பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 6


சாந்திநிலையம்

இந்திய மொழிகளில் பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்தவர் ஜெமினிஸ்டு டியோஸ் அதிபர் எஸ் எஸ் வாசன். அவர் தனது மருமகன் ஜி எஸ் மணியை தயாரிப்பாளராக்கியும் டைரக்டராக்கியும் பார்க்க ஆசைப்பட்டார். அதன் விளைவு ஜெம் மூவீஸ் என்ற படநிறுவனம் உருவானது. அந்த நிறுவனம் தயாரித்த வண்ணப்படம்தான் சாந்திநிலையம். 

ஆங்கிலத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி கண்ட சவுண்ட் ஒப் மியூசிக் படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு சாந்திநிலையம் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

பிரபல கதை வசனகர்த்தா கோபு இந்தப் படத்திற்கு கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் மணியினால் அமர்த்தப்பட்டார். படத்தின் கதையை வாசனிடம் சொல்வதற்கு கோபுவை மணி  வாசனிடம் அழைத்துச் சென்றார்.

திரையுலக மேதை வாசன் முன்னிலையில் சென்று நடுக்கத்துடன் அமர்ந்தேன். அவருடன் அவரின் மனைவி, மகள், மருமகன் மணி எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். எடுத்த எடுப்பிலேயே கதையை சொல்லுங்கள் என்று வாசன் உத்தரவிட்டார். அச்சத்துடன் ஒருவழியாக கதையை காட்சி வாரியாக சொல்லி முடித்தேன். அதன் பிறகு வாசன் என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி. நான் சாதாரண பாமர ரசிகன். இந்த கதை உயர்தரமாக இருக்கிறது. சாதாரண ரசிகனைன எனக்கு என்ன இருக்கிறது? என்று ஒரு கேள்வியை முன்வைத்தார்.


நாகேஷினுடைய நகைச்சுவை குழந்தை நட்சத்திரங்களின் குறும்புகள் எல்லாம் இருப்பதை எடுத்துச் சொன்னேன். வாசன் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகுதான் படம் தயாரானது.

வாசன் முன் அமர்ந்தவுடன் நாலு பொது விஷயங்களைப் பேசிவிட்டு காப்பி கொடுத்து உபசரித்து விட்டு வாசன் கதையை சொல்லும்படி கேட்டிருந்தால் இன்னும் தெம்பாக சொல்லியிருப்பேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை சித்ராலயா கோபு இப்போதும் நினைவு வைத்துக் கூறுகிறார்.

படத்தில் நடுத்தரவயதுடைய கதாநாயகனாக நடுத்தர வயதை எட்டியிருந்த ஜெமினி கணேசன் நடித்திருந்தார். கதாநாயகியாக காஞ்சனா நடித்திருந்தார். மஞ்சுளாவிற்கு சாந்திநிலையம்தான் முதல் படம். இவர்களுடன் நாகேஷ் ரமாபிரபா பாலாஜி விஜயலலிதா பண்டரிபாய் மாஸ்டர் பிரபாகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
சவுண்ட் ஒப் மியூசிக் பாடல்களுக்காகவும் பிரபலமானது. தமிழில் இசையமைத்த எம் எஸ் விஸ்வநாதன் இசையிலும் பாடல்களிலும் குறை வைக்கவில்லை. இறைவன் வருவான், செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே கடவுள் ஒரு நாள் உலகைக் காண என்று அனைத்துப் பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தன. அனைத்துப் பாடலகளும் கண்ணதாசன்! எஸ் பி பாலசுப்பிரமணியம் சுசீலாவுடன் ஆரம்பக் காலத்தில் இணைந்து பாடிய இயற்கை எனும் இளைய கன்னி பாடல் மிகவும் பிரபலமாகி இன்றும் பல இடங்களில் ஒலிக்கிறது.
படத்தின் பெரும்பகுதி ஊட்டியில் படமாக்கப் பட்டிருந்தது. ஊட்டியின் அழகையும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளையும் வண்ணத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் அள்ளித் தந்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பாடலே.  இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்று இந்திய தேசிய விருது வழங்கப்பட்டது.

அனைதை ஆசிரமத்தில் வளரும் கதாநாயகி ஊட்டியில் உள்ள கோடீஸ்வரரின் அண்ணன் குழந்தைகளை பராமரிக்க நியமிக்கப்படுகிறார். அடங்க மறுக்கும் குழந்தைகளை தனது அன்பினால் வசியப்படுத்தி, குழப்பங்களும் மர்மங்களும் கொண்ட கதாநாயகனையும் தன் அன்பினால் வசப்படுத்துகிறார். இந்தப் பாத்திரத்தை காஞ்சனா உணர்ந்து நடித்திருந்தார். ஜெமினிக்கு காதலுக்கு பதில் கண்டிப்பைக் காட்டும் கனவான வேடம் அளவுடன் அதனை செய்திருந்தார். படத்தை விறுவிறுப்பாக்க நாகேஷின் நகைச்சுவை கைக் கொடுத்தது. பாலாஜி பைப் முனையில் சிகரட்டை பொருத்தி ஸ்டைல் காட்டியிருந்தார். ஜெமினி வாசனின் நிதியுதவி, ஜெமினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு, ஜெமினி கலர் லபரட்டரியில் படப்பிரதிகள் என அனைத்து வசதிகளுடனும் ஜி எஸ் மணி டைரக்ட் செய்த சாந்தி நிலையம் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்டது.


No comments: