பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 7


அஞ்சல்பெட்டி 520

1969ம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் ஒள்பது படங்கள் வெளிவந்தன. இன்றைய நட்சத்திர நடிகர்கள் ஆண்டிற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் காலத்தில் ஆண்டிற்கு ஒன்பது படங்கள் நடிப்பது ஒரு சாதனைதான். இந்த ஒன்பது படங்களிலும் ஒன்பது விதமான கதாபாத்திரங்களில் நடிகர் திலகம் நடித்திருந்தார். அனுபவமிக்க இயக்கனர்களின் படங்களில் மட்டுமன்றி அறிமுக இயக்குனர்களின் படங்களிலும் நடிக்கத் தயங்கவில்லை சிவாஜி.

அவ்வாறு அறிமுக இயக்குனரான டி என் பாலுவின் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம்தான் அஞ்சல்பெட்டி520. குமரிப்பெண் நான் அதே கண்கள் மூன்றெழுத்து என்று தொடர்;ந்து வெற்றிப் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் டி என் பாலு.

வெற்றிப் படக்கதாசிரியரான டி என் பாலுவின் திறமையைப் பயன்படுத்தி அவரை டைரக்டராக்க ஒரு தயாரிப்பாளர் முன் வந்தார். அவர்தான் வாசுமேனன். ஏற்கனவே கைராசி பூவும் பொட்டும் வெற்றிப் படங்களை தயாரித் வாசு அஞ்சல்பெட்டி520 என்று தூயத்தமிழில் பெயரிடப்பட்ட படத்திற்கு டைரக்டராக்கினார்.

வாணி பால்பவுடர் கம்பனியில் மனேஜரான கதாநாயகனுக்கு ஜெனரல் மனேஜர் பதவியை வழங்கப் போவதாக கம்பனி உரிமையாளர் உறுதியளிகிறார். ஆனால் அவரின் நண்பர் மூலம் பதவி வேறொருவருக்குப் போகப் போவதாக கதாநாயகன் அறிய வந்து ஆத்திரப்படுகிறான். தன் நண்பர்கள் உதவியுடன் முதலாளியை திட்டி கடிதம் எழுதி தன் மனேஜர் பதவதியையும் ராஜினாமா செய்வதாக அஞ்சல்பெட்டி520க்கு, கம்பனிக்கு கடிதம் அனுப்புகிறான். ஆனால் சற்று நேரம் கழித்து அவனுக்கு வரும் தந்தியில் பதவி அவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிந்து அதிர்ச்சியடைகிறான். அனுப்பிய கடிதத்தை எப்படியாவது எடுத்துவிட நண்பர்களுடன் முயற்சி செய்கிறான். துபால் நிலையத்தில் பணி புரியும் கதாநாயகியின் உதவியையும் நாடுகிறான்.

இவ்வாறு போகும் கதையில் பால் பவுடரில் விஷம் கலக்க திட்டமிடும் வில்லன், பணத்திற்காக அலையும் கதாநாயகின் தந்தை, என்று பலர் சம்பந்தப்படுகிறார்கள்.

தான் இயக்கிய முதல் படத்திலேயே ஏராளமான நடிகர்களை இயக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. சிவாஜி சரோஜாதேவி நம்பியார் சுந்தரராஜன் செந்தாமரை இவர்களுடன் நாகேஷ், தேங்காய் சீனிவாசன் கே ஏ தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி சுருளிராஜன் மனோரமா என்று ஒரு நகைச்சுவைப் பட்டாளமும் நடித்திருந்தது.  இவர்களுடன் பர்மாவை பூர்வீகமாகக் கொண்ட முத்தையா என்ற காலொன்றை இழந்த நடிகரும் முதல்முறையாக நடித்திருந்தார். இதில் நடித்ததன் மூலம் அஞ்சல்பெட்டி முத்தையா என்ற பெயரையும் அவர் பெற்றார்.

கால் இழந்தவர் என்பதினால் படத்தில் ஒரு காட்சியில் வில்லன் கே ஆர் ராம்சிங் அவர் காலை வெட்டுவதாக ஒரு காட்சி அமைத்து அதனால்தான் படத்தில் அவர் ஊனமுற்றதாக பாலு சாமர்த்தியமாக கதையை அமைத்திருந்தார்.

என்னுடைய அவசரப் புத்தியை மெதுவா போற கடிதத்திலே நான் அனுப்பினேன். துன்னுடைய நிதானப் புத்தியை வேகமாக வாரதந்தியிலே முதலாளி காட்டிவிட்டார் போன்ற பொருள் பொதிந்த வசனங்களை பாலு எழுதியிருந்தார்.


நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படத்தில் காதல் வில்லனின் சதித்திட்டம், சஸ்பென்ஸ் என்று கலந்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதனின் நிரந்தர உதவியாளரான ஆர் கோவர்தனம் இசையமைத்திருந்தார். பத்துப் பதினாறு முத்தம் முத்தம், திருமகள் என் வீட்டைத் தேடிவந்தாள் ஆகிய பாடல்கள் ரசிக்கும்படி அமைந்தன.

பல புதிய இளம் நடிகைகளின் வருகைக்கு மத்தியில் திருமணம் ஆன பின் மீண்டும் நடிக்க வந்த சரோஜாதேவி குறையில்லாமல் நடித்திருந்தார். தங்கவேலு நாகேஷ் மனோரமா ஆகியோரின் நகைச்சுவை படத்தை நகர்த்த உதவியது. அதட்டும் குரலைக் கொண்ட வில்லன் நடிகர் ராம்சிங்கை மீண்டும் பார்க்க படம் வழி செய்தது. பாலுவின் ஆரம்ப முயற்சிக்கு இந்தப்  படம் ஒரளவு கைகொடுத்தது.


No comments: