03/08/2019 தமிழர் தரப்பு அரசியலுக்கு வெளியிலும் முட்டுக்கட்டைகள். உள்ளேயும் பல முட்டுக்கட்டைகள். இந்த முட்டுக்கட்டைகளைக் கடந்து நாடளாவிய அரசியல் வெளியில் உறுதியாகவும் வலுவாகவும் அது காலடி எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இது காலத்தின் தேவையும்கூட.
ஏழு தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்துள்ள தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை, அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தி, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக அதனை அவர்கள் உதாசீனம் செய்வதே வரலாறாக உள்ளது.
தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள், அவர்கள் சகல உரிமைகளுக்கும் உரித்துடையவர்கள், அவர்கள் சிறுபான்மையாக இருந்த போதிலும், இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை ஆட்சியாளர்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.
நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்களுடைய உரிமைகளைக் கபளீகரம் செய்து அவர்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருந்து செயற்பட்டு வந்துள்ளார்கள். அந்த நிலைமை தொடர்கின்றதே அல்லாமல், இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சம உரிமை உடையவர்களாக இந்த நாட்டின் சக குடிமக்களாக வாழ வேண்டும். அதற்குரிய அரசியல் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற உரிமைக்குரல் தொடர்ந்து ஒலித்து வருகின்றது.
உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதுடன் நின்றுவிடாமல் அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்காகப் பல்வேறு வழி முறைகளில் அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதற்கான போராட்டங்களும் சாத்வீக வழிகளிலும், இறுதியாக ஆயுதப் போராட்ட வழியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
திசைமாறிய நிலைமை ஆனால் தந்திரோபாய ரீதியிலும், சர்வதே சத்தை வ ைளத்துப் போட்ட நரித்தனமான செயற்பாடுகளின் ஊடாகவும் அந்தப் போராட்டங்கள் அனைத்தையும் தோற்கடித்த ஆட்சியாளர்கள், தமிழ்மக்களை தோல்வியைத் தழுவிய ஒரு தரப்பாக்கியுள்ளார்கள்.
அனைத்து வளங்களுடனும், அதிகார பலத்துடனும் இருந்த அரசாங்கங்களை ஆட்டிப்படைத்த விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்தை 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் இழந்தார்கள். அதன் பின்னரான காலப்பகுதியில் மீண்டும் அவர்கள் சாத்வீகப் போராட்ட வழிகளில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்ப்பு அரசியல் வழிமுறையைக் கையாண்டிருந்த தமிழ் அரசியல் தலைமைகள், யுத்தம் முடிவுக்கு வந்து 6 வருடங்கள் கழிந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இணக்க அரசியல் வழியில் அல்லது விட்டுக் கொடுத்துச் செல்லும் அரசியல் வழித்தடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தன.
ஆனால் நிபந்தனையற்ற வகையில் அரசுக்கு ஆதரவளிவத்து, அதன் ஊடாக உரிமைகளை வென்றெடுப்பதற்கும், பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்குமாக மேற்கொண்ட இந்த முயற்சியும் கடந்த நான்கு வருடங்களாகத் தோல்வியையே தழுவியிருக்கின்றது.
தமிழர்களின் அரசியல் உரிமை நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைகின்றனவே தவிர, அவர்களுக்கு விமோசனம் கிட்டுவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. மாறாக அரசியல் உரிமைக்கான போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச் செயற்பாடுகளுக்கு நீதி கேட்பதற்கான போராட்டமாக அது பரிணமித்துள்ளது. அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கும், அவர்களின் வாழ்வுரிமை சார்ந்த விடயங்களில் இடம்பெற்று வருகின்ற உரிமை மறுப்புகளுக்கும், ஆட்க ைள வலிந்து காணாமல் ஆக்கியமைக்கு நியாயம் கேட்டும், இராணுவம் வலிந்து அபகரித்துள்ள இடம்பெயர்ந்துள்ள மக்ளுக்குச் சொந்தமான காணிகளை மீட்பதற்கும் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்குமாகப் போராட வேண்டியவர்களாக தமிழ் மக்கள் அவர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் இருந்து திசை திருப்பப்பட்டுள்ளார்கள்.
அரசியல் வரட்சித் தளம்
அரசியல் உரிமைக்கான போராட்டம் திசைமாற்றப்பட்டு, தங்களுடைய இருப்புக்காகப் போராட வேண்டிய அவல நிலைமைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். வடக்கும் கிழக்கும் வரலாற்றுப் பாரம்பரிய முறையில் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதே அவர்களது அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் அடிநாதமாகும்.
ஆனால் வடக்கையும் கிழக்கையும் துண்டாடி, அவை இரு வேறு மாகாணங்களாக்கப்பட்டுள்ளன. இரு மாகாணங்களும் இருவேறு மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் வரிந்து கட்டிக்கொண்டு போட்டியிடுகின்ற நிலைமைக்கு தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைமைகளும் தள்ளப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, அரசியல் வாடையற்றிருந்த உள்ளூராட்சி மன்றங்களையும் அரசியல் மயப்படுத்தியமையும் தமிழ் மக்களின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதேச சபைகளுக்கும், நகரசபைகள், மாநகரசபைகளுக்கும் கட்சி ரீதியான போட்டி நிலைமைகளின் கீழ் தேர்தல்களை நடத்துகின்ற புதிய நடைமுறை காரணமாக உள்ளூர் மட்டத்திலேயே தமிழர் தரப்பு கட்சிகள் ரீதியாகப் போட்டியிடவும், ஒன்றுடன் ஒன்று அரசியல் ரீதியாக அடிபடவும் நேர்ந்துள்ளது.
இராணுவத்தின் பிடியில் உள்ள காணி மீட்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்க
ளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டியது, அரசியல் கைதிகளின் விடுதலை என்பன அன்றாடப் பிரச்சினைகளாக எரியும் பிரச்சினைகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றை உள்ளடக்கியதாக போர்க்குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறி, நிலைமாறுகால நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும்கூட ஓர் அரசியல் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற அம்சமும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வாறு பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் இறைமையுள்ள அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் தீர்வு என்ற தமிழ் மக்களின் பிரதான அரசியல் உரிமைப் போராட்டம் இவற்றின் ஊடாகப் பல்வேறு வழிமுறைகளில் சித
றடிக்கப்பட்டிருக்கின்றது. இதனால், அரசியல் உரிமைக்கான போராட்டத்திற்கு காணப்பட வேண்டிய அரசியல் தீர்வு என்பது பின் தள்ளப்பட்ட ஒரு விடயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்த்தரப்பு அரசியல் அதன் உண்மையான அடிப்படை அரசியல் உரிமைக்காகவும், எதிர்கால சந்ததியின் சுபிட்சமான வாழ்க்கைக்குமான விடயங்களில் கவனம் செலுத்த முடியாததோர் அரசியல் வரட்சி தளத்திற்குள் வலிந்து தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், தமது தாயகப் பிரதேசங்களிலேயே இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் பவவற்றை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் மிகவும் சாதுரியமாக முன்னெடுப்பதற்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
பகிரங்கத் துணை புரியும் படையினரும் பொலிஸாரும்
பொதுமக்களின் சட்டரீதியான குடியிருப்புக் காணிகளையும், அவர்களின் வயல் நிலங்கள், விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்துள்ள அரச படைகளினதும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதைத் தமது தலையாய பொறுப்பாகக் கொண்டுள்ள பொலிஸாரினதும், உதவியோடும் பாதுகாப்போடும் தமிழ்ப் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள் பகிரங்கமாகவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது சிவிலியன்களாகிய சிங்கள மக்களோ இல்லாத இடங்களில் இந்துக்களுக்குச் சொந்தமான ஆலய வளவுகள், காணிகளிலும், இந்து மதம் சார்ந்த தொன்மையான இடங்களிலும் புத்தர் சிலைகளை வைப்பதிலும், பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதிலும் பௌத்த பிக்குகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
தனிமனிதனாக பௌத்த மத குரு என்ற போர்வையின் கீழ் இனவாத, மதவாத வெறியூட்டப்பட்டவர்களைப் பயன்படுத்தி இந்தக் காரியங்களை அரசு முன்னெடுத்துள்ளது. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், இவர்களின் செயற்பாடுகளைத் தடங்கலின்றி முன்னெடுப்பதற்கும் பாதுகாப்புப் படைகளும் பொலிஸாரும் பகிரங்கமாகவே துணை புரிகின்றனர்.
இதனால் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், இன ரீதியாகவும், மத ரீதியாகவும்கூட தமிழ் மக்கள் தங்களுடைய சொந்தப் பிரதேசமாகிய தாயகப் பிரதேசத்திற்குள்ளேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர் தரப்பு அரசியலுக்கு வெளிப்பக்க நெருக்கீடுகளாகவும் முட்டுக்கட்டைகளாகவும் முகிழ்த்து வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்ற புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் தடுத்து நிறுத்துவதற்கு அரசியல் ரீதியான செயற்பாடுகள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தமிழர் அரசியல் தரப்புக்கள் மௌனம் காக்கின்ற போக்கையே காண முடிகின்றது. அவர்கள் இது விடயத்தில் பின்னடிக்கின்ற ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றார்களோ என்று ஐயுறும் வகையில் நிலைமைகள் அமைந்திருக்கின்றன.
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைக்கும் செயற்பாடு தொடர்பில் ஊர் மக்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு பொங்கலிடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடினார்கள். அந்த ஒன்றுகூடலின்போது, அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்கு அத்துமீறி நடந்து கொண்டதைக் கட்டுப்படுத்துவதற்கு மாற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
திறமைசாலிகள், செயல்வல்லமை உடையவர்களின் ஒன்றிணைவு ஏற்கனவே இந்த விவகாரம் முல்லைத்தீவு நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்ற உத்தரவையும் உதாசீனம் செய்கின்ற போக்கையே அந்த பிக்குவும் அங்கு நிலைகொண்டுள்ள படையினர் மற்றும் பொலிஸாரும் கடைப்பிடித்தனர்.
அது மட்டுமல்லாமல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் எதிர் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்கு தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நகர்வு இது ஒரு பாரதூரமான விடயமாகும். ஆனால் ஆக்கிரமிப்பு அரசியல் ரீதியான இந்த விவகாரத்தில் தமிழர் தரப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி மட்டத்திலான ஒரு சட்டத்தரணி உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, அவர் அங்கு முன்னிலையாகியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
ஒரு சிரேஸ்ட சட்டத்தரணி அங்கு முன்னிலையாகியிருந்த போதிலும், மனுதாரர் தரப்புக்கு சமமான முறையில் இந்துக்கள் தரப்பிலான நியாயத்தை எடுத்துரைக்க வல்ல ஒருவர் என்ற நம்பிக்கையை
ஏற்படுத்தும் வகையில் சட்டத்தரணிகள் ஒழுங்கு செய்யப்படவில்லை என்ற குறைபாடு இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ளவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் தரப்பில் சட்டத்தரணிகளுக்குக் குறைவில்லை. தமிழ் அரசியல் தரப்பிலும் தாராளமான அளவில் சட்டத்தரணிகள் இருக்கின்றனர். ஆனால், தமிழ்த்தரப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை சட்டரீதியான முறையில் எதிர்கொள்ளவும், அவற்றை முறியடித்து நியாயத்தை நிலைநாட்டவும் அவசியமான நடவடிக்கைகள் ஒரு குழு சார்ந்த நிலையில் மேற்கொள்ளப்படுவதில்லை.
அரசியல் பின்புலத்தில் அந்தச் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகளும் காணப்படவில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான கெடுபிடிகள், அடக்குமுறைகள் என்பன பல்வேறு வடிவங்களில் பல்வேறு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அவைகள் பல மட்டங்களிலும் பல்வேறு வழிகளிலும் எதிர்கொள்ளப்பட வேண்டும். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொது அமைப்புக்கள் என்ற பொதுத் தளத்திலும் இந்த எதிர்ச் செயற்பாடுகள் அல்லது நியாயத்திற்காகப் போராடுகின்ற நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு தமிழர் தரப்பில் ஒன்றிணைந்த சட்டத்தரணிகள் குழு அல்லது அமைப்பு, ஏனைய துறைசார்ந்தவர்களின் ஒன்றிணைந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, இளைஞர் அமைப்பு போன்ற அமைப்புக்கள் அரசியல் கட்சி பேதங்களையும் அரசியல் கட்சி சார்ந்த நிலைப்பாடுகளைக் கடந்த நிலையிலும் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய அமைப்புக்கள் இல்லாவிட்டாலும்கூட சமயசந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் இவ்வாறு துறைசார்ந்த நிலையில் திறமைசாலிகளும், செயல் வல்லமை உடையவர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.
மாற்றுத் தலைமைக்கான தடைகள்
இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களின் சமய, சமூக, கலாசார உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் அத்தியாவசியமானவை. அரசியல் ரீதியாக மட்டுமே இவற்றுக்கான எதிர் நடவடிக்கைகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாய நிலைமை அல்லது அத்தகைய நியதிப் போக்கில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.
மொத்தத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், கட்சி அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளைக் கடந்து தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் சார்ந்த அக்கறையாகப் பரிணமிக்க வேண்டும். பொதுநிலை சார்ந்த ஒரு போக்கு கடைப்பிடிக்காத வரையில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான பேரினவாதிகள் மற்றும் பேரின அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்து தமிழ் மக்கள் மீட்சி பெற முடியாத நிலைமையே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் தமிழர் தரப்பு அரசியல் வெளிச்சக்திகளின் முட்டுக்கட்டைகள் நெருக்கீடுகளுடன், உள்ளக முட்டுக்கட்டைகளுக்கும் ஆளாகி அவற்றில் இருந்து விடுபட முடியாமல் தடுமாறுகின்றது.
பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் வலுவானதோர் அரசியல் அமைப்பாக, சாத்வீக வழிமுறைகள் பலவற்றைக் கையாளும் ஆற்றல் கொண்டதாக மிளிரவில்லை. சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது ஆட்சியாளர்களுடனும், ஏனைய சக்திகளுடனும் உறுதியான நிலையில் பேரம் பேசி பிரச்சினைகளைக் கையாள்கின்ற ஆளுமையையும் கொண்டிருக்கவில்லை.
இதனால் தமிழ்மக்களும், கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள அரசியல் கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகள், அமைப்புக்களும்கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதன் நடவடிக்கைகளைக் கண்டித்து அறிக்கை அரசியல் நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன.
கூட்டமைப்புக்குப் பதிலாக ஒரு மாற்று அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை உருவாக்கி அதற்கான முயற்சிகளில், கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் கட்சி அரசியல் நலன் சார்ந்த போக்கும், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் தலைமையை இலக்காகக் கொண்ட அரசியல் நிலைப்பாடும் இந்த முயற்சிகளை வெற்றிபெறச் செய்வதற்குப் பெரும் தடையாக அமைந்திருக்கின்றன.
தலைமைக்கான தேவையும் போராட்டமும்
இதனால் மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி முளையிலேயே கருகிய நிலைமையைக் கடக்க முடியாமல் தடுமாறுகின்ற நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது. இருக்கின்ற கட்சிகளுடன் ஒன்றிணைவதில் எழுந்துள்ள முரண்பாடுகளும், ஒன்றிணைகின்ற கட்சிகளின் தலைமையை அல்லது அதன் உரித்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணப்பாங்கும் தமிழர் அரசியலின் உள்ளக முரண்பாடுகளாக முட்டுக்கட்டைகளாகக் காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். தமது உரிமை கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற் காக வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். காணி மீட்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறு ப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தப் போரா ட்டம் தொடர்கின்றது.
தொல்பொருள் திணைக்களத்தின் உதவி யோடு புராதன இந்துமதச் சின்னங்கள், ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களை பௌத்த மயமாக்குகின்ற ஆக்கிர மிப்பு நடவடிக்கைகளுக்கு எதி ரான போராட்டமும்கூட பாதிக்கப்பட்ட வர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையும், துறைசார்ந்த வல்லவர்கள், நிபுணர்களினது தலைமையும் தேவைப்படுகின்றது. ஆனால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எவரும் உரிய முறையில் முன்வருவதாகத் தெரியவில்லை.
ஆனால் அரசியல் தலைமைக்கான போராட்டங்கள் மாற்றுத் தலைமையை உருவாக்குகின்ற அரசியல் போக்கில் ஆடம்பரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்றே கூற வேண்டும்.
ஒரு பக்கம் அரசியல் தலைமை அல்லது தலைமைக்கான தேவை காணப்படுகின்றது. மறுபக்கத்தில் வேறு எங்கோ ஓர் அரசியல் வெளியில் அரசியல் தலைமைக்காகப் போராடுகின்ற போக்கு தென்படுகின்றது. இந்த முரண்பாடான போக்கும் நிலைமையும் தமிழர் தரப்பு அரசியலின் ஆளுமை மிக்க செயற்பாட்டுக்கு உள்ளக முட்டுக்கட்டைகளாக, உள்ளக நெருக்கீடுகளாகக் காணப்படுகின்றன.
எனவே, வெளிப்பக்க முட்டுக்கட்டைகள் மற்றும் உள்ளக முட்டுக்கட்டைகள் என்பவற்றைக் கடந்து தமிழர் அரசியலை வலுவானதோர் அரசியல் சக்தியாக உருவாக்கி முன் நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டியது, அவசியம். குறிப்பாக நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தல்களை எதிர் நோக்கியுள்ள தருணத்தில் இது மிகவும் அவசியம். அவசரமானதும்கூட.
பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment