ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


அவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவித்த இலங்கை!

ஒரே சதத்தால் விராட்டை பின்னுக்குத் தள்ளிய அவிஷ்க!

மெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது!

பதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா பங்களாதேஷ்!

இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே !

300 ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து!

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து!

வெற்றிபெற்றாலும் சாத்தியமற்றுப் போயுள்ள பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு!

312 ஓட்டத்தை இலக்காக நிர்ணயித்த மே.இ.தீவுகள்

வெற்றியுடன் விடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்!

315 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான்

உலகக் கிண்ண வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த அப்ரிடி

கைகொடுத்த மெத்தியூஸ் - திரிமான்ன இணைப்பாட்டம்!

இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க

7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா


அவிஷ்கவின் கன்னி சதத்துடன் 338 ஓட்டங்களை குவித்த இலங்கை!

01/07/2019 அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதத்துடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 338 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
குசல் - திமுத் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ஆட்டமிழக்காது சீரான ஓட்ட எண்ணிக்கையை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
அதனால் இலங்கை அணி 10 ஓவரில் ஓட்டத்தையும் 15 ஓவரில் 91 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது. இந் நிலையில் 15.2 ஆவது ஓவரில் திமுத் கருணாரத்ன மொத்தமாக 48 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 32 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, 18.1 ஆவது ஓவரில் குசல் பெரேரா மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 64 ஓட்டத்துடன் ரன்அவுட் ஆனார் (104-2).
3 ஆவது விக்கெட்டுக்காக குசல் மெண்டீஸ் - அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி சேர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர இலங்கை அணி 25 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டத்தையும் 30 ஓவர்கள் நிறைவில் 173 ஓட்டத்தையும் பெற்றது.
31.5 ஆவது ஓவரில் குசல் மெண்டீஸ் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 39 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
தொடர்ந்து மெத்தியூஸ் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க அவிஷ்க பெர்னாண்டோ 33.1 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆனது.
இதன் பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த மெத்தியூஸ் 39.1 ஆவது ஓவரில் மொத்தமாக 20 பந்துகளில் ஒரு ஆறு ஒட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 26 ஓட்டத்துடன் ஹோல்டரின் பந்து வீச்சில் போல்ட் ஆனார் (247-4).
இலங்கை அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது. ஆடுகளத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 75 ஓட்டத்துடனும், திரிமான்ன 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதன் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஷ்க பெர்னாண்டோ 46.4 ஆவது ஓவரில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது கன்னி சதத்‍தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 47.2 ஆவது ஓவரில் மொத்தமாக 103 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 104 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (314-5).
இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 338 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 6 ஓட்டத்துடனும், திரிமான்ன 45 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும், பேபியன் ஆலன், உஷேன் தோமஸ் மற்றும் ஷெல்டன ்கொர்ட்ரல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி 












ஒரே சதத்தால் விராட்டை பின்னுக்குத் தள்ளிய அவிஷ்க!

01/07/2019 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார்.
அத்துடன் இந்த சதம் இவரது கன்னி சதமாகும்.
சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில்  அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் (20 வயது, 196 நாள்), ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் (21 வயது, 76 நாள்), அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் (21 வயது, 87 நாள்), விராட் கோலி நான்காவது இடத்திலும், (22 வயது, 106 நாள்), சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்திலும் (22 வயது, 300 நாள்) உள்ளளனர்.
அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுக் கொண்ட இந்த சதமே நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட முதல் சதம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணி சார்பில் 8 சதங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 












மெத்தியூஸின் ஓவரால் கதை மாறியது!

01/07/2019 மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை குவித்தது.
339 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 23 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 35 ஓட்டத்துடனும், சுனில் அம்பிரிஸ் மற்றும் ஷெய் ஹோப் ஆகியோர் தலா 5 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மேயர் 29 ஓட்டத்துடனும், ஹோல்டர் 26 ஓட்டத்துடனும், பிரித்வெய்ட் 8 ஓட்டத்துடனும் பேபியன் ஆலன் மொத்தமாக 31 பந்துகளில் 7 நான்கு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 51 ஓட்டத்துடனும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஷ் பூரன் மொத்தமாக 103 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டம், 4 ஆறு ஒட்டம் அடங்கலாக 118 ஓட்டத்துடனும், உஷேன் தோமஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் கப்ரியல் 3 ஓட்டத்துடனும், ஷெல்டன் கொர்ட்ரல் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித, ஜேப்ரி வெண்டர்ஸி மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 
இப் போட்டியில் 48 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அஞ்சலோ மெத்தியூஸ் வீசிய முதல் பந்திலேயே இலங்கை அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய நிகோலஷ் பூரணை ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினர்.
இது இலங்கை அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது. அஞ்சலோ மெத்தியூஸ் கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பேட்டிகளில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
photo credit : icc
நன்றி வீரகேசரி 











பதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா பங்களாதேஷ்!

02/07/2019 ரோகித் சர்மா - கே.எல். ராகுல் ஆகியோரின் வலுவான ஆரம்பத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
ரோகித் சர்மா - கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி விரைவாக ஓட்டங்களை குவித்தது.
அதன்படி முதல் 10 ஓவரில் 69 ஓட்டத்தையும், 20 ஓவரில் 122 ஓட்டத்தையும் 25 ஓவரில் 162 ஓட்டத்தையும் பெற்றனர். ஆடுகளத்தில் ரோகித் சர்மா 92 ஓட்டத்துடனும், ராகுல் 66 ஓட்டத்துடனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
28 ஆவது ஓவரின் நிறைவில் ரோகித் சர்மா நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 29.2 ஆவது ஓவரில் மொத்தமாக 92 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்கலாக 104 ஓட்டத்துடன் சவுமி சர்காரின் பந்து வீச்சில் லிட்டன் தாஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணியின் முதல் விக்கெட் 180 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலி களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ராகுல் 32.4 ஆவது ஓவரில் மொத்தமாக 92 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (195-2).
இதன் பின்னர் 3 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலி மற்றும் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்தாடிவர இந்திய அணி 34 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 204 ஓட்டத்தை பெற்றது. இந் நிலையில் 38.2 ஆவது ஓவரில் விராட் கோலி மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 26 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்த்திக் பாண்டியாவும் இரண்டு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு டக்கவுட்டுடன் வெளியேறினார் (237-4).
நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய தோனியுடன் கைகோர்த்த ரிஷாத் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக 40 ஆவது ஓவரை எதிர்கொண்ட அவர் அந்த ஓவரில் தொடர்ச்சியாக 3 நான்கு ஒட்டங்களை விளாசித் தள்ள 40 ஓவரின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 251 ஓட்டத்தை கடந்தது.
இருப்பினும் 44.1 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஒட்டம் அடங்கலாக 48 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். 
இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பும்ரா எதுவித ஒட்டமின்றி ஆட்டமிழந்தாதிருந்தார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுக்களையும், சஹிப் அல்ஹசன், ரூபல் ஹுசேன் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி









இந்தியா உள்ளே பங்களாதேஷ் வெளியே !

02/07/2019 பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழைந்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது.
315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் 22 (31) ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 33 (38) ஓட்டத்துடனும், சஹப் அல்ஹசன் 66 (74) ஓட்டத்துடனும், முஷ்பிகுர் ரஹும் 24 (23) ஓட்டத்துடனும், ஹசேன் 3 (7) ஓட்டத்துடனும் சபீர் ரஹ்மான் 36 (36) ஓட்டத்துடனும், மோர்த்ரசா 8 (5) ஓட்டத்துடனும், ரூபல் ஹுசேன் 9 (11) ஓட்டத்துடனும், முஸ்தாபிசுர் ரஹ்மான் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், சைபுதீன் மொத்தமாக 38 பந்துகள‍ை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 51 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். 
இப் போட்டியில் பும்ரா ரூபல் ஹுசேன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மானை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், பாண்டியா 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி, சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இப் போட்டியின் முடிவினால் நடப்பு தொடரில் இந்திய அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், பங்களாதேஷ் அணி ஐந்தாவது அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி 

















300 ஓட்டங்களை கடந்த இங்கிலாந்து!

03/07/2019 நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 305 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோசன் ரோய் 60 (61) ஓட்டத்துடனும், ஜோனி பெயர்ஸ்டோ மொத்தமாக 99 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 106 ஓட்டத்துடனும், ரூட் 24 (25) ஓட்டத்துடனும், பட்லர் 11 (12) ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 11 (27) ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 4 (11) ஓட்டத்துடனும், அடில் ரஷித் 16 (12) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் லியம் பிள்கட் 15 (15) ஓட்டத்துடனும் ஜோப்ர ஆர்ச்சர் ஒரு  ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் நியூஸிலாந்து  அணி சார்பில் ஹென்றி, டிரெண்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் சாண்டனர் மற்றும் டிம் சவுதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
Photo credit ;ICC
நன்றி வீரகேசரி















நியூஸிலாந்தை வீழ்த்தி அரையில் கால்பதித்த இங்கிலாந்து!

03/07/2019 நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.
306 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 45 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 119 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் 8 (16) ஓட்டத்துடனும், ஹென்றி நிக்கோலஷ் டக்கவுட்டுனும், கேன் வில்லியம்சன் 27 (40) ஓட்டத்துடனும், ரோஷ் டெய்லர் 28 (42) ஓட்டத்துடனும், டொம் லெதம் 57 (65) ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் 19 (27) ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 3 (13) ஓட்டத்துடனும், மிட்செல் சாண்டனர் 12 (30) ஓட்டத்துடனும், மாட் ஹென்றி 7 (13) ஓட்டத்துடனும், டிரெண்ட் போல்ட் 4 (7) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மாட் ஹென்றி 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மார்க்வூட் 3 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளாங்கட், அடில் ரஷித் மற்றும் பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், நியூஸிலாந்து அணியின் அரையிறுதி முடிவு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Photo credit ;ICC
நன்றி வீரகேசரி















வெற்றிபெற்றாலும் சாத்தியமற்றுப் போயுள்ள பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு!

04/07/2019 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் ஏற்கனவே நடப்பு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான அரையிறுதிச்  சுற்றுக்கு நுழைந்து விட்ட நிலையில் நேற்றைய தினம் நியூஸிலந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் மூன்றாவது அணியாக அரையிறுதியில் கால் பதித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது கடந்த மே மாதம் 31 ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இத் தொடரில் இறுதி, அரையிறுதிப் போட்டிகள் அடங்கலாக மொத்தம் 48 போட்டிகள் இடம்பெறுகின்றன. இதில் 41 போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் நான்கு லீக் போட்டிகள் மீதமுள்ளன. 
10 அணிகள் கலந்துகொண்ட இத் தொடரில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை இழந்து விட்ட நிலையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்திருந்தது.
இந் நிலையில் இங்கிலாந்து அணி கடந்த வாரம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணியிடம்  அடைந்த தோல்வியின் பின்னர் அரையிறுதிக்கான வாய்ப்பினை இழக்கும் நிலையில் இருந்தது. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை 31 ஓட்டத்தினாலும், நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்தை 119 ஓட்டத்தினாலும் வீழ்த்தி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
இங்கிலாந்து அணி கடந்த 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் அரையிறுதிக்குள் இதன் மூலம் நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை அரையிறுக்குள் நுழையும் நான்காவது அணி எது என்ற போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நிலவி வருகின்றது. எனினும் நியூசிலாந்துக்கே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாவுள்ளது.
காரணம் பாகிஸ்தான் அணி இதுவரை மொத்தமாக 8 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. இதில் நான்கு வெற்றிகளையும், மூன்று தோல்விகளையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 
இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணியின் முடிவுகளில் தங்கியிருந்தது. இருப்பினும், இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த நிலையில், அரையிறுதிக்கு வருவதற்கான பாகிஸ்தானின் வாய்ப்பு சாத்தியமற்றுப் போனது.
பாகிஸ்தான் அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் நாளை பங்களாதேஷை சந்திக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 11 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு தேர்வாகும். 
நியூசிலாந்து அணி ரன்ரேட்டில் (+0.175) வலுவாக இருப்பதால் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாகும். அதே சமயம் ரன்ரேட்டில் பின்தங்கியுள்ள (-0.792) பாகிஸ்தான் அணி அரையிறுதியை எட்டவேண்டும் என்றால் பங்களாதேஷுக்கு எதிராக இமாலய வெற்றியை பெற வேண்டும்.
 * பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷை 316 ஓட்டத்தால் தோல்வியடையச் செய்ய வேண்டும். 
 * பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 350 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷை 311 ஓட்டத்தால் தோல்வியடையச் செய்ய வேண்டும்.
*  பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 450 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷை 321 ஓட்டத்தால் தோல்வியடையச் செய்ய வேண்டும்.
* பாகிஸ்தான் முதலில் பந்து வீசினாலும் அரையிறுதிக்கான எந்த வாய்ப்பும் இருக்காது.
எனவே, நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி













312 ஓட்டத்தை இலக்காக நிர்ணயித்த மே.இ.தீவுகள்

04/07/2019 ஆப்கானிஸ்தன் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 311 ஓட்டத்தை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணணத் தொடரின் 42 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 7 (18) ஓட்டத்தையும், இவன் லிவீஸ் 58 (78) ஓட்டத்தையும், ஷெய் ஹோப் 77 (92) ஓட்டத்தையும், சிம்ரன் ஹெட்மேயர் 39 (31) ஓட்டத்தையும், நிகோலஷ் பூரன் 58 (43) ஓட்டத்தையும், ஹோல்டர் 45 (33) ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் பிரித்வெய்ட் 14 (4)ஓட்டத்துடனும் பேபியன் ஆலன் எதுவித ஓட்மின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் டூவ்லட் சத்ரான் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் நபி, ரஷித் கான் மற்றும் சையத் ஷிர்சாத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி








வெற்றியுடன் விடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்!

05/07/2019 ஆப்கானிஸ்தானை 23 ஓட்டத்தினால் வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிணணத் தொடரின் 42 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.
312 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 23 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்படின் நைப் 5 ஓட்டத்தையும், ரஹ்மத் ஷா 62 ஓட்டத்தையும், இக்ராம் அலி கில் 86 ஓட்டத்தையும், நஜிபுல்லா ஸத்ரான் 31 ஓட்டத்தையும், அஷ்கர் ஆப்கான் 40 ஓட்டத்தையும், மொஹமட் நபி 2 ஓட்டத்தையும், சாமியுல்லா ஷின்வாரி 6 ஓட்டத்தையும், ரஷித் கான் 9 ஓட்டத்யைும், டுவ்லட் ஸத்ரான் ஒரு ஓட்டத்தையும், சையத் ஷிர்சாத் 25 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் முஜிபர் ரஹ்மான் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பிரித்வெய்ட் 4 விக்கெட்டுக்களையும் கேமர் ரோச் 3 விக்கெட்டுக்களையும் உஷேன் தோமஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி












315 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான்

05/07/2019 பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 315 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 43 ஆவது போட்டி சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் பக்கர் ஜமான் 13 (31) ஓட்டத்துடனும், இமாம் உல்ஹக் 100 (100) ஓட்டத்துடனும், பாபர் அசாம் 96 (98) ஓட்டத்துடனும், மொஹமட் ஹப்பீஸ் 27 (25) ஓட்டத்துடனும், ஹரிஸ் சோஹைல் 6 (6) ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 2 (4) ஓட்டத்துடனும், ஷெடப் கான் ஒரு ஓட்டத்துடனும் இமாட் வசிம் 43 (26) ஓட்டத்துடனும், அமீர் 8 (6) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் சர்ப்ராஸ் அஹமட் ஒரு ஓட்டத்துடனும் ஷாஹீன் அப்ரிடி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுக்களையும் மொஹமட் சைபுதீன் 3 விக்கெட்டுக்களையும் மெய்டி ஹாசான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி










 உலகக் கிண்ண வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த அப்ரிடி

06/07/2019 லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் மரகத பச்சை நிற அங்கிகளும் கடும் பச்சை நிற அங்கிகளும் காட்சி கொடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷஹின் ஷா அவ்ரிடி அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
பங்களாதேஷை 94 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இப் போட்டியில் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ஷஹீன் ஷா அப்ரிடி, உலகக் கிண்ண வரலாற்றல் மிகக் குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த சாதனைக்கு உரியவரானார்.
இந்தப் போட்டியல் மாபெரும் சாதனைமிகு வெற்றியீட்டினால் மாத்திரமே அரை இறுதிக்குச் செல்ல முடியும் என்பதை அறிந்திருந்த பாகிஸ்தான அது எட்டாக் கனி என்பதை முன்னரே அறிந்துகொண்டது.
அதிசயம் நிகழ்த்துவது எளிதல்ல. ஆனால் ஐந்தாம் இடத்தை அடைந்தமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என போட்டி முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹ்மத் தெரிவித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றது. இமாம் உல் ஹக் 100 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 96 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.
எவ்வாறாயினும் பாகிஸ்தானின் ஷஹின் ஷா அப்ரிடி இப் போட்டியில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.
இப் போட்டியில் 9.1 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இவர் வீழ்த்தினார்.
உலகக் கிண்ண வரலாற்றில் அதி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷஹீன் ஷா அவ்றிடி சொந்தக்காரரானார்.
அதுமட்டுமல்லாமல் இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் ஷஹின் ஷா அப்ரிடி பதிவு செய்தார.
பங்களாதேஷின் முன்வரிசை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த அப்ரிடி, 5ஆவது விக்கெட்டாக மொஹமத் சய்புதீனை ஆட்டமிழக்கச் செய்தபோத உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் (19 வருடங்கள், 90 நாட்கள்) 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த சாதனைக்கு சொந்தக்காரரானார். 
முஸ்தாபிஸுர் ரஹ்மானின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் பாகிஸ்தான் சார்பாக உலகக் கிண்ணத்தில் 6 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரரானார்.   நன்றி வீரகேசரி 











கைகொடுத்த மெத்தியூஸ் - திரிமான்ன இணைப்பாட்டம்!

06/07/2019 இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் மெத்தியூஸ் - திரிமன்னவின் நிலையான இணைப்பாட்டத்தினால் இலங்கை அணி 264 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 44 ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே லீட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து ஆடுகளம் நுழைந்தது.
இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 55 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டாலும் (திமுத் கருணாரத்ன -10, குசல் பெரேரா - 18, அவிஷ்க பொர்னாண்டோ - 20, குசல் மொண்டீஸ் - 3) 5 ஆவது விக்கெட்டுக்காக மெத்தியூஸ் மற்றும் திரிமான்ன ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
அதனால் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 20 ஓவரில் 84 ஓட்டத்தையும், 30 ஓவரில் 127 ஓட்டத்தையும் பெற்றது. இதன் பின்னர் 32 ஆவது ஓவரின் முடிவில் அஞ்சலோ மெத்தியூஸ் அரைசதம் விளாசியதுடன் 34.2 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.
மறுமுணையில் மெத்தியூஸுடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திரிமான்ன 37.5 ஆவது ஓவரில் மொத்தமாக 68 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (179-5)
தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய டிசில்வாவுடன் கைகோர்த்த மெத்தியூஸ் 39 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள இலங்கை அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 200 ஓட்டங்களை தொட்டது.
43.5 ஆவது பந்தில் மெத்தியூஸ் நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி சதத்தை பூர்த்தி செய்ய, இலங்கை அணி 47.4 ஓவரில் 250 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் 48.2 ஆவது ஓவரில் மெத்தியூஸ் மொத்தமாக 128 பந்துகளை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த திஸர பெரேரா 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 264 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 29 ஓட்டத்துடனும், இசுறு உதான ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 
photo credit : ‍ICC
நன்றி வீரகேசரி








இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க

06/07/2019 இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் அவிஷ்க பெர்னாண்டோ எனவும் அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் அதனை எடுத்துக்காட்டியுள்ளார் எனவும் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.
Image result for avishka fernando IN ICC 2019
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ மாத்திரமே சதம் குவித்ததுடன் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
மேற்கிந்தியத் தீவுளுக்கு எதிராக 104 ஓட்டங்களைக் குவத்த அவர் மூன்று இன்னிங்ஸ்களில் 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாங்கள் மாறுபாடான பெறுபேறுகளை எதிர்கொண்டோம். துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ திறமையையும் விவேகத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்தியாவுடனான போட்டிக்கு முன்னர் மூன்று போட்டிகளிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி தன்னால் திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். அவர் நிச்சியம் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நடசத்திரமாக மிளிர்வார் என திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் திமுத் கருணராட்னவும் குசல் ஜனித் பெரேராவும் மூன்று சந்தர்ப்பங்களில் 90க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்திருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட திமுத் கருணாரட்ன, குசலும் நானும் மாறுபாடான நுட்பங்களைப் பிரயோகித்துவருகின்றோம். நான் இன்னிங்ஸ் முழுவதும் துடுப்பெடுத்தாட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். அதேவேளை குசல் பெரேராவுக்கு அவர் விரும்பியவாறு துடுப்பெடுததாட பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நான் ஒருபுறத்தில் பிரதான பங்காற்றுவேன் என்பதை அறிந்துள்ள அவர் அதிரடியாக ஓட்டங்களைப் பெற முயற்சிக்கிறார். நான் ஆட்டமிழந்தால் அவர் சிரமத்தை எதிர்கொள்வார். அதற்காக அவர் துடுப்பெடுத்தாடுவதற்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தேன் என்றார்.
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ன ஆகிய மூவருமே பிரகாசிக்கத் தவறினர். குசல் பெரேரா 18 ஓட்டங்களுக்கும் அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்களுக்கும் திமுத் கருணாரட்ன 10 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் குசல் ஜனித் பெரேரா 9 இன்னிங்ஸ்களில் 273 ஓட்டங்களையும் திமுத் கருணரட்ன 9 இன்னிங்ஸ்களில் 222 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ நான்கு இன்னிங்ஸ்களில் 203 ஓட்டங்களையும் பெற்று இலங்கை துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(இங்கிலாந்தின் லீட்ஸிலிருந்து நெவில் அன்தனி)
நன்றி வீரகேசரி











7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

06/07/2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இன்று இடம்பெற்ற  44-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அணியை  இலங்கை அணி எதிர்கொண்டது.
முதலில்  நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் மேத்யூசின் அதிரடி சதத்தால் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா , கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை சேர்த்தனர். உலகக்கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். இந்நிலையில் 103 ஓட்டங்களை பெற்ற  நிலையில் அவர் வெளியேறினார்.
இதையடுத்து ராகுல் 111, ரிஷப் பந்த் 4 என வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி, பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி
இந்நிலையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை அணி தரப்பில் மலிங்க, ரஜித, உதன ஆகியோர் தலா 1 விக்கெட்டை விழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 














No comments: