பி.கே.பாலச்சந்திரன்
 கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும்  முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை  இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும்.
பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான மத்திய  அரசாங்கம் ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும்  ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் 5 ஆம் திகதி  செல்லுபடியற்றதாக்கியது. ஜனாதிபதியின் அந்த உத்தரவு ஜம்மு -- காஷ்மீர் ' மாநிலத்தை ' மிகவும் குறைந்தளவு சுயாட்சியுடைய இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியிருக்கிறது.
இந்த நடவடிக்கை மூன்று இலக்குகளை  மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட்டது ;  ஜம்மு -- காஷ்மீரில் பாகிஸ்தானின் அனுசரணையுடனான  பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்த்துப் போராடுதல், ஜம்மு -- காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் ஒன்றிணைத்தல், அந்த மாநிலத்துக்கு இந்திய சட்டங்களை பிரயோகிப்பதற்கும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களும் மூலதனமும் வருவதற்கும்  கட்டுப்பாடுகளை  விதிக்கும்  370 மற்றும் 35 ஏ பிரிவுகளின் விளைவாக இதுகாலவரை அடையமுடியாதிருந்த பொருளாதார அபிவிருத்தியை  காஷ்மீரிகளுக்கும் கிடைக்கச்செயதல். 

ராஜபக்சவின் கருத்து
இலங்கையில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பிலான அரசியல் விவாதம் ஜம்மு -- காஷ்மீரில் இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகளை கணக்கில் எடுத்தவையாக அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் வீரகேசரிக்கு அளித்த முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ராஜபக்ச அதை விளக்கமாகக் கூறவில்லை.ஆனால், இஸ்லாமியப் பயங்கரவாதம் மற்றும் தமிழ்ப் பிரிவினைவாத்திடமிருந்து வருவதாக நோக்கப்படுகின்ற அச்சுறுத்தலின் பின்புலத்தில் தேசிய பாதுகாப்பு பற்றி அவருக்கு இருக்கும் வெளிப்படையான அக்கறையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி எடுத்திருக்கும் நடவடிக்கைகளை அவர் அங்கீகரிக்கிறார் என்பது தெளிவானது.
" இப்போது இரண்டு வகையான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.சிலர் புதிய அரஙியலமைப்பொன்றை விரும்புகிறார்கள்.வேறு சிலர் சமஷ்டி ஏற்பாடு வேண்டும் என்கிறார்கள்.இன்னும் சிலர் 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வொனறே போதுமானது என்று கூறுகிறார்கள்.ஆனால், காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக அமைந்துவிடக்கூடாது.காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் பாருங்கள்.இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டுதான் எமது நடவடிக்கைகள் அமையவேண்டும்.அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது நாம்  இந்தக் காரணிகளை விளங்கிக்கொள்ளவேண்டும் " என்று மகிந்த ராஜபக்ச அந்த  நேர்காணலில் கூறியிருந்தார்.
தனது இந்த நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்கக்கும் வகையில் அவர் இன்னொரு கருத்தையும் கூறினார்.அதாவது 2019 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வருகின்றவர் ' தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் " ஒருவராகவே இருப்பார் என்று அவர் சொன்னார்.
இந்த நேர்காணலை ராஜபக்ச வழங்கியதற்கு மறுநாளான ஞாயிறன்று (11/ 8) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அவரது இளைய சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ச என்பது அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டவர்  கோதாபய என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.நரேந்திர மோடியைப் போன்று அவரும்  பெரும்பான்மையின வாதத்தின் உறுதியான ஆதரவாளரே. அதுவே  மகிந்த ராஜபக்சவின் பாதையுமாகும்.
கோதாபயவின் வெற்றி வாய்ப்புகள் மூன்று காரணிகளினால் மேம்படுத்தப்படுகின்றன ; இஸ்லாமிய தீவிரவாதிகளினால் ஈஸ்டர் ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ; அந்த தாக்குதல்கள் தொடர்பில் இந்தியாவிடமிருந்து முன்கூட்டியே கிடைத்த புலலனாய்வுத் தகவல்கள் அலட்சியம் செய்யப்பட்டமை ; ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு இயந்திரம் பெருமளவுக்கு பலவீனப்பட்டிருக்கின்றமை.
அத்தகைய ஒரு பின்புலத்தில், தமிழ்ச் சிறுபான்மையினத்தவர்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற முறையில் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவந்த செயன்முறைகள் கைவிடப்படுவது சாத்தியம். உண்மையில் அது ஏற்கெனவே கைவிடப்பட்டுவிட்டது.
புதிய அரசியலபை்பை வரைவதற்கான செயன்முறைகள் இறுதிக்கட்டமொன்றை அடைந்திருந்தன.ஆனால், எதிரணியிடமிருந்து மாத்திரமல்ல, ஐ.தே.க.வுக்குள்ளிருந்தும் வந்த எதிர்ப்புகளின் காரணமாக அரசாங்கம் அதை முன்னெடுப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டது.
" இரண்டரை வருடங்களுக்கும் கூடுதலான காலமாக நடத்தப்பட்ட பல  கலந்துரையாடல்களையும் வெளியிடப்பட்ட பல  அறிக்கைகளையும் அடுத்து,  அரசியலமைப்புச்சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழு வினால் தயாரிக்கப்பட்டது என்று கூறப்பட்ட ஆவணம் ஒன்றை பிரதமர் 11 ஜனவரி 2019 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் " என்று கடந்த மாதம் 26 ஆம்திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச கூறினார்.
" பாராளுமனறத்தில் அந்த ஆவணத்தைச் சமர்ப்பித்த வேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதில் உள்ளடங்கியிருப்பவை அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல, நிபுணர் குழுவே அறிக்கையைத் தொகுத்தது என்று குறிப்பிட்டார். இறுதியாகப் பார்த்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கைக்கு உரிமைகொண்டாட ஒருவரும் இல்லை.அந்த வரைவுக்கு எவரும் பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில்  எவ்வாறு அரசியலமைப்புச்சீர்திருத்த செயன்முறைகள் வெற்றிபெறமுடியும்? " 
 " பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவை முற்றுமுழுதாக நாம் எதிர்க்கிறோம்.அது நாட்டை ஒன்பது அரைச் சுதந்திர அரசுகளாகப் பிரித்துவிடக்கூடிய அம்சங்களைக் கொண்டது ; தனித்தனியான ஒன்பது பொலிஸ்படைகளை உருவாக்குவதற்கான யோசனையையும் அது கொண்டுள்ளது. மாகாண அலகுகளுக்கு பரவலாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்களில் எந்தவொன்றையும் மத்திய அரசாங்கம் மீளப்பெறுவதை சாத்தியமற்றதாக்கும் ஏற்பாடுகளையும் அது கொண்டிருக்கிறது " 
  " 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு அப்பால் அதிகாரங்களைக் கொண்ட ஆட்சிமுறை பற்றி -- அதாவது 13 பிளஸ் -- நானும் பேசியதாக சிலர் கூறுகிறார்கள்.மாகாணங்களின் தலைவர்களும் தேசிய விவகாரங்களில் பங்கேற்பதற்கு வசதியாக மாகாணசபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபையொன்றை பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவது குறித்து யோசிக்கிறேன் என்று அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு  ஒரு தடவை நான் கூறியிருந்தேன்.எனது அந்த யோசனையை 13 பிளஸ் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர்தான் வர்ணித்தார்.ஆகவே 13 பிளஸ் என்று நான் கருதியதை பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவில் முன்வைக்கப்பட்டுள்ள நாட்டை ஒன்பது அரைச் சுதந்திர அரசுகளாகப் பிரிக்கும் ஏற்பாட்டைப் போன்றதாக விளங்கிக்கொள்ளக்கூடாது."
" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சில அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்ததேயாகும் பாரளுமன்றத்தில்  சமர்ப்பித்த பிறகு அந்த வரைவுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று பிரதமர் திரும்பத்திரும்ப  கைவிரித்துவிட்டார்.இறுதியில் பார்த்தால் இந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டதாகவே தோன்றுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எப்போதும் தனிநாடென்று பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் உண்மையில் தனிநாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்புத் திருத்தங்களையே வரைகிறார்.அவர்கள்தங்களது கருத்துக்களை ஆவணத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்." என்று மகிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறினார்.
   வழிதெரியாமல் தடுமாறுகின்ற ஐ.தே.க.தலைமையிலான அரசாங்கத்துக்கு முற்றிலும் வேறுபட்டதாக உறுதியானதும் செயற்திறன் மிக்கதுமான அரசாங்கம் ஒன்றின் தேவை பற்றி பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ச வெற்றிபெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது. அத்தகையதொரு சூழ்நிலையில் தற்போது இருப்பதற்கு அப்பால் கூடுதல் அதிகாரப்பரவலாக்கலை தமிழச் சிறுபான்மையினத்தவர்கள் பெறுவதற்கான சாத்தியங்கள் உண்மையில் அரிதே.  நன்றி வீரகேசரி