மெல்பனில்" இலங்கையில் பாரதி" நூல் அறிமுகம்:

.

மெல்பனில் இலங்கையில் பாரதி நூல் அறிமுகம்:

தமிழக வாசகரின்  பார்வையில் -   இலங்கையில் பாரதி 

மகாகவி பாரதியின் மறுபக்கங்களையும் பதிவுசெய்யும் நூல் !!  

                                                   சங்கர சுப்பிரமணியன்



மெல்பனில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை கேசி தமிழ்மன்றத்தின் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், அண்மையில் சிட்னியில் மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களின் நினைவரங்கில் எழுத்தாளர் முருகபூபதியின் – இலங்கையில் பாரதி – ஆய்வு  நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.
திரு. நவரட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ந்த இவ்வரங்கில் எழுத்தாளர் திரு. சங்கர சுப்பிரமணியன் நூலை அறிகப்படுத்தி உரையாற்றினார்.
தமிழ் மூத்தபிரஜைகள் அமைப்பின் தலைவர் திரு. சிவசுப்பிரமணியம், எழுத்தாளர் திருமதி சகுந்தலாதேவி கணநாதன் ஆகியோர் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

திரு. சங்கரசுப்பிரமணியன் சமர்ப்பித்த நூல்  நயப்புரை இங்கு பதிவாகின்றது.

    பாட்டுக்கொரு பாரதி, ஏட்டுக்கொரு பூபதி. ஓடிவிளையாடு பாப்பா என்றார், சுப்பிரமனிய பாரதி தேடி நல்ல நூலைப்படி என்கிறார், நமது முருகபூபதி.





இதை நான் முகமனுக்காக கூறவில்லை. ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் ஊடாக வாசிப்பு அனுபவப் பகிர்வு என்ற  நிகழ்வினைத் தொடங்க,  நல்ல நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து அதனை பகிர்ந்து பயன்பெறும் வழியினையும் வகைசெய்தவர் என்ற கூற்றொன்றே  இதற்கு சான்றாம்.

நல்ல நூல்களைத் தேடிப்பிடித்து வாசிக்க வகைசெய்தவர் நல்ல நூல்களை படைக்கவும் செய்திருக்கிறார் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. அவரது நூல்களில் ஒன்றான சொல்லமறந்த கதை என்றநூலை நான் வாசித்தபோது ஓரிடத்தில் என் கண்கள் கலங்கின. அந்த அளவுக்கு அவரது எழுத்தின்வலிமை நம் உணர்வுகளோடு சங்கமித்து  உலுக்கிவிடும் என்பதுதான் உண்மை.

முருகபூபதி அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் இலங்கையில் பாரதி என்ற நூலின் இத்தலைப்பு தமிழகத்தை தாயகமாக கொண்ட எனக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அந்த ஈர்ப்பின் உந்தலால் அந்நூலை வாசிக்கத் தலைப்பட்டேன்.



பாரதியைப்பற்றி சொல்லவேண்டுமானால் நான் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். மதுரையில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சாதியத்தை சாடிய சீர்திருத்தவாதி, தொன்மரபுகளைத் தகர்த்த புரட்சிவாதி, ஆளுமை நிறைந்த இலக்கியவாதி, மற்றும் அடிமைத்தனத்தை வெறுத்த விடுதலை விரும்பி என்று சொல்லலாம். அதற்கும் மேலாக சொல்ல வேண்டுமானால்,

தேடிச்சோறு நித்தம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள்பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

என்று சூளுரைத்தபடியே நரை, திரை, மூப்பு வருமுன் செயற்கரியன பலசெய்து தனது 39 வது வயதிலேயே இம்மண்ணைவிட்டு மறைந்த மாமனிதர் அவர் என்பதை மட்டும் அறிவேன்.

ஆனால்,  முருகபூபதி  அவர்கள் எழுதிய இலங்கையில் பாரதி என்ற நூலைப் படித்தபின் கற்றது கை மண் அளவே என்பது எனக்கு தெள்ளத்தெளிவாகியது. அதை வாசிக்க வாசிக்க எத்தனையோ செய்திகளை அறியக் கூடியதாயிருந்தது.

பதினெண்கீழ்கணக்கு நூல்களில் வரும் இன்னா நாற்பது
இனியவை நாற்பது நூல்களைப்போல இந்நூலில் வரும் நாற்பது அங்கங்களும் பாரதியைப்பற்றிய பல கருத்துக்களை பரவலாய் வெளிக்கொணர்கின்றன. எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காலம் தடையாய் இருப்பதால் என்மனதில் நிற்கும் சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


எடுத்த எடுப்பிலேயே முதலாம் அங்கத்தில் நாம் வியப்புறும் வண்ணம் பாரதியைபற்றி வெளிப்படுத்திய செய்தி நம்பமுடியாதிருந்தது!  கப்பலோட்டிய தமிழனை சென்னையில் சந்திக்கச் சென்ற பாரதி தனக்கு புதுச்சேரியில் அறிமுகமான குள்ளச்சாமி என்ற சித்தருடன் சென்றிருக்கிறார். அங்கு அந்த சித்தருடன் சேர்ந்து எலுமிச்சை அளவில் ஏதோ ஒரு லேகியத்தை சாப்பிட்டிருக்கிறார். இதைப்பார்த்த வா.. சி ,   அது என்ன..?”  என்று கேட்டிருக்கிறார். அதற்கு பாரதி,     இது மேலுலகத்துக்கு இட்டுச்செல்லும் அருமருந்து   என்றாராம்.

ஆனால்,  அது அபின் எனும் போதைப்பொருள். இதுபோன்ற பழக்கம் பாரதிக்கு சித்தர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் உண்டானது என்பதை அறிய முடிகிறது. பாரதி போதைப்பழக்கம் உள்ளவர் என்றால் நம்பமுடிகிறதா? இதைப் படிக்கும்போது எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது.

இந்நூலின் மூலம் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் தகைமையுடையவர்  முருகபூபதி என்பதை அறியமுடிகிறது.

1935 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 இல் வீரகேசரி என்ற இலங்கைப் பத்திரிகையில் வேண்டுகோள்
என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஒன்றைப்பற்றி குறிப்பிடுகிறார். அக்கட்டுரையை எழுதியவர் மலையக மக்களுக்காக உழைத்த தொழிற் சங்கவாதியான ஈழத்து மூத்த எழுத்தாளர் சி. வி. வேலுப்பிள்ளை. அக் கட்டுரையில் வங்காளிகளுக்கு தாகூர் எப்படியோ அதுபோல்தான் தமிழர்களுக்கு பாரதி என்று குறிப்பிட்டிருந்த அவர்,  பிற்போக்கு நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழுக்கு பாரதியின் கவிதைகள் மறுமலர்ச்சியை தந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆதலால் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள இந்துக்கள்
பாரதியின் இறந்த தினத்தை தேசிய தினமாக கொண்டாடுவார்கள் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்து மதத்துக்கு அடிப்படையே சாதியக் கட்டுப்பாடுதான். அப்படியிருக்க சாதிய முறையை எதிர்த்துப்போராடிய பாரதியின் இறந்த நாளை எப்படி இந்துக்களின் தேசிய தினமாக ஏற்றுக்
கொள்ளமுடியும்? எந்த சிந்தனை வயப்பட்டு நெருடலான வார்த்தைகளை எழுத்தில் உதிர்த்தாரோ தெரியவில்லை என்று மிகவும் ஆணித்தரமாக தனது நிலைபாட்டை இந்நூலில் நூலாசிரியர் கூறியிருப்பது குற்றம் காணில் எடுத்தியம்பும் அவரது பண்பை நமக்கு தெரிவிப்பதோடு கருத்துக்களில் சமரசம் செய்வது இவருக்கு உடன்பாடில்லை என்பதையும் புரியவைக்கிறது.



ஆனால்,   அந்த இடத்தில் எனக்கு ஒரு நெருடல் ஏற்பட்டது.  சி. வி. வேலுப்பிள்ளை இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள இந்துக்கள் என்பதற்கு பதிலாக தமிழர்கள் பாரதியின் இறந்த தினத்தை தேசிய தினமாக கொண்டாடவேண்டும் என்று சொல்லி இருக்கவேண்டும் என்ற கருத்தை ஏன் நூலாசிரியர் வெளிப் படுத்தவில்லை என்பதே அந்த நெருடல்.

அடுத்ததாக பாரதியின் சிந்தனைகள் இலங்கையில் ஊடுருவியதை சற்று பார்ப்போம். பாரதியின் சிந்தனைகள் 1925 ஆம் ஆண்டுமுதலே தொடங்க ஆரம்பித்துவிட்டன என்றும் அதற்கு அடிப்படையான காரணங்களை அங்கு
நிகழ்ந்த சம்பவங்கள் மூலம் ஆராயமுடியும் என்று கூறுகிறார் நூலாசிரியர்.

இலங்கையில் பாரதியின் பெயர் பாடசாலைகள், நகரங்கள், கிராமங்கள், பாடசாலை மாணவர் இல்லங்கள், இலக்கிய அமைப்புக்கள் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாகக் கூறும் முருகபூபதி,  பாரதியின் முற்போக்கு சிந்தனைக்குட்பட்டு மூத்த இலக்கிய அமைப்பாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானதென்றும் அதுபற்றிய பதிவுகள் 1954 ஆம் ஆண்டு ஜுன்மாதம் 27 ஆம் தேதியிலிருந்தே வரத் தொடங்கியதையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் பாரதியார் கோட்பாடுகளை உள்ளடக்கிய முற்போக்கு இலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்கான  தேவை ஏற்பட்டமைக்கு  அக்காலத்தில் இருந்த சமூக அமைப்பே முக்கிய காரணம் என்பதையும் இந்நூலில் காணலாம். சாதி வேற்றுமை அதன் ஊடாக வரும் ஏற்றத்  தாழ்வு, ஆலயங்களிலும் குடிநீர்க் கிணறுகளிலும் பாடசாலைகளிலும் வேற்றுமை அதனால் ஏற்படும் கலவரங்கள் போன்றவற்றை சிறுகதை, கதை, நாவல் மூலம் வெளிக்கொணர்ந்து விழிப்புணர்வை ஆற்றும்
செயல்கள் நடைபெற்றதையும் பதிவிடுகிறார்.

பாரதியை பற்றி பட்டியலிட்டுச் சொல்லும் முருகபூபதி,  பாரதியை தீவிரமாகப் பயின்று ஆராய்ந்திருப்பவர்கள் அவரது புலமையைப் போற்றியும் புரட்சிகரமான சிந்தனைகளை புகழ்ந்தும் எழுதியிருப்பதோடு அவர் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை எழுதியிருப்பதையும் பதிவுசெய்திருப்பதாக குறிப்பிடுகிறார். பாரதி சொன்ன பல கருத்துக்களை தனித்தனியே ஆய்வுசெய்த பலர் அவர்சொன்ன கருத்துகளுக்குள்ளேயே அவர் முரண்பட்டு நின்றிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைப் பதிவிட்டிருக்கிறார்.

 அவற்றிற்கெல்லாம்  எதிர்வினையாற்ற பாரதிக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் பாரதியின் கருத்துக்களுக்கு இவரும் உடன்படுகிறாரா அல்லது இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வாய்ப்பின்றி இளவயதிலேயே பாரதி மறைந்துபோனதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அமைதி காக்கிறாரா என்ற சந்தேகம் வாசகர்களுக்கு வருகிறதோ இல்லையோ எனக்கு வந்தது.

இவ்வாறு பல கோணங்களில் வாசகர்களை சிந்தனைக்குட்படுத்தும் பாரதிபற்றிய பல அரியசெய்திகளை கூறும் இந்நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதால் எல்லோரும் இந்நூலை வாங்கி பயன்பெறுமாறுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டு எனக்கு பேச வாய்ப்பளித்த  மெல்பன் கேசி தமிழ் மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.


No comments: