முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
நல்லூர் ஆலய சுற்றாடல் முழு இராணுவ, பொலிஸ் பாதுகாப்பில் !
நல்லூர் வளாகத்திற்குள் இராணுவத்தை சப்பாத்து, துப்பாக்கிகளுடன் அனுமதிக்க முடியாது - ஸ்ரீதரன்
ஜனாதிபதி தலைமையில்.இலங்கை கம்போடியா வர்த்தக மாநாடு
சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு ஜனாதிபதி , பிரதமர் அனுதாபம்
சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐ.நா. சாசனத்தில் இலங்கை கைச்சாத்து
மாணவர்களின் ஆங்கில மொழி விருத்திக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரிய சேவை
அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்
வடக்கு ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு
6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி - விக்கி அழைப்பு !
கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த
முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
05/08/2019 வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நன்றி வீரகேசரி
05/08/2019 நல்லூர் ஆலய சூழல் முழுமையான இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 01ஆம் திகதி வரையில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்து மூடப்பட்டு வீதி தடைகள் போடப்பட்டு , மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலய சூழலில் இன்றைய தினம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டு ஆலய சூழலை தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
ஆலயத்திற்கு வருவோரில் சந்தேகத்திற்கு இடமானவர்களை சோதனை செய்தவதற்கான சோதனை கூடங்கள் ஆலயத்திற்கு செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இம்முறை ஆலய சூழலில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் யாழ்.மாநகர சபை செலவு செய்வதாக தகவல்கள் மூலம் அறிய கிடைத்துள்ளன.
நல்லூர் ஆலய சூழலில் 650 பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான செலவீனமாக 20 இலட்ச ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.
நல்லூர் ஆலய சூழலில் உள்ள 5 பாடசாலைகளில் பொலிசார் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பாடசாலைக்கான மின்சார கட்டணம் , இதர தங்குமிட செலவீனம் , தேநீர் , சிற்றுண்டி குடிதண்ணீர் போத்தல் என சுமார் 20 இலட்ச ரூபாய் செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை 8 சோதனை கூடங்களை அமைப்பதற்காக 3 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வீதி தடைகளுக்கான செலவு என சுமார் 25 இலட்ச ரூபாய் பாதுகாப்புக்காக யாழ். மாநகர சபை செலவு செய்யவுள்ளது என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. நன்றி வீரகேசரி
நல்லூர் வளாகத்திற்குள் இராணுவத்தை சப்பாத்து, துப்பாக்கிகளுடன் அனுமதிக்க முடியாது - ஸ்ரீதரன்
08/08/2019 நல்லூர் கந்தசுவாமி ஆலைய திருவிழா காலங்களில் இராணுவம் சப்பாத்துக்களுடனும் துப்பாகிகளுடனும் ஆலய வளாகத்தில் நுழைந்து தமிழர்களை சோதிக்கும் செயற்பாடுகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும். பிரதமரும் அரசாங்கமும் உடனடியாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.
அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலைய திருவிழா தமிழர்களின் அடையாள நிகழ்வாக கருதப்படுகின்றது. இந்த ஆலைய வரலாற்றில் இதுவரை ஆலையத்திற்குள் செல்பவர்களை பரிசோதனை செய்ததாக வரலாறுகள் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி ஆலையம் மிகவும் புனிதமான பகுதி. ஆனால் இன்று அங்கு சப்பாதுகளுடனும் துப்பாக்கிகளுடனும் உள்நுழைந்து தமிழ் மக்களை சோதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
சீருடை தரித்த இராணுவத்தினர் ஆக்கிரமிப்பையும் மக்களை அசௌகர்யத்திற்கு உள்ளாக்கும் நிலைமைகளை ஏற்றுகொள்ள முடியாததாகும்.
ஆலைய நிருவாகமும் சரி, பொதுமக்களும் வேறு எவரும் இவ்வாறு பாதுகாப்பு கேட்கவில்லை. இன்று அரசாங்கமே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டதாக கூறும் அரசாங்கம் வடக்கில் மட்டும் ஏன் இவ்வாறு கெடுபிடிகளை கையாள்கின்றது என்பது தெரியவில்லை.
யாழ்ப்பாணம் நல்லூர் ஒரு கலாசார புனித பூமி. அங்கு எமது கலாசாரத்தை நாசமாக்கும் வகையில் இராணுவம் நடந்துகொள்கின்ற என அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஜனாதிபதி தலைமையில்.இலங்கை கம்போடியா வர்த்தக மாநாடு
07/08/2019 கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பொன்று இன்று (07) Phnom Penh நகரில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN கலந்துகொண்டார்.
இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இதன்போது விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த மாநாட்டில் கம்போடிய பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றியதுடன், இலங்கை சார்பாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் மாநாட்டில் உரையாற்றினார்.
கம்போடிய வர்த்தக குழுவின் தலைவர் Neak Okhna Kith Meng மற்றும் இலங்கை கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் சாரங்க விஜேரத்ன உள்ளிட்ட இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு ஜனாதிபதி , பிரதமர் அனுதாபம்
07/08/2019 இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்திருக்கிறார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு உதவிய இலங்கையின் உண்மையான ஒரு சினேகிதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே வேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபச் செய்தியில், சுஷ்மா சுவராஜ் இலங்கையின் உண்மையான நண்பி, அயலவர், உறவினர் என்று கூறியிருக்கிறார்.
அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பல உச்சங்களை தொட்டது என்றும் பிரதமர் ரணில் தெரிவித்திருக்கிறார். நன்றி வீரகேசரி
சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐ.நா. சாசனத்தில் இலங்கை கைச்சாத்து
07/08/2019 சர்வதேச இணக்கத் தீர்வுக்கான ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் இலங்கை சார்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த சாசனத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு சிங்கப்பூர் சங்ரில்லா ஹோட்டலில இன்று இடம்பெற்றதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை சர்வதேச மட்டத்தில் இணக்கத்தீர்வு தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறைகளை கொண்ட நாடாக அமைகிறது. இந்த உடன்படிக்கையினூடாக இணக்கத்தீர்வுகளின் போது அதன் வலுவான தன்மையை சர்வதேசம் ஏற்றுக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள நம்பகமற்றத் தன்மையை இல்லாது செய்வதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக சட்டம் தொடர்பான ஆணைக்குழு மற்றும் சிங்கப்பூர் நீதி அமைச்சு ஆகியன இணைந்தே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அத்தோடு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய இந்த மாநாடு இன்றுடன் நிறைவுக்கு வந்திருந்தது.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சின் லூங், ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நடவடிக்கைகள் தொடர்பான உதவி செயலாளர் ஸ்டெபன் மதியாஸ், சிங்கப்பூர் நீதி அமைச்சர் கே. சன்முகம் ஆகியோரும் 67 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆங்கில மொழி விருத்திக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரிய சேவை
09/08/2019 நாட்டில் வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை 1960 ஆம் ஆண்டு முதல் 90 வரை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது. இதன்படி முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழி கற்பித்தல் சேவையை அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்கள் குழாம் வழங்கவுள்ளது. அத்துடன் ஒரு ஆசிரியரின் தன்னார்வ சேவைக்காலம் 2 வருடங்களாகும். நன்றி வீரகேசரி
அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்
09/08/2019 வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது.
தரணிக்குளம் மக்களின் நீண்ட கால தேவையாக அறநெறி பாடசாலை காணப்பட்டு வந்தது. இதனை கருத்திற்கொண்டு வீடமைப்பு மற்றும் கலாச்சார அமைச்சின் 4மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று காலை அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது.

தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உயர் அதிகாரிகள், கலாச்சார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் அறநெறி ஆசிரியர், ஊர்மக்களென பலரும் கலந்து கொண்டனர்.





வடக்கு ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு
09/08/2019 ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (09)முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ரிக்கார்டோ செல்லெரி, ஹான்ஸ் வெபர், டிமித்ரா, பவல் ஜுர்சாக் மற்றும் லான் மில்லர் ஆகியோர் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி - விக்கி அழைப்பு !
11/08/2019 போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு பல்வேறுமட்டங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக உணர்கின்றேன்.
தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஒரு நிகழ்வை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் அவசரமானது என்றும் இந்த அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பல்கலைக்கழக சமூகம் முதல் தொழிலாளர் அமைப்புக்கள் வரை எம்மிடம் நேரடியாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி எமது இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே இருக்கின்றது. நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழு ஒன்றை நாம் இன்றே உருவாக்கிப் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும்.
நாம் இந்த நிகழ்வை மேற்கொள்ளும் காலம் மிகவும் முக்கியமானது. ஒன்றன் பின் ஒன்றாக தேர்தல்கள் வரும் நிலையில் தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகள், மனோநிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பது மிகவும் அவசியமானது. அதி அவசரமான கோரிக்கைகளையே உடனடியாக முன்னிறுத்த உள்ளோம். ஆகவே, கடந்த முறையைவிட கூடுதலான மக்களை இம்முறை நாம் அணிதிரட்டவேண்டும்.
கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் நாம் தொடர்ந்து செய்யவிருக்கும் “எழுக தமிழ்”பேரணிக்கு எமது முதலாவது பேரணி நிகழ்வு உத்வேகம் ஊட்டும் வகையில் அமையவேண்டும்.
முன்னைய“எழுகதமிழ்”பேரணிகள் நடக்கும் போது நாம் பலர் உத்தியோக பதவியில் இருந்தோம். எமக்குப் பதவி வழி அரச அங்கீகாரமும் பாதுகாப்பும் தரப்பட்டன. இம்முறை நாம் அவ்வாறான அரச அங்கீகாரத்துடன் கூட்டத்தில் ஈடுபட முடியாது.
எனவே எமது மக்களின் பாதுகாப்பு விடயங்கள் எத்தகைய அரச அங்கீகாரத்துடன் நடைபெறப் போகின்றன என்பதை நாம் பரிசீலித்துப் பார்த்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
அண்மைய உயிர்த்த ஞாயிறு நடவடிக்கைகளால் நல்லூர் ஆலயத்தில் கூட பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரவைக்கு ஏதேனும் பாதுகாப்புத் தடைகள் விடுக்கப்படுமா என்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
எங்கள் பேரணியில் தமிழ் மக்களின் மாபெரும் சக்திகளாக விளங்கும் அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூகநிறுவனங்கள், மத பீடங்கள்,மேற்கத்தைய மற்றும் சுதேச வைத்திய சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரிய அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள், தமிழர் மரபுரிமைப் பேரவை, தொழிற் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள்,விவசாய,கடற்றொழில் சங்கங்கள்,சமாசங்கள்போன்ற அனைத்து அமைப்புக்களும் கட்சி பேதமின்றி செம்ரெம்பர் 16 ஆம் திகதி ஒற்றுமையாய் ஒருங்கு சேரவேண்டும்.
யாவரும் திரண்டெழுந்து தமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்கு வேகம் கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எம் மக்களை செப்டெம்பர் 16ஆம் திகதிய பேரணியுடன் இணைக்கப் போகும் இணைப்புப் பாலங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆட்சியாளர்களால் இதுவரை கவனிக்கப்படாத ஆறு விடயங்கள் எமது பேரணியில் வலியுறுத்தப்பட இருக்கின்றன.
அவையாவன,
எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும். இவை சம்பந்தமான மகாவலி அபிவிருத்திச் சபையின் செயல்கள் ஆராயப்பட்டு சபையின் நடவடிக்கைகள் வடகிழக்கைப் பொறுத்தவரையில் உடன் நிறுத்தப்படவேண்டுமா என்பது பரிசீலிக்கப்படவேண்டும்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்குநிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்யவேண்டும். குறித்த சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறவேண்டும். பல மாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒருகாலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் என அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்படவேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களை இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயே முகாம் இட்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது.
இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்படவேண்டும்.
மேற்கண்ட ஆறு விடயங்களே எமது பேரிணியில் முக்கியமாக கூறப்படப் போகும் விடயங்கள். எமது அரசியல் தேவைகளை ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் முன் மொழிவுகள் ஊடாக யாவருக்கும் தெரியப்படுத்தியுள்ளது. அவற்றை நாங்கள் இனிவரும் “எழுகதமிழ்”பேரணியில் வலியுறுத்துவோம்.
எமது பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியன மேற்கண்ட ஆறு விடயங்களை இப்போதைக்கு வலியுறுத்தினால் போதும் என்று நினைக்கின்றோம். ஏந்தப் படப் போகும் பதாகைகள், மற்றும் ஒட்டப்படப் போகும் சுவரொட்டிகள் எமது தணிக்கைக் குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டே அனுமதிக்கப்படவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்கள் மேற்படி ஆறு விடயங்களையும் இலகுவாக அனுமதிக்க முடியும். அவற்றைச் செய்யுமாறு நாம் அரசை, ஜனாதிபதி வேட்பாளர்களை வேண்டுவது எல்லாவிதத்திலும் நியாயமானது. எனவே இவற்றை இம்முறை வலியுறுத்துவோமாக!
சிலர் எமது பேரணியில் சேரவிருப்போரைத் தடுக்கக் கங்கணம் கட்டியுள்ளதாக அறிகின்றேன். ஆனால் சுயநல காரணங்களுக்காக, கட்சிநலம் சார்ந்து இவ்வாறான தீர்மானங்களை யார் எடுத்தாலும் அது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். நாம் இங்கு கட்சிகளை வளர்க்க முற்படவில்லை. மக்களை ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாகப் போராடவே ஒன்றுபடுகின்றோம்.
ஒன்றுபட்டு எமது இன்னல்ப்படும் மக்களின் விடிவிற்காகப் போராட நினைத்துள்ளோம். ஆகவே எமது பேரணியை இவ்வாறாகக் குழப்ப எத்தனிப்போர் சம்பந்தமாக விழிப்பாக இருங்கள். எமக்கு ஒத்துழைப்பு நல்காவிட்டாலும் பரவாயில்லை; உபத்திரவம் தராது இருங்கள் என்று அவர்களிடம் நல்லமுறையில் கூறிவையுங்கள்.
எமது தமிழ் மக்களின் வருங்காலம் என்பது இப்பேர்ப்பட்ட சிந்தனையுடையவர்களையும் உள்ளடக்கும். நாம் போராடுவது அவர்களுக்காகவும்தான் என்பதை எவரும் மறத்தல் ஆகாது. அந்தவகையில் அவ்வாறான சிந்தனைகள் எவருக்காவது இருக்குமானால் அவற்றைப் புறந்தள்ளிவைத்து எம்முடன் சேர்ந்து பயணிக்க அவர்களை உள்ளன்புடன் அழைக்கின்றோம்.
இன்றிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையறிந்து, குறிக்கோள் அறிந்து ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழ் மக்கள் சார்பில் உங்களால் இயலுமானமட்டில் ஆதரவு வழங்குவீர்களாக என்று கோரி அடுத்து எமது ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுற்படுவோமாக என்றார். நன்றி வீரகேசரி
கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த
11/08/2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment