரிகள் என்னை பேராச்சரியத்திற்குள்ளாக்கியது. அச்சிறுகதை நான் எனது வாழ்நாளில் எழுதிய இரண்டாவது கதை. அதற்குள் நான் எப்படி வளர்ந்த எழுத்தாளனாகிவிட்டேன்…?  என்று எனது ஐயப்பாட்டையும் நண்பர் மகாலிங்கம் அவர்களிடம் சொல்லிச்சிரித்தேன்.
 “ உங்கள் கதை அத்தகையது. முதிர்ச்சியுள்ள படைப்பாளிகளினால்தான் அக்கதைக்குரிய கருவை கையாளமுடிந்திருக்கும். அதனால்தான் எமது பூரணி ஆசிரியர் குழுவினரும் உடனடியாகவே அதனை பிரசுரத்திற்கும் ஏற்றுக்கொண்டோம்  “ என்றார் அவர்.
வாசகர் நாகராஜன் குறிப்பிடும் அந்த மூதுபுத்து நாடகத்தையோ, அதன் கதையையோ அதுவரையில் அறிந்ததே இல்லை. எங்கள் ஊரில் அது மேடையேற்றப்பட்டதாகவும் தெரியவில்லை.  நானும் மகாலிங்கமும் விசாரித்துப்பார்த்ததில், அந்த                       மூதுபுத்து  ( முத்துக்குமரார்கள் )  நாடகத்தை எழுதி இயக்கியவர் தம்மஜாகொட அல்ல. அதனை  எழுதி இயக்கியவர் குணசேனகலப்பத்தி என்ற பிரபல நாடகாசிரியர். அத்துடன் அந்த நாடகம் 1962 ஆம் ஆண்டிலிருந்து தென்னிலங்கையெங்கும் மேடையேறிவந்திருக்கிறது.
 கடலோரக்கிராமம் ஒன்றில் வாழும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த  அண்ணன் தம்பியின் கதை. தம்பியிடம் சோரம்போய்விட்ட தனது மனைவி  பெற்ற குழந்தையை  அது தம்பியின் குழந்தைதான் என்ற எண்ணத்தில்  அண்ணன் கொலை செய்துவிடும்  அழிவுவாதத்தை பிரகடனப்படுத்தும்  கதை.
எனது அந்தப்பிறவிகள் அத்தகையது அல்ல. முற்றிலும் வேறுபட்டது.  கணவனின் தம்பியால் கர்ப்பிணியாகிவிடும் தனது மனைவி மீது அவனுக்கு ஆத்திரம் வந்தபோதிலும்  அவளை வெறுக்காமல், தம்பியை வீட்டை விட்டு துரத்திவிட்டு, கர்ப்பிணி மனைவியை பராமரிக்கின்றான்.
பிறிதொரு நாள் தம்பிக்காரனை யாரோ ஒருவன் மீன்கடையில் தாக்கிவிட்டான் என அறிந்ததும்,   சகோதர பாசத்தினால், தம்பி செய்த துரோகத்தையும் மறந்து, தம்பியை தாக்கிய யாரோ ஒருவனை வெட்டுவதற்கு மீன் வெட்டும் வெட்டுக்கத்தியுடன் ஓடுகிறான். அந்த வரியுடன் எனது சிறுகதை முடிகிறது.
தான் ஆடாவிட்டாலும் தனது தசை ஆடும் என்பார்களே… அவ்வாறு எனது கதையில் சகோதர பாசத்தையே வெளிப்படுத்தியிருந்தேன். எனது விளக்கத்தை உடனடியாகவே எழுதி பூரணி ஆசிரியர் மகாலிங்கத்திடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
அடுத்த இதழில் அந்த வாசகர் அநு.வை. நாகராஜனின் கடிதமும் எனது பதிலும் வெளியாகியது.
இதுபற்றி  எனது இலக்கிய நண்பர்கள் பேராசிரியர் சிவத்தம்பி, மு. கனகராஜன், மு. பஷீர் ,  மல்லிகை ஜீவா ஆகியோரிடத்திலும் எனது கவலையை வெளிப்படுத்தினேன். மூதுபுத்து நாடகத்தின் கதைக்கும் எனது அந்தப்பிறவிகள் சிறுகதைக்கும் இடையே இருக்கும் பாரிய வேறுபாட்டை அவர்களும் புரிந்துகொண்டனர். சிவத்தம்பி அவர்கள் இலங்கை நாடகத்துறை பற்றி நன்கு அறிந்தவர்.
அவரும்  மூதுபுத்து நாடகத்தை எழுதி இயக்கியவர் தம்மஜாகொட அல்ல, குணசேன கலப்பத்திதான் என்று தெரிவித்தார். அவர் அச்சமயம் கொழும்பில் பொரளையில் கொட்டாவீதியில் முன்னாள் நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேராவின் இல்லத்திற்கு பக்கத்தில் ஒரு  இல்லத்தில்தான் குடும்பத்தினருடன் வாடகைக்கு குடியிருந்தார். அவரையும் நான் நேரில்  சந்தித்து,  “ பாருங்கள் சேர்… அந்த நாகராஜன் என்ற வாசகர் என்மீது அபாண்டமான குற்றம் சுமத்துகிறார்  “ என்று எனது மனக்கவலையை வௌிப்படுத்தினேன்.
அப்போது நண்பர் மு. கனகராஜனும் உடனிருந்தார்.
இலக்கிய உலகிற்கு புதியவனான எனக்கு,  அவர்களின் உரையாடலிருந்து பல  செய்திகள் கிடைத்தன.
மல்லிகைஜீவா, எழுதிய பாதுகை சிறுகதையையும் மூதறிஞர் ராஜாஜியின் கதை என்றும் வ. அ. இராசரத்தினம் எழுதிய தோணி சிறுகதையை  மாக்ஸிம்கோர்க்கியின் சந்திப்பு சிறுகதையென்றும் சிறிது காலம் இலக்கிய உலகில் பேசிக்கொண்டிருந்தார்களாம்.  ஒரே கருவை பலரும் பலகோணத்தில் கையாண்டு கதைகள் படைத்திருக்கிறார்கள் எனவும், தானும் அந்த மூதுபுத்து நாடகம் பார்த்திருக்கின்றேன் என்றும் , தம்பி…  நீ உனது பதிலை கொடுத்துவிட்டாய். இனி கவலைப்படாதே  “ என்று சிவத்தம்பி சேர் எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பியதுடன்,  எங்காவது மீண்டும் அந்த மூதுபுத்து நாடகம் மேடையேறினால் போய் பார் என்றும் கூறினார்.
பிறிதொரு நாள் அந்த நாடகம் நீர்கொழும்பு நகர மண்டபத்தில் மேடையேறவிருப்பதாக எனது  ஊர் நண்பரும் கலை, இலக்கிய ஆர்வலருமான ரோகண அபேகுணசேகர என்பவர் சொன்னார்.
அவருடன் அந்த நாடகம் பார்க்கச்சென்றேன். நாடகத்தின் இறுதிக்காட்சி முடிந்ததும் அதில் நடித்த அனைவரும் மேடையில் தோன்றினர். ரசிகப்பெருமக்களின் கரகோஷத்திற்கு மத்தியில்  இயக்குர் குணசேன கலப்பத்தி               ( 1927 – 1984 )  மேடைக்கு வந்து கைகூப்பி வணங்கினார்.
அன்று அவருக்கு அந்த அரங்கில் கூடியிருந்த பெருந்திரளான சிங்கள ரசிகப்பெருமக்கள்  வழங்கிய வரவேற்புக் கரகோஷத்தை பார்த்து நான் வியந்துபோனேன். அந்த மண்டபத்தில் நான் ஒருவன் மாத்திரமே தமிழன். சிங்கள  நாடகங்களையும் சிங்கள கலைஞர்களையும் அந்த மக்கள் எவ்வாறு கொண்டாடிவருகிறார்கள் என்பதை அன்று முதல் பார்த்துவந்திருக்கின்றேன். நான் முதல் முதலில் பார்த்த சிங்கள நாடகம் மூதுபுத்து. அதன்பின்னர் தரமான சிங்கள நாடகங்களையும் சிங்கள திரைப்படங்களையும் தீவிரமாக நேசிக்கத்தொடங்கினேன்.
அந்த  நாடகத்திற்கு  என்னை அழைத்துச்சென்ற நண்பர் ரோகண அபேகுணசேகரவுக்கும் எனது அந்தப்பிறவிகள் கதையின் சுருக்கம் தெரியும். அவர் என்னை மேடைக்கு அழைத்துச்சென்று,  இயக்குநர் குணசேன கலப்பத்திக்கு அறிமுகப்படுத்தி, என்மீது வந்துள்ள விமர்சனத்தையும் சொன்னார்
எனது கதையை கேட்டறிந்த அவர், எனது தோளை தட்டிக்கொடுத்துவிட்டு கேட்ட முதல்கேள்வி:  “ உம்முடைய வயது என்ன..?  “
 “ இருபத்தியிரண்டாகிறது  “ என்றேன்.  அச்சமயம் அவருக்கு 46 வயது என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். 
 “ நீர் என்னைவிட மிகவும் வித்தியாசமாக சிந்தித்து கதை எழுதியிருக்கிறீர். ஆச்சரியமாக இருக்கிறது. முடிந்தால், உமது சிறுகதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடும்.  எனக்கும் அதன்பிரதி கிடைக்கச்செய்யும்  “ என்று சொன்னார்.
இதுபற்றிய கலந்துரையாடல் ஒருநாள் பூரணி மகாலிங்கம் அவர்களின் இல்லத்தில் நடந்தபோது, பூரணி ஆசிரியர் குழுவிலிருந்த இமையவன் என்ற புனைபெயரில் எழுதிவந்த நண்பர் ஜீவகாருண்யன், எனது கதையை மஹாகவி உருத்திரமூர்த்தியின் புதியதொரு வீடு கவிதை நாடகத்திற்கு ஒப்பீடு செய்து பேசினார்.
இந்நாடகத்தில்தான் பிரபலமான  சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்  என்ற  வரிகள் வருகின்றன.
பூரணியில்  நாகராஜனதும் எனது கடிதங்கள் வெளிவந்து சில வருடங்களின் பின்னர் நானும் அவரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் பூரணி மகாலிங்கம்தான்.  எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில்  1974 ஆண்டு காலப்பகுதியில் நாம் நடத்திய கலைமகள் விழாவில் மாணவர்களுக்காக நடத்திய நாவன்மைப்போட்டிகளுக்கு நடுவர்களை நான் தேடிக்கொண்டிருந்தபோது  நாகராஜன் , சிவராசா, இராசையா, முதலான ஆசிரியர்களை அவர் எமக்கு அறிமுகப்படுத்தியதுடன் நீர்கொழும்புக்கும் அழைத்துவந்தார்.
நானும் நாகராஜன் மாஸ்டரும் அறிமுகமாகிக்கொண்டபோதிலும் எனது கதை விவகாரம் பற்றி நாம் என்றைக்கும் பேசிக்கொண்டதில்லை.
அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரை எழுதிவரும் நான், இச்சந்தர்ப்பத்தில் ஒரு சில செய்திகளையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தமானது.
அநு.வை. நாகராஜன் எழுதிய காட்டில் ஒரு வரம் என்ற சிறுவர் நாவலை தனது மாணவப்பருவத்தில் படித்திருக்கும் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எழுத்தாளரும்  வானொலி ஊடகவியலாளருமான   கானா. பிரபா, அதற்கு எழுதிய நயப்புரையே பின்னர் அந்த நூலின் அணிந்துரையாகவும் வெளிவந்துள்ளது.
1974 காலப்பகுதியில் அநு.வை. நாகராஜன் நடுவராக இருந்து நடத்தித்தந்த எங்கள் ஊரில் நடந்த அகில இலங்கை நாவன்மைப்போட்டியில் ஒரு பிரிவில் தங்கப்பதக்கம் பரிசுபெற்ற பாலசிங்கம் பிரபாகரன் என்ற கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்தான், கடந்த பல வருடங்களாக சிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலியை நடத்திவரும் ஊடகவியலாளர். !
எங்கிருந்து எங்கே வந்து சேர்ந்திருக்கின்றோம் !
இன்று அநு.வை. நாகராஜனும் குணசேன கலப்பத்தியும்  பேராசிரியர் சிவத்தம்பியும் மஹாகவி உருத்திரமூர்த்தியும் மு. கனகராஜனும் எனது மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பூரணி மகாலிங்கம் தற்போது கனடாவில் வாழ்ந்தவாறு எனது எழுத்துக்களை இன்றும் படித்துக்கொண்டிருக்கிறார்.
( தொடரும் )





No comments: