மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் மாதிரி தைப்பொங்கல் விழா – பரமபுத்திரன்


Add caption
.

Add caption

தைப்பொங்கல் என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளம், வரலாற்று தொடர்ச்சி, பாரம்பரிய நிகழ்ச்சி என்று கூறிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் தைப்பொங்கலின் சிறப்பை, அதன் அவசியத்தை, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை எங்கள்  இளம் சந்ததிக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தமிழ் மக்களாகிய எமது கடமையும்  பொறுப்பும் மட்டுமல்ல, அதனை அவர்கள் பின்பற்ற பயிற்றுவிக்கவும் வேண்டும். அந்த வகையில் தனித்து ஏட்டுக்கல்வியை மாணவர்களிடம் திணிப்பதை தவிர்த்து, அனுபவக் கல்வியை பெற்றுக்கொடுத்தல் கற்பித்தலில்  மிகவும் அவசியம். உண்ணும் போது பிறருக்கும், பிற உயிர்களுக்கும்  கொடுத்து உண்பது தமிழர் பண்பாடு. அதிலும்  தைபொங்கல் என்றால் தை முதல்நாளே உண்ணும் உணவை  மற்றவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை சொல்லும் நாள். உறவுகளுடன் கூடி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் நாள். இயற்கைதான் எம்மை வாழ வைக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய நாள். இதனை தங்கள் கல்வி நிலைய மாணவர்களும் அறியவேண்டும் என்ற நோக்கில் மாதிரி தைப்பொங்கல்  நிகழ்வினை மவுண்ட் றூயிட் தமிழ்  கல்வி நிலையத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.தமிழர்கள் பழமை  பேசுவதில் காலம் கடத்துவார்களே தவிர, தங்களை  அறிய முயற்சி செய்வது  குறைவு. பழமையை போற்றுவதில் உள்ள ஆர்வம் புதுமைகள் செய்வதில் இல்லை.  எங்களுக்கென்று தனி  இடத்தினை தக்க வைப்பதிலும்  பிறரை பார்த்து கைதட்டுவதில் விருப்பம் அதிகம். தங்கள் பிள்ளைகளுக்கு தமிழர்களின் பண்பாடுகளை சொல்லிக்கொடுப்பதிலும் விளம்பர ஆர்வமே முன்னிற்கின்றது.   தமிழர்களின் சிறப்பை அறிய எம்மை தூண்டுவதில்லை. தமிழர்களின் ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒரு காரண  அடிப்படையில் அமைகின்றது என்று சொல்லித்தருவதில்லை.  இன்று காலம்  மாறிவிட்டது. வாழ்க்கை நிலை முற்றாக  வேறுபட்டுவிட்டது. அரிசி கடைகளில் வாங்கப்படும் ஒன்று. அதுவும் இயந்திரங்களால் உருவாக்கப்படுவது என்று பிள்ளைகள் நம்பும் காலம் வந்துவிட்டது. இயற்கை தொடர்பான அறிவு பிள்ளைகளிடம் குறைந்து வருகிறது. புவி என்ற இயற்கையை சிதைக்கிறார்கள். செவ்வாயில் வாழ இடம் தேடுகிறார்கள். எனவே தைப்பொங்கல்  என்பது இயற்கைக்கு நன்றி சொல்லுதல், சூரியனுக்கு நன்றி சொல்லுதல், உழவருக்கு நன்றி சொல்லுதல் என்பதை தாண்டி, இயற்கையை பாதுகாக்க வேண்டும், புவியை காக்க உதவ வேண்டும், எங்கள் உறவுகளை வலிமையாக்க வேண்டும்,  என்ற எண்ணத்தை பிள்ளைகளிடம் வளர்க்க வேண்டும் என்பதே அவசியமான ஒன்று.  அதனை கல்விக்கூடங்களே செய்யவும் வேண்டும்.

வாராவாரம் சனிக்கிழமைகளில் பகல் 2.00 மணி முதல் 4.30 மணிவரை கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் பாடசாலையில், மாணவர்களின் கல்வி  செயற்பாடுகள் பாதிக்கப்படாமல், கல்வி நிலைய நிர்வாகம், பெற்றோர்கள் ஆசிரியர்கள் இணைந்து   முதல் முறையாக பொங்கல்விழா விழாவினை முன்னெடுத்துள்ளார்கள்.  மவுண்ட் றூயிட் Colyton Public School, அரங்கத்தில் 08/02/2020 சனிக்கிழமை அன்று பகல் 1.30 மணியிலிருந்து 2.30 மணிவரை பொங்கல்விழாவினை நாடாத்திவிட்டு தொடர்ந்து 2.30 மணியிலிருந்து 5.00 மணிவரை பாடசாலையை நடாத்தியிருந்தார்கள்.     மாதிரி  பொங்கல் என்று அறிமுகப்படுத்தி இருப்பினும் அங்கு நடந்த செயல்பாடுகள் யாவும் நிறைவான பொங்கல் நடைபெற்ற எண்ணத்தை எமக்குள் ஏற்படுத்தியது.

ஏற்கனவே வாழை, கரும்பு, தோரணம் என்பவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவே அழகிய கோலம் இடப்பட்டு பொங்கலுக்கான இடம் அமைக்கப்பட்டிருந்தது. சரியாக 1.30 மணிக்கு கல்விநிலைய உபதலைவர் திரு. சிங்கநாயகம் சிவசங்கர் அவர்களின் நெறிப்படுத்தலில் பொங்கல்விழா நிகழ்வு ஆரம்பமானது. நிர்வாக குழு உறுப்பினர் திரு. பாலசுப்பிரமணியம் செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கல்விநிலைய நிர்வாக  தலைவர் திரு. தேவதாசன் கில்பேட் அவர்கள், தங்கள் குடும்ப சமேதராய் முன்பே  பொங்கல் செய்து கொண்டு வந்திருந்த மண்பானையுடனான பொங்கலை அடுப்பில் வைத்து பொங்கல் நிகழ்வினை ஆரம்பித்தார். தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உள்வாங்கக்கூடியதாக வாழை இலைபோட்டு, அதில் பொங்கல் படையலிட்டு, தீபமேற்றி, சூரிய வணக்கம் செய்து பொங்கல்விழாவில் கலந்து கொண்டிருந்த அனைவரையும் பொங்கலின் பங்காளர்களாக மாற்றினார். பொங்கல் வணக்கத்தை செய்முறையில்  காட்டினார். அடுத்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கல்வி நிலைய மாணவர்களின் உழவர்கள் நடனம், அத்துடன் இன்னுமொர் பொங்கல் நடனமும் இடம்பெற்றது. உழவர் நடனம்  ஏற்கனவே பரமட்டா  பொங்கல் நிகழ்விலும், பொங்கல் நடனம் சிட்னி பாராளுமன்றத்திலும் நடைபெற்றது. அதற்கான மாணவர்களின்  சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டது. பொங்கல் தொடர்பான சிறப்புரையை திரு. முத்தரசு கோச்சடை அவர்கள் வழங்கியிருந்தார். நேர சிக்கனம் கருதி நிகழ்வுகள் மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் நடக்கக்கூடிய வகையில் ஒழுங்குசெய்யபட்டிருந்தது. தேவையற்ற துதிகள், மரியாதை உரைகள் என்பன  தவிர்க்கப்பட்டிருந்தன. பொங்கல் வணக்க நிகழ்வுக்கு   மட்டும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. நிர்வாக செயலாளர் திரு ராஜாராம் சரவணன் அவர்களின் நன்றியுரையுடன் பொங்கல்விழா நிறைவடைந்தது.  பொங்கல் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பொங்கலும், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன, எனினும் மாணவர்களின் வகுப்பறை கற்றல்  சீராக அமைவதற்காக பாட இடவேளையின் போதே  இவை வழங்கப்பட்டன. மாணவர்கள்  தைப்பொங்கல் தொடர்பான  நல்ல அனுபவம்  பெற்றிருப்பார்கள் என்று உறுதியாக கூறலாம். சிறப்பாக நேரமுகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு பொங்கல் நிகழ்வினை   அறிமுகப்படுத்திய கல்வி நிலைய சமூகத்தை மனமார பாராட்டலாம்.

No comments: