நாகேஷ் - ருத்ரா

.

( நமக்கு எப்போதெல்லாம் சிரிக்கவேண்டும்
என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம்
நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களை
மனப்படத்தில் மீள்பதிவு செய்துகொண்டு
சிரித்துக்கொண்டே இருக்கலாம். என் கவிதை
சிரித்துக்கொண்டே நினைவு கூர்வதற்காக இங்கு
பதிவிடப்படுகிறது)


நாகேஷ் 
_________________________________________________


"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"
என்ற நிகழ்ச்சிக்கு
மடி நிறைய ஒரு கோடியை
கனமான கனவாக்கி
சுமந்து சென்று அதில்
ஒரு ரூபாய் கூட வெல்லாத‌
"தருமி"யின் புலம்பல்
எப்படியிருக்கும்?
இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்
எல்லாம் எதிரொலிக்கிறது.
சிம்ம கர்ஜனையின் எதிரே
இந்த நகைச்சுவைப் பூனையின்
கணீர் கணீர் களில்
மியாவ் களை கேட்கவில்லை.
ஒரு டைகர் நாகேஷ்
அந்த மண்டபத்துத் தூண்கள்
கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.
"கேள்வியை நீ கேட்கக்கூடாது
நான் தான் கேட்பேன்"
என்ற வசனத்தில்
அந்த வெல வெலப்பு.
ஒரு பொய் மிடுக்கு
சிவ பெருமானையே
கடுப்பேற்றிப் பார்க்கும்
ஒரு துறு துறுப்பு...
இந்த நடிப்பெல்லாம்
சொல்லிக்கொடுக்க‌
கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக்கழகங்கள் எல்லாம் பற்றாது.

இவரை
அமெரிக்க ஜெர்ரி லூயிஸ்ன் நிழல்
என்பார்கள்.
ஆனால் "சர்வர் சுந்தரம்" எனும்
படத்தில் நாம் கண்டது
நகைச்சுவை....
அடக்கிச் சிரித்து அழுகை....
காதலைக்காட்டும் அற்புத நளினம்...
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்
ஒரு டைரக்டரிடமே தண்ணி காட்டி
நடிப்பு என்று அவர் தெரிந்து கொள்ள முடியாத‌
இயல்பைக்காட்டி அவரை தவிக்க வைத்தது...
இதெல்லாம்
கோடம்பாக்கத்துக்காரர்கள்
இவரிடம் தோண்டி எடுத்த கிம்பர்லி.
இப்படி
எத்தனை படங்கள்.
எத்தனை பாத்திரங்கள்.
கே எஸ் கோபாலகிருஷ்ணன்
எஸ் வி ரங்கராவ்
நாகேஷ்
...இந்த அபூர்வ‌
பெர்முடா முக்கோணம்
திரைக்கடலில்
எத்தனை சூறாவளிகளை
கிளப்பியிருக்கிறது?
ஒரு "நீர்க்குமிழியில்"
நடிப்பின் ஏழுகடல்களையும்
தளும்பச்செய்தவர்.
இவரை மறக்க முடியாது.
இவர்
ஹிட்லருக்கு முன் நேருக்கு நேர்
நிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்
ஹிரோஷிமா நாகசாகிகள்
சின்னாபின்னம் ஆகியிருக்காது.
நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ்
என்று நாம் சொன்னால்
அங்கிருந்தே கத்துவார்
ஐ ஆம் செலபா யூ கோ அஹெட்ரா
......
காதலிக்க நேரமில்லையில்
பாலையாவுக்கு கதை சொல்லும்
பாணியில்
அராபிய "ஆயிரத்தொரு இரவுகளுக்கு"
அது நீண்டு கொண்டே 
விலாப்புடைக்க
சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.
சொல்லிக்கொண்டே போகலாம்..
எமனின் எருமையைக்கூட இந்நேரம்
அங்கே சிரிக்க வைத்துக்கொன்டிருப்பார்.
அந்த எமன் எப்படியோ
ஆனால் இவர்
சிரிக்கவைப்பதில் எமன்.
அவர் சாகடித்தது
நம் கவலைகளைத்தானே.

No comments: