உலகச் செய்திகள்


பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோதமானது - பிரிட்டன் உச்ச நீதிமன்றம் ; சிக்கலில் போரிஸ் ஜோன்சன்

இரு நாடுகளும் விரும்பினார் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயற்பட தாம் தயார் - ட்ரம்ப் 

இங்கிலாந்து கப்பலை விடுவித்த ஈரான்

பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 20 ஆக உயர்வு

பில்கேட்ஸிடம் இருந்து மோடிக்கு  “குளோபல் கோல்கீப்பர்” விருது!

தென்னாபிரிக்காவில் பாலியல் வல்லுறவின் பின்னர் மாணவி கொல்லப்பட்ட இடத்திற்கு இளவரசர் ஹரியின் மனைவி இரகசிய விஜயம்

இந்தியா பாக்கிஸ்தான் அணுவாயுத மோதலில் ஈடுபடும் ஆபத்து- உலக தலைவர்களை எச்சரித்தேன் என்கிறார் இம்ரான்


பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோதமானது - பிரிட்டன் உச்ச நீதிமன்றம் ; சிக்கலில் போரிஸ் ஜோன்சன்

24/09/2019 இங்கிலாந்து பாராளுமன்றத்தை ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை முடக்கி வைத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் முடிவானது சட்டவிரோதமானது என்று அந் நாட்டு உச்ச நீதமன்றம் அறிவித்துள்ளது.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர்.
ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.
ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி ராஜினாமா செய்தார் தெரசா மே.
அதன் பிறகு பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்ஸன் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.
பிரெக்ஸிட்டை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் துணிச்சலாக பாராளுமன்றத்தை முடக்கினார். 
செப்டம்பர் 11 ஆம் திகதி முதல் அக்டோபர் 14 ஆம் திகதி வரை பிரிட்டன் பாராளுமன்றம் முடக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதற்கான ஒப்புதலையும் எலிசபெத் மகாராணி வழங்கினார்.
இதுகுறித்து இங்கிலாந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிண்டா ஹெல் கூறும்போது, பாராளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது. நியாயமான காரணம் இல்லாமல் இவ்வாறு முடக்குவது அரசியலைப்பு விதிமுறைப்படி பாராளுமன்றம் செயல்படும் திறனை முடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிரதமர் போரிஸ் ஜோன்ஸனுக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 

இரு நாடுகளும் விரும்பினார் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயற்பட தாம் தயார் - ட்ரம்ப் 

24/09/2019 அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில்  நேற்று முன்தினம் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில்  இந்திய பிரதமர் மோடியுடன்  அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றியிருந்தமை வரலாற்று நிகழ்வாக பதிவாகி இருந்தது. 
 இதன் போது அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப், "தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இருந்து உலகத்தை விடுவிக்க அமெரிக்க துணை இருக்கும் என்று தெரிவித்த நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை ட்ரம்ப் சந்தித்திருந்தார்.
இச் சந்திப்பில் அவர் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயற்பட தயாராக இருப்பதாகவும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஆகிய இருவரும் விருப்பப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தான் உதவ  தயார் என்று ட்ரம்ப் கூறினார்.
இதன் போது  காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீரல்கள் குறித்த பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் அங்கு மக்கள் அமைதியாக வாழ, அனைவரும் சமமாக நடத்தப்படுவதே தனது விருப்பம் என்று மேலும் தெரிவித்தார்.
ட்ரம்பின் விருப்பத்திற்கு பதிலளித்த இம்ரான் கான்  ''உலகின் மிகவும் வலிமையான நாடாக உள்ள அமெரிக்காவுக்குச் சர்வதேச ரீதியாக சில கடமைகள் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்கள். ஆனால், எங்களுடன் பேச இந்தியா மறுத்து வருகிறது'' என்று கூறினார்.
"காஷ்மீர் பிரச்சனை மிகத் தீவிரமான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று நான் நினைக்கிறேன். உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாகத் திகழும் அமெரிக்காவால் ஐ.நா.வில் தனது கருத்துக்களைச் சிறப்பாக வலியுறுத்த முடியும். அதனால் அமெரிக்கா காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேலும் கூறினார்.  நன்றி வீரகேசரி 
இங்கிலாந்து கப்பலை விடுவித்த ஈரான்

23/09/2019 சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் ஸ்டெனா இம்பெரோவை ஈரான் அரசாங்கம் விடுவித்துள்ளது.
'ஸ்டெனா இம்பெரோ' என்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜூலை மாதம் சிறை பிடித்தது. 
அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களை விடுவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி அவர்களை விடுவிப்பதாகவும் ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தது.
இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் நேற்று விடுவிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 19 ஆம் திகதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ' என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசாங்கம் சிறை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 20 ஆக உயர்வு

24/09/2019 பாகிஸ்தானில் 5.8 ரிக்டெர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் தொகை 20 ஆக உயர்வடைந்துள்ளது. 
பாகிஸ்தானில் மிர்பூர் நகரத்தை மையம் கொண்டு மாலை 4.30 மணி அளவிலேல் இஸ்லாமாபாத், பெஷாவர், டிராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
அத்துடன் சியால்கோட், சர்கோதா, மன்சேரா, குஜ்ரத், சித்ரல், மலாகண்ட், ,முல்தான் உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 
நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததால் பல சாலைகள் இரண்டாக பிளந்து சேதமாகின.
இரண்டாக பிளந்த சாலைகளின் நடுவில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நகரங்களில் பல கட்டிடங்கள் சேதமாகின. 
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பாக். அரசு முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
இதனை தொடர்ந்தும் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறெனினும் மீட்பு நடவடிக்கைகளானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இந்தயாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


பில்கேட்ஸிடம் இருந்து மோடிக்கு  “குளோபல் கோல்கீப்பர்” விருது!

25/09/2019 உலகில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் பாதிப்புகளுக்கு உதவிகரம் நீட்டும்  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்  அமைப்பு இந்தியாவின் சுகாதார துறையின் முன்னேற்றத்தை பாராட்டி இந்திய பிரதமர் மோடிக்கு “குளோபல் கோல்கீப்பர்” விருது வழங்கி கௌரவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ஆரம்பித்த  தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக  பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்" அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கியுள்ளது. இவ் விருதினை இன்று  காலை  நியூயோர்க்கில் வைத்து பில்கேட்ஸிடம் இருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.
இதன் போது பேசிய பிரதமர் மோடி,
இந்த விருது தனக்கானது அல்ல என்றும் தூய்மையை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு உரித்தானது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். 130 கோடி இந்திய மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தாள் வருடத்தில் இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
பில் அண்ட்  மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின்  அறிக்கையின் படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் மேம்பட்ட சுகாதார வசதிகள், குழந்தைகளின் இதய பிரச்சினைகள், பெண்களின் சாரந்த சுகாரதாரம் ஆகியவை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி தென்னாபிரிக்காவில் பாலியல் வல்லுறவின் பின்னர் மாணவி கொல்லப்பட்ட இடத்திற்கு இளவரசர் ஹரியின் மனைவி இரகசிய விஜயம்

28/09/2019 தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் பாலியல் வல்லுறவின் பின்னர்   பல்கலைகழக மாணவிபடுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு பிரிட்டிஸ் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலே இரகசியமாக  சென்றுள்ளதுடன்  அஞ்சலிசெலுத்தியுள்ளார்.
சன் செய்தித்தாள் வெளியிட்டுள்ள இந்த செய்தியை பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்துள்ளது.
தென்னாபிரிக்க மாணவியின் படுகொலையால் அதிர்ச்சியடைந்துள்ள ஹரியின் மனைவி -மாணவி கொல்லப்பட்ட தபாலகத்திற்கு மிகவும் இரகசியமான விதத்தில் சென்றார் என சன் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேப்டவுன் பல்கலைகழக மாணவி யுயினே மர்வெட்டினா தபாலகத்திற்கு சென்றவேளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொடுரமான முறையில் கொல்லப்பட்டார்.
குறிப்பிட்ட மாணவி கொல்லப்பட்ட பகுதியில் மஞ்சள் ரிப்பன்களை கட்டியுள்ள மேகன் உள்ளுர் மொழியில் உருக்கமான வாசகத்தை பதிவு செய்துள்ளார்.
மேகன் ஆழ்ந்த சிந்தனையுடனும் கவலையுடனும் காணப்பட்டார் அப்பகுதியை சேர்ந்த மாணவிகள் அவருடன் சேர்ந்து படமெடுக்க விரும்பியவேளை  காவல்துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை என சன் தெரிவித்துள்ளது.
மாணவியின் கொலை இடம்பெற்ற தபாலகத்திற்கு எதிரேயுள்ள பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் மேகனின் விஜயம் எங்களிற்கு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அவரை விரும்புகின்றோம்,அவர் இதனை செய்தது சிறந்த விடயம்,தென்னாபிரிக்காவில் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை அவர் ஏற்படுத்துகின்றார் இதன் மூலம்சர்வதேச அளவில் இது குறித்து அனைவரும் அறிந்துகொள்வார்கள்,என அந்த மாணவி தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 

இந்தியா பாக்கிஸ்தான் அணுவாயுத மோதலில் ஈடுபடும் ஆபத்து- உலக தலைவர்களை எச்சரித்தேன் என்கிறார் இம்ரான்

26/09/2019 காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியா பாக்கிஸ்தானிற்கு இடையில் அணுவாயுதமோதலொன்று இடம்பெறும் ஆபத்துள்ளதாக உலக தலைவர்களிற்கு முயற்சிகளை மேற்கொண்டதாக பாக்கிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
உலகதலைவர்களை ஐநாவில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே நான் முக்கியமாக ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எவரும் கற்பனை செய்யாத உணராத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேரழிவை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
கியுபா நெருக்கடிக்கு பின்னர் அணுவாயுதங்களை கொண்டுள்ள இருநாடுகள் மோதலை நோக்கி நகர்ந்துள்ளமை இதுவே முதல் தடைவ என தெரிவித்துள்ள இம்ரான் கான் பெப்ரவரியில் பாக்கிஸ்தானும் இந்தியாவும் அணுவாயுத மோதலில் ஈடுபடும் நிலையில் காணப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரியில் எனது இராணுவதளபதியும் விமானதளபதியும் என்னை அழைத்து இந்திய விமானங்கள் வந்து தாக்குதலை மேற்கொண்டுவிட்டு செனறன என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் நாங்கள் பதிலிற்கு என்ன செய்வது என அவர்கள் கேட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அவ்வாறான முடிவை எடுக்கவேண்டுமா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மன் சான்சிலர் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைவர்களுடன் தனது அச்சங்களை வெளியிட்டதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் தற்போது ஜம்முகாஸ்மீரில் விதித்;துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் வன்முறைகள் வெடிக்கலாம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீதிக்கு வருவார்கள் அதன் பின்னர் என்ன நடக்கும் என கேள்வி எழுப்பியுள்ள இம்ரான்கான் மக்கள் படுகொலை செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 
No comments: