எங்கள் தமிழால் வாழ்த்துவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


image1.JPG        ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
        கால மதை மாற்றுவோம்
        கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
        கலகலப்பை ஊட்டு வோம்
        அம்மா பாலில் எமக்குதந்த
        அன்னைத் தமிழைப் பாடுவோம்
        அன்னியத்தை அணைத்து நிற்கும்
        அவலம் அதைப் போக்குவோம் !

           கேக்கை வெட்டி விளக்கணைக்கும்

           கேளிக்கையை விரட்டு வோம்
           நாக்கில் இனிமை சொட்டசொட்ட
            நல்ல தமிழைப் பாடுவோம்
           வீட்டில் உள்ள பெரியவரை
           வீழ்ந்து வணங்கி நின்றுமே
           வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
            வளமாய் தமிழில் பாடுவோம் !

             அப்பா அம்மா அருகணைத்து
             அக மகிழ்ந்து பாடுவோம்
             அக்கா அண்ணா தம்பியோடு
             அழகு தமிழில் பேசுவோம்
             பக்குவமாய் இனிப்பு வழங்கி
             பலரும் மகிழப் பாடியே
             செப்பமாகப் பிறந்த நாளை
              சிறப்பாய் செய்து மகிழுவோம் !


               ஆங்கிலத்தில் பாடும் பாட்டை
               அகத்தை விட்டு அகற்றுவோம்
               அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி
               அகம் மகிழச் செய்குவோம்
               இனிய பிறந்த நாளையென்றும்
                எங்கள் தமிழால் வாழ்த்துவோம்
               எங்கள் தமிழின் இனிமையெங்கும்
                பொங்க வாழ்த்துக் கூறுவோம் !

     வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம்
     உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்
    கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்
    கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !
         


No comments: