பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 13


காவல் தெய்வம்

தமிழ்த்திரையில் சிறந்த குணசித்திர நடிகராகத் திகழ்ந்தவர் எஸ் வி சுப்பையா. ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக மாறி உணர்ச்சிகரமாக நடித்து தன் திறமையை காட்டும் சுப்பையா சொந்தமாக ஒரு படத்தைத் தயாரிக்கத்திட்டமிட்டார். அதற்கு அவர் தெரிவு செய்த கதை பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தனின் கைவிலங்கு நாவலாகும். ஏற்கனவே பாதை தெரியுது பார் படத்தில் கதாநாயகனாக நடித்து பின்னர் சில படங்களில் துணை வேடம் ஏற்ற கே விஜயனை இப்படத்தின் மூலம் டைரக்டராக்கினார் சுப்பையா. இந்த விஜயன் பின்னர் சிவாஜியின் பல படங்களை இயக்கினார்.

படத்தின் இசைக்கு தமிழில் மிக அரிதாக சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஆனால் மலையாளத்தில் பிரபலமாகத் திகழ்ந்த ஜி தேவராஜன் நியமிக்கப்பட்டார். தேவராஜனின் உதவி இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தந்தை சேகர் பணியாற்றினார்.

சுப்பையா தயாரித்த படம் என்பதால் நம்பியார் பாலையா அசோகன் நாகேஷ் ஸ்ரீரஞ்சனி, முத்துராமன் ஜி சகுந்தலா என்று ஏராளமான நடிகர்கள் நட்பு ரீதியாக கௌரவ நடிகர்களாக நடித்தார்கள். ஆனாலும் படத்தின் முக்கியப் பாத்திரமான சாமுண்டி கிராண்மணி பாத்திரத்தில் சிவாஜி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கருதிய சுப்பையா கௌரவவேடத்தில் நடித்து தரும்படி தன் நண்பர் சிவாஜியை கேட்டார். பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி நேரம் இன்மை காரணமாக மறுத்து விட்டார். சிவாஜியை விட்டுவிட சுப்பையாவுக்கு விரும்பமில்லை. நிலைமையை தன் நெருங்கிய நண்பர் ஏவி எம் சரவணனிடம் கூறினார். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் உயர்ந்த மனிதன் படத்திற்கு சிவாஜி கொடுத்த தினங்களில் ஒன்றிரண்டு தினங்களை விட்டு கொடுத்து அந்தத் தேதிகளில் காவல் தெய்வம் படத்தில் நடிக்கும்படி சரவணன் கோர சிவாஜியும் அவ்வாறே அற்புதமாக நடித்துக் கொடுத்தார். கௌரவ வேடம் என்றாலும் அதில் சிவாஜி காட்டும் முகபாவம், தீட்சண்யமான கண்கள் வசன உச்சரிப்பு எல்லாம் ரசிகர்களை கவர்ந்தன. மரமேறும் தொழிலாளியாக சிவாஜி இதில் நடித்திருந்தார்.
படத்தில் இளம் காதல் ஜோடியாக நடித்தவர்கள் அன்று இளமையாக திகழ்ந்த சிவகுமார், லஷ்மியாகும் வயதான நடிகர்களையே காதலர்களாக பார்த்து பழகிய கண்களுக்கு இந்த இளம் ஜோடி கண்ணுக்கு விருந்தாக இருப்பதாக பல பத்திரிகைகள் பாராட்டின. தேவராஜன் இசையில் தராபுரம் சுநதரராஜன் சுசிலா பாடிய அய்யனாரு நிறைந்த வாழ்வு கொடுக்கனும் என்ற பாடலுக்கு சிவகுமாரும் லஷ்மியும் இளமை ததும்ப நடித்திருந்தனர். சுப்பையாவின் மனைவியாக சௌகார் ஜானகி இயல்பாக நடித்திருந்தார்.
இதைத் தவிர புரிசை நடேசதம்பிராமன் குழுவினரின் பிரகலாதன் நாடகம், கலைமணி குழுவினரின் கரகாட்டம் மதுரை பி சுந்தரராஜ் குழுவினரின் நையாண்டி மேளம் குலதெய்வம் ராஜகோபாலின் வில்லுப்பாட்டு போன்ற தமிழர் பாரம் பரிய கலைகளும் படத்தில் இடம் பெற்றது சிறப்பாம்சமாகும்.

நெல்லை அருள்மணி எழுதிய பிறப்பதும் போறதும் இயற்கை என்ற தத்துவப் பாடலும் டி எம் எஸ் குரலில் படத்திற்கு வலு சேர்த்தது. தமிழ்நாட்டு கிராமங்களுக்கு காவல் தெய்வமாகத் திகழ்பவர் அய்யனார்.  அதேபோல் பலதரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையில் காவல் தெய்வமாகத் திகழ்கிறார் ஜெயில் ஆணையாளர் சுப்பையா.  கடுமையான வார்த்தைகள் முரட்டுத்தனம் ஏதுமின்றி அனைத்து கைதிகளையும் அன்பால் அடக்கியாள்கிறார். அவருடைய கருணையுள்ளம் பல கைதிகளை திருத்துகிறது. சந்தர்ப்ப சூழலால் சிறைக்கு கைதியாக வரும் சிவகுமாரும் அவரின் கருணையில் நனைகிறார். தன்னை திரையில் நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த சிவகுமாருக்கு இந்தப் படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

முழுக்க முழுக்க கிராமிய சூழலில் குறைந்த செலவில் உருவான காவல்தெய்வம் ஜெயகாந்தன் சுப்பையா விஜயன் மூவருக்கும் வெற்றியையும் திருப்தியையும் அளித்தது. ரசிகர்களுக்கு மாறுபட்ட படமாக அமைந்தது.1 comment:

paanaayeenaa said...

நான் விரும்பிய ரசித்த படம்