சிட்னியில் இடம்பெற்ற சிலப்பதிகார மாநாட்டில் கவியரங்கை அலங்கரித்த கவிதை புலம்பெயர்ந்த நாட்டில் சிலம்பு மகாதேவஐயர் ஜெயராமசர்மா ....... மெல்பேண் ... அவுஸ்திரேலியா

இன்பத்தமிழுக்கு விழா இளங்கோவடிகளுக்கு விழா
image1.jpegஇங்கிலீசு பேசும்நாட்டில் எங்கள்சிலம்புக்கு விழா
பொங்கிவரும் தமிழுணர்வால் பொலியட்டும் இந்தவிழா
எங்கள்தமிழ் சிலம்புபற்றி இயம்புகிறேன் இன்பமுடன்

சிலம்பு சிதறட்டும் சிந்தனைகள் குவியட்டும்
விளம்புகின்ற அத்தனையும் வித்தாக முளைக்கட்டும் 
உளமுணர்வு பொங்கட்டும் உயர்கருத்து உதிக்கட்டும்
புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்பெழுந்து ஓங்கட்டும் 

கங்காரு நாட்டினிலே கண்ணகிகள் பலருள்ளார்
மாதவிகள் சாயலிலே மங்கையரும் பலருள்ளார்
கோவலர்கள் கோலத்தில் கொண்டாடும் பலருள்ளார்
ஆதலால் சிலம்பிங்கே அத்திவாரம் இட்டுளதோ

அறமிங்கே இருக்கிறது நல்லரசாட்சி இருக்கிறது
ஊழ்வினையால் நாமிங்கே ஊரைவிட்டு வந்துள்ளோம்
சாதிமத பேதமின்றி சமத்துவத்தைக் காணுகிறோம்
காதலுடன் சிலம்பினது கருத்துக்களை விதைத்திடுவோம்

புலம்பெயர்ந்து வரும்போது பலசுமைகள் இருந்தாலும்
நலந்திகழும் இலக்கியத்தை நம்மனதில் இருத்திவைத்தோம்
களைப்பெல்லாம் போனபின்னே கண்ணகியை காட்டுதற்கு
புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்புபற்றி செப்பிநின்றோம் 


வாழ்க்கைத்துணை இருக்கையிலே வழித்துணையை நாடுவதால்
வாழ்க்கையினை தொலைத்ததையே வழங்கிநிற்கும் சிலம்பதனை
புலம்பெயர்ந்த நாட்டினிலே பொருத்திநிற்க பார்க்கின்றோம்
கோவலர்கள் பலபேர்கள் கொடிகட்டி பறக்கின்றார்

ஆடல்பாடல் இங்குண்டு அதிகவின்பம் இங்குண்டு
போதைதரும் அத்தனையும் பொங்கிவரும் நிலையுமுண்டு
காதலுக்கு மரியாதை தருகின்ற நிலையுயர
கட்டாயம் சிலம்பதனை கருத்திருத்தல் அவசியமே

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் புலனெல்லாம் பிறந்தமண்ணில்
நலந்திகழ்ந்த வாழ்க்கையினை நாளுமவர் எண்ணுகிறார்
நிலம்பெயர்ந்து வந்தாலும் நெஞ்ஞையள்ளும்  சிலம்பதனை
புலம்பெயர்ந்த நாட்டினிலும் புகுத்திவிட  விளைகின்றார்

இங்குள்ள இளசுகளோ இங்கிலீசில் இருக்கிறது
எங்களது பண்பாட்டின் ஏற்றமவர் விளங்கவில்லை
புலம்பெயர்ந்த நாட்டினிலே புகுந்துவிட்ட பரம்பரையை
நலந்திகழ வைப்பதற்கு நாமெடுப்போம் சிலம்பதனை

பண்பாடு கலாசாரம் பலநீதி பகர்ந்துநிற்கும்
பாங்குடைய சிலம்பதனை படித்தறிதல் அவசியமே
புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்பதனை தெரிந்துவிடல்
புலம்பெயர்ந்து வாழ்வார்க்கு புதுவெளிச்சம் காட்டிநிற்கும்

கோவலராய் வாழ்வாரை குணவானா யாக்கிவிடும்
தீதுநிறை மாதவிகள் திருந்துவிட வழிவகுக்கும்
காதலுடன் கண்ணகியை கண்டுவிடும் மனம்மலரும்
ஆதலால் சிலம்பிங்கே அவசியமே எனவுரைப்பேன்

புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்புவந்தால் சிறப்பாகும்
விலங்கான மனப்பாங்கு விலகியே ஓடிவிடும்
காதல்கொண்டு சிலம்புதனை கற்றிடுவோம் வாருங்கள்
கண்ணகியின் காற்சிலம்பு காட்டிநிற்கும் கண்ணியத்தை

இளங்கோவின் மனமுதித்த எங்களது காப்பியத்தை
இளையோர்கள் மனமிருத்தல் இங்கெமக்கு அவசியமே 
சிலம்புதித்த காலத்தில் செப்பிநின்ற கருத்தனைத்தும் 
புலம்பெயர்ந்த நாட்டினிலே சிலம்புகாட்டல் சிறப்பன்றோ 

முதல்வந்த காப்பியத்தை முன்னிற்கும் காப்பியத்தை
மூவறத்தைக் காட்டிநிற்கும் முத்தமிழின் காப்பியத்தை 
புலம்பெயர்ந்த நாட்டினிலும் புகுத்திவிடல் நம்கடனே 
புலம்பெயர்ந்தார் மனந்திருந்த சிலம்பிங்கு சிதறட்டும்  

No comments: