உலகச் செய்திகள்


இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது - மோடி இரங்கல்

இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள காஸ்மீர்

காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கும் செல்ல தயார்- பாக்கிஸ்தானின் இராணுவ தளபதி

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேற சவூதி அரேபியா உத்தரவு

 நான் ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் இருக்கின்றேன் - மோடி அதிரடி உரை

நியூ­ஸி­லாந்து பள்ளிவா­சல் மீதான தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்ட 200 பேருக்கு ஹஜ் யாத்­திரை வாய்ப்பு

 ஹொங்கொங் விமானநிலையத்திற்குள் நுழைந்தனர் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள்



இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது - மோடி இரங்கல்

07/08/2019 இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா சுவராஜ் 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 
அவர் இறுதியாக நேற்றுப் பகிர்ந்திருந்த டுவிட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். 
1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. சட்டத்தரணியான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டில்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கின்றார். 
இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராகப் பதவி ஏற்றார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.
1996ஆம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது மக்களவைக்கு சுஷ்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒளிப்பரப்புத்துறை, குடும்ப நலம், வெளியுறவு எனப் பல்வேறு துறைகளில் அவர் அமைச்சராகப் பணியாற்றி இருக்கின்றார். 
டுவிட்டரில் தொடர்ந்து இயங்கிய அவர், டுவீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கின்றார்.
"இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது" என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 










இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

07/08/2019 டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் தனது 67 ஆவது வயதில் காலமானார்.
பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார்.
7 முறை மக்களவை முதல்வராக செயல் பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். 
2014 முதல் 2019 வரையிலான பாஜக ஆட்சியின் போது வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார்.  முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். தற்போது சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எம்ய்ஸ் வைத்தியசதலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா மாரடைப்பு காரணமாக தனது 67 ஆவது வயதில் காலமானார்.  நன்றி வீரகேசரி 










திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள காஸ்மீர்

07/08/2019 காஸ்மீரில் அரசியல் தலைவர்கள் பிரிவினைவாத தலைவர்கள் உட்பட  400ற்கும் அதிகமானவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்   என செய்தி வெளியிட்டுள்ள  இந்தியாடுடே ஹோட்டல்கள் தனியார் மற்றும் அரச கட்டிடங்கள் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்க உத்தரவின் கீழ்ஹோட்டல்களும்  அரச விடுதிகளும் அரச அலுவலகங்களும் தனியார் கட்டிடங்களும் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர்களான ஒமார் அப்துல்லாவும் மெஹ்பூபா முக்தியும் தனித்தனிஇடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடியவர்கள் என கருதப்படும்  அனைத்து தலைவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முவ்டி துணிச்சலுடன் தனது கைதினை எதிர்கொண்டார் ஆனால் அவரது மகள் தாயை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை  என தெரிவி;த்துள்ள இந்தியா டுடே மற்றுமொரு முன்னாள் முதல்வாரன ஒமார் அப்துல்லா கண்ணீர் விட்டார் என தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தற்போதைக்கு விடுதலையாக மாட்டார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன  என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சிலர் தெரிவித்தனர் என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.  நன்றி வீரகேசரி  













காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கும் செல்ல தயார்- பாக்கிஸ்தானின் இராணுவ தளபதி

07/08/2019 காஸ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு செல்வதற்கும் தயார் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி ஜாவெட் பஜ்வா தெரிவித்துள்ளார்.
காஸ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றங்களை முறியடிப்பதற்காக எந்தளவிற்கும் செல்ல தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸ்மீர் மக்களின்  போராட்டத்திற்கு இறுதி வரை பாக்கிஸ்தான் இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காஸ்மீர் விவகாரத்தில் எங்களிற்குள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவதற்காக எந்தளவிற்கு செல்வதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஸ்மீரிற்கான விசேட அந்தஸ்த்தை நீக்கும் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி இந்தியாவில் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும் என கருதுகின்றது என  இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐநாவிற்கு இந்த விடயத்தை கொண்டு செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி 







இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்த பாகிஸ்தான்

07/08/2019 இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளை இடைநிறுத்தவும், இராஜதந்திர உறவுகளை குறைக்கவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரையும் அந்நாடு வெளியேற்ற உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 
இன்று பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அந்நாட்டின் உள்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். அந்த சந்திப்பைத் தொடர்ந்துதான் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான்” என்று பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இம்ரான் கான், “இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எதாவது நடவடிக்கையில் ஈடுபட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். இறுதி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாங்கள் போராடுவோம்” என்று கூறியிருந்தார்.
அதையொட்டியே இந்த முடிவினை பாகிஸ்தான் எடுத்துள்ளது.  நன்றி வீரகேசரி 








பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேற சவூதி அரேபியா உத்தரவு

09/08/2019 சவூதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேற  அந்நாட்டு அரசாங்கம்  உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
 இந்த நிலையில், பாகிஸ்தானில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுகலை வைத்தியப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி சிறப்பானதாக இல்லை என கூறி அதன் அங்கீகாரத்தை சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் இரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக சவூதி அரேபிய அரசாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் முதுகலை வைத்திய மேற்படிப்பு, சவூதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் அங்கு எம்.எஸ்., எம்.டி படித்துவிட்டு சவூதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை s
சவூதி அரேபியாவின் இந்த அதிரடி முடிவு நூற்றுக்கணக்கான வைத்தியர்களை பணியிழக்க செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவிலுள்ளனர்.
எனவே அங்கு இருக்கும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறும்படி சவூதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுகாதார சிறப்புக்களுக்கான சவூதி ஆணையம் (எஸ்.சி.எப்.எச்.எஸ்) அங்குள்ள பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்ட தற்கான கடிதங்களை அனுப்பியுள்ளன.
அந்த கடிதத்தில் “தொழில்முறை தகுதிக்கான உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. காரணம், எஸ்.சி.எப்.எச்.எஸ் விதிமுறைகளின்படி பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட உங்கள் முதுகலை பட்டம் ஏற்றுக்கொள்ளப் படாது” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரசின் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள அலி உஸ்மான் என்ற பாகிஸ்தான் வைத்தியர்  இதுகுறித்து தெரிவிக்கையில், “லாகூர் வைத்திய  பல்கலைக்கழகத்தில் 5 வருடம் மேற்படிப்பு முடித்தேன். அங்குள்ள பொது வைத்தியசாலையில் பயிற்சி பெற்றபின் சவூதிக்கு பணியாற்ற வந்தேன். சவூதி சுகாதார அமைச்சகம் எனது ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இந்த நீக்கத்தால் எனது குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 
மற்றொரு வைத்தியர் தெரிவிக்கையில், “இந்தியா, எகிப்து, சூடான் மற்றும் பங்காள தேசம் ஆகிய நாடுகள் வழங்கும் அதே பட்டப்படிப்பு திட்டத்தை தான் பாகிஸ்தானும் வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானை மட்டும் புறக்கணிப்பது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள வைத்திய பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர் கள் சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை தீர்க்கமாக நிராகரித்து உள்ளனர்.
இதற்கிடையில் சவூதி அரேபியாவை தொடர்ந்து, கட்டர், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை படித்த வைத்தியர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்  தகவல்கள் வெளியிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 










நான் ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் இருக்கின்றேன் - மோடி அதிரடி உரை

09/08/2019 ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வளவு வலுவானவர்கள், எவ்வளவு தைரியமானவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதை உலகிற்குக் காட்டி, புதிய இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர், புதிய லடாக்கை கட்டமைப்போம் என்று இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காஷ்மீரில் புதிய சகாப்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது. ஜம்மு - காஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியே போதே இந்தியப் பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மேலும் உரையாற்றுகையில்,
காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது.
370, 35 ஏ இருந்ததால் காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தரவேண்டும். ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன.
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது. 
காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும்.
காஷ்மீர் ஊழியர்களுக்கு ஏனைய மாநிலத்தில் கிடைக்கும் சலுகைகள் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும்.
3 மாதங்களுக்குள் ஜம்மு - காஷ்மீரில் நிர்வாகம் சீராகும் யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான். ஆளுநர் ஆட்சியால் காஷ்மீரில் சிறப்பாக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி சட்டங்களால் காஷ்மீரில் ஒரு சாரார் மட்டுமே பயனடைந்து வந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும்.
காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி முன்னெடுக்க முடியும்.
காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
தற்போது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர்  ஏனைய மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும்.
ஜம்மு - காஷ்மீர், லடாக் மக்களுக்கு துணையாக 130 கோடி மக்களும் இருக்கிறார்கள். சிறிது சிறிதாக ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலை திரும்பும். இராணுவம் மற்றும் காவல்துறையின் பணிகள் பாராட்டும்படியாக உள்ளது
இன்றைய சூழலை அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொண்டு மாறி வருகிறார்கள். ஜம்மு - காஷ்மீர் மக்களின் உரிமையை நாம் எவரும் பறிக்கக் கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள், இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
 எதிர்வரும் காலங்களில் ஜம்மு -காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். புதிய அரசு உருவாக விரும்புகிறோம், முதல்வர் வரட்டும். நீங்கள் மிகவும் நாணயமானவர்கள் என்பதை உறுதிபட கூறுகிறேன். வெளிப்படையான ஒரு சூழலில் உங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் ஏற்படும். 
பல ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான உங்கள் சொந்தபந்தங்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க முடியும் ஆனால் அவர்களால் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்களிக்க முடியாது இருந்ததை நீங்கள் அறியும் போது அதிர்ச்சியடைவீர்கள். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து அவர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள். அநீதி இப்படியே போய்க்கொண்டிருக்கலாமா?
புத்துயிர்பெற்ற புதிய சூழ்நிலையில் காஷ்மீர் மக்கள் இனி புத்துயிர் பெற்ற உத்வேகத்துடன் தங்கள் இலக்குகளை சாதிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பிறகு புதிய அமைப்பின் கீழ் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பணியாற்றும் போது அவர்களால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும். ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிவினை வாதச் சக்திகளிடமிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பல பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் குடும்ப ஆட்சியினால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் வழிநடத்த வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது. இனி இளைஞர்கள் வழிநடத்த வாய்ப்பு பெற்று ஜம்மு காஷ்மீரை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வார்கள். சகோதர, சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் மண்ணின் வளர்ச்சியை தாங்களே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஈத் முபாரக் பண்டிகை நெருங்குகிறது. உங்கள் அனைவருக்கும் என் ஈத் முபாரக் வாழ்த்துக்கள். ஜம்மு காஷ்மீரில் மக்கள் அமைதியாக ஈத் பண்டிகையைக் கொண்டாட அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். ஜம்மு காஷ்மீருக்கு வெளியே வசிப்பவர்கள் ஈத் பண்டிகைக்காக காஷ்மீர் திரும்ப விரும்புகிறார்கள், இவர்களுக்கும் அரசு உரிய உதவிகளைச் செய்யும்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பிற்காக பணியாற்றும் பாதுகாப்புப் படையினருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள், பொலிஸார், மாநில அரசு ஊழியர்கள் நிலைமைகளை பாராட்டும் விதமாகக் கையாள்கிறார்கள். இந்த மாற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். இங்கு மட்டுமல்ல இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும்.
உலகின் இப்பகுதியில் அமைதியும் வளமும் கூடிவருமாயின் உலக அமைதிக்கான நம் முயற்சிகளும் வலுவடையும். ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதி மக்கள் எவ்வளவு வலுவானவர்கள், எவ்வளவு தைரியமானவர்கள், உணர்வு மிக்கவர்கள் என்பதை உலகிற்குக் காட்டுவோம்.
நாம் அனைவரும் சேர்ந்து புதிய இந்தியாவுடன் புதிய ஜம்மு காஷ்மீர், புதிய லடாக்கை கட்டமைப்போம். என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 












ஹொங்கொங் விமானநிலையத்திற்குள் நுழைந்தனர் ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள்

09/08/2019 ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர்.
மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர்.
உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங்  ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்களிற்கான விமானசேவைகளும் இடம்பெறுகின்றன.
ஹொங்ஹொங்கில் கடந்த சில வாரங்களாக தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே விமானநிலைய முற்றுகை போராட்டம் இடம்பெறுகின்றது.
சந்தேகநபர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் சட்டமூலத்திற்கு எதிராக ஆரம்பமான ஆர்ப்பாட்டங்கள் தற்போது ஜனநாயக கோரிக்கைகளாக விரிவடைந்துள்ளன.
நன்றி வீரகேசரி








No comments: