மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு


தமிழ் மக்கள் மீண்­டு­மொ­ரு­முறை தென்­னி­லங்கை அதி­கா­ரத்த­ரப்­பி­னரால் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர். வர­லாறு முழு­வதும் தமிழ் பேசும் மக்கள் தமக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள்,  தீர்­வுத்­திட்­டங்கள் தொடர்பில் எவ்­வாறு தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­னரோ அதே­போன்று மீண்டும் ஒரு­முறை ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்­பி­லி­ருந்த தமிழ் மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்­த­வர்­க­ளா­கவும் எதிர்­பார்ப்பு அற்­ற­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருக்­கின்­றனர். 
2015ஆம் ஆண்டு உரு­வா­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் முடி­வ­டை­யப் ­போ­கின்­றது. இன்னும் சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றப் ­போ­கி­றது. ஆனால் அதே­போன்று தமிழ் மக்கள் தீர்­வுத்­ திட்டம் தொடர்பில் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையும் சித­றி­போகும் தறு­வா­யி­லே காணப்­ப­டு­கின்­றது. எதிர்­பார்ப்­புகள், நம்­பிக்கை, என்­பன வீழ்ச்­சிப்­பா­தையை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. தீர்­வுத்­ திட்டம் கிடைக்கும் என்று எந்­த­ள­வு ­தூரம் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் நம்­பிக்கை வைத்­த­னரோ, அதே அளவு தற்­போது நம்­பிக்­கை­யின்மை ஏற்­பட்­டு­ விட்­டது. 
கடந்த 2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­ய­போது தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் பாரிய எதிர்­பார்ப்­புகள் காணப்­பட்­டன. தமது நீண்­ட ­கால கோரிக்­கை­யான அர­சி­யல் ­தீர்வுத் திட்டம் நீண்­ட­காலம் நிலைத்­தி­ருக்­க­ வேண்­டிய வகையில் முன்­வைக்­கப்­படும் என தமிழ் பேசும் மக்கள் கடந்த 2015ஆம் ஆண்டு வெகு­வாக எதிர்­பார்த்­தனர். அதற்­கான சூழலும் அப்­போது உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. குறிப்­பாக சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­படும் என்ற நம்­பிக்கை அனைத்து தரப்­பி­ன­ருக்கும் காணப்­பட்­டது. அதற்­கான சாத்­தி­ய மும் அப்­போது மிக அதி­க­மாக காணப்­பட்­டது. இதற்கு பல கார­ணங்­களும் இருந்­தன. தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு திட்­ட­மொன்றை வழங்­க ­வேண்டும் என்ற தேவையை அப்­போது ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் உணர்ந்­தி­ருந்­தன. 

தேசிய அரசு தந்த நம்­பிக்கை 
 அவ்­வா­றான பின்­ன­ணியில் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை 2015ஆம் ஆண்டு அமைத்­தன. அவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தை அமைத்­த­போது அதற்­கான கார­ண­மாக தேசிய பிரச்­சி­னைக்குத் தீர்­வு­கா­ணுதல், நாட்டை அபி­வி­ருத்தி செய்தல், தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைத்தல் உள்­ளிட்ட விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. தமிழ் பேசும் மக்­களின் தேசிய பிரச்­சினைத் தீர்­வுக்­காக ஒரு சிறந்த சந்­தர்ப்­ப­மாக இந்த தேசிய அர­சாங்கம் காணப்­பட்­டது.  இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைப்­ப­தா­னது தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் ஒரு திருப்பு முனை­யாக அமையும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. காரணம் வர­லாறு முழு­வ­துமே அதா­வது சுதந்­தி­ரத்தின் பின்னர் இரண்டு பிர­தா­ன கட்­சி­களே ஆட்சி அமைத்து வந்­துள்­ளன. ஒரு கட்சி ஆட்­சியில் இருக்­கும்­போது அடுத்த கட்சி எதிர்க்­கட்­சியில் இருக்கும். அதா­வது அவ்­வாறு ஆட்­சியில் இருக்கும் கட்சி தீர்­வுத் திட்­டத்­திற்­காக முயற்­சிக்­கும்­போது அதனை எதிர்க்­கட்சி எதிர்ப்­பதும், அதே எதிர்க்­கட்சி ஆளும் கட்­சி­யாக மாறி தீர்­வுத்­ திட்­டத்தை முன்­வைக்­கும்­போது அப்­போது எதிர்த்­த­ரப்பில் இருக்கும் எதிர்க்­கட்சி எதிர்க்கும் நிலை­மையே கடந்த காலங்­களில் இடம்­பெற்று வந்­தது. இந்தச் சூழ­லி­லேயே இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து 2015ஆம் ஆண்டு தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­மை­யா­னது இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான அணு­கு­முறை வர­லாற்றில் ஒரு முக்­கிய திருப்­பு­
மு­னை­யாகக் காணப்­பட்­டது. காரணம் தமி­ழ­ருக்­கான தீர்­வுத்­திட்­டத்தின் தேவையை உணர்ந்­தி­ருக்­கின்ற இரண்டு கட்­சிகள் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்­த­மை­யாகும். அதே­போன்று ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் கடந்த காலங்கள் போலன்றி தீர்­வுத் ­திட்ட விட­யத்தில் ஒரு நல்ல இடத்­துக்கு வந்­தி­ருந்­தது. அதா­வது காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் உள்­ள­டங்­கிய 13ஆவது திருத்த சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த தமது கட்சி தயார் என்று சுதந்­தி­ரக் ­கட்சி அறி­வித்­தி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டு இனப் ­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு ­காண்­ப­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 
கன­வா­கிப் ­போன  புதிய அர­சி­ய­ல­மைப்பு 
புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக தேசிய அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றி­யமைத்­தது. அந்தச் செயற்­பாட்டின் கீழ் பிர­தான வழி­ந­டத்தல் குழுவும் உப­ கு­ழுக்­களும் நிய­மிக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக இந்த பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது அதி­கா­ரப்­ ப­கிர்வுத் திட்டம் மற்றும் தேர்தல் முறை மாற்றம், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைத்தல் ஆகி­ய­வற்றை ஆராய்ந்­தது. மறு­புறம் வழ­மைக்கு மாறாக தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பா­னது நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்துக்கு ஆத­ரவு வழங்­கும்­போக்கை கடைப்­பி­டித்­தது. காரணம் இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்துக்கு ஆத­ரவு வழங்­கு­வதன் மூலம் தமக்­கான ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தைப் பெறலாம் என கூட்­ட­மைப்பு எண்­ணி­யது. கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் இது ஓர் ஆபத்­தான அர­சியல் தீர்­மா­ன­மாகக் காணப்­பட்­டது. அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கூட்­ட­மைப்பு கடைப் ­பி­டித்­ததால் கடும் விமர்­ச­னங்­களை எதிர்­கொள்­ள­ நேர்ந்­தது. எனினும் கூட்­ட­மைப்­பி­னதும் பங்­க­ளிப்­புடன் தீர்­வுத்­ திட்­டத்­துடன் கூடிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 
'ஒரு­மித்த நாடு' 
விசே­ட­மாக ஒரு கட்­டத்தில் ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் தீர்­வுத்­ திட்­டத்தைக் காண்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அது கடும் விமர்­ச­னத்தை தென்­னி­லங்­கையில் உரு­வாக்­கி­யது. எப்­ப­டி­யி­ருப்­பினும் பல்­வேறு மாற்­றங்கள், முன்­னேற்­றங்­களின் அடிப்­ப­டையில் தீர்­வுத்­திட்­டத்தை உள்­ள­டக்­கிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் தொடர்ந்­தன. எனினும் ஒரு கட்­டத்தில் குழ­று­ப­டிகள் ஏற்­பட ஆரம்­பித்­தன. 2018ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்­சி­ மன்றத் தேர்­தல் முடி­வுகள் அர­சியல் தீர்வு காணும் முயற்­சியை தலை­கீ­ழாக மாற்­றி­விட்­டன என்­பதே யதார்த்­த­மான உண்­மை­யாகும். இந்தத் தேர்­தலில் வெற்­றி­ பெற்ற ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன அர­சி­ய­ல­மைப்பு முயற்­சி­களை கடு­மை­யாக எதிர்த்­தது. அத­ன­டிப்­ப­டையில் தேர்­தலில் பொது­ஜன பெர­முன வெற்­றி­ பெற்­ற­தை­ய­டுத்து தீர்­வுத்­திட்­டத்­துடன் கூடிய புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஸ்தம்­பி­த­ம­டைய ஆரம்­பித்­தன. 
அதன் பின்னர் அந்தச் செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதே தவ­றா­னது என்ற கருத்து உரு­வாக்­கப்­பட்­டது. இருப்­பினும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுமந்­திரன், மனோ கணேசன், உள்­ளிட்­ட­வர்­களின் தொடர் வலி­யு­றுத்தல் கார­ண­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பு  தொடர்­பான சில பணிகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்ட­ போ­திலும் அவை தொடர்ந்து ஸ்தம்­பி­த­ம­டைந்தே காணப்­பட்­டன. அத்­துடன் 2018ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­க­டியும் அர­சி­ய­ல­மைப்பு பணி­களை கேள்­விக்­கு­றி­யாக்­கின. அதன் பின்னர் அந்தப் பணிகள் முழு­மை­யாக ஸ்தம்­பி­த­ம­டைய ஆரம்­பித்­தன. தற்­போது தீர்வுத் திட்டம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு கிடைக்கும் என்ற தமிழ் மக்­களின் நம்­பிக்கை சித­றி­விட்­டது என்றே கூற­ வேண்டும். 2018ஆம் ஆண்டு வரை அந்த நம்­பிக்கை காணப்­பட்­டது. ஆனால் தற்­போது அந்த நம்­பிக்கை வீழ்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­து­ விட்­டது. 
மிக முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இவ்­வாறு ஒரு தீர்­வுத்­ திட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக தமிழ் மக்­க­ளிடம் வாக்­கு­றுதி அளித்­தனர். இதன் கார­ண­மா­கவே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆட்சி மாற்­றத்­துக்கு பாரிய பங்­க­ளிப்பை செய்­தனர். எனினும் அதி­கா­ரத்துக்கு வந்த பின்னர் இந்த முயற்­சியில் கால்­வைத்த தலை­வர்கள் பின்னர் தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள் முன்­வைத்த எதிர்ப்பு கார­ண­மாக பின்­வாங்­கி­ விட்­டனர். 
தற்­போது அந்த நிலைமை முற்­றாக மாறி­விட்­டது. எஞ்­சி­யி­ருக்­கின்ற தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பத­விக்­கா­லத்தில் தீர்­வுத்­திட்­டமோ, அர­சி­ய­ல­மைப்போ வரப்­போ­வ­தில்லை என்­பது உறு­தி­யா­கி ­விட்­டது. 
மீண்டும் ஏமாற்றம் 
அப்­படிப் பார்க்­கும்­போது வர­லாற்றில் நடந்­த­தைப்­போன்று மீண்டும் தமிழ் மக்கள் தீர்வு விட­யத்தில் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். இந்த நாட்­டுக்கு சுதந்­திரம் கிடை­த்­த­தி­லி­ருந்தே தமிழ் மக்கள் தமக்­கான ஒரு தீர்­வுத் திட்­டத்தை கோரி­ வ­ரு­கின்­றனர். அதற்­காக பாரிய இழப்­பு­களை தமிழ் மக்கள் சந்­தித்­து ­விட்­டனர். பல தட­வை­களில் தீர்­வுக்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் அவை எவையும் இறுதி வெற்­றியை நோக்கி நக­ர­வில்லை. டட்லி – செல்வா ஒப்­பந்தம், பண்டா– செல்வா ஒப்­பந்தம், திம்பு பேச்­சு­வார்த்தை, இலங்கை–இந்­திய ஒப்­பந்தம், அதன் அடிப்­ப­டை­யி­லான 13ஆவது திருத்தச் சட்டம், சந்­தி­ரிகா அம்­மையார் காலத்­தி­லான தீர்வு முயற்­சிகள், தீர்வுப் பொதி, 2002 போர்­ நி­றுத்த கால பேச்­சு­வார்த்­தைகள், ஒஸ்லோ பிர­க­டனம், பின்னர் மஹிந்த ராஜ­பக் ஷ காலத்­தி­லான தீர்வு முயற்­சிகள் என வர­லாறு முழு­வதும் இடம்­பெற்­ற­போதும் அவை வெற்றிக் கனியை ருசிக்­க­வில்லை. 
தீர்வு முயற்­சி கள் வெற்­றி­பெறும் நிலைக்கு இறு­தி ­வரை வந்து பின்னர் ஏமாற்­றமே மீத­மாக இருக்கும். இதுவே வர­லாறு முழு­வதும் நடை­பெற்று வந்­தி­ருக்­கி­றது. இவ்­வா­றான வர­லாற்றுப் பின்­ன­ணி­யி­லேயே 2015ஆம் ஆண்டு அனைவர் மத்­தி­யிலும் புதிய எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­திய வகையில் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. அர­சியல் தீர்­வுத்­திட்­டமும் கிடைக்கப் பெறும் என்ற நம்­பிக்­கையும் ஏற்­பட்­டது. தேசிய அர­சாங்­கமும் அமைந்­ததன் கார­ண­மாக தீர்­வுத்­திட்டம் சாத்­தி­ய­மாகும் என்ற நம்­பிக்கை அதி­க­ளவில் ஏற்­பட்­டது. எனினும் அந்த முயற்சி குறு­கிய காலத்­தி­லேயே தோல்­வியைச் சந்­திக்கும் நிலை­மைக்கு வந்­தி­ருக்­கின்­றது. இந்த இடத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் இதய சுத்­தி­யுடன் செயற்­பட்­ட­னரா என்ற சந்­தே­கமும் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டாமல் இல்லை. 
கூட்­ட­மைப்பின் தியாகம் 
தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு ஒரு நியா­ய­மான தீர்வைப் பெற வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்­பி­டி­த்து வந்­தது. இதன் ஊடாக நிலை­யான அர­சாங்கம் ஒன்றைப் பேண­ மு­டியும் என்றும் அதன் மூலம் தீர்­வுத்­திட்­டத்தைப் பெற முடியும் என்றும் கூட்­ட­மைப்பு எண்­ணி­யது. எனினும் அந்த முயற்சி கைகூ­ட­வில்லை என்று தெரி­கி­றது. காரணம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு இன்னும் ஐந்து மாதங்­களே உள்ள நிலையில் இந்தக் காலப்­ப­கு­திக்குள் அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு வ­ரு­வ­தற்­கான சாத்­தியம் மிகவும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதன்­படி பார்க்கும் போது மீண்டும் ஒரு­முறை தமிழ் மக்கள் தீர்வு விட­யத்தில் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர் என்றே கூற­வேண்டும். அதுவும் இம்­முறை பிர­தான எதிர்க்­கட்­சி­யாக இருந்த தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கிய நிலை­யிலும் தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர். 
கூட்­ட­மைப்பு இவ்­வாறு நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு வழங்­கிய ஆத­ரவும் வீணா­கிப் ­போ­யி­ருக்­கி­றது. இது தொடர்பில் அண்­மையில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இவ்­வ­ரு­டத்­துக்குள் தீர்­வுத்­திட்டம் கிடைக்கும் என்றும் இல்­லா­விடின் சில முக்­கிய தீர்­மா­னங்­களை கூட்­ட­மைப்பு எடுக்கும் என்றும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். சம்­பந்­தனைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு நியா­ய­மான தீர்­வுத்­திட்­டத்­துக்­கான அடித்­தளம் இந்த அர­சாங்­கத்தில் இடப்­படும் என அவர் முழு­மை­யாக நம்­பி­யி­ருந்தார். அதற்குக் காரணம் கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்ப­டு­வதாக அவர் எண்ணினார். இதனால் எப்படியாவது தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை சம்பந்தனிடம் காணப்பட்டது. 
மற்றுமொரு பஸ் வருமா?
எனினும் தென்னிலங்கையின் சுயநல அரசியல் மற்றும் கடும் போக்குவாத நகர்வுகள் சம்பந்தனின் நம்பிக்கையை தற்போது தகர்த்தெறிந்திருக்கின்றன என்றே கூற வேண்டும். இந்த நல்லாட்சியில் எப்படியாவது தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையிலிருந்த தமிழ் மக்கள் அந்த நம்பிக்கையை இன்று இழந்திருக்கின்றனர். தற்போது தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அடுத்த தேர்தல்களுக்கான முயற்சிகளிலும் காய்நகர்த்தல்களிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டன. தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்த கட்சிகளும் இன்று வெவ்வேறு வகையான நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றன. எனவே இந்த எஞ்சிய காலப்பகுதியில் தீர்வுத் திட்டம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றதாகவே தெரிகிறது. இதனை ஏற்றுக்கொள்வது சில தரப்பினருக்கு கசப்பாக இருக்கலாம். எனினும் யதார்த்தம் அதுவாகவே காணப்படுகின்றது. இது இறுதி பஸ். இந்த பஸ்ஸை தவறவிட்டால் பயணம் செய் வதற்கு வேறு பஸ் கிடைக்காது என்று சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அடிக்கடி கூறுவார். அந்த வகையில் அவ்வாறு கூறப்பட்ட இறுதி பஸ்ஸானது பயணிகளை ஏற்றாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. அடுத்து எந்த பஸ் வருகின்றது என்று பார்க்கலாம். 
ரொபட் அன்­டனி
நன்றி வீரகேசரி 


No comments: