மழைக்காற்று ( தொடர்கதை) முருகபூபதி





அபிதா,  நிகும்பலையில் இறங்கும்போது அதிகாலையாகிவிட்டது. அந்த தனியார் துறை பஸ் உரியநேரத்திற்கு முன்பே வந்து, அவளை இறக்கிவிட்டு கடந்து சென்றது. அதன் சாரதியின் வேகம் அடிக்கடி நடக்கும் வீதி விபத்துக்களையும் நினைவூட்டியமையால் பதற்றத்துடனேயே பயணித்தாள். அந்தப்பதற்றம் இதர பயணிகளின் முகங்களிலும் படிந்திருந்தது.
கைத்தொலைபேசியில் நேரத்தைப்பார்த்தாள். காலை ஐந்து மணி கடந்துவிட்டிருந்தது.  குளிர்காற்று இதமாக வருடிச்சென்றது. பஸ்ஸின் நடத்துனரிடம் , தன்னை நிகும்பலையில்,  மாரிஸ்டலா கல்லூரிக்கு சமீபமாக இறக்கிவிடும்படி சொல்லியிருந்தாள்.
அந்த நடத்துனர் தமிழராக இருந்தமையால் அவளுக்கு சற்று நிம்மதி. சாரதி, வவுனியாவரையில் தமிழ் சினிமாப்பாடல்களையே ஓடவிட்டிருக்கவேண்டும். மதவாச்சி நெருங்கியதும் சிங்களப்பாடல்கள் சிறிது தூரம் ஒலித்தன. பின்னர் பயணிகளின் உறக்கம் கருதி அதனை அணைத்துவிட்டிருந்தான்.
அபிதாவுக்கு  உறக்கம் வரவில்லை. கண்ணை மூடிக்கொண்டு வந்தாலும், அடிக்கடி விழித்துப்பார்த்தாள்.
வவுனியாவில் முதல் நாள் இரவு அந்த பஸ்ஸில் ஏறியதுமுதல் அவள் கண்களை உறக்கம் தழுவவில்லை. புதிய ஊருக்குப்போகின்றோமென்ற பதற்றத்துடன் அடிக்கடி நேரத்தைத்தான் பார்த்தாள். சிறிய ட்ரவலிங் பேக்கை மடியிலேயே வைத்திருந்தாள்.
அதற்குள் இரண்டு சேலைகள், அதற்குபொருத்தமான ரவிக்கைகள், உள்ளாடைகள், ஒரு துவாய், ஒரு சோப் கேஸ், அதனுள் லக்ஸ்சோப். பத்திரப்படுத்திவைத்திருந்த பாடசாலை சான்றிதழ்கள். கணவன் பார்த்திபன், குழந்தை தமிழ்மலருடன் எடுத்துக்கொண்ட எஞ்சியிருக்கும் ஒரே ஒரு குடும்பப்படம்.
கைப்பேர்சில் இருந்த , நிகும்பலையில் தான் செல்லவேண்டிய வீட்டு முகவரியையும் அதிலிருக்கும் கைத்தொலைபேசி இலக்கங்களையும் அந்த இரவுநேரப்பயணத்தில் பல தடவை மீண்டும் மீண்டும் பார்த்து மனதிலிருத்திக்கொண்டாள்.
அது தவறிவிடும் என்ற தயக்கத்தில் முன்னெச்சரிக்கையாக குடும்ப படத்தின் பின்புறமும் எழுதிவைத்திருந்தாள்.
அவளிடம் இருப்பது அந்த உடைமைகள் மாத்திரமே. காதுகளில் சிறிய கம்மல். கழுத்திலோ கையிலோ ஏதுமில்லை.
வீட்டு வேலைகளுக்கும் சமையல் பணிகளுக்கும் பெண் தேவை என்ற பத்திரிகை விளம்பரத்தை பார்த்துவிட்டே இந்த நெடும்பயணத்தை அவள் தொடர்ந்திருந்தாள்.
வேலைக்குச்செல்லும் பெண்கள் வதியும் இல்லத்தில், வீட்டுப்பணிகளுக்கும் சமையலுக்கும்  குடும்பப்பொறுப்புகள் அற்ற இளம்பெண் தேவை. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
அதனைப்படித்தவுடன் அபிதாவுக்கு சிரிப்பும் வந்தது.

குடும்பப்பொறுப்புகள் அற்ற பெண்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா? அப்படியாயின் அவர்களுக்கு வேறு வேலைகளே இல்லையா? அந்த சிறுவிளம்பரம் அபிதாவை ஆச்சரியப்படவைத்தது.
அதிலிருந்த கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டபோது முதலில் இணைப்பு கிடைக்கவில்லை. மீண்டும் சில நிமிடங்களில் தொடர்புகொண்டாள். நல்லவேளையாக இணைப்பு கிடைத்து, மறுமுனையிலிருந்து ஒரு பெண் பேசினாள்.
அந்த கைத்தொலைபேசி உரையாடலிலேயே முதற்கட்ட நேர்முகத் தேர்வு முடிந்துவிட்டது.  பெயரையும் கேட்டுக்கொண்டு, மறுநாள் தொடர்புகொண்டாள் ஜீவிகா என்ற அந்தப்பெண்.
தான் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்த வேறும் சில இளம்பெண்கள் தொடர்புகொண்டதாகவும், ஆனால், திருப்தியில்லை என்றும் சொன்ன ஜீவிகா, நிகும்பலைக்கு எவ்வாறு வருவது என்றும், எங்கே இறங்கி ஓட்டோ பிடித்து வரவேண்டும் என்றும் சொல்லி,  தனது வீட்டு முகவரியும் கொடுத்து, கடற்கரை வீதியில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு முன்புறமுள்ள வீடு என்றும் விளக்கம் சொல்லியிருந்தாள்.
இவ்வளவு விஸ்தீரமாக சொல்லியிருந்தமையால், அந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அபிதாவின் மனதில் துளிர்விட்டது.
“ நம்பிக்கைதானே வாழ்க்கை “ என்று பார்த்திபன் தன்னை காதலித்து மணம் முடித்த காலப்பகுதியில் அடிக்கடி சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.
குழந்தை தமிழ்மலர் பிறந்ததும், அந்தப்பெயரை மகளுக்கு சூட்டியதும் அவன்தான். இனி மகள்தான் நம்பிக்கை என்றான்.
எல்லா நம்பிக்கைகளும் இறுதிப்போருடன் அவளுக்கு நிராசையாகிவிட்டன.
 “ உங்கட வீடு கடற்கரையிலா இருக்கிறது? என்று ஜீவிகாவிடம் கேட்டாள் அபிதா.
 “ கடல் அருகிலிருக்கிறது. ஆனால் வீடு கரையில் இல்லை. வீதியில் இருக்கிறது “ என்றாள் ஜீவிகா.
அபிதாவின் வயது படிப்பு,  குடும்ப விபரங்ளை ஜீவிகா  கேட்டபோது,    அபிதாவுக்கு  தொண்டை  அடைத்தது. விம்மலை அடக்கச்  சிரமப்பட்டாள்.
. “ நிகும்பலைக்கு தனியே வரமுடியுமா?  “ எனக்கேட்டாள் ஜீவிகா.
 “ போருக்குப்பிறகு தனியத்தானே சீவிக்கிறன். தனிமை பழகிட்டது.  “ என்று அபிதா சொல்லியிருந்தாலும் தயக்கத்துடனும் அசட்டுத்தனமான துணிச்சலுடனும்தான் வவுனியாவிலிருந்து புறப்பட்டாள்.
மழை வருவதற்கு அறிகுறியாக குளிர்காற்று வேகமாக வீசியது. அவள் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஜீவிகாவுடன் கைத்தொலைபேசியில் பேசுவோமா என்றும் யோசித்தாள். அதிகாலையில் உறக்கத்திலிருப்பவர்களை தொந்தரவுசெய்ய விரும்பாமல், பேர்ஸிலிருந்த ஜீவிகா வீட்டு முகவரி எழுதப்பட்ட துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வீதியில் ஏதும் ஓட்டோக்கள் வருகிறதா? என்று இரண்டு பக்கமும் பார்த்தாள்.
வவுனியா, மன்னார், அநுராதபுரம், செல்லும் பஸ்கள் ஒரு பக்கமும் கொழும்பு, கட்டுநாயக்கா விமான நிலையம், செல்லும் பஸ்கள் மறுபக்கமும் ஓடிக்கொண்டிருந்தன.
இரண்டு பக்கமும் இருந்து எதிரும் புதிருமாக ஓடிவந்த ஓட்டோக்களிலும் பயணிகள் இருந்தமையால் நிறுத்தமுடியாமல், தவித்துப்போனாள்.
பகல் வேளையில் வந்திருக்கலாமோ என்றும் யோசனை வந்தது. குளிர்காற்றில் கேசம் பறந்தது. சேலை முந்தானையால் போர்த்திக்கொண்டு தலையையும்  முகம் மறைக்காமல் மூடிக்கொண்டாள்.
அவளைப்பொறுத்தமட்டில் எல்லாமே மாறிவிட்டது. பருவகாலமும்தான்.
இன்னும் பொழுது புலரவில்லை.
அவளைக்கடந்து சென்ற ஒரு வாகனம் திடீரென தரித்து, பின்னோக்கி விரைந்து வந்து அவளருகில் நின்றது. அபிதா திடுக்கிட்டாள்.
வந்தது ஒரு பொலிஸ் கார். அதில் இடது பக்க முன் ஆசனத்திலிருந்து எட்டிப்பார்த்தவர்,   சிங்களத்தில் சொன்னது அபிதாவுக்கு புரியவில்லை.
 “ சேர், வவுனியாவிலிருந்து வாரன். இங்கே போகவேணும் “ எனச்சொன்னவாறு கையிலிருந்த முகவரித்துண்டைக்காண்பித்தாள்.
அந்த வாகனத்தை செலுத்திய சாரதியான பொலிஸ்காரனும் ஏதோ  சிங்களத்தில் மெதுவாகச்சொன்னான்.
அந்த அதிகாரி, ஏறிட்டுப்பார்த்து “ தமிழா, முஸ்லிமா?  “எனக்கேட்டதும்.  “ தமிழ் சேர்  “ என்றாள்.
“ எங்கபோறதுக்கு இங்க நிக்கது? கையில என்ன? “
 “ என்ர உடுப்பு பேக் சேர். வீட்டு வேலைக்கு வந்தேன்.  “ பயத்தில் கண்கள் கலங்கின. மழைத்துளியை துடைக்குமாப்போன்று முகத்தை சேலை முந்தானையால் தடவிக்கொண்டாள்.
அபிதா நீட்டிய அந்த முகவரித்துண்டிலிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அந்த அதிகாரி  தொடர்புகொண்டான். அது அணைத்துவைக்கப்பட்டிருக்கவேண்டும்.
உடனே  சாரதியிடம் ஏதோ சொன்னதும், அவன் இறங்கிவந்தான். அபிதாவுக்கு நடுக்கம் பிடித்தது.  “ சேர், ஐ ஏம் சேவர்ண்ட் கேர்ள், கேம் ஃபுரம் வவுனியா. ஐ வோண்ட் டு கோ திஸ் அட்ரஸ் “ என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அபிதா சொன்னதைக்கேட்டு இருவரும் சிரித்தார்கள். அந்தச்சிரிப்பில் சிகரட்புகை மணத்தை அபிதா உணர்ந்தாள்.
 “ தமிழ் எண்டு சொன்னது. முஸ்லிம் பொம்பிளை மாதிரி தலையை ஏன் மூடியிருக்குது   “ அந்த அதிகாரி தனக்குத் தெரிந்த தமிழில் கேட்டான். அணியும் உடையும் சந்தேகத்தை தருவிக்குமோ என்று அபிதா கவலைகொண்டாள். இந்தப்பயணம் புறப்பட்ட காலம் அப்படியாகிவிட்டதே.
 “ குளிருது சேர். மழை வரப்போகுது சேர்.” எனச்சொல்லிக்கொண்டு அவள் தனது சேலை முந்தானையை விலத்தி  போர்த்திக்கொண்டாள். சில மழைத்துளிகள் அவள் கூந்தலை நனைத்தன.
அந்த வாகனத்திலிருந்த சாரதி அவளருகே வந்து அவள் கையிலிருந்த சிறிய பேக்கைத் திறந்து துலாவிப்பார்த்தான். அவனுக்கு சிரிப்பு வந்திருக்கவேண்டும். அதனை அவன் அடக்கிக்கொள்வதை அந்த இருட்டுவேளையிலும் அபிதா அவதானித்தாள்.
 “ எத்தனை மணிக்கு இங்கே வந்தது? “ எனக்கேட்ட அந்த பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு   “ இப்பத்தான்.  வவுனியாவில இருந்து வந்த பஸ், கொழும்புக்கு போகுது. நான் இந்த இடத்தில இறங்கினன். “ என்று பதில் சொன்னாள்.
அருகில் வந்த பொலிஸ் சாரதி, அவளிடம் அடையாள அட்டையை கேட்டதும், எடுத்துக்காண்பித்தாள். கையிலிருந்த டோர்ச்லைட்டை அழுத்தி வாசித்தான்.
  உள்ளே இருந்த இன்ஸ்பெக்டரின் முகத்தைப்பார்த்து,                           “ லொக்கு நமக் சேர்.    என்றான்.
“ கியனவா” 
அவன் அதிலிருந்த பெயரை எழுத்துக்கூட்டி சிரமப்பட்டு வாசித்தான்.
 “ அபிதகுசலாம்பிகை பார்த்திபன் 
“ இதுதானா பெயர்…? “
 “ அபித குசலாம்பிகை என்ர பேர். பார்த்திபன் என்ர அவர்ட பேர். ஹஸ்பண்ட். 
“ ஹஸ்பண்ட்.  எங்க...? வரயில்லயா..?
 “ இல்ல சேர். அவர் இல்ல.  ஹீ...  டைட்.  செத்துப்போனார். “ 
எங்கே, எவ்வாறு செத்தார் என்பதை அவள் சொல்லவில்லை.
அந்த இன்ஸ்பெக்டர் அளிடமிருந்து வாங்கிய முகவரித்துண்டை மீண்டும் பார்த்துவிட்டு, தொப்பியை கழற்றி தடவிக்கொண்டு, ஒரு கணம் யோசித்தான்.
அபிதா,  “ சேர்.... நான்  அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தன். குக்கிங்,   ஹவுஸ் கீப்பிங் வேலை.   என்றாள்.
சாரதியையும் அவளையும் உள்ளே ஏறச்சொன்னான்.
சாரதி முன்ஆசனத்தில் அமர்ந்தான்.  அவள் அழத்தொடங்கிவிட்டாள்.
அதில் ஏறுவதற்கு தயங்கினாள்.
   ம்.... அழாத,  அழவேண்டாம்.  ஏறு.  உன்னை அந்த வீட்டுக்கே கொண்டுபோறன்.  நீ சொல்றது உண்மையா எண்டது அப்ப  தெரியும். 
அபிதாவுக்கு தலைசுற்றியது.   கையெடுத்து கும்பிட்டாள்.  அந்த வீதியில் சென்ற வாகனங்களிலிருந்தவர்கள் அந்தக்காட்சியை பார்த்துக்கொண்டு கடந்ததால் உடல் கூசியது.
மனதிற்குள் கந்தசஷ்டி கவசம் பாடிக்கொண்டு பின் ஆசனத்தில் ஏறினாள்.  அந்த வாகனம் அருகிலிருந்த வீதியின் இடப்புறம் திரும்பி ஓடியது. பொழுது புலர்ந்துகொண்டு வந்தது. அபிதா விம்மி விம்மி அழுதாள்.
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்...

இந்த வரிகளை கடந்து அவளால் செல்லமுடியவில்லை. அவளது மனம் அடுத்த  வரிகளை  மறந்தன.
தான் ஒரு வீட்டு வேலைக்காரியாகத்தான் வந்தேன் என்பதை பலதடவைகள் தமிழிலும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலும் சொல்லிப்பார்த்தாள்.
அவளது வார்த்தைகள் எதற்கும் பதில் சொல்லாத அந்த இன்ஸ்பெக்டர்,  ஒரே ஒரு  கேள்வியைத்தான் இரண்டு சொல்லில்  கேட்டான்.
 “ சிங்களம் தெரியாதா..? “
 “ இனித்தான் படிக்கவேணும் சேர். 
முன் ஆசனங்களிலிருந்து சிரிப்பொலி வந்தது.
வீதியில் சென்ற வாகனங்கள் ஒலி எழுப்பிக்கொண்டு விரைந்தன.
பதினைந்து நிமிடங்களில் அந்த வாகனம் ஒரு முச்சந்தியில் இடதுபக்கம் திரும்பியது.  அந்தத் திருப்பத்தில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தை அவள் பார்த்ததும்  கையெடுத்து  கும்பிட்டாள்.
அதனை பொலிஸ் சாரதி கண்ணாடியூடாக அவதானித்தான். 
   கத்தோலிக்க சமயமா?     எனக்கேட்டான்.
 “ இல்ல சேர். இந்து.  
சில நிமிடங்களில் ஒரு ஆலயம் வலதுபக்கம் தென்பட்டது. அங்கிருந்து வந்த மணியோசை கேட்டு, அபிதா பதற்றத்துடன்,                “ சேர்... சேர்..... இந்தக்கோயிலுக்கு கிட்டவாத்தான் அந்த வீடு இருக்கோணும் சேர்.
சில கணங்களில் மீண்டும் ஆலய மணியோசை அவள் காதருகே கேட்டது. அது மற்றும் ஒரு ஆலயம். அந்த வாகனத்தின் வேகம் சடுதியாக குறைந்தது. 
   சேர்.... சேர்... இது என்ன கோயில்...?  “ அபிதா கையெடுத்து கும்பிட்டவாறு கேட்டாள்.
   இது ,  கணதெய்யோ தேவாலய.. “  என்று சொன்ன இன்ஸ்பெக்டர்,  சாரதியிடம் ஒரு வீட்டைக்காண்பித்து, அதன் முன்னால் நிறுத்தச்சொன்னான்.
( தொடரும்)








 
 






-->







1 comment:

Unknown said...

அன்பிற்கினிய ஐயா,
முதலில் என் மனமார்ந்த நன்றி, தங்களது புதிய தொடருக்கு, இனி அபிதாவின்கூடான பயணத்தில் எங்களை எங்கெல்லாம் அழைத்துச்சென்று,என்னவெல்லாம் காண்பிக்க போகிறீர்கள் எனும் எதிர்பார்பில் மனம் ஏங்குகிறது ..