படித்தோம் சொல்கின்றோம்: கவிஞர் அம்பி அகவை 90 பாராட்டு விழா மலர் “ அன்புக்கோர் அம்பி “ யின் ஆளுமையைப்பற்றி பேசும் ஆவணம் - முருகபூபதி


சமூகத்தில் கல்வி, கலை இலக்கியம், ஊடகம்,  மருத்துவம், அரசியல், பொதுநலத் தொண்டு முதலான துறைகளில் ஆளுமைகளாக விளங்கியிருப்பவர்கள் குறித்த பதிவுகள் பெரும்பாலும் அவர்களின் மறைவுக்குப்பின்பே அஞ்சலிக்குறிப்புகளாக வெளிவருகின்றன.
தற்கால மின்னியல் ஊடகத்தில் வலிமையான தொடர்பாடலாக விளங்கும் முகநூலில் அத்தகைய சிறு குறிப்புகளை  பதிவேற்றிவிட்டு, உள்ளடங்கிப்போகின்ற கலாசாரம்  வளர்ந்திருக்கிறது.
அவை பெரும்பாலும் எழுதப்படுபவருக்கும் மறைந்தவருக்கும் இடையே நிலவிய உறவு குறித்தே அதிகம் பேசும்.
ஆனால், மறைந்துவிட்டவர் அவற்றை  பார்க்காமலேயே நிரந்தர உறக்கத்தில் அடக்கமாவார். அல்லது தகனமாவார்.
இந்தத்  துர்ப்பாக்கியம் காலம் காலமாக எல்லா சமூக இனத்தவர்களிடமும் நிகழ்ந்து வருகிறது.
ஒரு இலக்கிய படைப்பாளி மறைந்துவிட்டால், அதுவரையில் அவர் எழுதிய எழுத்துக்களை படிக்காதவரும் அவற்றைத்  தேடி எடுத்துப்படிக்கச்செய்யும் வகையில் சிலரது அஞ்சலிக்குறிப்புகள் அமைந்துவிடும்.
ஒரு ஆளுமையை  வாழும் காலத்திலேயே கனம் பண்ணி போற்றி பாராட்டி விழா எடுப்பதையும் அதற்காக சிறப்பு மலர் வெளியிடுவதையும் மேற்குறித்த பின்னணிகளிலிருந்துதான் அவதானிக்கவேண்டியிருக்கிறது.
அவுஸ்திரேலியா -  சிட்னியில் சுமார் மூன்று தசாப்தகாலமாக வதியும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் ஆசிரியராகவும் பாட விதான அபிவிருத்தியில் நூலாக்க ஆசிரியராகவும் படைப்பிலக்கியவாதியாகவும் ஆய்வாளராகவும் தமிழ் உலகில் அறியப்பட்டவர்.
அகவை தொன்னூறை நிறைவுசெய்துகொண்டு, ஏறினால் கட்டில் இறங்கினால்,  சக்கர நாற்காலி என வாழ்ந்துகொண்டு கடந்த காலங்களை நனவிடை தோய்ந்தவாறு சிட்னியில் வசிக்கின்றார்.
அவருக்கு 90 வயதாகிவிட்டது என அறிந்ததும், சிட்னியில் வதியும் கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து விழா எடுத்தனர்.
விழாவில் காற்றோடு பேசிவிட்டுச்செல்லாமல்,  ஒரு சிறப்பு மலரையும் வெளியிட்டு, கவிஞர் அம்பியின் பன்முக ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்துள்ளனர்.
இச்செயல் முன்மாதிரியானது. ஒருவர் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கருவை சமூகத்தில் விதைக்கும் பண்பாட்டினையும் கொண்டிருப்பது.
அதற்காக முன்னின்று உழைத்தவர்களை பாராட்டியவாறே மலருக்குள் பிரவேசிப்போம்.
இம்மலரை அவுஸ்திரேலியாவில் தமிழர் மத்தியில் நன்கறியப்பட்ட ஞானம் ஆர்ட்ஸ் பதிப்பகத்தின் சார்பில் ஞானசேகரம் சிறீ றங்கன் அழகாக வடிவமைத்துள்ளார்.
“ பன்முக ஆளுமை அம்பி ஐயாவை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம் “ என்ற தலைப்பில் மலருக்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது.
தமிழ்க்கலைச்சொல்லாக்கத்தில் பங்களிப்பு – உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் ஆய்வு சமர்ப்பித்தல் – தமிழில் விஞ்ஞான – கணித ஆசிரியர் – தமிழ் குழந்தை பாடல்களுக்காக பெயர்பெற்ற குழந்தை இலக்கியவாதி – தமிழில் மருத்துவம் கற்பிக்கப்புறப்பட்ட மருத்துவர் சமூவேல் கிறீன் பற்றிய ஆய்வு முதலான பணிகளில் அம்பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து இந்த  முன்னுரை பேசுகிறது.
 அம்பியைப்போலவே தாயகம் விட்டு புறப்பட்டு, தற்போது பிரான்ஸில் அம்பியைப்போலவே படுக்கையிலிருந்தவாறு கடந்த காலங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கலைஞர் அ. இரகுநாதன் நாடக, கூத்து, திரைப்படக்கலைஞர்.  “என் அம்பித் தம்பிக்கு அகவை 90 வாழ்த்துக்கள் “ என்னும் தலைப்பில் 1970 ஆம் ஆண்டு முதல் அம்பியுடன் தனக்கிருந்த உறவு குறித்துப்பேசுகிறார்.
இந்தப்பதிவு இரகுநாதனின் பழைய நினைவுகளை இக்கால தலைமுறைக்கு எடுத்துக்கூறுகிறது.
அம்பியுடன் தொடர்ந்த பயணம் என்ற ஆக்கத்தில்,  அம்பிக்கே உரித்தான அங்கதச்சுவை கொண்ட இயல்புகளை இனம்காண்பிக்கும் முருகபூபதியின் பதிவு இடம்பெற்றுள்ளது.
 “ அம்பி சேர் என்னை ஆசிர்வதியுங்கள்    எனச்சொன்னால்,                  “ ஆசி உமக்கு - வாதம்  எனக்கு  “ என்று சொல்லும் அம்பியின் நகைச்சுவை பதச்சோறு.
எங்கள் தங்கக் கவிஞர் என்ற தலைப்பில் இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும் தற்போது கனடாவில் தமிழர் தகவல் என்னும் இதழை நீண்டகாலமாக வெளியிட்டு வருபவருமான எஸ். திருச்செல்வம் தனக்கும் அம்பிக்கும் இடையே நீடித்திருந்த உறவைப்பற்றி பேசுகிறார். இவர்கள்  இருவருக்கும்  இடையே நீடிக்கும் நட்புக்கு அரைநூற்றாண்டு காலமாகிறது. அம்பியின் உலகளாவிய தமிழர் என்ற நூலை வெளியிட்டிருக்கும் எஸ். திருச்செல்வம், கனடா  ரொரன்றோ நகர சபை அங்கத்தவர் சபா பீடத்திலே பல வருடங்களுக்கு முன்னர் அம்பியை அழைத்து பாராட்டி விருதும் வழங்கிய தகவல்களை தெரிவிக்கின்றார்.
 “ அம்பி, சம்புகுண்டம், நான் கரதண்டம். அதாவது இருவரும் அயல் கிராமங்களான நாவற்குழியையும் கைதடியையும் சேர்ந்தவர்கள். சுற்றிவளைத்துப்பார்த்தால் உறவினர்களும்கூட. இருந்தாலும் நாங்கள் சந்தித்துக்கொண்டது 8725  கிலோ மீட்டர்களுக்கு அப்பால், அதுவும் சிட்னியில் 2002 ஆம் ஆண்டு என்று தனது மனப்பதிவுகளை முன்வைக்கிறார் பேராசிரியர் ஆசி. கந்தராஜா.
  மனித வாழ்வில் தொண்ணூறு வயது முதுமை என்பது சற்று சிரமமானது. ஆனாலும் அவர் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஸ்டசாலி என்றே சொல்லவேண்டும். அதற்குக்  காரணம் அவரது ஒரே மகன் திருக்குமார். தனது தந்தையை இன்றுவரை அவர் தன்னுடன் வைத்து சகல பணிவிடைகளையும் சிறப்பாகச்செய்து பராமரிக்கின்றார். இக்காலத்தில் இது மிக அரிது .. “  என்று இந்தப்பதிவில் அம்பியைப்பற்றி மாத்திரமின்றி அம்பியின் ஏகபுதல்வன் திருக்குமாரின் பண்புகளையும் விதந்து போற்றுகிறார் கந்தராஜா.
இலங்கையில் வதியும் தகைமை சார் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தனது ஆக்கத்தில்,  “ நீலாவணன், மஹாகவி , முருகையன் போல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அம்பி என்மீது செல்வாக்கு செலுத்தாதுவிடினும் அம்பியை எனது முன்னோடிகளில் ஒருவர் என்று கொண்டாடுவதில் எனக்கு எவ்வித சங்கடமும் இல்லை  “ எனச்சொல்கிறார்.
இலக்கியவாதியும் அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் சிட்னியில் தமிழ்க்கல்வி நிலைய ஆசிரியருமான தி. திருநந்தகுமார், தனக்கும் அம்பிக்கும் இடைய முதல் அறிமுகம் ஏற்பட்ட காலம் முதல் பின்னாளில் அவருடன் இணைந்து மேற்கொண்ட தமிழ்ப்பணிகள் குறித்தும் தனது பதிவில் விரிவாகச்சொல்கிறார்.
அம்பி உடல்நலக்குறைவாக இருந்த காலப்பகுதியில் மருத்துவமனையில் அவரைச்சுற்றியிருந்த மருத்துவ உபகரணங்கள், குழாய்களைப்பற்றியும் சொல்லும் இந்தப்பதிவு , அவரது குரலில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் பேசுகிறது.
பெண்கள் பூப்பு அடைவதைப்போன்றதுதான் ஆண்களுக்கு இளமைப்பருவத்தில் வரும் குரல் மாற்றம் எனச்சொல்வார்கள். அப்படிப்பார்த்தால், அம்பி தனது 90 வருட வாழ்வில் இரண்டு தடவை தனது குரலை மாற்றிக்கொண்டவர் என்று சொல்லத்தோன்றும் விதமாக இந்த ஆக்கம் அமைந்துள்ளது.
மனித நேய இலக்கியவாதி கவிஞர் அம்பி என்ற தலைப்பில் எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதியிருக்கும் ஆக்கத்தில், அம்பியின் நல்லியல்புகளைப்பற்றி பேசுகின்றார்.
அம்பி விஞ்ஞான ஆசிரியர் என்பதையும் நினைவுபடுத்தும் மாத்தளை சோமு, சிறுகதைகள் மூலம் எழுத்துலகில்  கால் வைத்த அம்பி, கவிதைகளை எழுதத் தொடங்கியதால், ஈழத்து இலக்கிய உலகம் சுஜாதா போன்ற விஞ்ஞானச்சிறுகதை எழுதும் ஒருவரை அடையமுடியவில்லை என்ற ஆதங்கத்தையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.
அம்பியிடம் விசித்திரமான  குணம்  ஒன்றிருக்கிறது. எவரைப்பற்றியும் அறிந்து வைத்திருந்து முதல் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும்போது,  “ நான் சுப்பிரமணி பேசுகின்றேன்  எனச்சொல்லி மறுமுனையிலிருப்பவரை திகைப்பில் ஆழ்த்துவார்.
இந்த அனுபவம் முன்னர் சிறிது காலம் அம்பியைப்போன்று பாப்புவா நியூகினியில் வாழ்ந்த குலசிங்கம் சண்முகம் அவர்களுக்கும் கிட்டியிருக்கிறது.
அம்பியை வாழ்த்தி எழுதியிருக்கும் குலசிங்கம் சண்முகம் பாப்புவா நியூகினியிலிருந்து சிட்னி வரையில் தங்கள் இருவருக்கும் இடையிலிருந்த நல்லூறவு பற்றி எழுதியிருக்கிறார்.
( அண்மையில் கான்பரா இலக்கிய வட்டம் அங்கு நடத்திய இலக்கிய விழாவிலும் அம்பி குறித்து பேசியவர்தான் இந்த குலசிங்கம் சண்முகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. )
சிட்னியில் வதியும் இளம் தலைமுறையைச்சேர்ந்தவர் திருமதி நிஷேவிதா அஷ்வின்.  இவர் இங்கு தனது மாணவப்பருவத்தில் தமிழ் கற்றவர். தமிழ் மருத்துவமுன்னோடி கிறீன் பற்றி அம்பி எழுதிய ஆய்வுநூல் தொடர்பாக தனது பார்வையைச்சொல்கிறார். இந்த நூலை அம்பியே ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்.
“ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் “ என்ற  மகாகவி பாரதியின் கூற்றை தனது பணிகளின் மூலம் அம்பி அவர்கள் மெய்ப்பித்திருப்பதாக நிஷேவிதா நிறுவுகின்றார்.
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் எஸ் விஸ்வநாதனும் அம்பியின் ஒரு முன்னாள் மாணவர். இவரும் இம்மலரில் தனக்கும் அம்பிக்கும் இடையே 1960 முதல் ஆரம்பித்த உறவைப்பற்றிக்கூறும்போது, வானொலி மற்றும் பத்திரிகை, இதழ்களில் அம்பியின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.
அம்பி, யாழ் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் ஆசிரியராக பணியற்றியிருப்பவர். அக்கல்லூரிக்கான கீதம் இயற்றியதும் அம்பிதான்.  200 ஆண்டு கால பழைமையான இக்கல்லூரிக்கு இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பழைய மாணவர்  சங்கங்கள் இயங்குகின்றன.
அக்கீதத்தில்  “ வாழ்வுக்கிலக்கியமாய் வளர்ச்சிக்கிலக்கணமாய்      என்று ஒரு வரிவருகிறது. இதுபோன்று அம்பியும் வாழ்வாங்கு வாழ்வார் என்று எழுதுகிறார் சிட்னியில் இயங்கும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர்  நாகரட்ணம் சுகிர்தன்.
இக்கல்லூரியில் அம்பியுடன் பணியாற்றியிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி அதிபர் வி. குணரட்ணம் அவர்கள் எழுதியிருக்கும் ஆக்கம் சுருக்கமாக இருந்தாலும் கனதியாகவும் கருத்தாழத்துடனும் அமைந்துள்ளது.
இதில் வரும் வரிகளை பாருங்கள்.  “ பத்துவயது பால்யம்- இருபது வயது வாலிபம் – முப்பது வயது மூர்க்கம் – நாற்பது வயது நாட்டம் – ஐம்பது வயது அயதி- அறுபது வயது ஆட்டம் – எழுபது வயது ஓட்டம். இதற்கும் மேலான  ஒவ்வொரு வயதும் ஆண்டவன்  அளிக்கும் அன்பளிப்பு என்றே கருதவேண்டும்  என்று சொல்கிறார். அவருடையது மட்டுமல்ல பட்டுத் தெளிந்த அனைவரதும்  வாழ்வியல் அனுபவம்தான் இது!
அம்பி  தான் தரிசித்த புகலிட வாழ்வுக்கோலங்களை தனது குறும்பாக்கள் ஊடாக சித்திரித்தவர்.  அவற்றில் சிலவற்றை இம்மலரில் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் யசோதா பத்மநாதன். அவற்றிலும் சுவாரசியங்கள் நிறைந்துள்ளன.
ஒரு குறும்பாவை பாருங்கள்:
நாலுமுழ வேட்டியுடன் றோட்டில் – நான்
நடமாட வழியில்லை  வாழ்விந்தக் கூட்டில்!
காலையில்  “ வோர்க்குக்குப் “ போகில் – நீ
களிசானை மாட்டென்ற விதியிந்த வீட்டில் !
புகலிடத்தில் தமிழின அடையாளம் வேண்டிநிற்கும் அம்பியின் ஆதங்கத்தை ஆழமாக ஆராய்கிறார் யசோதா பத்மநாதன்.
யூனியன் கல்லூரியில் அம்பியின் அடிச்சுவடுகள் பற்றி பேசுகிறது Dr. எஸ். ஞானராஜனின் ஆக்கம்.
அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் விழாக்கள் தொடக்ககாலத்தில் ( 2001 – 2003) இரண்டு நாட்கள் நடந்திருக்கின்றன.
இரண்டாம் நாளில் ஒடியல் கூழ் விருந்துடன் அம்பி தலைமையில் நடக்கும் கவிதா விருந்துகளை நினைவூட்டுகிறது நடராசா கருணாகரனின்  கட்டுரை.
ஊடகங்களுடன் இணைந்து நின்ற அம்பியைப்பற்றிய தனது அனுபவங்களை நியூசிலாந்து ஒளிபரப்பாளர் – ஊடகவியலாளர் எஸ். எம். வரதராஜன் எழுதியுள்ளார்.
கொஞ்சும் தமிழ் தந்து நெஞ்சம் கவர்ந்த கவிஞர் என்ற தலைப்பில் ப்ரணீதா பாலசுப்பிரமணியம், குழந்தை இலக்கியத்தில் அம்பியின் வகிபாகம் பற்றி எழுதுகிறார்.
1966 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் ஆராய்சி மாநாட்டில் அம்பி சமர்ப்பித்த ஆய்வேடு பற்றி நினைவுபடுத்துகிறார் பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் ஆ. ந. இராசேந்திரன்.
கவிஞர்கள் செளந்தரி கணேசன், செ. பாஸ்கரன், இளமுருகனார் பாரதி ஆகியோரது கவிதைகளும் இடம்பெற்றுள்ள இம்மலரில்,  அம்பியின் செல்லப்பேத்தி திருமதி அஷ்வினி சாம்ஜியும் ஆங்கிலத்தில் தனது அம்மப்பா பற்றி எழுதியுள்ளார்.
அம்பியின் வாழ்வும் பணிகளும் சம்பந்தமான காட்சிகளை சித்திரிக்கும் பல வண்ணப்படங்களும் இம்மலரை அலங்கரிக்கின்றன.
விளம்பரங்கள் அனைத்திலும் அம்பியின்  கவிதை வரிகள் இடம்பெற்றுள்ளமையால்  வித்தியாசமான மலராகவும் இந்த ஆவணம் பரிமளிக்கிறது.
கவிஞர் அம்பி அகவை 90 மலரை புகலிடத்தில் சமர்ப்பித்துள்ள விழாக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் பெயர்களையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டேயாகவேண்டும்.
            பேராசிரியர் ஆசி. கந்தராஜா, லெ. முருகபூபதி, சந்திரிகா சுப்பிரமணியன், தி. திருநந்தகுமார், செளந்தரி கணேசன், அன்புஜெயா, நடராஜா கருணாகரன், செ. பாஸ்கரன், கானா பிரபா, யசோதா பத்மநாதன், ஜெ. ஜெய்ராம், ஞானசேகரம் சிறீ றங்கன், ஊஷா ஜவகர், நா. சுகிர்தன், ரஞ்சகுமார் சோமபால, ச. சுந்தரதாஸ்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்தமையால்தான் எங்கள் மத்தியில் வாழும் சாதனையாளர் அம்பி அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நன்றியோடு நினைவு கூரும் விழாவும் நடந்து,  சிறப்பு மலரும் வெளியாகியிருக்கிறது.
வாழும் காலத்திலேயே ஆளுமைகள் பாராட்டப்படவேண்டும் என்ற வார்த்தைகளுக்கு அம்பி சிறப்பு மலர் முன்னுதாரணமாக விளங்குகிறது.
-------0--------
letchumananm@gmail.com






-->



No comments: