தனக்கு என்று எதுவும் வைக்காமல் எவர் கேட்டாலும் எடுத்துக் கொடுப்பதுதான் தானமா அல்லது தனக்குப் பின்தான் தானதர்மமா இந்தக் கேள்வி மகாபாரத காலம் தொடக்கம் கர்ணனின் கொடையை உதாரணமாக கொண்ட விவாதமாகும்.
இந்த விவாதத்தை திரைப்படமாக்கினார் தயாரிப்பாளரும் டைரக்டருமான வி.டி.அரசு. தனது சஷ்டி பிலிம்ஸ் சார்பாக அவர் எடுத்த மகிழம் பூ படம்தான் இந்த கதையை அடிப்படையாக கொண்டது.
கதாநாயகனுக்கு இரக்க சுபாவம். கஷ்டம் என்று எவர் வந்தாலும் கையில் இருப்பதை கொடுத்து விடுவான். அண்ணனோ இதை கண்டிக்கிறான். இதனால் வீட்டை விட்டு நீங்கும் நாயகன் கிராமத்திற்கு சென்று தான் யார் என்று கூறாமல் வண்டியோட்டிப் பிழைக்கிறான்.
கிராமத்தில் நாயகனுக்கு பூவிற்கும் பெண் காதலியாக வாய்க்கிறாள் ரயில் நிலைய அதிகாரி சின்ன ஜமீந்தார் என்று பலர் தொடர்பு ஏற்படுகிறது. ஆனாலும் ஏழ்மையிலும் அவனது தர்மம் தொடர்கிறது. இப்படி அள்ளிக் கொடுப்பவனுக்கு இறுதியில் என்ன நடக்கிறது என்பதை மகிழம்பூ படம் விளக்கிறது.
ஏற்கனவே மனம் ஒரு குரங்கு கற்பூரம் ஆகிய படங்களை தயாரித்த அரசு இந்தப் படத்தை தயாரித்ததுடன் முதன் முதலாக இயக்கவும் செய்திருந்தார். பிரபல பாடகிகளான சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான சூலமங்கலம் ஜெயலஷ்மியின் கணவர்தான் இந்த அரசு.
மகிழம்பூ படத்தின் கதாநாயகனாக ஏவி. எம். ராஜன் நடித்திருந்தார். கதாநாயகியாக அவரின் மனைவி புஷ்பலதா நடித்தார். கிராமத்துப் பெண்ணாக மிக இயல்பாக புஷ்பலதா நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். இயல்பாகவே உணர்ச்சிகரமாக நடித்கும் ஏவி. எம். ராஜன் இம்முறையும் குறை வைக்கவில்லை.
கதாநாயகன் ஏவி. எம். ராஜனின் குணாம்சத்தை உணர்த்தும் வகையில் படத்திற்கு மகிழம்பூ என்று பெயர் வைத்திருந்தார்கள்.
சிறிய பூவாக இருந்தாலும் மரத்தில் இருந்தாலும் நிலத்தில் விழுந்தாலும் வாசம் தரும் தன்மை மகிழம்பூவுக்கு உண்டு. அதே போல் கதாநாயகன் வசதியாக இருந்தாலும் அவன் தரத்திலும் மனத்திலும் எந்த மாற்றமும் இருப்பதில்லை என்பதை குறிக்கும் விதத்தில் படத்திற்கு மகிழம்பூ என்று பெயரிடப்பட்டிருந்தது.
படத்தில் தங்கள் நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்கள் சோவும் மனோரமாவும்தான். கிராமத்தனாகவும் படிப்பறிவில்லாதவனாகவும் சோவும் பள்ளி ஆசிரியையாக மனோரமாவும் நடித்திருந்தார்கள்.
அதிலும் திருநெல்வேலி வட்டார பேச்சு வழக்கை பயன்படுத்தி சோ வசனம் பேசி அமர்க்களப்படுத்தியிருப்பார். குறிப்பாக அடிக்கடி அவர்களும் ஆக்கம் கெட்ட கடவை, அத்திமுண்டம், கறு கெட்ட பசங்களா போன்ற வசனங்களை ரசிகர்களின் வரவேற்றைப் பெற்றன. சோ மனோரமா இருவருடைய நகைச்சுவையும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு போக உதவின.
வில்லனாக வரும் ஆர். எஸ். மனோகர் தன் வழக்கமான பாணியில் நடித்திருந்தார். 'இந்த ஊருக்கே பெரிய மனுஷன் எங்க அப்பா அவர் மகன் நான்' என்று அடிக்கடி அவர் படத்தில் கூறுவது அன்றைய பஞ்ச் டயலக்!
மேஜர் சுந்தரராஜன் டி.எஸ். முத்தையா குமாரி பத்மினி ஆகியோரும் படத்தில் உண்டு. இசை டி.பி. ராமச்சந்திரன்.
இவர் வி. டி. அரசு எடுத்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்தவர். இவரது இசையில் 'தனக்கு தனக்கு என்று ஓதுக்காதே' என்ற பாடல் பிரபலமாக ஒலித்தது. கவிஞர் மாயவநாதனின் அர்த்தம் பொதிந்த கவி வரிகளை டி. எம். செனஞ்தரராஜனும் சீர்காழி கோவிந்தராஜனும் கருத்துடன் பாடியிருந்தார்கள்.
அரசுவின் படங்களுக்கு மட்டுமே கதைவசனம் எழுதும் சிங்கார வேலன் இந்தப் படத்திற்கும் எழுதியிருந்தார். அருமையான கதை சிறந்த அர்த்தம் பொதிந்த வசனங்கள் கொண்ட படமாக மகிழம்பூ வெளிவந்தது. சிறிய நடிகர்களை கொண்டு நல்ல படங்களை உருவாக்கலாம் என்பதை அரசு நிருபித்திருந்தார்.
No comments:
Post a Comment