.
எம்மில் பலருக்கு பேனாவில் மை இருக்கிறதா? பேனா சரியாக எழுதுகிறதா? என்று பார்ப்பதற்குக் கையெழுத்துப் போட்டுப் பார்க்கும் பழக்கம் உண்டு. இப்படியாக நான் ஒரு முறை ஒரு வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டு பேனாவைச் சரி பார்த்தேன். தொழிலதிபரான என் நண்பர்,’ இப்படியாகக் கண்டபடி போடாதைங்கோ வெற்றுத் தாளில் ஒரு கையெழுத்து உங்கள் உடமைகளையே இழக்கச் செய்யும்’ என்றார்.
ஆமாம், கையெழுத்தை எமது அத்தாட்சியாக பல இடங்களில் போடுகிறோம். ஒருவர் கையெழுத்துப் போல பிறிதொருவர் கையெழுத்து அமைவதில்லை. எமது கைரேகையின் வேறுபாடு ஒருவருக்கு இருப்பதைப் போல மற்றவருக்கு அமைவதில்லை. அது போலத்தான் எமது கையெழுத்தும். இதனாலேயே இந்தக் கை ஒப்பத்திற்கு இத்தனை மதிப்பு. எம்மை அடையாளம் காட்டும் கருவி இது.
நாட்டில் நடக்கும் பல குற்றங்களில் இந்தத் திருட்டுக் கையெழுத்தும் ஒன்று. பொருளைத் திருடுவது, கொலை செய்வது எல்லாம் மிகக் கஸ்டமான காரியம். ஆனால் கையெழுத்தைத் திருடுவது மிக இலகுவான விஷயம். இதனால் இந்தத் திருட்டு மற்றய திருட்டுக்களை விட அதிகமாகவே நடை பெறுகிறது. இதைக் கண்டு பிடிப்பதற்கென குற்றவியல் பிரிவில் விஷேஷ பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள் உள்ளனர்.
ஒருவரின் கையெழுத்தைப் பார்த்து ஆவரது ஆளுமையைக் கூறலாம் என்ற கருத்தும் உண்டு. சிலருக்கு இயற்கையாகவே கையெழுத்து அழகாக அமைந்து விடுகிறது. பலருக்கு இதை எத்தனை முறை முயன்றும் வருவதில்லை. ஆனால் ஒருவர் நட்சத்திர நிலைக்கு உயர்ந்து விட்டால் அவரது கையெழுத்து அழகா இல்லையா என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவரின் Star value வை வைத்து அவரவர் கையெழுத்து விலை போகிறது. Football star லிருந்து Hollywood star வரை இவர்களின் கையெழுத்துக்கள் பல நூறு டொலர்களில் இருந்து பல ஆயிரம் டொலர் வரை விலை போகிறது. இது நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்களுக்குஅர்களது விசிறிகள் கொடுக்கும் அந்தஸ்தின் விலை.
வீணை வாத்தியத்தை யாரிடமும் கற்காமல் தானாகவே கற்றுக் கொண்டு பிரபல வித்துவானாக விளங்கியவர் பாலச் சந்தர். இவர் காலத்தில் கலை உலகில் மூன்று பாலச்சந்தர்கள் இருந்ததால் இவரை வீணை பாலச்சந்தர் என அழைப்பது வழமை. இவர் தனது கையெழுத்தை வீணையின் உருவிலேயே போடுவது வழமை. இது ஒரு கலைஞனின் கை வண்ணம்.
நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் நடைபெறும் போது நாட்டின் தலைவர்கள் சம்மதத்திற்கு அத்தாட்சியாக கையெழுத்துப் போடுவது வழமை. British ஆட்சியில் இருந்து போராடி சுதந்திரம் பெற்றது இந்தியா. அதில் இந்தியாவின் முதல் பிரித்தானியத் தூதுவராக இருந்தவர் கிருஷ்னமேனன். இவர், இந்தியப் பிரித்தானிய பொருளாதார ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார். இவர் கையெழுத்துப் போடும் போது இவரது கைகள் நடுங்கியதைக் கண்ட வெள்ளையர்,’ உமக்கு இந்த வயதிலே கை நடுக்கமா?’ என்றாராம். ஆமாம் இது British அரசு எனக்குக் கொடுத்த பரிசு என்றாராம் கிருஷ்ன மேனன். இதனால் திடுக்குற்ற பிரிட்டிஷ் அதிகாரி விபரம் கேட்டுள்ளார். நடந்தது இது தான்.
இந்தியாவில் இருந்த உப்பலங்கள் அத்தனையும் பிரித்தானியர் கைவசம் இருந்தது. மாகத்மா காந்தி தண்டியாத்திரை போய்மக்களைத் தூண்டினார். இந்திய நிலத்தில் விளையும் உப்பு இந்தியாவினது; அதனால் யாவரும் திரண்டு போய் ஒவ்வொருவரும் கையளவு உப்பை எடுப்பது என்பது காந்தியின் போராட்டம். அகிம்சைப் போராட்டமாச்சே! யார் தாக்கினாலும் அடியை அங்குவதே தவிர திரும்பத் தாக்கக் கூடாது.
தலைவர்கள் என்ற வகையில் திரண்டு போன கூட்டத்தில் முன்னணியில் நின்றவர் திரு. கிருஷ்னமேனன். உப்பிலே கையை வைத்தார். விழுந்தது அடி கையிலே. ஆமாம், அன்றிலிருந்து கைநடுக்கம் என்றாராம் கிருஷ்ணமேனன். உடனே அந்தக் கண்ணியம் மிக்க பிரிட்டிஷ் அதிகாரி கண்களிலே நீர் மல்க எழுந்து நின்று, ‘இந்த நாட்டின் சார்பிலே; உங்களுக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கும் நாங்கள் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோருகிறேன்’ என்றாராம்.
அண்மையிலே Discovery channel இலே இரண்டாவது உலக மகாயுத்தம் பற்றிக் காட்டி வந்தார்கள். அதில் ஜப்பான் 2வது உலகப்போரிலே ஒரு பலம்
வாய்ந்த நாடாக இருந்தது. மேற்கத்திய வல்லரசுகள் இந்த சக்தியைக் கண்டு பயந்த காலம் அது! ( ஏன் அவுஸ்திரேலியக் கரைகளும் இவர்களது நீர்மூழ்கிக் கப்பல்களால் தாக்கப்பட்டது. இதை கன்பராவில் இருக்கும் War memorial museum த்தில் அழகாகப் படமாகக் காட்டுவார்கள்.) பின் Hiroshima வில் அணுகுண்டைப் போட்டு ஜப்பானைத் தோற்கடித்த கதை தான் உலகறிந்த விஷயமாச்சே!
ஜப்பானின் சக்கரவர்த்தி மேற்கு நாடுகளிடம் தாம் சரனடைவதாகக் கைச்சாத்திடும் கட்டம் நெருங்கியது. இது ஒரு கப்பலிலே நடந்தது. உலகத்தையே தன் படைபலத்தால் ஆட்டிப்படைத்த ஜப்பானின் சக்கரவர்த்தி தனது உதவியாளர்களுடன் போகிறார். சகலமும் இழந்த கையறு நிலை அது! இதைப்பற்றி இவரது உதவியாளர் கூறுகிறார். கைச்சாத்திடும் முன் தன்னிடம் சக்கரவர்த்தி திருப்பிக் கேட்டாராம். ’நான் ஜப்பானிய மொழியில் கைச்சாத்திடவா அல்லது ஆங்கிலத்திலா’ என்று. தான் கூறினாராம். ஜப்பானை யாராலும் அழிக்க முடியாது; ஜப்பானிய மொழியிலேயே கையெழுத்தப் போடும் படி. தனது வாழ் நாளிலேயே மிகவும் மனம் வருந்திய இடம் இது என அவர் கூறுகிரார். இன்று பொருளாதாரத்தில் ஜப்பான் மீண்டும் வீறு நடை போடுவதைக் காண்கிறோம். அல்லவா?
இனி நம் நாட்டுக் கதைக்கு வருவோமா? இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றி ஆட்சி நடத்திய காலம் அது! கண்டியைக் கடைசியாக ஆண்ட அரசன் விக்கிரமராஜசிங்கன். இவன் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளான். அவனது கையொப்பம் தமிழிலேயே போடப்பட்டிருந்தது. இதில் திருமதி.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் முப்பாட்டனும் தமிழிலே கையொப்பம் போட்டிருக்கிறார் என்பது ஒரு சுவாரிஷமான செய்தி.
ஆமாம், அன்று சிங்கள மொழி அங்கீகாரம் பெற்ற மொழியாக இருந்திருக்கவில்லை.கற்றவரின் மொழியாக இருந்தது தமிழே! பெளத்த சமயத்தின் மொழியாக இருந்தது பாளி மொழியாகும். இதனாலேயே விக்கிரம ராஜ சிங்கன் தமிழிலே கைச்சாத்திட்டான் போலும்!
( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக்கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் .....அன்று ஒலிபரப்பானது)
நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் at 12:07 PM
No comments:
Post a Comment