அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 7 - கல் நாதஸ்வரம் - சரவண பிரபு

.


கல் நாதசுரம் – காற்றுக்கருவி
அமைப்பு
திருக்குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் ஒரு கல் நாதசுரம் உள்ளது. உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணல் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. சுமார் 3 ½ கிலோ எடையுடையது. முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. (ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர்.  வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது.)

குறிப்பு
சாதாரண நாதஸ்வரத்தை விட சுமார் ஆறு மடங்கு கூடுதல் எடையுடையது கல் நாதசுரம். சுமார் இரண்டடி நீளமுடையதாகவும் வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் மாதிரியான அமைப்பிலும் உள்ளதாகும். மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதசுரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது. 1990 வரை திரு குஞ்சிதபாதம் பிள்ளை என்பவர் தொடர்ந்து இசைத்து வந்த இந்தக் கருவி தற்பொழுது ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிற்பியின்  கை  வண்ணத்தில் கல் நாதஸ்வரமாக  பிறந்து, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும்  இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வருகிறது இந்த  கல் நாதசுரம்.  திருக்கோயில் வித்வான் திரு சாமிநாதன் பிள்ளை ஆலய அதிகாரி கேட்டுக்கொண்டால் முக்கிய விழா நாட்களில் இசைக்கிறாராம்.  கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும் என்கிறார் இவர். முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே  இதில்  நல்இசை  கிடைக்கும் எனவும் பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்கிறார். இவர் அளித்த பேட்டியும் கல் நாதசுரம் இசைக்கப்படும் காட்சிகளும் காணொளி பகுதியில் உள்ளது.






தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதப் பெருமாள் கோயிலிலும் ஒரு கல் நாதசுரம் உண்டு. திருக்குடந்தை கல் நாதசுரம் போன்று தனித்தனி பாகமாக இல்லாமல் இக்கருவி ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது மிகுந்த வியப்பை தருகின்றது. நமது முன்னோர்கள் எத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு இதை செய்து இருப்பார்கள் என்று கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இத்தனை சிறப்பு வாயந்த இந்த பொக்கிஷம் இப்பொழுது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பெட்டியில் உறங்கி வருகிறது. முன்பு மார்கழி மாத பகல்பத்து/இராபத்து நிகழ்வுகளில் இசைக்கப்பட்டு வந்துள்ளது.
சிதம்பரம் ஆடல்வல்லான் கோவிலிலும் ஒரு கல் நாதசுரம் இருந்ததாக சொல்கிறார்கள். அதன் இன்றைய நிலை தில்லை தீட்ச்சிதர்களுக்கும் ஆடல்வல்லானுக்கும் தான் வெளிச்சம். திருவனந்தபுரம் பத்மநாபப் பெருமாள் கோவிலிலும் ஒரு கல் நாதசுரம் இருப்பதாக சொல்கிறார்கள்(தி இந்து நாளிதழ்).



புழக்கத்தில் உள்ள இடங்கள்
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் மாசி மகம் விடையாற்றி/சப்தாவர்ணம்/ஆயுத பூசை நாட்களில் நிர்வாக அதிகாரி விருப்பப்பட்டால் இசைக்கப்படுகிறதாம் (திருக்கோயில் வித்வான் திரு சாமிநாதன் பிள்ளை).

காணொளி:

குடந்தை கும்பேஸ்வரர் திருக்கோயில் வித்வான் சாமிநாதன் பிள்ளை பேட்டி

-சரவண பிரபு ராமமூர்த்தி
 (வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள், www.thanjavurparamapara.com )



No comments: