காஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் முறுகல் நிலை அதிகரிக்குமா?


17/08/2019 இந்திய பிரதமர் நரேந்திரமோடி  அந்நாட்டு மக்களின் பேராதரவினால் மீண்டும் லோக்சபா தேர்தல்களில் வெற்றிபெற்று உலகம் போற்றும் ஜனநாயக நாட்டின் பிரதமராக பவனிவந்து கொண்டிருக்கிறார்.  இவ்வேளை, இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவார் என அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பலவிதமான ஊகங்களை வெளியிட்டன. இம்ரான்கான் கிரிக்கெட் உலகில் சாதனைகள் நிகழ்த்தி அரசியலிலும் சாதனையாளராக பாகிஸ்தான் மக்களின் மனங்களை வென்று பிரதமரானார். மேற்கத்தைய செல்வாக்கினால் சிந்தனைப்போக்கிலும், அரசியல் சித்தாந்தத்திலும் முற்போக்கானவர் என எதிர்பார்க்கப்பட்ட இம்ரான், பிரதமரானதும் இந்திய – பாகிஸ்தான் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் எனவும்  ஊகங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த நம்பிக்கையில் பேரிடி விழுந்துவிட்டது. ஆவணி முற்பகுதியில் இந்திய அரசாங்கம் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் காஷ்மீர் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விசேட அந்தஸ்தினை  ரத்து செய்து ஜம்மு–காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாயின.  இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்தினர். இந்திய அரசியல் அமைப்பை ஏற்கமாட்டோம் என முழக்கமிட்டார்கள். தொடர்பாடல் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உண்மையான செய்திகள் அறிவதில் இடர் பாடுகள் காணப்படுவதால் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 
ஒரு லட்சததிற்கு மேற்பட்ட இந்திய படைவீரர்கள் தெருக்களில் இறங்கி நிலை மையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. முகநூல், டுவிட்டர் உள்ளடங்கலாக தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் வெள்ளிக்கிழமை, அதாவது ஆவணி 9 ஆம் திகதி மக்கள் நடத்திய போராட்டம் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை வேறொரு தளத்தில் மனித உரிமைப் பிரச்சினையாகவும் காட்டப்படுகிறது. காஷ்மீரில் ஸ்ரீநகரின் மையப்பகுதி இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிரபலம் பெற்றது. 24 மணிநேர ஊரடங்கு அமுலில் இருந்தது. அப்பகுதியை கடந்து செல்வதற்கு 10க்கு மேற்பட்ட வீதித்தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது என பிபிசி நிருபர் தெரிவித்தார். கடைகள், பாடசாலைகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடிக்கிடந்தன. முன்னாள் முதல்வர்கள் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அரசியல் செயற்பாட்டாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது காஷ்மீர் பெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் விசேட அந்தஸ்தை ரத்து செய்தமையை மீள வாபஸ் பெற வேண்டுமென்பதே மக்களில் பெரும்பாலானோரின் விருப்பமாகத் தோன்று வதாக இன்னொரு ஊடகவியலாளர் கூறினார்.
காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்துச்செய்தமையை முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை  ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆவணி 5 ஆம் திகதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை  ரத்துச்  செய்யும் வகையில் அதிகாரமளிக்கும் மசோதா, ஜம்மு –காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை வகைசெய்யும் மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தொடுத்துள்ள வழக்கு பலரின் அவதானத்தையும் ஈர்த்துள்ளது. காஷ்மீரின் விசேட அந்தஸ்து குறைக்கப்பட்டமை சமூக வலைத்தளங்களில் கருத்தாகவும் நகைச்சுவையாகவும் பல பதிவுகளை பலர் பதிவு செய்துள்ளார்கள். ஹரியானா முதலமைச்சர் ஹரியானாவில் பெண்கள் குறைவாகவிருப்பதால் 370 ஆவது சரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் காஷ்மீரிலிருந்து மணப்பெண்களை பீகாருக்கு கொண்டுவரலாம் என பதிவு செய்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி ‘காஷ்மீர் பெண்கள் குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை. ’பெண்கள் ஆண்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அல்ல’ என பதிவு செய்துள்ளார். மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா, ``உயர்பதவியில் இருப்பவர்கள் காஷ்மீர் மக்களைப் பற்றி பொறுப்பற்ற கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தவேண்டும். இவை காஷ்மீர் மக்களை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் புண்படுத்தும்” என பதிவிட்டார். காஷ்மீர் எனும் எழில்மிகுந்த பிரதேசம் இன்று வேதனையைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர தினகொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் திகதிகோலாகலமாக நடக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, காஷ் மீர் மக்கள் சுதந்திரம் இழந்தவர்களாக ஆர்ப் பாட்டம் செய்கின்றனர் என்பது வேதனையானது.
1947 இல் இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் காஷ்மீர் பிணக்கு தொடர்பாக இரண்டு யுத்தங்களில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ஈடுபட்டன. 1947 இல் சுதந்திரமடையும் போது  முன்னைய பிரிட்டிஷ் இந்தியா, இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் பெயர் இந்திய டொமினியன் என அழைக்கப்பட்டது. இந்திய டொமினியன்  பாகிஸ்தான் எனவும் பங்களாதேஷ் எனவும் இன்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் ஜம்மு –காஷ்மீர் பிரதேசம், 1846 இலிருந்து 1947 வரை பிரிடிஷ் சாம்ராஜ்யத்தில் அரசாட்சி நடைபெற்ற பகுதி. ராஜ் புட் டொக்ரா என்கின்ற அரச வம்சமே ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தது. ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு 3 நாடுகள் உரிமை கோருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய 3 நாடுகளுமே சிற்சில பகுதிகளை உரிமை கோருகின்றன. நிலப்பரப்பில் 55% பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், நிலப்பரப்பில் 30 % ஐ பாகிஸ்தானும், 15% ஐ சீனாவும் கட்டுபாட்டில் வைத்துள்ளன. இந்தியாவின் நிர்வாகத்தில் ஜம்மு –காஷ்மீர் பள்ளத்தாக்கு லடாக், சியெச்சன் கிளேசியா ஆகிய பகுதிக்கும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் ஆஷாத் காஷ்மீர், கில்கிற், பல்ரிஸ்தான் ஆகிய பகுதிகளும், சீனாவின் நிர்வாகத்தில் சகிஸ்கம் பள்ளத்தாக்கு, அக்சாய், சீன பகுதிகளும் அடங்குகின்றன. சீனாவின் நிர்வாகத்திலுள்ள பிரதேசங்களில் மக்கள் மிகக்குறைவாகவே வாழுகிறார்கள். காஷ்மீர் பிரச்சினை பற்றிய புரிதலில் இந்திய, பாகிஸ்தான் நாடுகளே பொதுவாகக் கருதப்பட்டாலும் சீனாவும் பிரச்சினையில் ஒரு நாடு என்பது கவனிக்கத்தக்கது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பின்னர் 1947 இல் பாகிஸ்தான் படைகளின் ஆதரவுடன் பழங்குடியினர் காஷ்மீரை முற்றுகையிட்டனர். காஷ்மீர் மன்னர் உதவி வேண்டி இந்தியாவுடன் இணைந்து கொண்டார். இந்த சச்சரவே முதலாவது காஷ்மீர் யுத்தம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கார்கில்ஸ் யுத்தம் உள்ளடங்கலாக 4 முறை போரில்  ஈடுபட்டன.  முதலாவது யுத்தம் ஐ.நா. சபையின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. இரு நாடுகளையும் பிரிக்கும் கோடு ஒன்றை  ஐ.நா.  ஏற்படுத்தியது. இது ஆங்கிலத்தில்  Line of Control  என அழைக்கப்படுகிறது. மீண்டும் 1965 ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்குமிடையில் இரண்டாவது யுத்தத்தை உருவாக்கியது. 1971 ஆம் ஆண்டு மூன்றாவது யுத்தம் வங்காளதேசம் உருவாகக் காரணமாக இருந்தது. நான்காவது யுத்தம் 1999 இல் கார்கில்ஸ் யுத்தம் என அழைக்கப்படுகிறது. 1989  இலிருந்து இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பிரதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான அமைப்புகள் எதிர்ப்புகளைக் காட்டின. காஷ்மீர் பிரதேசத்துக்கு சுயாட்சி கோரி  ஆயுதக்குழுக்களும் களம் இறங்கின. 2010 இல் காஷ்மீரில் பெருங்கலவரம் மூண்டது. ஆயிரமாயிரம் இளைஞர்கள் அரச அலுவலகங்களை, ரயில் நிலையங்களை, வாகனங்களைத் தாக்கினர். உடைத்து நொறுக்கினர். வன்முறை வெடித்தது. இந்திய அரசாங்கம் லக்சர் ஈ தைபா எனும் அமைப்பை குற்றஞ்சாட்டியது. 2016 இல் புர்கான் வனி எனப்படும் தீவிரவாதியை இந்தியப் படைகள் சுட்டுக்கொன்றதன் காரணமாக காஷ்மீர் மீண்டும் களபூமியாகியது. இறுதியாக புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் இந்தியப் படையினரைச் சுட்டுக்கொன்றதன் பின் காஷ்மீரில் அமைதியின்மை தொடங்கியது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன்போது இந்திய விமானி தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் படைகளிடம் அகப்பட்டமையும் பின்னர் அந்த விமானி உரிய மரியாதையுடன் பாகிஸ்தானால் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டமையும் வாசகர் அறிந்ததே. இந்தச் சம்பவம் இருநாடுகளும் மீண்டும் சமாதானத்தை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் காஷ்மீர் விசேட அந்தஸ்து குறைக்கப்பட்டமையால் மீண்டும் இடைவெளிகள் அதிகரித்துள்ளன.
இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு எதைப்பற்றிக் கூறுகிறது? 
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கும் பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்துக்கும் எத்தகைய வேறுபாடுகள் உள்ளன என்பதை அறிய வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அரசியல் சாசனம் பெரும் அறிஞர்கள், சட்டவாதிகள், காந்தியவாதிகள் போன்றோரின் அர்ப்பணிப்பில் உருவானது. சட்டமேதை அம்பேத்கார் மிகுந்த அக்கறை காட்டியதன் பலனாகவே இந்திய அரசியல் சாசனம் பல சிறந்த அம்சங்களை உள்ளடக்கியது என்பது பல சிந்தனையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். இந்திய அரசியல் சாசனம் பிரிவு 370 ஜம்மு– காஷ்மீர் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்து கொடுத்தது. விசேட அந்தஸ்து எனும் பொதியில் தனியான அரசியலமைப்பு சாசனம், அரச கொடி, உள்ளூர் நிர்வாகத்தில் தன்னாட்சி அதிகாரம் ஆகியவை அடங்கியுள்ளன. மிக நீண்ட காலமாக இம்மாநிலம் அனுபவித்த 340 ஆவது பிரிவு,   2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்ட ரீதியாக நீக்கப்பட்டதே இப்போதுள்ள நிலை. பிரிவு 370 உடன் 35அ எனும் பிரிவும் நீக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு கூறும் விடயம் யாதெனில் ஜம்மு – காஷ்மீர் மாநில பிரதேசத்தினுள் இந்தியாவின் வேறு மாநிலத்தவர் நிலபுலங்கள் கொள்வனவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. நிலபுலங்கள் செய்யும் உரிமை வழங்கப்பட்டால் பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்ட அயல் மாநிலங்களிலிருந்து ஜம்மு – காஷ்மீரில் குடியேறினால் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை குறைந்து விடலாம் என்ற எண்ணத்தின் விளைவாகவே பிரிவு 35அ ஏற்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடி 370 ஆவது பிரிவை ஜனாதிபதி நீக்கியபின்  முதலாவது முறையாக நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். ``ஜம்மு –காஷ்மீர் பகுதியில் பிறப்பித்த கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும்”என்றார். 
``370 ஆம் பிரிவு நடைமுறையிலிருந்தபோது பயங்கரவாதம் பரவுவதற்கு உதவியது. ஜம்மு – காஷ்மீரை வன்முறையற்ற மாநிலமாக மாற்றுவதற்கு சகல இந்தியர்களும் ஒற்றுமையாக உழைக்கவேண்டும். மாநிலத்தில் பயங்கரவாதம், ஊழல் அதிகரித்துவிட்டது கைத்தொழில் துறையை மாநிலத்தில் விருத்தி செய்து ஜம்மு – காஷ்மீர் இளந்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பின்தங்கிய சமூகங்களும் பழங்குடி மக்களும் நன்மையடைகின்றனர். அந்த நன்மைகள் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்குக் கிடைப்பதில்லை. தனியார் துறையினர் ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தில் தொழிற்துறைகளைக் கட்டி எழுப்பி மாநிலத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும்” என்றும் தனது  உரையின் போது மோடி குறிப்பிட்டார். 
பிரதமர் மோடி என்னதான் நியாயப்படுத்த முயன்றாலும் அவரது  நடவடிக்கை பாதகமான தாக்கங்களை இந்தியாவுக்குக் கொடுக்கும் என்றே தெரிகிறது. 1947 இலிருந்து அமைதி யின்மை நிலவும் பிரதேசத்தில் மேலும் சிக்கலை உருவாக்கியிருக்கிறார்.
இந்திய பிரதமர் காஷ்மீர் விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி இந்தியத் தரப்பை நியாயப்படுத்த முற்பட்டார். அதே சமயத்தில் பாகிஸ்தான் பிரதமர் எவ்வாறு நெருக்கடி நிலையை கையாள்கிறார் என்பது நிச்சயமாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இம்ரான் கான் ஐ.நா சபை உட்பட பல உலக நாடுகளின் தலைவர்களுக்கும் நிலைமையை விளக்கி எடுத்தியம்புகிறார். 
ஈரானிய தலைவர் ஹசன் றொகானிக்கு நிலைமையை விளக்கினார். இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக  ராஜதந்திர உறவு மட்டங்களை தாழ்த்திக்கொண்டார். இந்தியத் தூதுவரை வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். தூதுவர் மட்டத்தில் இந்திய தூதரகம் இயங்கவில்லை. கீழ்மட்ட  ராஜதந்திர அதிகாரிகளே பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்தை நடத்தும் நிலை உருவானது. இதுவே தாழ்நிலை எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவுடனான வர்த்தக உறவுகளையும் துண்டித்துக்கொண்டார். சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பிரச்சினைக்குட்பட்ட ஜம்மு –காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறியுள்ளது என குற்றம் சாட்டினார் ஈரான் தலைவர், பிரிட்டன் பிரதமர், மலேசிய அதிபர், துருக்கிப் பிரதமர், சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர், பஹ்ரேன் அரசர் ஆகியோரையும் தொடர்பு கொண்டு காஷ்மீர் விவகாரத்தை விளக்கினார். பாகிஸ் தான் பதிலடி கொடுக்கவிருப்பதாகவும், ஏற்படப்போகும் விபரீதத்தைத் தடுக்க சர்வதேச தலைவர்கள் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவுடன் அமெரிக்காவின் ஒருதலைப் பட்சமான பொருளாதார தடைகளைப் பொருட்படுத்தாமல் இந்தியா, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணிவரும் நிலையில் ஈரான் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள விரும்பமாட்டாது. சர்வதேச உறவுகளில் சொந்த நலன்களே முன்னிலைப்படுத்தப்படும். எனினும் ஈரான் ஜனாதிபதி காஷ்மீரில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்குச் செல்லாமல் தமது அக்கறைகளை வெளிக்காட்டியுள்ளார். நீண்டகால பிரச்சினையான காஷ்மீர் விவகாரத்தை ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.
ஆசியாவின், தெற்காசியாவின் இரண்டு அயல்நாடுகள் அணு ஆயுத பலமுள்ளவை.  யுத்தம் மூண்டால் பேரழிவு உண்டாகும் என்கின்ற விடயம் ரொக்கட் விஞ்ஞானமல்ல. எனினும் நரேந்திர மோடி, உலக மட்டத்தில் ஆளுமையானவர் என்ற புகழ்ச்சிகளுக்கெல்லாம் சொந்தக்காரர். தேர்தலில் இந்துத்துவ கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர். இவ்வாறு காஷ்மீர் பிரச்சினையை வேறு ஒரு தளத்திற்கு மாற்றி பெரும் அவலங்களை ஏற்படுத்தியதன் மூலம் அவரின் அந்தஸ்தில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏப்ரல் 21 பயங்கரவாத சம்பவங்களும் மோடியின் தேர்தல் வெற்றிக்கு ஊக்கமளித்தது என்பதை மறுக்க முடியாது. 
உலகில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியா என்பது நிதர்சனமானது. 20 கோடி மக்கள் வாழ்கின்றனர். அங்கொன்று இங்கொன்றாக சில சம்பவங்கள் நடைபெறக்கூடும். ஆனால் இந்திய முஸ்லிம் மக்கள் கௌரவத்துடன் வாழ்கின்றனர் என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை காஷ்மீர் விவகாரத்தில் மோடியின் நடவ டிக்கை இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். இந்திய –பாகிஸ்தான் முறுகல் நிலை சார்க் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் சிதறடிக்கும் என்பது திண்ணம்.
ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு)
நன்றி வீரகேசரி 








No comments: