மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 24 - முருகபூபதி

.



                                                                 
                                                                     
சுபாஷினியின் கைத்தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் மஞ்சுளா.
‘ இவள் ஏன்  வேலை நேரத்தில் எடுக்கிறாள்…? ‘  சுபாஷினி, அருகில் தன்னுடன் வேலைசெய்யும் சிங்கள யுவதியிடம், கண்சாடை செய்துவிட்டு  சற்று ஒதுங்கிச்சென்று  பேசினாள். சுபாஷினி கவனிக்கவேண்டிய வாடிக்கையாளர்களை, அந்த சிங்கள யுவதி கவனித்தாள்.
   என்னடி… இந்த நேரத்தில்…?  பிஸியாக இருக்கிறேன். சொல்லு“   என்றாள் சுபாஷினி. மறுமுனையில் மஞ்சுளாவின் குரலில் பதட்டம் தொனித்தது.
 “ சுபா… என்னுடைய அம்மா, என்னைத்தேடத் தொடங்கிவிட்டா. எங்கட பேங் மனேஜருக்கு போன் எடுத்து விசாரித்திருக்கிறா.! என்ன செய்வது என்று தெரியவில்லை. 

 “ சரி… சரி… வேலை முடிந்ததும் இங்கே நேரே வா. எனக்கு இன்று இரவு ஏழுமணிவரையும் வேலை. நேரில் பேசுவோம்.. “
 “ சரி….”  மஞ்சுளா இணைப்பைத் துண்டித்ததும், சற்று கலவரமடைந்த முகத்துடன் சுபாஷினி, கவுண்டருக்கு வந்தாள்.
 " என்ன.. ஏதும் பிரச்சினையா…?  “ அந்த சிங்கள யுவதி கேட்டாள்.
  எனக்காக இங்கே நின்றதற்கு தேங்ஸ். ஒன்றுமில்லை. ஊரில் அம்மாவுக்கு சுகமில்லையாம்.    என்று பொய்சொன்னாள் சுபாஷினி.
எதற்காக திடீரென்று மஞ்சுளாவின் தாய் இப்போது  மகளைத் தேடவேண்டும். துளியளவும் இரக்கமில்லாமல் விட்டுப்போட்டு ஓடிப்போனவளுக்கு, ஏதோ நடந்திருக்கவேண்டும்.  எத்தனை வருடமிருக்கும். தாய் – தகப்பன் பாசமே இல்லாமல் தனித்தே வாழப்பழகிவிட்டவளுக்கு எஞ்சியிருந்த உறவு நாம் வசிக்கும் ஜீவிகாவின் வீடு மாத்திரம்தான்.
இன்று மாலை, மஞ்சுளா எத்தகைய செய்திகளுடன் வரப்போகிறாளோ..?  சுபாஷினிக்கு அன்றைய பொழுது மிகவும் மெதுவாக நகர்வதுபோலிருந்தது.

பிதா ,  கம்பியூட்டர் பயிற்சி வகுப்பிலிருந்து புறப்பட்டு, தாமதிக்காமல் வீடு வந்து சேர்ந்தாள். வீட்டின் கேட்டில் தொங்கும் தபால் பெட்டியின் வயிலிருந்து ஒரு  மாதாந்த இலக்கிய இதழும் சில கடிதங்களும் வெளியே  நீட்டிக்கொண்டிருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு கேட்டை பிணைத்திருக்கும் சங்கிலியில் தொங்கும் பூட்டைத் திறந்து உள்ளே வந்து வாசல் கதவைத்திறந்து வந்து, அவசரஅவசரமாக, அணிந்திருந்த சேலையை களைந்துவிட்டு, வீட்டுடைக்கு மாறினாள்.

நேரம்   மதியம் ஒருமணிக்கு இன்னமும் இருபது நிமிடங்கள் இருந்தன. காலையில் வெட்டித்துப்பரவு செய்து  குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுச்சென்ற காய்கறிகளை எடுத்து சமையலைத் தொடங்கினாள்.
ரைஸ் குக்கரில் அரிசியை கழுவிப்போட்டுவிட்டு,  அன்று வந்திருந்த கடிதங்களை பிரித்துப்பார்த்தாள். அதில் அவளது பெயருக்கும் ஒரு கடிதம். அது, அவள் நிகும்பலையில் புதிதாக திறந்திருக்கும் வங்கிக்கணக்கின் கடிதம். தான் வைப்பிலிட்டிருக்கும் பணத்திற்கான மாதாந்த வரவுக்கடிதம். அதனை எடுத்துச்சென்று, தனது ஒரே ஒரு உடைமையாக இருக்கும் பேக்கில்  துணிகளுக்கு  அடியில் வைத்தாள்.




ற்பகம் பாடசாலை விட்டு திரும்புவதற்கிடையில் அபிதா சமையலை முடித்துவிட்டு, வெளியே உலரப்போட்டிருந்த உடைகளை எடுத்து வந்து மடித்து, அவரவருக்குரியவற்றை அவரவர் அறைகளிலேயே கட்டில்களில் வைத்தாள்.
 “ எனக்கு ஏதும் கடிதம் வந்ததா..? அபிதா.. “ கற்பகம்  வேலையால் திரும்பி வரும்போதே கேட்டாள்.
   உங்கள் பெயருக்கு எதுவும் இல்லை ரீச்சர். வந்ததெல்லாம் ஜீவிகாவுக்குத்தான். “ தனக்கு வந்த வங்கிக்கடிதம் பற்றியோ, அன்றைய தினம் கம்பியூட்டர் பயிற்சிக்கு சென்றது பற்றியோ அபிதா மூச்சும் விடவில்லை.
கற்பகம் உடைமாற்றி, முகம் கழுவி வந்து, மீண்டும் ஜீவிகாவின் பெரியப்பாவின் வருகை பற்றிய பேச்சை அல்லது சுபாஷினியின் நுவரேலியா பயணம் பற்றிய கதையை தொடங்கக்கூடும்  என்றுதான் அபிதா எதிர்பார்த்தாள். ஆனால், எந்த சலனமும் இல்லாமல் தனது தட்டத்தில் அன்று சமைத்திருந்ததை தானே எடுத்துப்போட்டுக்கொண்டு  சாப்பிட்டுவிட்டு,   “ வெண்டிக்காய் கறியில் உப்பு கூடிப்போய்விட்டது  “ என்று மாத்திரம் உதட்டுச்சான்றிதழ் வழங்கிவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்து குறட்டை ஒலி மெதுவாகக்கேட்டது. அபிதா,  சாப்பிடத்தொடங்கினாள். கற்பகம் சொன்னது சரிதான். அவசரத்தில் வெண்டிக்காய் கறியில் உப்பும் காரமும் அதிகம்தான். எழுந்து சென்று கையை கழுவிவிட்டு, ஒரு எலுமிச்சம் பழத்தில் பாதியை வெட்டிப் பிழிந்து சாறுவிட்டு கலக்கியபின்னர் உணவருந்தினாள்.
அபிதாவுக்கு தொடர்ச்சியாக வீட்டு வேலையில் சலிப்பு வந்தமையால்தான், கம்பியூட்டர் பயிற்சி வகுப்பில் ஆர்வம் காண்பித்து செல்லத் தொடங்கியிருக்கிறாள்.
இந்த கற்பகம் ரீச்சர், அந்த ஆசைக்கு வேட்டு வைத்துவிடுவாவோ என்ற பயம் அபிதாவின் ஆழ்மனதில் அடிக்கடி துளிர்க்கிறது.
மாலையில் மஞ்சுளாவும் சுபாஷினியும் வேலையால் திரும்பியதும், தனது அன்றைய முதல்நாள் பயிற்சி வகுப்பின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும்.  அவ்வாறு பகிரும்போது, கற்பகம் அருகிலிருந்து கேட்டுவிடக்கூடாது.

ஆனால், அபிதாவின் அந்த எதிர்பார்ப்பு அன்று நிறைவேறவேயில்லை.
இரவு எட்டுமணியளவில் மஞ்சுளாவும் சுபாஷினியும் ஒன்றாகவே ஒரு ஓட்டோவில் வந்து இறங்கினார்கள். மஞ்சுளா வழக்கத்திற்கு மாறாக அபிதாவுடன் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் பிரவேசித்தது அபிதாவுக்கு சற்று ஏமாற்றமாகவிருந்தது.

                                     சுபாஷினிக்கு தேநீரை கலந்து கொடுத்துவிட்டு,  வசந்தமாளிகை வாணிஶ்ரீ என்ன மூட் அவுட்டாக வந்திருக்கிறா...? ஏதும் பிரச்சினையா..?       எனக்கேட்டாள் அபிதா.
 இப்போது ஏதும் பேசவேண்டாம் “ – என கண்சாடை காண்பித்தாள் சுபாஷினி.   
அபிதாவுக்கு குழப்பமாக இருந்தது. பலவாறு யோசித்தாள். கடலின் ஆழத்தையும் கண்டுவிடலாம். பெண்ணின் மன ஆழத்தை கண்டுபிடிக்கவே முடியாது என்று சொல்லப்படும் பொதுவான ஆராய்ச்சியில் ஏதும் உண்மையிருக்குமா?
குழந்தையாக – குமரியாக – தாயாக – பாட்டியாக உருமாறும் பெண்ணின் உடற்கூறிலும் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்களை உளவியல் கண்ணோட்டத்தில் பதிவுசெய்த ஒரு சிறுகதையை, ஜீவிகாவுக்கு  முன்பொருநாள் தபாலில் வந்திருந்த இலக்கிய இதழில் படித்திருக்கும் அபிதா, அந்த வீட்டினுள் நடமாடும் தன்னுடன் சேர்த்து ஐந்து பெண்களினதும் வாழ்க்கை கோலங்களைப்பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
கற்பகம், அறையிலிருந்து எழுந்து வந்து, தொலைக்காட்சியை இயக்கி மாலையில் பார்க்கத்தவறிய தொலைக்காட்சி தொடர் நாடகத்தை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

சுபாஷினி, குளியலறைக்குள் புகுந்துவிட்டாள்.
மஞ்சுளா, இன்னமும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
ஜீவிகா, தான் வீடு திரும்புவதற்கு இரவு பத்துமணியும் ஆகலாம் என்று அபிதாவின் கைத்தொலைபேசிக்கு ஏற்கனவே சொல்லிவிட்டாள்.
அபிதா, மஞ்சுளாவின் அறையை எட்டிப்பார்த்தாள். அவள் முகம் குப்புறப்படுத்திருக்கிறாள். நிச்சயமாக அவள் உறங்கவில்லை என்பது அவளிடமிருந்து எழும் சன்னமான விசும்பல் ஒலி சொல்கிறது.
அபிதா, அருகே சென்று கட்டிலில் அமர்ந்து, மஞ்சுளாவின் தோளைத் தொட்டு அவளது சுருண்ட கேசங்களை வருடினாள்.
“ என்ன, மஞ்சு..?  என்ன நடந்தது…?  முகம் கழுவவில்லையா…? சாப்பிடவில்லையா…? பிளீஸ்… எழும்புங்க மஞ்சு. சாப்பிடாமல் படுக்கவேண்டாம்.  

மஞ்சுளா முகத்தை திருப்பினாள். கண்கள் சிவந்திருந்தன. எழுந்திருக்காமலே, அபிதாவை கூர்ந்து பார்த்தாள்.
   அபிதா, என்னை ஒரு பெண்  தேடிக்கொண்டிருக்கிறா…. யாரை இனிமேல் பார்க்கக்கூடாது என்று வைராக்கியம் கொண்டிருந்தேனோ, அந்தப்பெண் என்னைத்தேடி வரப்போகிறாள் போலத்தெரியுது. “
“ யார்…? உங்களுக்கு மிகவும் வேண்டியவர்களா…? “
“ இல்லை. வேண்டாதவர்கள். என்னைப்பெற்றெடுத்த மனுஷி! “
அதனைக்கேட்டதும் அபிதாவின் முகம் மலர்ந்தது.  
“ நல்ல செய்திதானே…! அதற்கேன் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.  வரட்டுமே… எனக்கும்  மஞ்சுவின் அம்மாவைப்பார்க்க விருப்பம். “
“ அந்த ஓடுகாலியப்பார்க்க விருப்பமா..? “
அபிதா, சட்டென தனது கரத்தால் மஞ்சுளாவின் வாயை மூடினாள்.
“ அப்படி சொல்லக்கூடாது. என்ன இருந்தாலும் அம்மா இல்லையா..? ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. தான் செய்த தவறை உணர்ந்து திரும்பிவரலாம். அல்லது ஏதோ பிரச்சினையில் அம்மா சிக்கியிருக்கலாம். வரட்டுமே. வருவதென்றால் இந்த வீட்டுக்குத்தானே வருவாங்க. “
 “ இல்லை. அவவுக்கு இந்த வீடு தெரியாது. நான் எங்கிருக்கிறேன் என்பதும் தெரியாது.  நான் வேலைசெய்யும் வங்கியின் தொடர்பிலக்கம் பெற்று மனேஜரிடம் விசாரித்திருக்கிறா.  இனி எந்த நிமிடத்திலும் அவ அங்கே வந்து நிற்பா..! அதுதான் பெரிய யோசனையாக இருக்கிறது. “
“ காலங்கள் மாறும் காயங்களும்  மாறும் என்று சும்மாவா சொல்லிவைத்திருக்கிறார்கள். மாறுவது குணம் சேருவது இனம்தானே மஞ்சு.  தேடிவரப்போவது அம்மாதானே. வந்தால், இங்கே அழைத்துவாங்க. ஆறுதலாகப்பேசலாம். “

“ அதுதான் நடக்காது.  தப்பித்தவறி பேங் வாசலில் வந்து நின்றால், செக்கியூரிட்டி கார்டிடம் சொல்லி கலைத்துவிடுவேன். “
“ வேண்டாம்…வேண்டாம்… செக்கியூரிட்டி கார்ட் யாரோ ஒருத்தன். பிறத்தியாருக்கு உங்கட பிரச்சினைகள் அவசியமில்லை மஞ்சு. அவசரப்படவேண்டாம். அவசரத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சரியானதல்ல. இதுபற்றி சுபாஷினியுடன் ஏதும் பேசினீங்களா.  இன்றைக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று நீங்க இரண்டுபேரும் தாமதமாக ஒன்றாக வீடு திரும்பும்போதே யோசித்தேன்! “
“ அது சரி… அபிதா… இன்றைக்கு  உங்கட  கம்பியூட்டர் கிளாஸ் எப்படி இருந்தது…? “
“ ஓ… வெரிகுட். நன்றாக இருந்தது.  அந்தப் பிள்ளைகள் முறையாக சொல்லித்தாராங்க. 
“ வாழ்க அபிதா. விரைவில் எங்களையெல்லாம் மிஞ்சிவிடுவீங்க இல்லையா…?“
“ யாரும் யாரையும் மிஞ்சமுடியாது மஞ்சு. வீட்டில் சமையல்,   பாத்திரம் கழுவுதல்,  சுத்திகரிப்பு, உலரப்போட்ட உடைகளை எடுத்துவைத்தல், பூமரங்களுக்கு தண்ணீர் வார்த்தல் என்று தினம் தினம் ஒரே வேலைகளைச்செய்து செய்து போரடிக்கிறது.  கிடைக்கும் நேரத்தில் கம்பியூட்டரவது படிக்கலாம் என்றுதான் தொடங்கியிருக்கிறன். “
“ எட்வான்ஸ் லெவல் வரையும் படித்திருக்கிறீங்க. பின்னேரத்தில் இங்கே சில பிள்ளைகளுக்கு ரியூஷன் கொடுக்கலாமே. “
“ கொடுக்கலாம்தான். கற்பகம் ரீச்சரை வைத்துக்கொண்டு அதெல்லாம் செய்யிறது சரியும் இல்லை. முறையும் இல்லை. எதற்கு வீண் வம்பு“  – என அபிதா சொல்லிக்கொண்டிருக்கும்போது, வீட்டின் கூடத்திலிருந்து கற்பகம்,    “ அபிதா… அபிதா…. அங்கே என்ன செய்கிறாய்,…?  ஒருக்கா வந்திட்டுப்போ “ என்று கற்பகம் குரல் கொடுத்தாள்.
“ கட்டளைத்தளபதி அழைக்கிறாங்க … “ என மெதுவாக மஞ்சுளாவின் காதில் முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள் அபிதா.
( தொடரும் )


No comments: