.
ஈழத்தின்
மூத்த கவிஞரும், அவுஸ்திரேலியா சிட்னியில் வாழ்ந்துவருபவருமான அம்பி அவர்கள் இம்மாதம்
(பெப்ரவரி 17 ஆம் திகதி ) தனது 91 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார் .
தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், கவிதை நாடகங்கள் உட்பட பல ஆக்கங்களை வரவாக்கியிருக்கும் கவிஞர் அம்பி,
தனது 91 வயதிலும் எழுதத்தொடங்கியிருக்கும் மற்றும் ஒரு பத்தி எழுத்து சொல்லாத கதைகள்.
அம்பியின் வாழ்க்கை சரிதம்போன்று எழுதப்படும் சொல்லாத
கதைகள் தொடர் இந்த வாரம் முதல் வெளியாகிறது.
ஓப்படைப்பு
சீரடிகள்
தூக்கி வைத்த
சின்னஞ்
சிறுவயசில்
ஓரடி
போய் ஈரடி போய்
ஓடித்
திரிகிற நாள்…
தூய வெள்ளை
மண் பரப்பி
சுட்டு
விரல் நிமிர்த்தி
தேயாமல்
தேய்த்தெனக்கு
செந்தேன்
தமிழ் தொட்ட….
தாயாள்…..
அவள் தாயாள்…
தமிழாசான்…..
அன்னவரை
வாயார
வாழ்த்தி யிந்த
வண்டமிழை ஒப்படைத்தேன்!
01.
எனதூர்
சீரோங்கி நெஞ்சிற்
சிறப்பொளிரத்
தீவகத்தில்
பேரோங்கி எஞ்ஞான்றும்
பெட்புயர…
நேர்வளரும்
கற்பகமுந்
தெங்குங்
கனிவாழை மர
வளஞ்சேர்
நெற்களத்தில்
ஆர்க்கும் நிறைமணியும்…
சற்சலமும்
வேம்பும் விழுவவ்வால்
மொய்யிலுப்பை
நாவலனெத்
தாம்தோன்றி
ஓங்கும் தருபலவும்…
தேம்பாத
தோட்டந் துரவும்
சுவை தானியவகையும்
போட்டியிடச்
செல்வம் பொலிநிலனும்…
நாட்டிலுயர்
சைவ நெறியைத்
தமிழைத் தமிழ்ப்பண்பை
வையம் வியக்க
வளர்பாங்கை…
கையிணைந்து
பாவலரும் பண்டிதரும்
பாமரரும் ஓரணிசேர்
காவலராய் நின்று
களனமைக்க….
தாவியுயர் நாவற் குழியூர்
நமதூர் நமதென்று
பாவிசைப்பேன் பஃறொடைவெண் பா…!
02. ஊரும் உணர்வும்
சித்திர வேலவன் ஆலயமணி கணீரென ஒலித்து எதிரொலித்துக் காற்றில்
அலைதாவி வர, சோலையிலே பூங்குயிலும் பைங்கிளியும் புள்ளினமும் உதயகீதம் பொழிந்துதர,
ஊர்க்குளத்தின் அருகே சுற்றிவர நின்று ஆடல் பயில் அலரிகள் அரும்பு நகை புரிய, அதிகாலைக்
கதிரவனை வரவேற்கும் இயற்கை வளம்பொலிந்த ஊர், எனதூர்: நாவற்குழி!
யாழ் வாசிக்குங் கலைத்திறனைப் பாராட்டி ஈழத்தின்
வடபால் விரிந்து பரந்து கிடந்த மணற்றிடற் காட்டை ஏலேலசிங்க மன்னன் உவந்து பரிசாக அளிக்க,
அதைப்பெற்ற யாழ்பாடி, அம்மணற்காட்டைச் சோலையாக்கி யாழ்ப்பாணமெனப் பெயரிட்டான் என்று
வையா பாடல் கூறும். அந்த யாழ்ப்பாண மாவட்டத்திலே, யாழ் நகரிலிருந்து ஐந்து மைல் தூரத்தில்,
கேரதீவு வீதியில் தென்மராட்சிப் பகுதியில் உள்ளது நாவற்குழி எனும் கிராமம்.
அந்தக் கிராமத்திலே, இற்றைக்கு ஏழு தசாப்தங்களுக்கு முன் துவங்குகிறது என் கதை.
என் தந்தையார் பெயர் தாமோதரர் இராமலிங்கம்.
எங்கள் ஊர் பொதுவாக விவசாய மக்களின் ஊர், எனினும் என் தந்தையார் விவசாயஞ் செய்யவில்லை.
ஈழத்தின் வடபகுதிக்கும் எமது ஊருக்கும் வளஞ்சேர்த்த புகையிலையைத் தென்னிலங்கையிற் சந்தைப்படுத்துந் தொழில் புரிந்தவர்
அவர். - என் அப்பு. - தென்னிலங்கையிலே மாத்தறையில்
நெடுங்காலம் வசித்தபடியாலே தாய் மொழியாம் தமிழ்மொழி போலவே சூழல் மொழியாம் சிங்கள மொழியுஞ்
சரளமாகப் பேசியவர்.
என் தாயார் பெயர் தம்பு சிவகாமிப்பிள்ளை.
கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளைகளையுங் கண்ணெனக் காத்துப்பேணியதே அவர் செய்த பணி. எந்தளவுக்கு
படித்த அனுபவம் உடையவரோ தெரியாது. ஆனால், “ ஆரூயிர் பிராணநாயகருக்கு எனத்துவங்கி என்றும் உங்கள்
அடிமை “ என்று கடிதத்தை முடிப்பதை மட்டும்
நானறிவேன்.
அந்தத் தலைமுறையைச் சேர்ந்த அவர் என்கடன் குடும்பப்பணி
செய்து கிடத்தலே என்ற இலட்சிய தமிழ்த்தாய் பரம்பரையில் வந்தவர் அவர் – என் ஆச்சி.
ஆம், தந்தையை அப்பு என்றும், தாயை ஆச்சி
என்றும் விளிப்பது எமது வழக்கம். அன்றைய வழக்கம். இளமைப்பருவத்தில் என் சகாக்கள் தமது
தந்தையரை பப்பா என்றும் அப்பா என்றும் குறிப்பிடும்போது, நான் சற்று என்னுள் கூச்சப்பட்டதுண்டு,
ஆனால், ஒருநாள் எனது கல்லூரி அதிபர் அருளானந்தம் போதகர், தனது தந்தையார்பற்றிக் குறிப்பிடும்போது,
“ அப்பு இருந்த காலத்தில்… “ என்று
கதையைத் தொடங்கினார்.
என்னுள்ளே மறைந்துநின்று, வெட்கப்படவைத்த போலி
எண்ணம், அன்றுடன்தான் அற்றுப்போனது என்பதையும் நான் மறைக்க விரும்பவில்லை.
எனது பெற்றோரின் மனம்போலப் பரந்துவிரிந்த வளவு,
எங்கள் வளவு. அதன் எல்லைகளை வரையறை செய்தன
பூவரசம் மரங்கள். அப்பூவரச மரங்களின் துணையுடன் சுற்றிவர நிமிர்ந்து நின்று திரையிட்டது
பனையோலை வேலி. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, புதிய கதியாலும் பனையோலையும் வேலியைப் புதுப்பித்தன.
அவ்வளவிலே, தெங்குங் கற்பகதருவும் ஓங்கி உயர்ந்து
வளர்ந்து நின்று வளஞ்சேர்த்த சூழல்.
ஒரு புறத்தே, கிளைகள் பரப்பி ஆண்டு தவறாமல் காய்த்துப்
பழுத்த புளியமரம் இரண்டு. அவற்றின் தாளுண்ட நீரை அவை தம் தலையாலே தவறாமல் தந்தபடியால்,
சொந்தப் பாவனைக்குத் தேவையான தேங்காய், இளநீர், நுங்கு, பனங்காய், புளி போன்றவற்றுக்குக்
குறைவேயில்லை.
அந்தப் பரந்த வளவில் ஒரு சிறிய வீடு. நான் பிறந்த
வீடு. இன்றைய காலத்தில் அதை வீடு என்பதிலும் பார்க்கக் குடிசை எனச்சொல்வதுதான் பொருந்தும்.
எனினும் ஏழு பிள்ளைகளைப் பெற்று வளர்த்தெடுக்கக் கூரை அமைத்த ‘மாளிகை ‘
அது என்றுதான் நான் அதைக்கூறுவேன்.
வளவின் தெற்கு வேலியில் ஒரு மரப்படலை. படலையைப்
பாதுகாப்பதற்காக ஒரு கொட்டில். பகலிலே தனிமையாக இருந்து படிப்பதற்கும், நண்பருடன் இருந்து
பேசி மகிழவும், எமது ஊரின் நெல்வயல்கள், கால் நடைகள் போன்ற வளங்களை பார்த்து மதிப்பீடு
செய்யவும் அக்கொட்டில் அரிய வாய்ப்பளித்தது.
படலை திறந்தால், பரந்து கிடந்தது விரிந்து பரந்த
வயல்வெளி. காலத்துக்கு ஏற்ற கோலங்களை அந்த வயல்வெளி காட்டியது.
கோடைகாலத்தில் வரண்ட கோலம். வயல் அறுவடையின்
பின் வெறிச்சென்று தோன்றும் வயல் வெளியில்
உயிர்ப்பைத் தருவன ஊர்மக்களின் செல்வத்துள் ஒன்றான கால்நடைகள். ஆடுகளும் குட்டிகளும்
பசு இனமும் கன்றுகளும் கடாக்களும் காளைகளும் மேய்ந்துலவும் காட்சி, கண்ணுக்கும் கருத்துக்கும்
விருந்தாகும்.
பின்னங்கால்களில் எழுந்து துள்ளி மோதும் கடாக்களும்
தலைகுனிந்து நெற்றி மோதி பலப்பரீட்சை செய்து ஆளுமையை நிலைநிறுத்த முயலும் காளைகளும்
சிரிக்கமட்டுமல்ல, சிந்திக்கவும் தூண்டும்.
மேய்ந்துலவும் கால்நடைகளின் முதுகிலே அமர்ந்து
சவாரிசெய்யும் கரிக்குருவிகள் மற்றைய பறவைகளைவிட சற்று வேறுபட்டவை என நான் எண்ணியதுண்டு.
அவற்றின் யுத்தியை நான் வியந்ததும் உண்டு. கால்நடைகள்
நடந்து திரிந்து மேயும் வேளை புல்லிடையிருந்து சிறு பூச்சிகள் பறக்கும். அப்பொழுது
தாவிப் பறந்து அவற்றை பிடித்துண்ணும் கரிக்குருவிகள்போல மற்றைய பறவைகள் நடந்துகொள்வதை
நான் கண்டதில்லை.
அதனால், கரிக்குருவியின் இரை தேடும் கலையை நான்
மெச்சியதுண்டு.
இரை பிடித்து தின்றபின், அக்குருவிகள் மீண்டும்
அதே கால்நாடைகளின் முதுகில் வந்தமர்ந்து சவாரி செய்யும். அக்குருவியை வாலால் அடித்து விரட்ட முயலும் கால்
நடைகள் என்றும் வெற்றிபெற்றதில்லை.
மாரிகாலத்தில், ஊரின் இன்னொரு வளத்தின் உயிர்ப்பால்
அந்த வயல்வெளி பசுமைதரும். பல்வேறு பருவங்களிலும் நெற்பயிர்கள் தரும் குழுமை ஊரில்
உழுதுண்டு வாழ்வோரின் மனம்போல நிறைவுதரும். மாரிவெள்ளம் உயர உயர, தாமும் தலைதூக்கி
நிமிர்ந்துயரும் நெற்பயிர்கள், நீருயர நெல்லுயரும் என்ற பாடலடிகளை நினைவுபடுத்தும்.
ஆயினும், வரம்புகளை மீறி மேவிப்பரந்து எல்லைகளைக் கடந்து எல்லோரது வயல்களையும் இணைக்கும்
வெள்ளம், “ யாதும் ஊரே….” என்ற தமிழர் சால்பை நடைமுறைப்படுத்தும்.
வெள்ளம் நிறைந்து ததும்பும் வயல்களிற் பயிர்கள்
மட்டுமல்ல, பல்வேறு மீனினமும் உயிர்ப்பூட்டும். ஆங்கு இரைதேடி ஒற்றைக்காலிலே தவமிருக்கும்
கொக்குகள், “ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரையும்
வாடி இருக்குமாம் கொக்கு “ என்ற வெண்பா
அடிகளின் பொருளைக் கட்புலக்காட்சியால் தெளிந்துணரச் சந்தர்ப்பம் அளிக்கும்.
அந்தப் படலைக் கொட்டில் இன்று இல்லை. ஆயினும்
அங்கிருந்து படித்த இயற்கைப் பாடங்கள் உணர்ச்சி ஓட்டத்தில் மிதந்து நிற்கின்றன. உயிர்ப்புடன்
தலை தூக்குகின்றன. கிராமியச் சூழலையும், கிராமப்புற வாழ்க்கையின் பசுமையையும் அருமையையும்
உணர்ச்செய்கின்றன. மறக்கமுடியவில்லை…!
அந்தப் பனையோலை வேலிகள் இன்றில்லை. அவ்வீடும்
இன்று இல்லை. காலத்தின் கோலத்தால், அவை சரிந்து தகர்ந்து சிதைந்துவிட்டன. ஆயினும் அவ்வேலிகள்
கட்டிக்காத்து அன்று “எமது “
என்று போற்றிய “ முதுசொத்து
“ களின் அருமையை நெஞ்சம் மறக்கவில்லை. மறக்கமுடியவில்லை.
உரிமைப்போரை அடக்கமுயன்ற ஆட்சிப் படையினரின்
அழிப்புத் தொழிலின் பின்பு இன்று எஞ்சியுள்ளவை என்ன…? எனக்கண்டறிவதற்குத் துடிக்கும் வேளையிலே இதை எழுதப்பேனா
எடுக்கின்றேன்…….
ஊரின் உணர்வில் உணர்வின் சுழியில்
உள்ளந் துடிக்கையிலே – ஊர்
வேர்கள் அறுந்தும் மனம் தளர்ந்தும்
வேதனை மிகுகிறதே!
( தொடரும் )
No comments:
Post a Comment