பக்கத்து அறைகளில் தங்கியிருக்கும் கற்பகம் ரீச்சர், மஞ்சுளா,
சுபாஷினி அவரவர் நேரத்திற்கு நித்திராதேவியுடன் சங்கமித்திருப்பர்.
நான்கு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டுக்கு ஜீவிகாதான் எஜமானி.
இடுப்பில் சாவிக்கொத்து இல்லாத எஜமானி.
ஜீவிகாவின் பெரியப்பாவின் வீடு அது. அவரது குடும்பம் லண்டனில்.
அவர்கள் அங்கிருக்கும்போதுதான், அவளுக்கு கொழும்பில்
பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியர் வேலை கிடைத்தது.
பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை சார்ந்து கற்று பட்டம் பெற்றதனால்
கிடைத்த சந்தர்ப்பத்தை அவள் தவறவிடவில்லை. “ கொழும்பிலே உன்னால் தனியே சீவிக்கமுடியாது, எதற்கும்
நிகும்பலையிலிருக்கும் பெரியப்பாவிடம் கேட்டுப்பார் “ என்று அம்மா சொன்னதனால் சுண்டுக்குளியிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர்
வந்து சேர்ந்தவள்.
சகல வசதிகளும் கொண்டிருந்த அந்த வீட்டை, முன்பின் தெரியாதவர்களிடத்தில் வாடகைக்கு விடுவதற்கு
தயங்கிய பெரியப்பா சண்முகநாதன், ஜீவிகாவிடத்தில்
ஒப்படைத்துவிட்டு, லண்டனிலிருக்கும் பிள்ளைகள் அழைத்ததும் புறப்படவேண்டியதாயிற்று.
பெரியப்பா மனைவி ராஜேஸ்வரி பெரியம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,
இறந்ததும் பெரியப்பா தனிமரமானார். அவர் நிகும்பலைக்கு அருகிலிருந்த கட்டுநாயக்காவில்
ஏயார்ஃபோஸில் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தவர். ஊர்ச்சங்கங்களில் அங்கம் வகித்தவர். அவருக்கு
கூட்டங்களில் பேசுவதற்கு எழுதிக்கொடுத்ததும், அவர் தரும்செய்திகளை தான் பணியாற்றும்
பத்திரிகையில் வெளியிட்டு, அவருக்கு பிரமுகருக்கான இருப்பை உருவாக்கிக்கொடுத்ததும்
ஜீவிகாதான்.
ஜீவிகா, கற்பகம் ரீச்சர், மஞ்சுளா, சுபாஷினி வேலைக்குச்சென்றுவிட்டால், வாரவிடுமுறையில்தான் வீட்டுச் சுத்திகரிப்பு , ஆடைகளை
துவைத்தல், ஷொப்பிங் என்று பல வேலைகளையும் கவனிக்கநேரம் இருக்கும். பெரியப்பாவும் பெரியம்மாவும்
அங்கிருந்த காலத்தில் பல வேலைக்காரிகள் வந்து வந்து போய்விட்டார்கள்.
எவரையும் பெரியப்பா நிரந்தரமாக வைத்திருக்கவில்லை. பெரியம்மாவுக்கு
பணிவிடை செய்ய வந்திருந்த ஒரு மலையகப்பெண், “ வேலைக்காரிகள் ஏன் அங்கு நிரந்தரமாக இருப்பதில்லை
“ என்று ஒரு சந்தர்ப்பத்தில் ஜீவிகாவிடம் சொல்லியுமிருக்கிறாள்.
பெரியப்பா லண்டன் சென்றபின்னர் இந்த வீட்டுக்கு வேலைக்குவந்த சில பெண்கள், விலகிச்சென்றதற்கும் காரணங்கள்
இருக்கின்றன. ஆனால், அந்தக்காரணங்களுக்கும் பெரியப்பாவுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை.
சும்மா கிடக்கும் வீட்டிலிருந்து மாதாந்தம் ஒரு தொகையை சம்பாதித்து,
அதனை பெரியப்பாவின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடுவதற்கும் எழுதாத ஒரு ஒப்பந்தத்தை ஜீவிகா செய்துவைத்திருந்தாள். வீட்டின்
பராமரிப்பை ஜீவிகாவை நம்பி பெரியப்பா ஒப்படைந்திருந்தார். வாரம் ஒரு தடவை தொலைபேசியில்
பேசுவார். வாட்ஸ் அப் வந்ததும் அதிலும் முகநூலிலும் பேசிக்கொண்டிருக்கிறாள்.
வீட்டில் ஏதாவது பெரிய திருத்தவேலைகள் வந்தாலும் பெரியப்பாவிடம்
தவறாமல் சொல்லிவிடவேண்டும்.
தன்னோடு குடியிருக்கும் கற்பகம் ரீச்சர், மஞ்சுளா, சுபாஷினி
ஆகியோரின் தேவைகளின் நிமித்தம், தான் பணியாற்றும் பத்திரிகையில் வெளியிட்ட சிறுவிளம்பரத்தை பார்த்து, தொடர்புகொண்ட பணிப்பெண்கள்
சிலரில் ஜீவிகா எதிர்பார்த்தவாறு இருந்தவள் வவுனியாவிலிருந்து தொடர்புகொண்ட அபிதா
மாத்திரம்தான்.
நான்கு பேருக்கும் சமைக்கவேண்டும். அனைவரதும் உடைகளை துவைத்துக்காயப்போட்டு
எடுத்து மடித்துவைக்கவேண்டும். கடை தெருவுக்குச்சென்று காய்கறி, பழம், சாமான்கள் வாங்கிவரவேண்டும்.
வீட்டின் முற்றத்திலும் பின்புறவளவிலும் காற்றில் உதிர்ந்துவிழும் சருகுகளை கூட்டிப்பெருக்கவேண்டும்.
குப்பை கூழங்கள் பெருகி அங்கு சொரியும் மழைத்தண்ணீரால் டெங்குநோயைப்பரப்பும் நுளம்புகள் பெருகிவிடாதிருக்க
அடிக்கடி எரித்து சாம்பலாக்கிவிடவேண்டும்.
ஜீவிகாவுக்கும் கற்பகம் ரீச்சருக்கும் மஞ்சுளாவுக்கும், சுபாஷினிக்கும்
கேட்கும்போதெல்லாம் தேநீர், கோப்பி தயாரித்து தரவேண்டும். வாரவிடுமுறை காலத்தில், கட்லட்,
கேசரி, சமோசா, இப்படி ஏதாவது ஒரு சிற்றுண்டி செய்து தரல்வேண்டும்.
வேலைக்கும் போய்வந்து இந்த வேலைகளையும் சுமப்பதற்கு அவர்களுக்கு
நேரம் இல்லை. ஆனால், முகநூல் பார்ப்பதற்கும் சுப்பர் சிங்கர், பிக்பொஸ் பார்ப்பதற்கும்
அவர்களுக்கு தாராளமாக நேரம் இருந்தது.
இதற்கெல்லாம் நேரம் ஒதுக்காதிருக்கும் , முகநூல் கணக்கு இல்லாதிருக்கும் ஒரு முழுநேர வேலைக்காரி அவர்களுக்கு தேவைப்பட்டாள்.
சாப்பாடு, தங்குமிட வசதியுடன் மாதம் இருபத்தியைந்தாயிரம் ரூபாவுக்கு
வேலைசெய்யக்கூடிய வேலைக்காரி, எந்தவொரு குடும்பப்பொறுப்புகளும் அற்றவள் அவர்களுக்கு
தேவைப்பட்டாள்.
தாம் எதிர்பார்க்கும் இலட்சணங்களுடன் திகழக்கூடிய சுறுசுறுப்பான
ஒரு வேலைக்காரிதான் அபிதாவின் உருவத்தில் அவர்களுக்கு
கிடைத்திருந்தாள். சிவப்புக்கம்பளம் விரிக்காத,
பொன்னாடை, பூமாலை அணிவிக்காத குறையாக பொலிஸ்
மரியாதையுடன் கண்ணீரை முகத்தில் அணிந்துகொண்டு
அழைத்துவரப்பட்டிருக்கிறாள் அபிதா.
முதல்நாள் இரவு ஜீவிகா எழுதிமுடித்திருந்த அரசியல் செய்திக்கட்டுரையில்
வந்த தலைவர்கள் அவளது அந்த அதிகாலை வேளை நீண்ட கனவில் சஞ்சரித்திருந்தார்கள்.
மேசையில் எறும்புகளை குடியிருக்கவைத்து அவற்றின் உடலில் இனிப்பை பெருக்கி
அவற்றுக்கும் நீரிழிவு உபாதையை வளர்த்துவிட்ட கோப்பிக்கப்பை எடுத்து, சமையலறையில் கழுவும் தொட்டியில்
வைத்துவிட்டு, திரும்பியவேளையில்தான் வீட்டின் முற்றத்து கேட்டில் யாரோ அடித்துக்கொண்டிருந்த
ஓசை ஜீவிகாவுக்கு கேட்டது.
அறைக்கு ஓடிச்சென்று அணைத்துவைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசியை
இயங்கவைத்தவாறு வந்து கதவைத்திறந்தாள்.
கேட்டருகே நின்ற பொலிஸைக்கண்டதும் துணுக்குற்றாள். அந்த இன்ஸ்பெக்டர் சைகையால் அழைத்தான். ஜீவிகா ஆங்கிலத்தில் குட்மோர்னிங் சொல்லிக்கொண்டு கேட்டின்
அருகே வந்தாள்.
“ மிஸ், வெரி பேர்ட் மோர்னிங் “ என்று புன்னகைத்த இன்ஸ்பெக்டர், “ இங்கு யாரையாவது வீட்டு வேலைக்கு அழைத்திருந்தீர்களா?
எனக்கேட்டான்.
“ யெஸ் சேர், யெஸ் சேர் “என்று சொல்லி, மூன்றாம் முறையும் சொல்வதற்கு முன்னர்
சாரதி ஆசனத்திலிருந்த பொலிஸ் காரன் இறங்கி,
பின்கதவைத்திறந்து , அபிதாவை வெளியே அழைத்தான்.
தலைக்கேசம் கலைந்து, உறக்கத்தை வேண்டியிருக்கும் சிவந்த கண்களுடன்
ஒரு மெலிந்த பெண் உருவம் ஒடிந்துவிடுமாப்போல் எழுந்து வந்தது.
முன்பின்தெரியாத ஜீவிகாவை கண்டதும் அபிதா விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டாள்.
காலைவேளையில் அப்படியொரு துன்பியல் காட்சியை தரிசிக்கவேண்டி
வந்ததையெண்ணி, ஜீவிகா பரபரப்படைந்து, “ நீங்கதானா,
இன்றைக்கு வவுனியாவிலிருந்து வாரதென்று சொல்லியிருந்த அபிதா?
“ எனக்கேட்டாள்.
அபிதா சேலைத்தலைப்பினால்
முகத்தை துடைத்துக்கொண்டு தலையை ஆட்டியவாறு நடுங்கிக்கொண்டிருந்தாள்.
அவளை முன்னே நகரவிட்டு,
பின்னால் வந்த இன்ஸ்பெக்டர்
“ உங்கள் வீட்டைப்பார்க்கலாமா? “ என்றான்.
“ சேர் , கேர்ள்ஸ் வாடகைக்கு
குடியிருக்கும் வீடு. வேலைக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தோம். வாருங்கள். “
அபிதாவுக்கு நடுக்கம் குறைந்தது. கண்களை சேலைத்தலைப்பால் துடைத்தவாறு, அதுவரையில் நெஞ்சோடு அணைத்திருந்த ட்ரவலிங் பேக்கை
தரையில் வைத்துவிட்டு, ஜீவிகாவையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தாள். அந்த ட்ர்வலிங்
பேக்கிற்கும் விடுதலை கிடைத்ததுபோல், அவளது சோகத்திற்கும் பிணை விடுதலை கிட்டியது.
ஜீவிகா, வீட்டின் முன்புறத்து இரண்டு கதவுகளையும் அகலத்திறந்து
இன்ஸ்பெக்டரையும் அபிதாவையும் உள்ளே அழைத்தாள். வரவேற்பரை சுவரிலிருந்த சாயிபாபா
மென்முறுவலுடன் வலது கையை உயர்த்தி ஆசி
வழங்கிக்கொண்டிருக்கிறார். அருகில் பெரியம்மா ராஜேஸ்வரி, வாடிப்போயிருந்த பூமாலையுடன்
பெரியப்பாவையும் புற்றுநோயையும் இழந்துவிட்ட களிப்புடன் சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜீவிகா தனது அறைக்குச்சென்று தனது தேசிய அடையாள அட்டையையும்
பத்திரிகை அலுவலகம் தந்திருந்து அடையாள அட்டையையும் எடுத்துவந்து காண்பித்தாள்.
“ ஓ… நீங்க ஜேர்னலிஸ்டா “ எனக்கேட்டு புன்முறுவலை சிந்திய இன்ஸ்பெக்டர், “ இங்கிருக்கும் எல்லோரும் பொலிஸ் நிலையத்தில் பதிந்திருக்கிறீர்களா? “ எனக்கேட்டுவிட்டு, அபிதாவின் பெயரையும் இன்று
மாலைக்குள் பதிவுசெய்துவிடவேண்டும் “ எனச்சொல்லிக்கொண்டு, கையில் வைத்து சுழற்றிய தொப்பியை அணிந்தவாறு வெளியேறினான்.
அந்த வீட்டை அவன் அறை அறையாகச் சென்று ஆராயாமல் வெளியேறுவதற்கு
துணையிருந்த சாயிபாபாவை ஜீவிகா தொட்டு வணங்கினாள்.
இத்தனை காட்சிகளும் இவ்வாறு அரங்கேறிக்கொண்டிருப்பது தெரியாமல்,
கற்பகம் ரீச்சரும், மஞ்சுளாவும் சுபாஷினயும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.
கற்பகம் ரீச்சரின் அறையிலிருந்து மூடியிருந்த கதவுக்கு வெளியே அவர் விடும் குறட்டை
ஒலி சன்னமாகக்கேட்கிறது.
குளியலறையை அபிதாவுக்கு காண்பித்த ஜீவா, முகம் கழுவிக்கொண்டு
வருமாறு சொல்லிவிட்டு, இருவருக்கும் தேநீர் தயாரிப்பதற்காக கேத்தலில் தண்ணீர் நிரப்பினாள்.
தொட்டியில் கிடக்கும் சமையல் பாத்திரங்களை கழுவி வைப்பதற்கு
அந்த வீட்டுக்கு இனி ஒரு ஆள் கிடைத்திருக்கிறது. தாங்கள் நால்வரும் எதிர்பார்த்திருக்கும்
வேலைகளை இந்த ஒடிந்துவிடுமாப்போல் காட்சி தரும் நெத்தலி ஜீவன் பொறுப்போடு செய்யுமா…? ஏதாவது சாக்குப்போக்குச்சொல்லிவிட்டு, வரும்போது
கொண்டு வந்த கண்ணீரை மீண்டும் சுரக்கச்செய்து கொட்டிவிட்டு பஸ் ஏறிப்போய்விடுமா…?
ஜீவிகாவிடத்தில் எழுந்த கேள்விகள் அத்துடன் நிற்காதுபோனாலும், நெத்தலி…. தங்களுக்குள் அழைத்துக்கொள்வதற்கு
பொருத்தமான பெயராக அவள் மனதில் நிலைத்துவிட்டது.
பொய், களவு, தெரியாமல் சொல்லும் வேலைகளை மாத்திரம் செய்துவிட்டு, மாதம் முடியுமுன்னர்
சம்பளம் கேட்பாளா?
சமையலறையுடன் வலது பக்கமிருந்த வீட்டின் பழைய தளபாடங்கள் கிடக்கும்
ஸ்டோர் ரூமை அபிதாவுக்கு ஒதுக்கிக்கொடுக்க ஜீவிகா தீர்மானித்தாள்.
அபிதா முகம் கழுவி ட்ரவலிங் பேக்கிலிருந்த சிறிய துவாயினால்
துடைத்துக்கொண்டு ஜீவிகா முன்னால் வந்து நின்றாள்.
“ செத்துப்பிழைச்சன்
அம்மா. பொலிஸ்காரங்கள் என்னை காரில் ஏற்றும்போது எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது
“ என்றாள் அபிதா.
அவளிடம் தேநீர் கப்பைக்கொடுத்து, “ இனி,
இதுதான் இங்கே நீ கோப்பி தேநீர் அருந்தும் கப். வைத்துக்கொள் “ எனச்சொல்லியவாறு, “ அது என்ன அஞ்சும் கெட்டு அறிவும் கேட்டு…. அதற்கு
அர்த்தம் என்ன…? “ எனக்கேட்டாள் ஜீவிகா.
ஏதோ ஓட்டப்பந்தயத்தில்
வெற்றியீட்டி கிடைத்த கப்பாக அந்த தேநீர் அருந்தும் கிண்ணத்தை
பார்த்தவாறு, “ ஐம்புலன்களும் இயங்க மறுத்து, சிந்திக்கும் திறனும்
அற்றுப்போய்விட்டதைத்தான் அவ்வாறு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு எனச்சொல்வார்கள் “ என்றாள் அபிதா.
அந்தப்பதிலால் வந்த திகைப்பை காண்பித்துக்கொள்ளாமல், “ எத்தனையாம் வகுப்பு வரையும் படிச்சிருக்கிறாய்
? “ என்று அபிதாவை ஆராயும் மற்றும் ஒரு கேள்வியைத் தொடுத்த ஜீவிகா, அதற்கு அபிதாவிடமிருந்து கிடைத்த பதிலால் வந்த திகைப்பை
மறைக்கமுடியாமல் இருபது கிலோ மீற்றர் வேகத்துடன் அடக்கிக்கொண்டாள்.
“ எட்வான்ஸ் லெவல் வரையும்
படித்தேன். யுனிவர்சிட்டிக்குப்போவதற்கு போதிய புள்ளிகள் கிடைக்கவில்லை. “
( தொடரும் )
No comments:
Post a Comment