கந்தபுராண கலாசாரத்தை கருத்தில் இருத்துவோம் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண் .... அவுஸ்திரேலியாஇந்தியாவில் வேதங்கள் தோன்றின. திருமுறைகள் தோன்றின. இலக்கியம் இலக்கணம்பலவித கலாசாரம்பண்பாடு என்று சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டே  போகலாம். இராமாயணம்மகாபாரதம்கந்தபுராணம்பெரியபுராணம்திருவிளையாடற்புராணம்,இவையாவுமே இந்தியாவின் சொத்துக்கள்தான். பகவத்கீதை போற்றப்படும் நிலையில்  இருப்பதும் உண்மைதான்.
   ஆனால் இந்த வகையில் எந்தவொரு பெருமைக்கு உரியதாக விளங்கா விடினும் " கந்தபுராண கலாசாரம் " என்பதை உருவாக்கி அதன் வழியில் வாழ்க்கை முறையினை அமைத்த பெருமையினை ஈழத்தில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே உரித்தாகி இருக்கிறது என்பதை கருத்தில் வைப்பது மிகவும் முக்கியமாகும். 
   இந்தியாவில் தோன்றியதுதான் கந்தபுராணம். ஆனால் அதன் பெயரால் ஒரு கலாசாரம் யாழ்மண்ணில் உருப்பெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா புராணத்தின் பெயரால் கலாசாரம் உருவாக முடியுமா அதுவும் கந்தபுராணம் என்னும் சமய நூலின் பெயரால் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா! 
    " புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி நன்னெறி காட்டும் " பாங்கினை கந்தபுராணம் கொண்டு விளங்கியது. யாழ்மண்ணில் தோவில்கள் தோறும் கந்தபுராணம் படிப்பதும் அதற்கு பயன் ( விளக்கம் ) சொல்லுவதும் இடம்பெற்று வந்தது. யாழ்மண்ணில் கலியின் சதியாலும் காலத்தின் கோலத் தாலும் கந்தபுராணம் படித்த சைவச்சூழல் குழம்பும் நிலை ஏற்பட்டது. அவ்வேளை ஆண்டவனது அனுக்கிரகத்தால் நல்லூரில் ஒரு குழந்தை பிறந்தது. " வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க " சீர்காழியில் ஒரு குழந்தை பிறந்தது போலவே யாழ்மண்ணிலும் அக் குழந்தை பிறந்தது. 
   அதன் உணர்வில் சைவமும் சைவசித்தாந்தமும் இயற்கையிலே ஊறியே நின்றது. வளர்ந்த அக்குழந்தை இளைஞனாக தமிழ்நாடு சென்று ஆதீனத்தில் பிரசங்கம் செய்து " நாவலர் " என்னும் விருதுடன் யாழ்வந்தது. நாவலர் விருது பெற்ற அந்த இளைஞன் " நல்லைநகர்தந்த ஆறுமுகநாவலர் " என்று போற்று தலுக்கு உரியவராகிறார்.
     இவரால் சைவசமயம் வளர்ந்தது. தமிழ் வளர்ந்தது. ஒழுக்கும் உணர்த்தப் பட்டது. இலக்கியம் இதயங்களில் அமர்த்தப்பட்டது. இவரின் வருகையால் யாழ்ப்பாணத்தின் கலாசாரமே எழுச்சிபெற்றது. இந்தக் கலாசாரத்தை இவரின் வழியில்வந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் 
  " கந்தபுராண கலாசாரம் " என்று மகிடம் இட்டுப் பெருமைப்படுத்தினார்.
இதனால் யாழ்ப்பாணக் கலாசாரம் இந்திய கலாசாரத்திலிருந்தும் தமிழ்நாட்டுக் கலாசாரத்திலிருந்தும் வேறான தனித்துவமான கலாசாரத்தில் மிளிர்ந்தது மிளிர்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தப் பெருமான். அவரே எங்கள் சொந்தப் பெருமான் என்று எண்ணும் அளவுக்கு யாழ்மண்ணும் அங்குவாழும் மக்களும் ஆகிவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 
   
 நல்லூரை மையமாக வைத்து நாவலர் பெருமானின் பல பணிகள் ஆரம்பிக்கப் பட்டன. 
                 " நல்லை நகர் ஆறுநாவலர் பிறந்திலரேல்
                    சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே " என்பதன் மூலம் நாவலரின் முக்கியத்துவம் புலப்பட்டு நிற்கிறதெனலாம். கந்தபுராணம் எங்கள் சொந்தம் என்று யாழ்மண்ணில் விதைத்த பெருமை நாவலரின் கலாசாரம் என்றே சொல்லலாம். " இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்று இனிதுமேவி 
                           சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வதற்கு "
கந்தபுராணமே உறுதியானது என்னும் கருவை நாவலர் யாழ்மண்ணில் ஊன்றி விட்டார் என்பது முக்கியமாகும். 
    திண்ணைப் பள்ளிக்கூடங்களே யாழ்மண்ணின் அறிவுப் பொக்கிஷங்களாக இருந்த காலத்தில் அங்கு கந்தபுராணம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. கோவில்களில் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது. முருகனின் விரதங்களை மக்கள் இறுக்கமாகக் கடைப்பிடித்து ஒழுகினார்கள். விரதத்தால் மனம் மொழி மெய் சுத்தமாகியது. மேன்மைகொள் சைவநீதி தளைத்தும் நின்றது. 
   கலியென்னும் பெயரால் நாட்டில் புகுந்த அன்னியரால் யாழ்மண்ணின் நிலை புரட்டிப் போடப்பட்டது. இவ்வேளே பகலவனாய் வந்துநின்றார் நாவலர் பெருமான்.உருக்குலைவை உருப்படியாக்கிட கந்தபுராணத்தைத் துணை ஆக்கினார். எல்லா இடமும் சென்று பிரசங்கம் செய்தார். விளக்கங்கள் பலவற்றை எழுதி நூலாக்கினார். துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு சரியான பாதையைக் காட்டி சமயத்தையும் ஒழுக்கத்தையும்பண்பாட்டையும்தாய் மொழியையும் தலைநிமிர்ந்திடச் செய்தார். அவ்வாறு அவர்செய்த அந்த பணிக்கு இடப்பட்ட மகுடமே " கந்தபுராண கலாசாரமாகும் " . இக்கலாசாரம் ஈழத்துக்கு மட்டுமே சொந்தமானது. யாழ்மண்ணுக்கே உரித்தானது. 
    ஆனால் இன்று இந்தக் கலாசாரத்தை அறியாது அதன் பெருமை உணராது இருப்பதை நினைக்கும் பொழுதுதான் வேதனையாக இருக்கிறது.
நாவலர் பெருமான் பிறந்த மண்ணில் நாவலர் பெருமான் நடமாடிய மண்ணில் அவரின் பிரசங்கங்கள் நிகழ்ந்த மண்ணில் - அவரின் "கந்தபுராண கலாசாரத்தை " காணாமல் இருப்பதை எண்ணிட கண்ணீர்தான் பெருக்கிடுகிறது. 
    யாழ்மண்ணில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் அவர்களிடம் தனித்துவமான ஒருவித ஒழுக்கம் காணப்படும். அவர்களிடம் நல்ல சமய உணர்வும் காணப்படும். கல்வி அறிவும் அவர்களின் தகுதியை உயர்த்தியும் காட்டி நிற்கும். இவையாவற்றுக்கும் அடிப்படை " கந்தபுராண கலாசாரம் " என்பதை மறந்துவிடல் கூடாது. நாவலர் பெருமான் ஊன்றிய விதை யாழ்மண்ணில் இன்றும் முளைவிட்ட படியேதான் இருக்கிறது. அதனால்த்தான் அங்கு இன்றுவரை நல்லதோர் சமூகம் வாழ்கிறது என்றும் எண்ண முடிகிறது. ஆனாலும் சூறாவளியாக ,சுனாமியாக வந்து நிற்கும் தவர்க்கமுடியாத சில சக்திகளால் கந்தபுராண கலாசாரம் சீர்குலைந்து விடுமோ என்னும் ஏக்கமே தற்போது எழுந்து நிற்கிறது.
   ஒழுக்கம்கட்டுப்பாடுஉயர்சிந்தனைபக்திஅறம்நேர்மையாவும் தந்ததுதான் " கந்தபுராண கலாசாரம் " . அதனைக் காப்பது நம் கடமை அல்லவா ! சிந்திப்போம் ! செயற்படுவோம்
   நல்லூர் கந்தனுக்கு கொடியேற்று உற்சவம் நடந்து திருவிழா நடக்கும் இவ்வேளையிலாவது " கந்தபுராண கலாசாரத்தை " எண்ணிடுவோம் ! யாழ்மண்ணின் நல்லூரின் பெருமையைக் காத்திடுவோம் !  புன்னெறி வழியினை வெறுத்திடுவோம். புனிதத்தை மனமதில் நிறைத்திடுவோம்.

Attachments area
No comments: