28/09/2019 பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம்.
இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டுமென்ற அதிகார தோரணையை நிரூபிப்பதாகவே காணப்படுகிறது.
இந்து ஆலயமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து இந்து மத சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை மதிக்காமல் கட்டுமீறி ஒரு பௌத்த துறவியின் தலைமையிலான குழு நடந்து கொண்டது நாட்டின் தேசிய தன்மைக்கு பின்வரும் இழிவை உண்டாக்குவதாகவே அமைந்து காணப்படுகிறது.
இந்து மதத்தையும் அதைப் பின்பற்றும் மக்களையும் இழிவுபடுத்தியமை, நாட்டின் நீதி, சட்டம் என்பவற்றை மதிக்காமல் உதாசீனம் செய்தமை, பௌத்த மேலாதிக்கத்தின் ஆணவத்தை நிலை நாட்ட முற்பட்டமை என்ற காரணங்கள் நாட்டில் எல்லாமே சீர்குலைந்து போன நிலைமையை காட்டி நிற்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலை, நீராவியடியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை கொழும்பைச் சேர்ந்த பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரர் என்பவர் அடாவடித்தனமாக அபகரித்து தொல்பொருள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு படையினரின் ஆதரவுடன் குரு கந்த ரஜமஹா விகாரையென்ற பெயரில் விகாரையொன்றை அமைத்து அங்கு தங்கியிருந்து கொண்டு பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபட வரும் தமிழ் பக்தர்களுடன் பிரச்சினைகளை நீண்ட காலம் வளர்த்து வந்திருக்கிறார்.
குறித்த பிக்குவானவர் பிள்ளையார் ஆல யத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதுடன் பிள்ளையார் ஆலயத்தை கபளீகரம் செய்ய உடந்தையாகவும் இன்று வரை இருந்து வருகின்றனர். இவ்வாலயமானது முல்லைத்தீவு பகுதியிலுள்ள பூர்வீக ஆலயம் மாத்திரமல்ல நூற்றாண்டுக் கணக்காக, தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு போன்ற விழாக் காலங்களிலும் உற்சவப் பொழுதுகளிலும் பொங்கி, வழிபட்டுவரும் ஒரு புகழ்பெற்ற ஆலயத்தையே கீர்த்தி தேரர் ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ளார்.
இங்கு வரும் இந்து பக்தர்கள், வழிபாட்டாளர்களுடன் தொடர்ந்து முரண்பட்டு தேரர் இவ்வாலயத்தை நிர்மூலமாக்க எடுத்த முயற்சியைக் கண்டு கொதித்த மக்கள் இவ்விவகாரத்தை பொலிஸாருக்கு கொண்டு சென்றுள்ளனர். பிக்கு தரப்பினரும் பிள்ளையார் அடியார்களும் முரண்பட்ட நிலையில் இரு தரப்பினரும், பங்கம் விளைவிக்க முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில்தான் மேற்படி விகாரையின் விகாராதிபதி மேதாலங்கார கீர்த்தி தேரர் குணம் காண முடியாத புற்று நோய்க்கு ஆளாகி கடந்த 21ஆம் திகதி (21.09.2019) மரணம் அடைந்த நிலையில் அவரின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொள்வற்கு இராணுவம், கடற்படை, சில பௌத்த தீவிரவாதிகள், சில பௌத்த பிக்குமார் முயற்சிகளை எடுத்தது கண்டு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரும் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குவின் பூதவுடலை அடக்கம் செய்யக் கூடாது என தடை கோரி முறைப்பாடு செய்யப்பட்டது. சில அரசியல் தலைவர்களின் குறுக்கீட்டுக்கு அமைவாக முல்லைத்தீவு பொலிஸார் மாவட்ட நீதிமன்றில் தடையாணையொன்றைப் பெறக் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸார் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சுதர்சன் முன்னிலையில் இவ் விவகாரத்தைக் கொண்டு சென்ற நிலையில் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 23ஆம் திகதி விகாரைத் தரப்பினரையும் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களையும் ஆஜராகும்படி பணிப்புரை வழங்கப்பட்டதுடன் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றினால் கட்டளையொன்று பிறப்பிக்கும் வரை குறித்த பௌத்த பிக்குவான கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை பிள்ளையார் ஆலய வளவுக்குள் புதைக்கவோ அன்றி எரிக்கவோ கூடாது எனவும் அடக்க உத்தரவு பிறப்பிக்கும் வரை பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமை ஆற்ற வேண்டுமென முல்லைத்தீவு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்விடைக்காலத் தடையானது கடந்த 23ஆம் திகதி (23.09.2019) நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதும் பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத் தடையை மீறி பூதவுடலைத் தகனம் செய்தனர்.
பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் (தீர்த்தக்கரைக்கு அருகில்) தக னம் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது இரு தரப்பினரின் அபிப்பிராயத்தையும் கவனமாகக் கேட்ட நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் விசாரணைக்குப் பின் பிள்ளையார் ஆலயத்துக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் பூதவுடலை தகனம் செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அவ்வுத்தரவு மீறப்பட்டு எங்கு தகனம் செய்யப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டதோ அவ்விடத்தை தேர்ந்தெடுத்து ஆலய தீர்த்தக் கரைக்கு அருகில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மக்களை தடுத்து நிறுத்தியதுடன் கலகம் அடக்கும் படையினர் கடுமையாக நடந்து கொண்டது ஒருபுறமிருக்க பெருந்தொகையான படை குவிப்பின் உதவியுடன் தகனம் செய்ய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பூதவுடல் தகனம் செய்தமையைக் கண்டித்தும் பொது மக்கள்,சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் திகதி (24.09.2019) முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பேரணியாக நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமை, சட்டத்தரணிகள், பொது மக்கள் தாக்கப்பட்டமை, இந்து மத தர்மத்தை அவமதித்தமையென்ற கோஷங்களை முன்வைத்து இப் போராட்டம் நடத்தப்பட்டது. மாத்திரமல்ல சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமை, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டமையை முன்வைத்து வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிப் பகிஷ்கரிப்பையும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். சட்டமா அதிபர் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை இது தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
பௌத்த மேலாதிக்கத்தின் அராஜகம் என்பது இன்று, நேற்று வளர்ந்த ஒரு விவகாரமல்ல. இந்தத் தேசத்தில் பௌத்த மத ஆதிக்க கெடுபிடிகள், இனக்கலவரங்கள், சிங்கள தேசியவாதம், மதவாதம் என்பது நூற்றாண்டுக் கணக்காக இருந்து வரும் அராஜகமாகும்.
1870இல் இடம்பெற்ற மருதானை சிங்கள – முஸ்லிம் கலவரம், 1883இல் நடைபெற்ற கொட்டாஞ்சேனை மதக் கலவரம், 1915 உண்டாகிய கம்பளை மதக் கலவரம், 1939இல் உண்டாக்கப்பட்ட நாவலப்பிட்டி கலவரம், 1956 கிழக்கில் 150 தமிழர் கொல்லப்பட்டமை, 1958 இன் தமிழ் – சிங்கள இனக்கலவரம், 1977 ஆவணி அமளி துமளி, 1981 இல் யாழ். நூலக எரிப்பு, வங்கிக் கொள்ளை, 1983 இன் ஜூலைக் கலவரம் என்ற அனைத்துமே மதம், அடிப்படை பௌத்த வாதம், சிங்கள வெறித்தனம் என்ற பின்னணியில் தோற்றுவிக்கப்பட்டவை தான். இவை அனைத்தின் பின்னணியிலும் பௌத்த பிக்குமாரும் படையினரும் சிங்களத் தீவிரவாதமும் பங்காளிகளாக இருந்துள்ளனர். இதன் ஒரு தெறிப்பாகவே நீராவியடிப் பிள்ளையார் விவகாரமும் பார்க்கப்பட வேண்டும்.
ஞானசாரரின் அதி தீவிரப்போக்கு மதமொன்றுக்குரிய தத்துவங்களையும், சம்பிரதாயங்களையும், மரபுகளையும் உதாசீனப்படுத்துவது மாத்திரமல்ல, அம்மதத்தைப் பின்பற்றும் மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
இந்து ஆலய எல்லையொன்றுக்குள் ஈமக் கிரிகைகளைச் செய்வதையோ அல்லது தகனம் செய்வதையோ அல்லது பூதவுடலை இடுகை செய்வதையோ இந்து மதத்தினர் வழக்காறாகக் கொண்டவர்கள் அல்லர். ஆலய எல்லைக்குள் இறந்த ஒருவரின் உறவினர் குறித்த நாட்கள் வரை நடமாடுவதையே தீட்டாக நினைக்கும் இந்து அனுட்டானங்களை மீறி பிக்கு ஒருவரின் பூதவுடலை தீர்த்தக் கேணிக்கருகில் தகனம் செய்த திமிர்த்தனம் ஒத்தமொத்த இந்துக்களையும் அவமதிப்பது மாத்திரமல்ல மத ஆணவத்தை வெளிப்படுத்தும் செயலுமாகும்.
இந்து மதம் வேதங்களையும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் தோத்திரங்களையும் ஆகமங்களையும் மந்திரங்களையும் மூலமாகக் கொண்டது. கண்ட கண்ட இடங்களிலெல்லாம் ஆலயங்களை அமைத்து, தோன்றும் திசையெல்லாம் சிலைகளை நிறுவி, நினைத்த வேளைகளிலெல்லாம் பூசை புனருத்தாரணம் செய்யும் தத்துவம் கொண்டதல்ல. அத்தகையதொரு மதத்தை கேவலப்படுத்தும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தகையதொரு சம்பவம் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்றபோது அனைத்துத் தரப்பினரமே வாய் மூடி மௌனிகளாக இருந்துள்ளோம்.
சீனக்குடா பௌத்த விஹாராதிபதியின் பூதவுடல் ஞானசம்பந்தர் பாடிய கோணேசர் ஆலய தலைவாசல் முற்ற வெளியில் வைத்து தகனம் செய்யப்பட்டது. கோயிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமலையார். மௌன விரதம் இருந்தோம்.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் அண்மையில் அத்துமீறி உருவாக்கப்பட்ட கெடுபிடி. தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புப் படையினரின் பந்தோபஸ்துடன் நடந்தேறிய விடயமாகும். இலங்கையின் தொல்பொருள் திணைக்களமென்பது குறித்தவொரு மதத்தினருக்கும் இனத்தினருக்கும் பந்தம் பிடிக்கும் திணைக்களமாக இருக்கும் வரை இத்தகைய கெடுபிடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும், அராஜக செயல்களுக்கும் தீர்வு காண்பது என்பது முடியாத காரியமே!
நீராவியடிப் பிரச்சினையில் உருவாகியிருக்கும் இன்னொரு சவால் சட்டத்தை மதிக்காமை, நீதி தூக்கியெறியப்பட்டிருப்பது. இச்சம்பவத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. இடப்பட்ட கட்டளை மீறப்பட்டுள்ளது. சட்டத்தின் காவலர் என்று மதிக்கப்படுகிறவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் நீண்ட காலப் பிரச்சினையாகத் தோற்றம் பெற்றபோதும் இவ்வருட ஆரம்பத்தில் தைப்பொங்கல் தினத்தன்று செம்மலை மக்கள் பொங்கி வழிபாடு செய்யச் சென்ற வேளை மேற்படி பௌத்த பிக்கு, தான் அழைத்து வந்த பௌத்த தீவிரவாதக் கும்பலைக் கொண்டு இடையூறு விளைவித்ததன் காரணமாக பிரச்சினைகள் ஆரம்பமாகின. இவ்விவகாரத்தை பொலிஸில் முறையிட்டதன் பேரில் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டது. இது வழக்குக்குச் சென்ற போதும் குறித்த பிக்குவுக்கு உதவியாக பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் புல்மோட்டை பிக்கு ஆகியோரின் உதவியுடன் சட்டவிரோதமாக இவ் வளவுக்குள் புத்தர் சிலை நிறுவப்பட்டு 23ஆம் திகதி (23.01.2-019) திறக்கப்பட்டதிலிருந்து பிரச்சினைக்கு தூபம் இடப்பட்டது. இவ் விவகாரம் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நீதிமன்றம் கடந்த மே 6ஆம் திகதி பின்வரும் தீர்ப்பை வழங்கியிருந்தது.
பௌத்த துறவியானவர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இரு தரப்பினரும் சமாதானமான முறையில், வழிபாடுகளை சுதந்திரமான முறையில் மேற்கொள்ளலாம் என நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பை ஆட்சேபித்து வவுனியா மேல் நீதிமன்றில் பௌத்த பிக்கு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே பௌத்த பிக்கு மேதாலங்கார கீர்த்தி தேரரின் மரணம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஒரு குழுவினரால் நீதி மதிக்கப்படாமல் சட்டம் ஒழுங்கு உதாசீனம் செய்யப்பட்டு, இந்த அராஜகம் இடம்பெற்றுள்ளது. இது இந்த நாட்டின் நீதித் துறையை அவமதிக்கும் செயலாகும். இந்தச் செயலுக்கு தலைமை தாங்கியவர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர். இந்தக் குருவானவர் ஏலவே நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர்.
ஜனாதிபதியால் நிபந்தனையின் பேரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இவர் மன்னிப்பு பெற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளேயே இந்நாட்டின் சிறுபான்மை இனங்களி ல் ஒன்றான முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலக வேண்டுமென காலக்கெடு விதித்து கண்டி தலதா மாளிகையின் முன்பாக விரதமிருந்து இனவாத விஷத்தைக் கக்கியவர்.
கல்முனை வடக்கு பிரதேச செயல கப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து முதலைக் கண்ணீர் வடித்தது மாத்திரமல்ல, தமிழ் மக்களை நம்ப வைத்து கபட நாடகமாடிய இவர்தான் நீராவியடி சம்பவத்துக்கு தலைமை தாங்கியுள்ளார். இவரின் சூரசம்ஹார ஆட்டத்துக்கு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு வழங்கியது கவலை தரும் விடயம் மாத்திரமன்றி சட்டமும் நீதியும் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு இது ஓர் உச்ச உதாரணமுமாகும்.
இந்து – பௌத்த மோதலை நாம் உருவாக்க ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளது என்பதை சீர்செய்யவே இக்காரியத்தில் நாம் இறங்கினோம். நீதிமன்றத் தீர்ப்பு தாமதம் ஆனதன் காரணமாகவே பூதவுடலை தகனம் செய்தோமென பச்சைப் பொய்யொன்றையும் உரைத்துள்ளார். இது எதைக் காட்டுகிறது? கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் சுட்டிக்காட்டியது போல் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம், பௌத்த மதத்துக்கு இன்னுமொரு வகைச் சட்டமும், ஒரு மதத்தை அவமதித்து இன்னுமொரு மதம் அராஜகம் புரியும் நிலையையே காணக்கூடியதாகவுள்ளது.
காலத்துக்குக் காலம் சிறுபான்மை சமூகத்தினர் தாக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் கலண்டரில் வரும் திகதிகள் போல் நடைபெறும் நிகழ்வாகும்.
இந்த அநாகரிகமான செயல்கள் வட, கிழக்கில் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வந்திருப்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் மனிதனின் அட்டகாசம், இடையில் பள்ளிவாசல் உடைப்புகள், அத்துமீறிய புத்தர்சிலை வைப்புகள், இன்னுமொரு புறம் தொன்மங்கள் என்ற வகையில் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்கிரமிப்பு என ஏகப்பட்ட விவகாரங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது நாட்டில் உருவாகிவரும் சாபக்கேட்டை எடுத்துக் காட்டுவதாகவே அமைகிறது.
ஏலவே 2015ஆம் ஆண்டுக்குப் பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடுக்கு நாரிமலை, ஆதிசிவன் ஆலயம், ஐயனார் ஆலயம், குருந்தூர்மலை போன்ற தொன்ம இடங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் இத்தகைய ஆன்மீகப் பாரம்பரிய இடங்கள் தொல்லியல் பிரகடனத்துக்கு உட்படுத்தப்பட்டு மறைமுக சுவீகரிப்புகள் இடம்பெற்ற நிலையிலேயே நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் விஸ்வரூபம் பெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தனது நியாயமான கருத்தொன்றை பதிவு செய்துள்ளார். அது யாதெனில், நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலானது நீதியைப் புறக்கணிக்கும் செயல் மாத்திரமன்றி அவமதிக்கும் செயலுமாகும். இவ்
விவகாரங்கள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது பாரிய தாக்கத்தை உண்டாக்குமென ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியாகியிருக்கும் இன்னுமொரு அதிர்ச்சியான செய்தியாக, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் முல்லைத்தீவில் குடியேற காத்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்பு வட மாகாணத்துக்கு செல்லுபடியாகாது என முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய தமிழ் பேசும் சட்டத்தரணிகள் தெரிவித்ததாகவும் இது இலங்கையின் இறையாண்மைக்கும் நீதித்துறைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால் என பொய்யொன்றை உரைத்து தனது செயற்பாடுகளை நியாயப்படுத்த எத்தனிப்பதுடன் தமிழ் சட்டத்தரணிகளை பயங்கரவாதிகள் என அடையாளமிட்டுக் காட்டியுள்ள ஞானசார தேரர், நீராவியடி சம்பவத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டு வடபுலத்தை குழப்புவதற்கும் பௌத்த மயத்தை விதைப்பதற்கும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரென்பது வடபுல தமிழ் மக்களின் காரசாரமான குற்றச்சாட்டாகும்.
வடக்கிலுள்ள பௌத்த சொத்துக் களையும் தொன்மங்களையும் அடையாளங் களையும் காப்பாற்ற வேண்டுமாயின் தன் போன்ற பௌத்தவாதிகள் வடக்கில் குடியேற வேண்டுமென சிங்கள ஊடக மொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஞானசார தேரர், தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாகத் தெரி வித்துள்ளார். அவரின் இந்த யோசனைக்கு தென்னிலங்கையில் உள்ள பௌத்தவாதி களும் அடிப்படை கோட்பாட்டாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது.
ஞானசார தேரரின் இக்கிரகப் பிரவேசம் தொடர்பிலோ அடாவடித்தனங்கள் பற் றியோ ஜனாதிபதியோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எவ்வித கருத் தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப் பது ஞானசார தேரரின் அடாவடித்தனங் களை ஆசிர்வதிப்பது போல் காணப்படுகி றதென வடபுல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்ற முக்கூட்டு மந்திரங்களை வாயளவில் உச்சரித்து வரும் இலங்கை அரசாங்கமும், தென்னிலங்கைத் தலைமைகளும் நிதான மாகவும், நீதியாகவும் செயற்படத் தவறின் மீண்டும் நாட்டில் பாரிய விளை வுகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காவியுடையென்ற போர்வையைப் போர்த் திக் கொண்டு நீதியையும் சட்டத்தை யும் கையில் எடுக்கும் பௌத்ததாரிகளைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில் நாட்டில் மத இணக்கப்பாட்டையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் கொண்டு வருவது என்பது ஆகாத காரியம் மாத்திரமல்ல, சர்வதேச அளவில் இலங் கைக்கு அவப்பெயரை உண்டாக்கும் விவ காரங்களாகவே ஆகி விடும். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment