இன்னுயிரை மாய்த்ததை எண்ணியே பார்க்கவேணும்
தம்முயிரை மாய்த்தவர்கள் தமையெண்ணி வாழாமல்
தம்நாட்டில் வாழ்வோரை தனையெண்ணி அர்ப்பணித்தார் !
அர்ப்பணித்தார் அனைவருமே அவ்வுலகில் இருக்கின்றார்
அர்ப்பணித்த அவர்வாழ்வு அர்த்தமுடன் இருக்கிறதா
என்றெண்ணி நாமெல்லோம் எம்மனதை கேட்டுவிடின்
நின்றுழைத்தார் உழைப்பதனை நிர்மூலம் ஆக்குவமா !
சாதிமதம் பாராமல் சமத்துவத்தை பேணுதற்கு
சோதனைகள் பலகண்டு சோர்வின்றி பாடுபட்டார்
வேதனையால் பெற்றெடுத்த வெற்றியெனும் சுதந்திரத்தை
பாதுகாக்க முனையாமால் பரிகசிக்க வைக்கலாமா !
மூலைக்கு ஒருசாதி முளைவிட்டு எழுகிறது
முக்கியமாம் விடயங்கள் முடங்கியே கிடக்கிறது
ஆதிக்க வெறியோங்கி அரசியலில் அமர்கிறது
அவர்களது தியாகத்தின் அர்த்தமெல்லாம் அழிகிறதே !
பாரதத்தை தாயெனவே மதித்துநிற்கும் திருநாட்டில்
பாதகங்கள் அரங்கேறி பாரினையே குலுக்கிறது
நீதியினை வேண்டிநின்றால் நெஞ்சினிலே குத்தும்நிலை
பாரதத்தில் பரவிடுதல் பார்ப்பதற்குப் பொறுக்கவில்லை !
ஊழலற்ற சமூதாயம் உருவாகப் பலபெரியோர்
உதித்துநின்ற பாரதத்தில் ஊழல்காற்றே அடிக்கிறது
வாழவெண்ணும் மக்களுக்கு வாழ்வளிக்க மகான்கள்பலர்
பாரதத்தில் பிறந்தாலே பாரதத்தாய் மகிழ்வடைவாள் !
கொடியேற்றி உரையாற்றி கொள்கைபல சொன்னாலும்
கொடுமையெனும் அரக்ககுணம் கொன்றொழிக்கப் பட்டிடுமா
அடிமையினை அகற்றுதற்கு அரும்பாடு பட்டதனால்
அமிர்தமெனக் கிடைத்ததைநாம் அனைவருமே காத்திடுவோம் !
No comments:
Post a Comment