என்ர அப்பாவின்ர கார் (சிறுகதை) உஷா ஜவகர் (அவுஸ்திரேலியா)

                                                                 
 என்ர அப்பாவின்ர காரை நான் எப்போது முதன்முதலாய் பார்த்தேன் தெரியுமா?  
1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தான் பார்த்தேன். அப்போது எனக்கு பதினெட்டு வயது.  கொழும்பில A /L பரீட்சை எழுதிட்டு விடுமுறையின் போது சாம்பியாவுக்குப்  போனேன்.  நான் சாம்பியாவில் கிட்வெ ( kitwe)  என்ற சின்ன நகரத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் என்னை வரவேற்க வந்து நின்றது அந்தக் கார்.
நல்ல சாக்லேட் நிறம். அதுக்காக கடும் மண்ணிறம் எண்டு சொல்லிவிட முடியாது. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இளம் மண்ணிறம் என்றே சொல்லலாம்.  அதன் வெளித்தோற்றம் ஒரு குட்டி ஆமை போல இருந்தது. அது ஒரு போர்க்ஸ் வேகன் (Vaux Wagon) கார்.  அதன் நம்பர் பிளேட்  கூட எனக்கு இப்ப ஞாபகமில்லை.  அந்தக் குட்டி ஆமையை என்ர அப்பா ஓட்ட, என்ர அக்கா முன் சீட்டிலும் நான் அதன் பின் சீட்டிலும் இருந்தம். ஆமை கிட்வே றோட்டில் வழுக்கிக் கொண்டே பவனி வந்து மெதுவாக எமது வீட்டு வாசலில் நின்றது.  இரவு படுத்து விட்டு. அடுத்த நாட்காலை அறையை விட்டு வெளியே வந்தேன்.அப்பா தன்  காரை மும்முரமாக கழுவிக் கொண்டிருந்தார். காரைக்  கழுவித் துடைத்ததும் அந்த கார் ' பள பள' என மின்னியது என்ர  அப்பா கிட்வே சிட்டி கவுன்சிலில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு கிழமையில் மூன்று அல்லது நான்கு தரம் அந்தக் காரை நன்கு கழுவுவார். தன்ர பிள்ளைகளை நேசிப்பதைப் போலவே அந்தக் காரையும் நேசித்து வந்தார். அயலவர்களிடம் கார் இல்லாவிட்டால் தன் காரில் அவர்களை ஏற்றி தன்னுடன் அழைத்து செல்வார்.
அந்தக் காரில் ஏறாத சாம்பியரோ,இந்தியரோ அல்லது இலங்கையரோ அந்தச் சுற்று வட்டாரத்தில் இருக்கவில்லை என உறுதியாக கூறலாம்.  சில காலத்தின் பின் என் அக்காவின் கல்யாணத்திற்கு அந்த ஆமை தான் அங்கும் இங்கும் ஓடி ஓடி மாடு மாதிரி உழைத்ததுஅதை விட பொம்பிளை காராயும் கிட்வே நகரத்தைச் சுற்றி அலங்காரத்துடன்,அகங்காரத்துடன்  பவனி வந்தது.  பின்னர் 1990ஆம் ஆண்டு கிட்வேக்கு ஐந்து தமிழ் இளைஞர்கள் டீச்சர்களாய் வேலை பார்க்க வந்து சேர்ந்தார்கள்.அவர்களுக்கு என்ர அப்பாதான் காரோட்டக் கற்றுக் கொடுத்தார்.அவர்கள் கார் பழகவும் அந்த ஆமைதான் அனுசரணையாக இருந்தது.


அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் 'விக்டோரியா' (Victoria) என்ற பெண் பணிவிடை செய்து வந்தாள்.கர்ப்பிணி பெண்ணான அவளை HIV தாக்கியிருந்தது.அவளையும் அந்த ஆமை தான் ஹாஸ்பிடலுக்கு  கொண்டு சென்று சேர்க்க உதவியது.  அதன் பின் அவள் வீடு திரும்பவேயில்லை.  இப்படியே அந்த ஆமை நன்மையான நிகழ்வுகளிலும் தீமையான நிகழ்வுகளிலும் சலிக்காமல் உழைத்து, எங்கள் குடும்பத்திற்கு வலக்கரம் போல் உதவியது.

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி என்ர கழுத்தில தாலி ஏறியது.என்ர கணவர் இண்டோலா (Ndola ) என்ற நகரில் வேலை செய்து கொண்டிருந்தார். இண்டோலாவில் ஒரு கிருஷ்ணர் கோவிலில் தான் கலியாணம் நடந்தது.எங்களின்ர கலியாணத்திற்கும் அந்த ஆமை தான் கிட்வேக்கும் இண்டோலாவுக்கும் இடையில் மறுபடியும் அலங்காரமாகவும் அகங்காரமாகவும் பவனி வந்தது.  ஓடி ஓடி உழைத்துக் களைத்தோ என்னமோ அந்த ஆமை கொஞ்சம் சுகவீனம்அடைந்தது.

இரண்டு நிமிடம் ஓடும்.பிறகு ஒரு துள்ளு துள்ளி தரையில் இறங்கும்.இப்ப யோசிக்கேக்க, அவுஸ்திரேலியாவில கங்காரு எப்படி துள்ளிப் பாயுமோ அதே மாதிரித்தான் இந்தக் காரும் துள்ளிப் பாய்ந்தது.  அப்பா சாம்பிய மெக்கானிக் ஒருவனைப் பிடித்து காரை நன்றாகத் திருத்திப் போட்டார்.  என்ர  கலியாணம் நடக்க ஆறு மாசம் இருக்கையில் நான் காரோட்ட பழகத் தொடங்கினேன்.  "எப்ப படிச்சு முடிச்சு லைஸென்ஸ் எடுத்தனீர்?' எண்டு மட்டும் என்னிடம் கேட்க வேண்டாம் ப்ளீஸ்!  கிட்வே நகரில் டிராபிக் குறைய எண்டபடியால், எனக்கு  அந்தக் குட்டி ஆமையை அங்கும் இங்கும்  ஓட்ட இலேசாக இருந்தது.ஆனால் சாம்பியாவில் லைஸென்ஸ் எடுக்க வேண்டுமெண்டால் பெரிய,பெரிய 10 பீப்பாக்களுக்கு நடுவில காரை முன்னுக்கும் பிறகு ரிவெர்ஸிலேயும் பீப்பாக்களைத் தட்டாமல் எடுத்துப் பழக வேண்டும்.  அந்தப் பீப்பாக்களைப் பார்த்தீர்களென்றால் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வரும்.

நான் கார் ஓட்ட பழகுவதை பார்த்துட்டு என்ர  கடைசி தங்கச்சியும் கார் ஓட்டப் பழக தொடங்கினா.   இப்ப யோசித்தா நாங்க ரெண்டு பேரும் கார் பழகும்போது அப்பாவுக்கும் அந்த குட்டி ஆமைக்கும் கொடுத்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அத நினைச்சா சரியா வருத்தமா இருக்கு!.  என்ர அப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட். கிட்வே சிட்டி கவுன்சிலால அஞ்சரை மணிக்கு வந்து 6மணிக்கு என்னை ஒருநாளும் மறுநாள் தங்கச்சியையும் டிரைவிங் பழக்க கூட்டிட்டு போவார்.

அந்த ஆமையும் எங்களோடு சலிக்காமல் ஒத்துழைத்ததால் ஆமையை ஓரளவு இலாவகமாக ஓட்டப் பழகிக் கொண்டேன்.அப்படியும் ஒருநாள் தெரிந்த இலங்கையர் ஒருவரின் வீட்டுச் சுவரை ஆமை முட்டி மோதி சுவரைத் தூள் தூளாக்கியது. என்ர உள்ளமும் கண்ணாடி போல நொறுங்கியது.ஆமை என்ன செய்யும்?பாவம்! அது எனது கவனக் குறைவு தானே.

எண்டாலும் மனம் தளராம, விக்கிரமாதித்தன் போல, ஆமையை ஓட்டுவதை மட்டும் நான் நிப்பாட்டவேயில்லை.தொடர் முயற்சியினால் எனக்கு லைசென்ஸும் கிடைத்து விட்டது.  இப்படியே ஆமை ஓடி ஓடி உழைச்சதாலோ என்னவோ இடையிடையே ஊர்ந்து செல்ல மறுத்தது.

1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாச கடைசியில சாம்பியாவிலிருந்த எங்களின்ர குடும்ப நண்பர் ஒருவர் தன்ர அண்ணாவின்ர குடும்பத்தைப் பார்த்து வர சவுத்ஆப்பிரிக்காவுக்குப் (South Africa) பயணமானார்.  

.அவர் மூலமாக ஆமைக்குப் பொருத்துவதற்கு மாற்றுப் பாகங்களை (spare parts) சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கி வரக் கேட்டிருந்தார் என்ர அப்பா! சவுத் ஆப்பிரிக்காவுக்கு யார் போனாலும் அப்பா தன்ர காருக்கு மாற்றுப் பாகங்களை வாங்கி வரக் கேட்டு பணத்தையும் கொடுத்து விடுவது வழக்கம்.

அப்பாவின் விருப்பப்படி அந்த நண்பர் சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பும் போது ஆமைக்கான மாற்றுப் பாகங்களை வாங்கி வந்து விட்டார்.

ஆனா அந்த மாற்றுப் பாகங்களை தன்ர காருக்குப் பொருத்தி அழகு பார்க்கத்தான் எங்களின்ர அப்பா உயிரோடு இல்லை.எங்களின்ர அப்பா 01/10/1991 அன்று விடியக்காலை நித்திரையிலேயே ஹார்ட் அட்டாக்கினால் செத்துப் போனார்.

ஆனா அப்பாவைக் கடைசியா கிட்வே ஹாஸ்பிடலுக்கு ECG எடுப்பதற்கு தன்னால முடிஞ்சளவு வேகத்தோட ஓடி, சுமந்து சென்றது இந்த ஆமை தான்.

என்ர தங்கச்சிதான் அந்த ஆமையை ஓட்ட அப்பா அருகில் இருந்தார். பிறகு எங்களின்ர நண்பர்களின்ர வீட்டில அப்பா இரவு தங்கினார்.

அண்டைக்கு நித்திரையில அவரின்ர வாழ்வும்அவரின்ர உலக வாழ்க்கைப் பயணமும் முடிஞ்சு போனது.

செத்த வீட்டிற்கு வந்த மெக்கானிக் என்ர தம்பிட்ட,"நான் எத்தனையோ தரம் உங்களின்ர அப்பாவின்ர மண்ணிற போக்ஸ் வாகனை எனக்கு விற்கச் சொல்லிக் கேட்டிருக்கிறன் . அதுக்கு அவர்,"என்ர பிள்ளை மாதிரி கவனமா இந்தக் காரை வைச்சிருக்கிறன். இதைப் போய்  நான் எப்பிடி விப்பது?" எண்டு மறுத்து விட்டார்." எண்டு சொல்லிச் சொல்லி அழுதான்.

பிறகு அவன்தான் அந்த ஆமையை ஓட்டிச் சென்றான். அப்பாவுடன் அப்பாவின்ர செல்லப்பிள்ளையாக இருந்த அந்த ஆமையும் எங்களின்ர கண்களில கண்ணீரை சிந்த விட்டுப் பிரிந்து சென்றது.


 பிறகு எப்போதாவது கிட்வே நகரில் அந்தக் காரைக் கண்டால் என்ர அப்பாவின்ர ஞாபகம் நெஞ்சில நிழலாடும்.அப்பாவின்ர அன்பும் அவர் எமக்காக செய்த தியாகங்களும் நினைவுக்கு வரும்.

இப்பவும் இன்டர்நெட்டில் போக்ஸ்வாகன் கார்களின்ர படங்களைப் பார்க்கையில் என்ர அப்பாவின்ர அந்த மண்ணிற கார் தான் என்ர  நெஞ்சை நிறைக்கிறது. அதே நேரம் என்ர கண்களைக் கண்ணீர் மறைக்கிறது.


                                                            

No comments: