தமிழ் சினிமா - ஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்

சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் கொட்டி படத்தை எடுத்து போட்ட பணத்தை திரும்ப எடுப்பதற்குள் ஒரு தயாரிப்பாளருக்கு தூக்கம் வராது என்பதே நிதர்சனம். இந்த போட்டிக்கு நடுவில் குட்டிக் கரணம் போட்டாவது சாதிக்க வேண்டும் என துடிக்கும் பார்த்திபனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளியாகியுள்ளது. ஒத்தசெருப்பின் பின்னணி பார்க்கலாமா? வழித்தடத்திற்குள் செல்வோம்!

கதைக்களம்

படத்தின் ஹீரோ பார்த்திபன் ஒரு சாதாரண குடும்ப பின்னணி. படம் முழுக்க அவர் மட்டுமே உருவத்தில் தெரிகிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் குரலாக நம் மனதில் பேசுகிறது. அவருக்கு ஒரு வெகுளியான கிராமத்து மனைவி. இருவருக்கும் ஒரு மகேஷ் என்ற குழந்தை.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வாட்ச்மேனாக வேலைக்கு வரும் பார்த்திபன், அவரின் மனைவியையும் அதே கிளப்பில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். இருவரின் நோக்கமும் விசித்திரமான நோய் கொண்ட தங்கள் மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பது தான்.
இதற்கிடையில் பார்த்திபனின் மனைவிக்கு அங்கு வரும் பெண்களை பார்த்து அவர்களின் உடை, அணிகலன் போலவே தானும் அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை.
இப்படியே போக அந்த கிளப்பிற்கு வரும் ஆண்கள் சிலர் அவரின் மனைவி மீது இச்சை கொள்ள, தங்கள் ஆசைக்கு இணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையில் அடுத்தடுத்து சில முக்கிய பிரமுகர்களின் தொடர் கொலைகள். இதற்கு தடயமாக சம்பவ இடத்தில் ஒத்த செருப்பு கிடைக்கிறது. இதை செய்தது யார்? பார்த்திபன் மனைவியை காப்பாற்றினாரா? மகனுக்கு என்ன ஆனது என்பதே இந்த ஒத்த செருப்பு.

படத்தை பற்றிய அலசல்

தமிழ் சினிமாவில் சில திறமையான படைப்பாளிகளும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரின் ஹுயூமரானா பேச்சும், சிந்திக்க வைக்கும் கருத்துகளும் அவரின் தனி ஸ்டைல். 2016 ல் வந்த கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பின் இவ்வருடம் ஒத்த செருப்பு படத்தை நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளார்.
உலகின் எத்தனையோ விதமான படங்கள் வருகின்றன. இதில் அதிக முதலீடு இல்லாத அழுத்தமான கதை சார்ந்த படங்களும் வெற்றி பெறுகின்றன. இதில் ஒரே ஒரு கேரக்டரை மட்டுமே வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்துள்ளன. இதில் 14 வது படமாக ஒத்த செருப்பு வந்துள்ளது.
சமூகத்தில் ஒரு தனி மனித வாழ்க்கையில் நடக்கும் சில அவலங்களை வெளிச்சம் போடுகிறது இந்த ஒத்த செருப்பு. சில உண்மை சம்பவங்களையும் பிரதிபலிக்கிறது.
அதே வேளையில் அவர் இப்படத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறார். அவர் தான் இங்கு ஜெயிக்கிறார். யார் அவர் என இங்கேயே நாங்கள் சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும் தானே. எனவே படத்தை தியேட்டர்ல பாருங்கள் மக்களே.
ஒவ்வொரு காட்சிகளும் கிட்டத்தட்ட 4.1/2 நிமிட இருக்கும் என தெரிகிறது. இதற்காக அவர் மிகவும் ரிஸ்க் எடுத்திருப்பது நன்றாக தெரிகிறது. ஒரே காஸ்ட்யூம், சிம்பிளான மேக்கப் பார்த்திபனுக்கு ஓகே.
குறிப்பாக சகஜமாக வார்த்தைகளை அள்ளிப்போட்டு டப்பிங் பேசும் அவருக்கே பெரும் சவாலாக இருந்திருக்கும். இதுவரை பலவிதமான ரகங்களில் படம் பார்த்து பழகிய நமக்கு இப்படம் சற்று வித்தியாசமான சினிமா பயணமாக இருக்கும்.
முக்கிய சொல்ல வேண்டிய சந்தோஷ் நாராயணனின் இசையில் ஒரு பாடல். சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமான ஒன்று.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மற்ற காட்சிகளுடன் பின்னியுள்ளதால் முக்கிய விசயத்தை சொல்ல வருகிறது. இந்த விசயத்தில் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்ஸன் ஆகியோரு இப்படம் ஒரு சவாலாக அமைந்திருக்கும். ரிலீஸ்க்கு முன்பே பலரின் பாராட்டை பெற்று விட்ட நிலையில் நாம் மட்டும் வாழ்த்தாமல் இருந்தால் அது சரியல்ல. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கிளாப்ஸ்

ஓன் மேன் ஷோ போல பார்த்திபனின் தைரியமான முடிவு.
அங்கங்கு வரும் அவரின் வழக்கமான ஹுயூமர் ரசிக்கும் படியானது.
கடைசிவரை எதிர்ப்பார்ப்புடன் சஸ்பென்ஸை கொண்டு சென்றது.

பல்பஸ்

மிக நீளமான டையலாக்குகள், காட்சிகள் இருக்கிறதோ என்ற ஃபீல்.

மொத்தத்தில் ஒத்த செருப்பு விறுவிறுப்பு. குடும்பத்தோடு பார்க்கலாம்.. 

 நன்றி CineUlagam


















No comments: