கொட்டகலையில் வெள்ளப்பெருக்கு ; 22 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்
மங்களவின் கருத்துக்கள் கவலையளிக்கின்றது - நாமல்
கோத்தபாயவின் தெரிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - முன்னாள் ஜனாதிபதி
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார் இராணுவ தளபதி
வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
நீங்கள் கோத்தபாயவை பாதுகாக்கின்றீர்கள் - லசந்தவின் மகள் ரணிலிற்கு கடிதம்
கனடாவிலிருந்து வந்தோரின் வீட்டில் 15 பவுன் நகை, 10 இலட்சம் பணம் கொள்ளை
நல்லூரில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட ஸ்கேனர்கள் அகற்றப்பட்டன
நாடுகடத்தப்பட்டனர் ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற 13 இலங்கையர்
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
கொட்டகலையில் வெள்ளப்பெருக்கு ; 22 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்
13/08/2019 நுவரெலியா மற்றும் ஹட்டன், கொட்டகலை ஆகிய பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நேற்று காலை கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 5 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.

மேற்படி பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் மரம் முறிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கிப்போய்யுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு சில பிரதேச பிரதான வீதிகளில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருகின்றது.
பனிமூட்டமும் நிலவுவதால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங் களை செலுத்துமாறு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நன்றி வீரகேசரி
12/08/2019 அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார். 'காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?'
அமைச்சரின் இப்பதிவை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்திலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். நன்றி வீரகேசரி

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவளித்தமைக்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது. 2015 க்கு முன்னர் ஊழல் நிறைந்த அரசாங்கமே இருந்தது. அந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் அன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரத்தினால் நன்மைகள் கிடைக்கவில்லை.
இதனால் அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் வெவ்வேறு துன்புறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தனர். யுத்தத்தை அவர்கள் நிறைவு செய்தார்கள். ஆனால் அவர்கள் தனியாக யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வரவில்லை. 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் பகுதியளவில் நிறைவடையச் செய்திருந்ததையே அவர்கள் முழுமையாக நிறைவடையச் செய்தார்கள். எனினும் அதுவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எனினும் எதிராகச் செயற்பட்ட இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். அது மாத்திரமின்றி இராணுவத்தினர், பாதுகாப்பு செயலக அதிகாரிகள் என்று பலர் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக ஊடகவியலாளர்கள் பலர் இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார். நன்றி வீரகேசரி
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார் இராணுவ தளபதி
14/08/2019 யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லூர்க்கந்தன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.
இதன் போது இராணுவத்தளபதியுடன் யாழ் மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத் தளபதி ஆலயத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தார்.
இரானுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை நாளையத்தினம் பிரதமரின் வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
13/08/2019 பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி; இன்று இடம் பெற்றது.

இதன் போது சுமார் 100 இற்கும் அதிகமான வேலையில்லா பட்டதாரிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அணிதிரண்டிருந்தனர்.

இவர்கள் பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து வேலை வாய்ப்பை கொடுக்கும் போது உள்வாரி பட்டதாரிகள் , வெளிவாரி பட்டதாரிகள் என வேறுபடுத்த வேண்டாம் என்றும், அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை பெற்றுதருமாறும் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைககளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றனர்.
இதன் போது லோட்டஸ் சுற்றுவட்ட பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டது. ஆகவே, ஆரம்ப்பாட்டகாரர்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிற்கு முன்பாக ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
நீங்கள் கோத்தபாயவை பாதுகாக்கின்றீர்கள் - லசந்தவின் மகள் ரணிலிற்கு கடிதம்
13/08/2019 கடந்த நான்கு வருடங்களாக கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வந்துள்ளார் என படுகொலை செய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க குற்றம்சாட்டியுள்ளார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
நீங்கள் உங்கள் அரசியல் உரையில் எனது தந்தையும் உங்கள் நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்க குறித்து சுட்டிக்காட்டியிருந்தீர்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கான கடிதத்தில் அகிம்சா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவி;த்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே நீங்கள் எனது தந்தை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்,என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க எனது தந்தையினது கொலைக்காவும் ஏனைய ஈவிரக்கமற்ற கலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ச மன்னிப்பு கோருவாரா என கேட்டிருந்தீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னி;ப்பு கோரமாட்டார் என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க கடந்த பத்துவருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து தான் மகிழ்ச்சியடைவதை கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என தீர்மானித்துவிட்டார் என அகிம்சா தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று தான் கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை கடந்த நான்கு வருடங்களாக பாதுகாத்து நன்கு கவனித்து வந்துள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அகிம்சா விக்கிரமதுங்க அதற்காக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோருவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனது தந்தை இறந்த நாள் முதல் அவரது பெயரை நீங்கள் வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளீர்கள் பிரதமரிற்கான தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க எனது தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கியதேசிய கட்சியையும் ஆட்சியில் அமர்த்தினீர்கள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டன, 2015 இல் அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக உங்களை நான் சந்தித்தவேளை நீங்கள் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன,நீதி என்பது லசந்தவுடன் மாத்திரம் தொடர்புடையது இல்லை என நீங்கள் தெரிவித்தீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் அவரை படுகொலையாளி என கூறும் அதேவேளை உங்கள் குடும்பத்தவர்களும் உங்கள் சிரேஸ்ட அதிகாரிகளும் கோத்தபாய ராஜபக்சவுடன் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றனர்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வந்தாலும் இதுவரை காலமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலை தடையின்றி தொடரும் என நிச்சயமாக நம்புகின்றேன் எனவும் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
எனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்த நபர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகியுள்ள நிலையில் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் எழுதியுள்ள கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
கனடாவிலிருந்து வந்தோரின் வீட்டில் 15 பவுன் நகை, 10 இலட்சம் பணம் கொள்ளை
13/08/2019 தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாழில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்
அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டுமானப்பணி வேலைகளுக்காக கனடா நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை நேற்று முன்தினம் வவுனியா சென்று பெற்றுள்ளார். இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
நல்லூரில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட ஸ்கேனர்கள் அகற்றப்பட்டன
16/08/2019 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதனை தற்போது அகற்றியுள்ளனர்.

ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை புதிய ஸ்கானர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன

அவை நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதனால் அவற்றை இன்றைய தினம் காலை மீண்டும் எடுத்து சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி
நாடுகடத்தப்பட்டனர் ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற 13 இலங்கையர்
16/08/2019 சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய பொலிஸாரின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment