மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 46 முருகபூபதி

நாட்கள் சக்கரம் பூட்டி விரைந்து ஓடிவிட்டதாகவே அபிதாவின் மனதிற்குப்பட்டது. நிகும்பலையூருக்கு வந்து சேர்ந்தது,  அதன்பின்னர் தொடர்ச்சியாக நடந்துவிட்ட சம்பவங்கள், இந்த வீட்டில் காணக்கிடைத்த மனிதர்கள், அவர்களின் இயல்புகள், அவர்களால் சொல்லப்பட்ட கதைகள், அவளாகத் தெரிந்துகொண்ட கதைகள்….
முன்பொரு காலப்பகுதியில் வன்னிபெருநிலப்பரப்பெங்கும் பெற்றோருடனும் உறவுகளுடனும், திருமணத்தின் பின்னர் கணவன், குழந்தையுடனும் அலைந்துழன்று , போர் முடிந்ததோடு, அனைத்துறவுகளும் அற்றுப்போன வேளையில்  தேடிவந்து தஞ்சமடைந்த இடத்தில் சந்திக்கநேர்ந்த அனுபவங்கள் அனைத்தையும் மனதில் அசைபோட்டுக்கொண்டு,  இறுதியாக விடைபெற்றுச்சென்ற ஜீவிகாவின் பெரியப்பா சண்முகநாதனை ஒரு கணம் நினைத்துப்பார்த்தாள்.
யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பியதும் அவரிடம் காணப்பட்ட மாற்றங்களிலிருந்து,  ஏதோ புதிய ஞானம் பெற்றவராகவே அவர் அவளுக்குத் தென்பட்டார்.
விமானநிலையம் செல்லுவதற்கு முன்னர்,  வீட்டின் பின்வளவுக்கு அழைத்து அவர் தன்னுடன் பேசிய பாங்கு, மேலும் அவர் சில நாட்களுக்கு இங்கே நின்றிருக்கலாமே எனத் தோன்றச்செய்தது.
 “ அபிதா… இம்முறை பயணத்தில்  யாழ்ப்பாணத்தில்  நின்றவேளை  நான் கண்ட தேர்தல் கூத்துக்களைப்பார்த்தபோது, உன்னையும் உன்னைப்போன்று கணவன்மாரையும் மகன், மகள்மாரையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்தான் அடிக்கடி நினவுக்கு வந்தார்கள்.
எமது தமிழ்இனம் சபிக்கப்பட்ட சமூகமோ என்றும் எண்ணத்தோன்றியது.  இந்த நாட்டுப்பிரச்சினையை காரணம் காண்பித்து நாமெல்லாம்  வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டோம்.  ஓடமுடியாதவர்கள் கிடைத்ததை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
வெளிநாடு சென்ற உறவினர்களின் வெளிநாட்டு வீடுகளின்  காணிகளில் ஏதோ காசுமரம் முளைத்திருக்கிறது என்ற எண்ணத்தில்தான் அங்கே பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்கள்தான் அப்படியென்றால், இம்முறை தேர்தலுக்கு நிற்கும் எமது தமிழ் அரசியல்வாதிகளும் வெளிநாட்டு உறவுகளின் நிதியாதரவுடன்  பத்திரிகைகளில் முழுப்பக்கம், அரைப்பக்கம், கால் பக்கம் விளம்பரங்கள் வெளியிட்டு வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையுடன், தேர்தலில் நிற்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால் சிரிப்புத்தான் வந்தது.  தோற்போம் எனத் தெரிந்துகொண்டே கட்டுப்பணம் செலுத்தி, இலட்சக்கணக்கில் செலவிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் , அதனை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா அபிதா..?  “
 “ எனக்கென்னய்யா தெரியும், மீன், இறைச்சி, மரக்கறி, அரிசி என்ன விலையென்று கேட்டால்  சொல்லுவேன்.  அவர் காணாமல் போனதன்பின்னர் நான் அரசியலையே மறந்துவிட்டேன் அய்யா  “ என்றாள் அபிதா.
 “  கிட்டத்தட்ட  அறுநூறுபேர். யாழ்ப்பாணத்தில் எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது அபிதா.  பெரியகடை பக்கம் போயிருந்தேன்.  யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஒரு வீதி நாடகம் பார்த்தேன். மன்னார் பக்கம் இருந்து வந்த பெண் கலைஞர்கள் நடத்திய நாடகம்.  இந்தத்  தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதுதான் அந்த வீதி நாடகத்தின் கருப்பொருள். ஆனால்,  எமது மக்கள் எப்படிப்பட்ட தீர்ப்புக்கொடுக்கப்போகிறார்களோ தெரியாது.  நான் இன்றைக்கு புறப்பட்டுவிடுவேன். இந்த தேர்தல் முடிவுகளை லண்டனிலிருந்துதான் பார்ப்பேன்.  பொறுத்திருந்து பார்.  இந்த ஜனாதிபதி, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் நாடளாவிய  ரீதியில் ஊரடங்குச்சட்டம் போட்டுவிடுவார்.  ஜீவிகாவுக்கும் சொல்லியிருக்கிறேன். வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வைத்துவிடுங்கள்  “
 “ அய்யா, என்ர அவர் என்னுடன் இருக்கும் வரையில் நானும் அவருடன் அரசியல் பேசியிருக்கின்றேன்.  இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன… எனது வயிற்றுப்பாட்டைத்தான் கவனிக்கவேண்டியதாகிவிட்டது.  என்னைப்போன்று ஏராளமான இளம் விதவைகள், ஆயிரம் நாட்களையும் கடந்து இரண்டு வருடத்திற்கு மேலாக வீதிகளில் நின்று குரல் எழுப்பி போரடிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர் இறந்தும்விட்டனர்.  நீதியில்லா ஊரில் நாதியற்றவள் பிள்ளை பெற்ற கதையென்று எங்கட பாட்டி அடிக்கடி சொல்வதுண்டு.  எனக்கு இப்போது சொல்லக்கூடிய தெரிந்திருக்கும் அரசியல் அவ்வளவுதானய்யா… உங்கட  மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளை நானும் அன்பாக கேட்டதாகச்சொல்லுங்க அய்யா.  இங்கே ஜீவிகாவும் மற்றவர்களும் என்னை நன்றாகப்பார்க்கிறாங்க.  எனக்கு எஞ்சிய காலத்திற்கு அதுபோதும் அய்யா.  இருந்தாலும் அடிக்கடி எனக்கும் இப்போது கவலையொன்று வந்துகொண்டிருக்கிறது.    என்று அபிதா இழுத்து நிறுத்திவிட்டு பெருமூச்சொன்றை உதிர்த்தாள்.
 “ என்னது சொல்லு… நான் என்னால் முடிந்ததை செய்யிறன். தயங்காமல் சொல்லு  “
 “ இந்த வீட்டிலிருப்பவர்கள் ஒவ்வொருத்தராக போய்விடுவாங்க போலத்தெரியுது.  மஞ்சுளாவின் அம்மா வந்திருக்கிறாங்க. சிலவேளை மகளுக்கு இடமாற்றம் எடுத்துக்கொண்டு கண்டிக்கே போய்விடலாம்.  சுபாஷினிக்கும் திருமண பேச்சுவார்த்தை நடக்கிறது. அவவும் நுவரேலியா போய்விடலாம். கற்பகம் ரீச்சருக்கும் இந்தக்கொரோனாக்காலம் வெறுப்பைத்தந்துவிட்டது. அவவும்  இடமாற்றம் பெற்று ஊரோடு போய்விடலாம். அவவுக்கு ஓய்வூதிய காலம் தேவைப்படுது போலத் தெரியுது.  அவவுக்கு இருக்கும் உடல் உபாதைகளும் அதற்கு ஒரு காரணம்.  உங்கள் பெறமகளுக்கும் வேலை செய்யுமிடத்தில் ஒரு காதல் துணை வந்துவிட்டது.  தெரியும்தானே.  அவவும் கொழும்போடு சென்றுவிடலாம்.  அதுக்குப்பிறகு…. நான்…. நான்… என்ன செய்யிறது…? எங்கே போவது…?  “  அபிதாவுக்கு தொண்டை அடைத்தது.  தொடர்ந்து பேசமுடியாமல் அருகிலிருந்த மரக்குற்றியில் அமர்ந்தாள்.
அவளது தலையை தடவி ஆறுதல் சொல்வதற்கு சண்முகநாதன் கையை நீட்டிவிட்டு, இழுத்துக்கொண்டு பின்புறம் இறுகக்கட்டியவாறு முன்பின்னும் நகர்ந்தார்.
 “ அபிதா… உனக்கு ஒரு விடயம் சொல்ல மறந்திட்டேன். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் அந்த வீதி நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளம் பிள்ளை என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தை கொடுத்துப்  பேசி அறிமுகமானாள்.
என்னைப்பார்த்தவுடனேயே நான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு பேசினாள்.
 “ அய்யா, வணக்கம். அவுஸ்திரேலியாவா, கனடாவா, லண்டனா… எனக்கேட்டாள்.   “
 “ வெளிநாடு என்று உமக்கு எப்படித்தெரியும்….?  “ எனக்கேட்டேன்.
அதுக்கு அவ சொன்ன பதில்தான் சிரிப்பை தந்தது அபிதா..!
 “ அய்யாவின் உடையிலிருந்து வரும் பெஃர்பியூம் வாசம் . “ என்றாலே பாரு… “
என்னுடன் தொடர்ந்து பேசினாள். எதற்கு இந்த கொரோனா காலத்தில் வந்தீர்கள். தேர்தலில் யாருக்காவது வேலைசெய்வதற்காகவா..? எனக்கேட்டாள்.
இல்லை… ஊர் கோயில் திருவிழாவுக்கு வந்தேன் என்றேன்.
லண்டனில் கோயில்கள் இருக்கிறதுதானே என்றாள்.
இது எங்கள் பூர்வீகக்கோயில். மிகவும் சக்திவாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் திருவிழாவுக்கு வருவேன்.  எங்கள் குடும்பத்திற்கும் ஒரு பூசை இருக்கிறது என்றேன்.
நீங்கள் சைவசமயம்தானே…
ஓமோம்.
உங்கட கடவுள்தானே தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். பிறகென்னத்திற்கு இவ்வளவு பணம் செலவிட்டு வந்து திருவிழா நடத்துகிறீர்கள்..?  இந்த பிரதேசங்களில் எத்தனை பிள்ளைகள் நடந்து முடிந்துவிட்ட நீடித்த போரில் தங்கட தகப்பன், தாய்மாரை, அக்கா, அண்ணன்மாரை பறிகொடுத்திட்டு வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படுதுகள்…  அது பற்றி எப்பொழுதாவது யோசித்தீர்களா…?  இங்கே பாருங்க… போர்க்குற்றம்…. போர்க்குற்றம் …. என்று சொல்லிச்சொல்லியே வருடம்தோறும் ஜெனீவாவுக்கு யாத்திரை போய்வந்த ஆட்கள்தான், இப்பொழுது இங்கே ஆளுக்கொரு கட்சியை வைத்துக்கொண்டு மக்களிடம் வாக்குக்கேட்டு வருகிறார்கள்.
எவ்வளவு பணத்தை செலவிடுகிறார்கள் பார்த்தீர்களா… அதனால்தான் நாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த வீதி நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.  இந்த இலட்சணத்தில் உங்களைப்போன்றவர்களும் வந்து ஊரில் திருவிழா நடத்திவிட்டுபோகிறீர்கள்… மொத்தத்தில் இங்கே கடந்த இரண்டாயிரத்து ஒன்பதிலிருந்து திருவிழாக்கள்தான் நடக்கின்றன  அய்யா.  இந்த பிரசுரத்தை எமக்காகவும் படித்துப்பாருங்கள்  “ என்றாள் அந்தப்பிள்ளை. 
அபிதா… அப்போதும் எனக்கு உனது முகம்தான் ஞாபகத்திற்கு வந்தது.  நீயும் எல்லாவற்றையும் இழந்து தனிமரமாக வந்து நிற்கிறாய். நீ மேலும் படித்திருக்கவேண்டியவள். படித்து ஒரு நல்லதொரு வேலைக்கும் சென்றிருக்கலாம். ஆனால், யாரும் அது பற்றி யோசிக்கவேயில்லை. நாங்கள் உன்னை ஒரு வேலைக்காரியாக சமையல்காரியாக பணிப்பெண்ணாக்கியிருக்கிறோம். 
அந்தப்பிள்ளை சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டியாக வந்து குத்தியது.
அவளுக்கு முன்னால் நான் ஒரு அற்பப்புழுவாகத்தான் நின்றேன்.  என்னத்தை படித்து, என்னத்தை கண்டுவிட்டு லண்டன், அமெரிக்கா, கனடா என்று ஓடினோம்.  அங்கே போயும் நாம் திருந்தவில்லை. திருவிழாதான் நடத்திக்கொண்டிருக்கின்றோம். 
அபிதா, சண்முகநாதன் சொன்னவற்றை கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
 “ அய்யா… நீங்கள் சொல்வது புரியுது.  எல்லாவற்றுக்கும் அரசியல்தான் காரணம் என்பதும் தெரிகிறது. ஆனால், எனக்கு அந்தப்பிள்ளை போன்றெல்லாம் பேசத்தெரியாது அய்யா.   “ என்றாள் அபிதா.
 முன்னும் பின்னும் நடந்துபேசிக்கொண்டிருந்த சண்முகநாதன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு,  “அபிதா…. உனக்கு அரிஸ்டோட்டல் என்ற பெரிய அறிஞரைத் தெரியுமா..? அவர் சொல்லியிருக்கிறார்:  “ அரசியலை விட்டு நீங்கள் விலகினாலும் ஒருபோதும் உங்களை விட்டு அரசியல் விலகாது.  " மற்றும் ஒரு அறிஞர் பிளேட்டோ என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?  ‘அரசியலை விட்டு நீங்கள் விலகினாலும், உங்களுக்குப்பிடிக்காதவரின் ஆட்சியின் கீழ்தான் நீங்கள் வாழவேண்டி நேரிடும்  “  எங்களது இந்த தாய் நாட்டிலும் இதுதான் நிலை. வெளிநாடுகளிலும் இதுதான் நிலை. “ 
சண்முகநாதன் விடைபெறும்போது, அபிதா அவரது கால்களை பணிந்து வணங்கினாள்.
 “ நல்லா இரம்மா… உன்னைப்பற்றி லண்டனிலிருக்கும் மகள், மகனிடமும் சொல்லியிருக்கிறேன்.  இந்தா இதில் கொஞ்சம் பணம் இருக்கிறது வைத்துக்கொள்  “ என்ற அவர், அவளிடம் சில ஆயிரம் ரூபா தாள்களை நீட்டினார்.
 “ வேண்டாம் அய்யா. நீங்கள் எனக்கு நிறைய செய்திருக்கிறீங்கள்.  வாங்கித்தந்திருக்கும் லெப்டொப் ஒன்றே போதும் அய்யா. என்னிட்ட  காசு இருக்கிறது.  வேண்டாம்.  “ அபிதா மறுத்தாள்.
 “ பிடி அபிதா.  ஏயார்போட்டுக்கு  வாகன  வாடகைக்கு  காசு போதியளவு இருக்கிறது.  இனி உந்த  இலங்கை பணத்தை வைத்திருந்து நான் என்ன செய்யப்போகிறேன்.  ஜீவிகாவிடம் சொல்லியிருக்கின்றேன்.  இங்கிருந்துகொண்டே ஏதாவது படிக்கப்பார்.  உனக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கிறது.   உனது நல்ல மனதிற்கு  எவரும்  கைவிடமாட்டார்கள்  “ அவரது பேச்சைத்  தட்டமுடியாமல்,   அவர் நீட்டிய  பணத்தை பெற்றுக்கொண்ட  அபிதா கையெடுத்து கும்பிட்டாள்.
அவளது கண்கள் கலங்கின.
கேட் வரையும் வந்து விடைகொடுத்து கையசைத்தாள்.
 “ லண்டனுக்குப்போனதும் போன் பண்ணுவேன்.  என்ன வேண்டுமென்றாலும் கேள்.  சரியா…?   “ அந்த வேன் புறப்பட்டது. அது செல்லும் திசையையே சில நிமிடங்கள்  ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அபிதா, கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.
ஏதோ ஒரு கோலத்தில் வந்தவர், முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் புறப்பட்டுவிட்டார். அபிதாவின் நாட்குறிப்பில் அவர் பற்றியும் அபிதாவுக்கு எழுதுவதற்கு நிறையவிருந்தது.
சண்முகநாதனை வழியனுப்புவதற்கு அச்சமயம் வீட்டிலிருந்தது அபிதாவும் ஜீவிகாவும் மாத்திரம்தான்.  சண்முகநாதனைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்த அபிதாவை – ஜீவிகாவின் குரல் நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தது.
 “ என்ன பெரியப்பாவுடன் பின்வளவிலிருந்து நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தீங்க…?  “
 “ அவர் தனது யாழ்ப்பாணம் பயணம் பற்றித்தான் அதிகம் பேசினார்.  வரும்போது நான் பார்த்த அய்யாவுக்கும் திரும்பிச்செல்லும்போது பார்க்கும் அய்யாவுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது அம்மா.  இன்னும் கொஞ்ச நாட்கள் அவர் இங்கே நின்றிருக்கலாம்போலத் தெரியுது.   “ என்றாள் அபிதா.
கண்களைத்  துடைத்துக்கொண்ட  அபிதாவை ஜீவிகா கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.
ண்டியிலிருந்து வந்திருந்த மஞ்சுளாவின் அம்மா சிவகாமசுந்தரியும் நுவரேலியாவிலிருந்து திரும்பியிருந்த சுபாஷினியும் கடைத்தெரு பக்கம் சென்றிருந்தார்கள்.
மஞ்சுளா வேலைக்குப்போயிருந்தாள். கற்பகம் ரீச்சர் பாடசாலை விட்டதும் வருவதாகவும்.   மீண்டும் பத்து நாட்களுக்கு பாடசாலை இல்லை என்றும் சொல்லியிருந்தாள்.
இந்த வீட்டில் ஒருவர் சென்றால், அவ்விடத்தை நிரப்புவதற்கு மற்றும் ஒருவர் வந்துவிடுவதனால், அபிதாவின் அன்றாடக்கடமைகள் கூடியிருக்கிறதே தவிர குறைந்தபாடாயில்லை.
மஞ்சுளாவின் தாயும் சுபாவும் நெருங்கியிருப்பதனால்,  சுபாவின் தம்பிக்கும் மஞ்சுளாவுக்கும் திருமணம் நடப்பதும் சாத்தியம்தான் என்ற முடிவுக்கும் அபிதா வந்திருந்தாள்.
பாதிக்கப்பட்டவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பார்களோ…?  அந்தச்  சார்பு நிலைப்பாட்டை சுபாவின் கடந்த கால வாழ்க்கையுடனும் மஞ்சுவின் தாயின் வாழ்வில் கடந்து சென்றுவிட்ட வாழ்க்கையுடனும் அபிதா ஒப்பிட்டுப்பார்த்தாள்.
மஞ்சுவின் அறையிலிருந்து மஞ்சுவும் சுபாவும், சிவகாமசுந்தரியும் நீண்டபொழுதுகள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களிடமிருந்து வரும் அழைப்புக்குரலுக்கு மாத்திரம் ஓடிச்சென்று, தண்ணீரோ, தேநீரோ  கொடுத்துவிட்டு திரும்பிய அபிதா, தனது  பணிப்பெண் வேலையின் எல்லைக்குள்ளேயே நின்றுகொண்டாள்.
எது நடந்தாலும் நன்மையாக நடக்கட்டும்.  வந்ததே வந்தது… இந்த கொரோனா காலம்.  ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படியெல்லாமோ மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருகிறது.
வீட்டின் பின்வளவிற்கு பறந்து வந்து, திரும்பிச்செல்லும் பறவையினங்களை அபிதா அதற்கு முன்னர் கண்டதில்லை. இவை எங்கிருந்து வருகின்றன. 
அவற்றுக்கு ஏதும் தின்பண்டம் வைக்கவேண்டும் எனச்சொல்லிக்கொண்டு அபிதா சென்றாள்.
துரிதகதி  வீதிகளில் மயில்களும் மான்களும் வந்து நிற்பதாக எங்களுக்கு செய்தியும் படங்களும் வந்திருக்கின்றன அபிதா… இருங்க வாரன். என்னுடைய வாட்ஸ் அப்பில்  அகன்ற வீதிகளில் வந்து நின்று ஆடும் மயில்களின் படங்களை காட்டுகிறேன்.
ஜீவிகா, தனது கைத்தொலைபேசியுடன் அபிதாவை பின்தொடர்ந்து பின் வளவிற்கு வந்தாள்.
( தொடரும் )







No comments: