வாசகர் முற்றம் – அங்கம் 07 -- முருகபூபதி

.


பாடசாலை பருவம் முதல் புகலிட வாழ்வு வரையில் வாசித்துக்கொண்டேயிருக்கும் தீவிர வாசகர் !
 “ வாழ்க்கையின் தேடல்களுக்கு வாசிப்பே வழிகாட்டி  “ எனக்கூறும் மெல்பன் கிருஸ்ணமூர்த்தி
                                                                            
     
                                                                        
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் நான் தஞ்சமடைந்த காலப்பகுதியில், இந்தப்பெரிய தேசத்தில் தமிழ் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தேடிக்கொண்டிருந்தேன்.
படிப்படியாக பலர் எனது கலை, இலக்கிய, ஊடக வட்டத்தில் இணைந்தனர்.  இன்றும் அவ்வாறு பல புதிய முகங்களை அடிக்கடி சந்திக்கின்றேன்.
1990 களில் நாம் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினை தோற்றுவித்தபோது, பாரதி விழாவை நடத்துவதற்கு தீர்மானித்தோம். இந்த விழாவில் நான் எழுதிவைத்திருந்த மகாகவி பாரதி நாடகத்தை அரங்கேற்றுவதற்காக அதில் நடிக்கவைக்க பாத்திரங்களை தேடிக்கொண்டிருந்தபோது, சிலர் கிடைத்தார்கள்.
பாரதியாரின் தோற்றத்திற்கு ஏற்ப ஒருவரை தேடத்தொடங்கியதும் அதற்குப்பொருத்தமானவராக திரு. எஸ். கிருஸ்ணமூர்த்தி எனக்குத் தென்பட்டார்.
இவர்,  யாழ். பாஸ்கர், அளவையூர் வித்தியானந்தன், முல்லை சிவா  முதலான நண்பர்களுடன் இணைந்து  ஒரு சில சரித்திர நாடகங்களிலும் பங்கேற்றிருந்தவர்.
இறுதியில் எனது மகாகவி பாரதியில்  பாரதியாக எஸ். கிருஸ்ணமூர்த்தியும்  செல்லம்மாவாக கோகிலவாணி நவநீதராஜாவும், பாரதி பூநூல் சடங்கு செய்வித்த  இளைஞனாக பிரகாஷ் அந்தோனிப்பிள்ளையும் பாரதியின் மகள் தங்கம்மாவாக செல்வி  காயத்திரி குமாரலிங்கமும் வா.வே.சு. அய்யராக வித்தியானந்தனும் அரவிந்தராக தமிழரசனும் செட்டியாராக நவநீதராஜாவும் நடித்தனர்.
நாடக ஒத்திகைகளுக்கு வரும் வேளைகளில் கிருஸ்ணமூர்த்தியின் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருப்பதை கண்டிருக்கின்றேன்.
எனது வீட்டுக்கு வரும் சமயங்களிலும்,  “ அண்ணன்,  வாசிக்க என்ன இருக்கிறது..?  என்றுதான் கேட்பார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் நான் சென்னைக்குச்சென்றபோது அங்கு ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், அசோகமித்திரன்,  பாலகுமாரன், சமுத்திரம், திலகவதி, சிவகாமி, உட்பட சில எழுத்தாளர்களையும் சந்தித்துவிட்டு திரும்புகையில் என்னோடு சில புத்தகங்களும் பயணித்து வந்திருந்தன.
இக்காலப்பகுதியில் எனது நண்பரான கிருஸ்ணமூர்த்தி, அவ்வப்போது வந்து புத்தகங்களை பரிமாரிக்கொள்வதுடன், தான் படித்த  சிறுகதைகள், நாவல்கள் பற்றியும் தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வார்.
இவ்வாறு 1990 ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் மூன்று தசாப்த காலமாக என்னுடன் கலை, இலக்கியம் பேசிவரும் இவர், சிறந்த ஒளிப்படக்கலைஞருமாவார்.
இங்கு நடைபெறும் தமிழர் திருமணங்கள், பூப்புனித நீராட்டு மற்றும் குழந்தைகளின் பிறந்தநாள் பெரியவர்களுக்காக நடத்தப்படும் மணிவிழா, பவள விழா  வைபவங்களில்,  வீடியோ ஒளிப்பதிவு சாதனங்களுடன் இவரைக்காணமுடியும்.   மயூர் வீடியோ விஷன் என்ற பெயரில் நீண்ட காலமாக அந்தப்பணியையும் தொடர்ந்துவருகிறார்.
அவ்வேளைகளிலும் அவரது பொதிகளுக்குள்  ஒருசில புத்தங்கள் இருப்பதை அவதானித்துள்ளேன்.
சில வருடங்களுக்கு முன்னர் மெல்பன் பாரதி பள்ளியும் மெல்பன் கலைவட்டமும் இணைந்து கலைஞர் மாவை நித்தியானந்தன் தயாரித்து இயக்கி வெளியிட்ட பாப்பா பாரதி வீடியோ ஒளிப்பதிவு இறுவட்டிலும் கிருஷ்ணமூர்த்தி பங்கெடுத்தவர்.
இந்த இறுவட்டு மூன்று பாகங்களில் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.
மெல்பனில் வதியும் எனது மற்றும் ஒரு இலக்கிய நண்பர் எஸ். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய எனது  வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படமும்,   இந்த நண்பர் கிருஸ்ணமூர்த்தி  இல்லையேல் சாத்தியமாகியிருக்காது.


எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா காலத்தில்,  இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சியை சித்திரிக்கும் ஆவணப்படத்தையும் கிருஸ்ணமூர்த்தி இயக்கியிருந்தார்.
இலங்கை வடபுலத்தில் அச்சுவேலி எனும் விவசாயக்கிராமத்தில், 1962 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் கிருஸ்ணமூர்த்தி,  அங்கு சரஸ்வதி வித்தியாசாலையில் தனது ஆரம்பக்கல்வியையும் மேல் வகுப்புகளை  புத்தூர் ஶ்ரீ சோமாஸ்கந்தா கல்லூரியிலும் தொடர்ந்தவர்.
இன்றும் அச்சுவேலியில் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஶ்ரீவிக்னேஸ்வரா சனசமூக நிலையம்தான்,  தன்னை  நல்லமுறையில் வளர்த்தெடுத்தது என்று நன்றியுணர்வுடன் கூறும் கிருஸ்ணமூர்த்தி, அங்கு அக்காலகட்டத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகள், கலை விழாக்கள், நாடகங்கள் முதலானவற்றில் பங்கேற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.  
வாசிப்பு பழக்கம் எவ்வாறு  தொற்றிக்கொண்டது எனக்கேட்டபோது,  தனது பாடசாலைக்காலத்திலிருந்து பெற்றுக்கொண்ட வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
 “ சனசமூக நிலையத்தில் இயங்கிக்கொண்டிருந்த நூலகத்திலிருந்தே  முதலில் புத்தகங்களை பெற்று  படித்தேன். வீட்டில் எனது சின்னக்காவும் நன்றாக வாசிப்பார்.  அவரிடமிருந்த சில கதைப்புத்தகங்களை, அவருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக வாசிப்பேன். கதைப்புத்தகங்களில் ஆர்வம் காண்பித்தால், பள்ளிப் பாடப்புத்தகங்களில் கவனம் குறைந்துவிடும் என்ற எச்சரிக்கை வீட்டில் தொடர்ந்தமையினால், எப்படியாவது வாரத்தில் ஒன்றிரண்டு கதைப் புத்தகங்களை திருட்டுத்தனமாகப் படித்து முடித்துவிடுவேன்.


பொன்னியின் செல்வன், ஜலதீபம், கடல்புறா இப்படி சில வற்றை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்துவிட்டேன்.
தாயகத்தில்  உள்நாட்டு போர்மேகங்கள் சூழ்ந்ததையடுத்து முதலில் மத்திய கிழக்கிற்கு தொழில்வாய்ப்போடும், பின்னர் தமிழகத்தில் சென்னைக்கும் புலம்பெயர்ந்தேன். அதன்பின்னர் 1988 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தேன்.
சென்னையில் வாழ்ந்த இரண்டரை வருடகாலத்தில் நிறைய வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு வெளியாகும் குமுதம், கல்கி, ஆனந்தவிகடன், துக்ளக் முதலான இதழ்களை தவறாமல் படித்துவிடுவேன்.
மெல்பனுக்கு வந்ததும்,  இந்த புத்தம் புதிய வாழ்க்கைச்சூழலில் வாழ்வாதாரத்திற்காக வேலை தேடும் படலத்துடன் புத்தகங்களையும் வாசித்தேன். படிப்படியாக நண்பர்கள் சேர்ந்தனர். அவர்களிடம் புத்தகங்களை பரிமாரிக்கொண்டேன். இந்தப்பழக்கம் இன்றுவரையில் தொடருகின்றது.
இங்கு வந்தபின்னர்  முதலில் எழுத்தாளர் பாலகுமாரனின் கதைகள், நாவல்கள் எனக்கு அறிமுகமாகின. அவரது எழுத்துநடை அப்போது என்னைப்பெரிதும் கவர்ந்தமையினால், அவரது நூல்களை தேடித் தேடிப்படித்தேன். இதுவரையில் பாலகுமாரனின் நூல்களில் சுமார் 60 -70 படித்திருப்பேன்.
1993 ஆம் ஆண்டில் வீடியோ ஒளிப்பதிவை பகுதிநேரப்பணியாக ஆரம்பித்தமையால், நண்பர் மாவை நித்தியானந்தனின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட பாப்பா பாரதியிலும் பங்கேற்றேன்.
இக்காலப்பகுதியில்தான், முல்லைமணியின்   பண்டாரவன்னியன்,  பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவின் எல்லாளன்,  எஸ்.பொ.வின் வலை  முருகபூபதியின் மகாகவி பாரதி முதலான நாடகங்களிலும் நடித்தேன்.
எனது வாசிப்பு பயிற்சிக்கு ஆரம்பத்தில், கல்கி, சாண்டில்யன், அகிலன், ஜெகசிற்பியன் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள்தான் பெரும் துணையாக இருந்தன. பின்னர் அதிலிருந்து சற்று விலகி சமூக நாவல்களின் பக்கம் திரும்பினேன். இந்தத்  திருப்பத்தில் என்னை வந்தடைந்ததுதான் பாலகுமாரனின் நாவல்கள்.


பின்னர், எனது வாசிப்பு அனுபவத்தில் ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி,  தி. ஜானகிராமன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடைய நாவல்கள், சிறுகதைகள் இணைந்தன.
 அவுஸ்திரேலியாவில் புகலிடம்பெற்றுள்ள  எழுத்தாளர்களின்  புத்தகங்களையும் சமகாலத்தில் படித்துவருகின்றேன். எஸ்.பொ.,  முருகபூபதி, நடேசன், சுதாகரன், ஆசி.கந்தராஜா, ஜே.கே. ஜெயக்குமாரன், தெய்வீகன் ஆகியோரது நூல்களையும் படித்துவருகின்றேன்.
அத்துடன் தமிழில் வெளிவந்துள்ள இந்திய மொழி படைப்பு இலக்கியங்களையும் மேலைத்தேய மற்றும் சிங்கள இலக்கியப்படைப்புகளையும் படித்துவருகின்றேன்.
நான் தற்போது தெரிவுசெய்து படிக்கும் புத்தகங்கள் எனது வாசிப்பு பயிற்சியில் புதிய அனுபவங்களை தருகின்றன.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் தமிழ் எழுத்தாளர் விழாக்கள், மற்றும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்தோடு பங்குபற்றிவருகின்றேன்.
நான் ஒரு எழுத்தாளனோ, பேச்சாளனோ இல்லை. ஆனால், படித்த இலக்கிய நூல்கள் பற்றி கலந்துரையாடுவதிலும், நூல்கள் பற்றிய ஏனையோரின் விமர்சனங்களை கேட்பதிலும் ஆர்வம் கொண்டிருப்பவன்.

இவ்வாறு தனது வாசிப்பு அனுபவத்தின் தொடக்க காலத்தையும் சமகாலத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட இலக்கிய நண்பர் கிருஸ்ணமூர்த்தியிடம் நாம் காணும் அபூர்வமான இயல்பையும் இந்தப்பதிவில் சொல்லவிரும்புகின்றேம்.
கிருஸ்ணமூர்த்தி, தினமும் வேலைக்குச்செல்லும்போது வீட்டிலிருந்து உணவுப்பொதியுடன் ஒரு புத்தகமும் எடுத்துச்செல்வார். பணியிடத்தில் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் புத்தகம் படிப்பார்.
மனைவி, பிள்ளைகளை அவர்களின் தேவைகளின் நிமித்தம்  எங்காவது அழைத்துச்செல்லும்போது,  அவர்களை குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு, காருக்குள்ளிருந்து புத்தகம் வாசிப்பார்.
சென்னையில் வருடாந்தம் நடக்கும் புத்தகசந்தைக்கு செல்பவர்களிடம் சொல்லி புத்தம் புதிய புத்தகங்களை வரவழைத்து படிப்பார். படித்தவற்றை சக நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வார். இணைய இதழ்களில் வெளியாகும் இலக்கிய புதினங்களையும், பதிவுகளையும் படிப்பார். 
தனது வாழ்வின் தேடலுக்கு புத்தகங்கள்தான் உறுதுணையாக இருந்தன எனப் பெருமிதத்துடன் கூறும் கிருஸ்ணமூர்த்தி அவர்கள்,  “ வாசிக்கநேரமில்லை     என்று பல்லவி பாடுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகழுவார் என்பது மாத்திரம் நிச்சயம்..!
இலக்கிய நண்பர் கிருஸ்ணமூர்த்திக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.comNo comments: