முருகபூபதி எழுதிய “ இலங்கையில் பாரதி “ ஆய்வு நூல்: தமிழில் உரையாற்ற சிரமப்பட்ட பாரதியின் கொள்ளுப்பேத்தி ! பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் ( 1878 – 1942 ) !!


படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய  “ இலங்கையில் பாரதி   “ ஆய்வு நூலின் வெளியீட்டு அரங்குகள் எதிர்வரும் 29 ஆம் திகதி நீர்கொழும்பு இந்து இளைஞர்  மன்றத்தின் கலாசார மண்டபத்திலும்  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்திலும் நடைபெறவிருக்கிறது.
மகாகவி பாரதியின் படைப்பாளுமை இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவும், அதனூடாக ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்நூலின் முன்னுரை இங்கு பதிவாகின்றது.
 “ இலங்கையில் பாரதி  “ நூல் முகுந்தன் பதிப்பகத்தின் வெளியீடு.

முருகபூபதியின் முன்னுரை

எனது பால்யகாலத்தில் ஆரம்பப் பாடசாலையிலும் வீட்டிலும் கேட்டு ரசித்து பாடிய பாடல்கள் மகா கவி பாரதியிடமிருந்தே  தொடங்கியது. குறிப்பாக ஓடிவிளையாடு பாப்பா, தீராதவிளையாட்டுப்பிள்ளை என்பனவற்றின் ஆழ்ந்த அர்த்தம் புரியாமலேயே பாடியிருக்கின்றேன். மனனம் செய்துள்ளேன்.
எனது அக்கா, நடனம் பயின்றவேளையில் தீராதவிளையாட்டுப்பிள்ளைக்கு அபிநயம் பிடித்து ஆடியபோது ரசித்திருக்கின்றேன். இவ்வாறுதான் எனக்கு மகாகவி பாரதியிடத்திலான உறவும் ஈர்ப்பும்  படிப்படியாகத்தொடங்கியது.
பாடசாலை நடத்திய பேச்சுப்போட்டியில் வகுப்பு ஆசிரியை எழுதிக்கொடுத்த பாரதி பற்றிய உரையை மனனம் செய்து ஒப்புவித்திருந்தாலும்,  பாரதியின் ஞானத்தை கண்டறிவதற்கு எவரும் துணைக்கு வரவில்லை. 
    எனினும் எமது நீர்கொழும்பூருக்கு தமிழகத்தின் மூத்த படைப்பாளி           கு. அழகிரிசாமியும் பாரதியாரின் பேத்தி விஜயபாரதியும் அவரது கணவர் பேராசிரியர் சுந்தரராஜனும் வருகை தந்து உரையாற்றியதையடுத்து பாரதி மீது ஆர்வம் அதிகரிக்கத்தொடங்கியது.
அவர்கள் வரும்போது எனக்கு  பதினைந்து வயதுதானிருக்கும். இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய 1970 இற்குப்பின்னர்தான் பாரதியை ஆழ்ந்த நேசத்துடன் கற்றேன்.
எமக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததையடுத்து அவளுக்கு விஜயபாரதி என்றும் பெயர் சூட்டினேன். காலம் கடந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர், 1990 ஆம் ஆண்டிற்குப்பிறகு, ஒருநாள், அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, " பாரதியாரின் கொள்ளுப்பேத்தி மீரா ( சுந்தரராஜன் - விஜயபாரதி தம்பதியரின் புதல்வி) வந்திருப்பதாக தெரிவித்து, அவருடன் உரையாடச்செய்தார்.
இந்த எதிர்பாராத  தொலைபேசி  அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியைத்தந்தது.
அவருடைய பெற்றோர்களை இலங்கையில் எமது ஊரில் சந்தித்துப்பேசியதை நினைவுபடுத்தி உரையாடத்தொடங்கியதும்,  எனக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. அது இன்ப அதிர்ச்சியல்ல!!

                 முதலில் வணக்கம் என்று இனிய குரலில் பேசிய மீரா, பின்னர்             " Uncle, very sorry,   I can't  speak Tamil  fluently  " என்றார்.
"தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவச்செய்வோம். வீதி எங்கும் தமிழ் முழக்கம் செய்வோம். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"  என்றெல்லாம்  முழங்கிய  தமிழ்க்கவியின்  ஒரு வாரிசுக்கு  தமிழில் பேசமுடியவில்லையே...! என்ற துயர அதிர்ச்சி வந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதற்கான காரணம் கேட்டேன்.
தான் பெற்றோர்களுடன் அமெரிக்காவில் வசிப்பதாகவும், குழந்தைப்பருவத்திலேயே அங்கு சென்றுவிட்டதனால்  தமிழில் சரளமாகப்பேச முடியவில்லை என்றும் கவலையுடன் சொன்னார். புலம்பெயர் சூழல் அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது.
ஆயினும்,  புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்கள் தாம் சென்ற தேசங்கள் தோறும் பாரதியை நினைவுகூர்ந்தவாறுதான்  பயணிக்கிறார்கள்.
பாரதியின் கொள்ளுப்பேத்தி மீராவுக்கு  சரளமாகத்  தமிழ்பேச முடியாதுபோனாலும்,  பாரதியின் ஆங்கிலப்படைப்புகளை தொடர்ச்சியாக தாம் ஆய்வுசெய்துவருவதாகச்சொன்னார்.
எனது தந்தை வழி உறவினர் தொ.மு.சி. ரகுநாதன் தமிழ்நாடு திருநெல்வேலியைச்சேர்ந்தவர்.  புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். பாரதி இயல் ஆய்வாளர். மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவல் உட்பட பல சோவியத் இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர். சாந்தி இலக்கிய இதழை நடத்தியவர். 
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் பாரதிக்கு விழா எடுத்தவேளையில் ரகுநாதனையும் அழைத்திருந்தது. அப்பொழுது எனக்கு ஐந்துவயதுதான்.
பாரதி பற்றி கேட்டுத்தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத அந்தப்பருவத்தில்   அவர் எங்களைத்தேடி  நீர்கொழும்புக்கு வந்தார்.
பின்னாளில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1973 இற்குப்பின்னர் நான் இணைந்திருந்தபோது, அவர் சொல்லிச்சென்ற ஒரு கூற்று பற்றி மூத்த எழுத்தாளர் இளங்கீரனும் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனும் தெரிவித்த கருத்துக்களினால் எனக்கு பாரதியிடத்தில் ஈர்ப்பு மேலும் அதிகரித்தது.
" பாரதி பிறந்து வளர்ந்து மறைந்த தமிழ்நாட்டைவிட இலங்கையில்தான் பாரதியின் தாக்கம் அதிகம். அதற்கு பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி மற்றும் விபுலானந்த அடிகள் முதலானோரும் காரணம். அத்துடன் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் திராவிட இயக்கங்களும் பாரதிக்குரிய இடத்தை வழங்கத்தவறிவிட்டன.  பாரதியை பார்ப்பனக்கவிஞன் என்றே திராவிட இயக்கங்கள் புறம் ஒதுக்கினாலும், அங்கிருந்த இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பாரதியின் புகழை தொடர்ந்து பரப்பினார்கள். " என்ற அவரது கருத்து என்னை பாரதியின் இலங்கைத்தாக்கம் பற்றி கருத்தூன்ற வைத்தது.
இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியதும் எனது தாத்தா  உறவு முறையான தமிழகத்தின் மூத்த படைப்பாளி ரகுநாதனுடன் கடிதத்தொடர்புகள் மேற்கொண்டேன்.
எமது சங்கம்,  நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடத்தியபோது, அந்தக்குழுவில் இணைந்திருந்தேன்.  ரகுநாதன் 1983 ஆம் ஆண்டு எமது சங்கத்தின் அழைப்பை ஏற்று மீண்டும் அந்த நூற்றாண்டு காலத்தில் வந்திருந்தார். அவருடன்,  பேராசிரியர் ராமகிருஷ்ணன், படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர். இவர்களுடன் இணைந்து இலங்கையில் பல இடங்களுக்கும் பயணித்து,  இலங்கை இதழ்களிலும் தமிழ்நாடு தாமரை இதழிலும் பதிவுகளை எழுதியிருக்கின்றேன்.
இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்து மேலும் ஆராய்வதற்கு குறிப்பிட்ட பாரதி நூற்றாண்டு  காலப்பகுதி வழிவகுத்தது. தகவல்கள் தரவுகள், நூல்கள், பிரசுரங்கள் சேகரித்தேன்.
துர்ப்பாக்கியவசமாக 1983 நடுப்பகுதியில் வன்செயல் வந்து இடப்பெயர்வு அவதிக்குள் சிக்கியதால் , அவற்றில் சிலவற்றை இழந்தேன். எனினும் பாரதி எனக்குள் தாகமாகவே தொடர்ந்து ஊற்றெடுக்கிறார். இலங்கையிலிருக்கும்போது,  பாரதி நூற்றாண்டு நிறைவுற்றதும் இலங்கையில் பாரதி தொடரை எழுதத்தொடங்கினேன். அதன் முதல் அங்கங்கள் சிலவற்றை 1984 இல் தொ.மு. சி. ரகுநாதனும் பார்த்தார். எழுதி முடித்து தரச்சொன்னார். மேலும் தரவுகள் தகவல்கள் தேவைப்பட்டதனால், தேடலில் காலம் விரையமாகியது. எதிர்பாராதவகையில் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரநேர்ந்தது.
இங்கு வந்தபின்னர் பாரதியின் கவிதை வரிகளையே ஆதாரமாகக்கொண்டு, இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை 1988 இல் தொடக்கினேன்.
அத்துடன் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் என்ற கலை, இலக்கிய அமைப்பையும் நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்து, முதல்தடவையாக அவுஸ்திரேலியாவில் மகாகவி பாரதி விழாவையும் 1990 ஆம் ஆண்டு நடத்துவதற்கு முன்னின்று உழைத்தேன்.
இவ்வாறு இரண்டு அமைப்புகளில் எனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டுக்கொண்டிருந்தமையால், இலங்கையில் பாரதி ஆய்வுப்பணிகள் மேலும் தாமதமாகின. காலம் கடந்துகொண்டிருக்கையில் எனது மனைவி மாலதி, இந்த ஆய்வை எழுதி முடிக்குமாறு என்னைத் தூண்டிக்கொண்டிருந்தார். அவர் ஒரு தமிழாசிரியையாக இலங்கையில் பணியாற்றியவர். இலங்கையில் பாரதி ஆய்வு மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்பதனால் எழுதி முடிக்குமாறு வலியுறுத்திவந்தார்.
மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன்.  பாரதியின் ஞானகுரு  யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் ( 1878 - 1942) அவர்கள் தோன்றிய அதே மண்ணிலிருந்து வெளிவரத்தொடங்கிய  காலைக்கதிரில் நாற்பது வாரங்கள் வெளியாகிய இந்தத்தொடர், பின்னர்   அவுஸ்திரேலியா தமிழ்முரசு இணைய இதழிலும் வெளிவந்தது.
காலைக்கதிரில் இந்தத்தொடர் வெளியாவதற்கு ஆவனசெய்த இலக்கிய நண்பரும் பத்திரிகையாளருமான தெய்வீகன் அவர்களுக்கும், இந்தத்தொடரை ஏற்று வெளியிட்ட காலைக்கதிர் ஆசிரியபீடத்தின் மூத்த பத்திரிகையாளர் நண்பர் வித்தியாதரன் அவர்களுக்கும் காலைக்கதிர் பத்திரிகைக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவில் வதியும் அன்பர்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று இலங்கையில் பாரதி தொடர் சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழிலும் வெளிவந்தது. அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழுக்கும் ஆசிரியர் குழுவைச்சேர்ந்த இலக்கிய நண்பர்கள் கருணாசலதேவா,  செ. பாஸ்கரன் ஆகியோருக்கும், அவ்வப்போது தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்த சிட்னியில் வதியும் மதிப்பார்ந்த சகோதரி திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் மற்றும் தகைமைசார் பேராசிரியர்கள் மௌனகுரு, நுஃமான், செ.யோகராசா, ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன் மற்றும் செல்வி நீலாம்பிகை கந்தப்பு, செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன்  ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றேன்.
இந்த ஆய்வினை எழுதுவதற்கு தூண்டுகோளாகவிருந்து ஆலோசனைகளும் வழங்கிய மனைவி மாலதிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.
பாரதி பெருங்கடல். எட்டயபுரத்தில் தோன்றி தமிழகத்தையும் இந்தியாவையும் கடந்து ஈழத்திற்கும் வந்து, சிந்தனைகளால்  உலகெங்கும் பரவி,  ஆழமும் விரிவும் கொண்ட பெருங்கடல்.
எனது குழந்தைப்பருவத்தில் பாரதியின் பாடல்கள் மூலம் பாரதியை அறிமுகப்படுத்தியவர் -  எனக்கு 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின்போது ஏடு துவக்கி வித்தியாரம்பம்  செய்வித்தவர் பண்டிதர் க. மயில்வாகனன் அவர்கள்.
அன்னார், 1919 ஆம் ஆண்டு இலங்கையின் வடபுலத்தில் சித்தங்கேணியில் பிறந்து 2008 ஆம் ஆண்டு மறைந்தார்.
என்னை ஒரு மாணவனாகப்பார்க்காமல்,  மகனாக நேசித்த பெருந்தகையான பண்டிதர் அய்யாவுக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூற்றாண்டு தொடங்குகிறது.
அவரின் நூற்றாண்டில் இலங்கையில் பாரதி நூலை அன்னாருக்கே சமர்ப்பிக்கின்றேன். இந்த ஆய்வுத்தொடர் வெளியான காலத்தில் இதனைப்படித்து மின்னஞ்சல்கள், தொலைபேசி ஊடாக கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அன்பார்ந்த வாசகர்களுக்கும் பாரதி பக்தர்களுக்கும் இலங்கையில் பாரதி நூலுக்கு முகப்போவியம் வரைந்துள்ள ஓவியர்  ( அமரர் ) மொறாயஸ்  அவர்களுக்கும்,  இந்நூலை பதிப்பித்து தரும் நீர்கொழும்பு சாந்தி அச்சகத்தினருக்கும் அதன் ஊழியர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன்
முருகபூபதி
letchumananm@gmail.com
-->


No comments: