பயணியின் பார்வையில் - அங்கம் 13 இலங்கை வடபுலத்தில் சந்தித்த எழுத்தாளுமைகள் மணிவிழா நாயகன் வித்தியாதரனுக்கு வாழ்த்துக்கூறும் பதிவு - முருகபூபதி



சில வருடங்களுக்கு முன்னர் ( 2016 ஒக்டோபர் மாதம் ) மெல்பனில் வதியும் எழுத்தாளர் தெய்வீகன், என்னிடம்                         யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புதிய தமிழ்ப்பத்திரிகை காலைக்கதிர்  வரவிருக்கிறது. அதன் முன்னோட்டமாக விடியல்  வீச்சு என்ற சிறப்புமலரை  வெளியிடவிருக்கிறார்கள். அதற்கு ஒரு கட்டுரை தரமுடியுமா ?  “ எனக்கேட்டார்.

உதயதாரகையிலிருந்து காலைக்கதிர் வரையில் என்ற தலைப்பில்  ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன்.
எனினும் மனதில் தயக்கங்கள் இருந்தன.

இலங்கை வடபுலத்திலிருந்து  முன்னர் சில பத்திரிகைகள், இதழ்கள் வெளிவந்தவண்ணமிருந்தன.  கால வெள்ளத்தாலும்  காவல் காக்க வந்தவர்களினாலும் சில பத்திரிகைகள் மறைந்தன.  சில  ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். தடுத்துவைக்கப்பட்டனர்.

வடபுலத்திலிருந்து முதலில் வெளிவந்த உதய தாரகையிலிருந்து புதிதாக வெளிவரவிருக்கும் காலைக்கதிர் வரையில் நேர்ந்த மாற்றங்கள் குறித்து அக்கட்டுரையில் அலசியிருந்தேன்.

அக்கட்டுரை கிடைத்ததும் தனக்கு வந்த மின்னஞ்சல் பதிலை தெய்வீகன் எனக்கு அனுப்பியிருந்தார். அக்கடிதம்:


தெய்வீ...
பெரிய மனிதர்கள் எப்போதும் பெரிய மனிதர்கள்தாம்.
முருக பூபதி அவர்களுடைய கட்டுரையும் இணைப்புப் படங்களும் பிரமாதம். உண்மையில் நான்தான் அவரிடம் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்டிருக்க வேண்டும். தவறி விட்டேன். எனினும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், நாம் எத்தகைய கட்டுரை அவசியம் என்று எதிர்பார்த்தோமோ அதையே கனகச்சிதமாக - அச்சொட்டாக - தந்திருக்கிறார் அவர். கடந்தகால தமிழ்ப் பத்திரிகை உலகின் சரிதத்தை இறுக்கமாகவும் சுருக்கமாகவும் யாரைக் கொண்டாவது வரையச் செய்து, முதல் இதழில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். உன் மூலம் மிகச் சரியான - மிகப் பொருத்தமான - தேர்ந்த - கைகள் மூலம் அது நிறைவேறியிருக்கின்றமை பெரும் மகிழ்வைத் தருகிறது. இன்னும் ஆசிரியர் கட்டுரையைப் பார்க்கவில்லை. காலையில் வந்து வாசித்ததும் மிக்க மகிழ்ச்சி அடைவார்.
நண்பர் முருகபூபதி அவர்களுக்கு என்னுடையதும் ஆசிரியருடையதும் அன்பைத் தெரிவியுங்கள்.
உங்களதும், நண்பர் முருகபூபதியினதும் முகவரிகளை அனுப்பி வையுங்கள். எங்கள் முதலாவது இதழாக வெளிவரும் விடியல் வீச்சு  மலரின் பிரதிகளை அஞ்சலிடுகிறேன்.

அன்புடன் வித்தியாதரன்

இவ்வாறுதான்  எனக்கு வித்தியாதரனுடனும் காலைக்கதிர் பத்திரிகையுடனும் நெருக்கம் தோன்றியது.
வித்தியாதரன் இலங்கையில் கொழும்பிலிருந்து வெளியான தினபதி – சிந்தாமணி பத்திரிகை ஆசிரியபீடங்களில் பணியாற்றியவர். பின்னாளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான உதயன் மற்றும் கொழும்பிலிருந்து வெளியான சுடரொளி ஆகியனவற்றிலும் பணியாற்றியிருப்பவர்.
2009  காலப்பகுதியில்  எதிர்பாராதவகையில் கைதாகி எதிர்பாராத வகையில் உயிர் தப்பிவந்தவர். அச்சமயம் அவரது கைது குறித்து வெளியான கண்டனங்களையும் அன்றைய அரசுக்கு வந்த அழுத்தங்களையும் அறிவேன்.
வீரகேசரி குழுமத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகத்துறை நண்பர்கள் வீரகத்தி தனபாலசிங்கம், வடிவேல் தேவராஜா ஆகியோர் வித்தியின் கைது தொடர்பாக தெரிவித்த ஆட்சேபங்களையும் நான் வதியும் அவுஸ்திரேலியா அரச வானொலி  எஸ்.பி. எஸ்  ஊடகத்திலும் கேட்டிருக்கின்றேன்.
எந்தவொரு துறையிலும் உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எத்தகைய இடர்களை, சவால்ளை எதிர்கொண்டாலும், தங்கள் பணியிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். அதற்கு நண்பர் வித்தியாதரனும் ஒரு உதாரணம்.
எனது ஆக்கம் கிடைத்ததும் அவர் எழுதியிருந்த பதில் அவர் மீது எனக்கிருந்த மதிப்பை மேலும் உயர்த்தியது.
வயதால் அவர் என்னை விட  இளமையானவர். ஆனால், ஊடகத்துறையில் நான் சந்திக்காத பல கஷ்டங்களை அனுபவித்தவர்.  அவர் உயிர் மீண்டு வந்தது அதிசயமே!
இலங்கையில் தமிழ் – சிங்கள – முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்பதை தொலைவிலிருந்து அவதானித்துவருகின்றேன்.
நண்பர் வித்தியாதரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக்காலம். அவரை வாழ்த்திக்கொண்டே இந்த பயணியின் பார்வையில் தொடரின் 13 ஆவது அங்கத்திற்கு வருகின்றேன்.
காலைக்கதிர் 2016 ஆம் ஆண்டு இறுதி முதல் பல சிரமங்களுக்கு மத்தியில்  தங்கு தடையின்றி தொடர்ந்து வெளியாகிறது. வெளிநாடுகளில் வதியும் வாசகர்களுக்காக  இலங்கை நேரம் நடுச்சாமத்திலேயே மின்னஞ்சல் ஊடாக புறப்பட்டு  வந்துவிடுகிறது.
பத்திரிகைகளில்  இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள்  காலத்துக்குக்காலம்  தெரிவிக்கும் கருத்துக்கள்  காலத்துக்கு காலம் மாறிக்கொண்டிருந்தாலும், பத்திரிகைகளின் ஊடக தர்மம் மாறுவதில்லை!
விடியலின் வீச்சு வெளியீட்டு விழாவிலும் அதற்கு முன்னர் வித்தியாதரன் எழுதிய என் எழுத்தாயுதம் நூல் வெளியிட்டு அரங்கிலும்  அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்களும் தோன்றியிருக்கிறர்கள். அவர்கள் அனைவருடனும் எந்த எதிர்ப்போ -  எந்தப்புதிருமோ  இல்லாமல் உறவைப்பேணிக்கொண்டே  பத்திரிகைக்கான செய்தி வேட்டையில் சாமர்த்தியசாலிதான் வித்தியாதரன் என்பது எனது அவதானம்.
இந்தப்பயணத்தில் நான் யாழ்ப்பாணத்தில் சில மணிநேரங்கள்தான் நின்றேன்.
அன்று மார்ச் 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அரசாங்க செயலக மாநாட்டு மண்டபத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்திற்கு வந்தோம்.
காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் வழங்கிய ஆதரவினாலும் ஊக்கத்தினாலும், அவருடைய பத்திரிகையில் இதுவரையில் மூன்று தொடர்களை எழுதியிருக்கின்றேன்.
முன்னோட்டமாக வெளியிட்ட விடியலின் வீச்சில் எழுதியதையடுத்து, இலங்கையில் பாரதி என்ற 40 அத்தியாயங்கள் கொண்ட நீண்ட தொடரை ( 40 வாரங்கள்) காலைக்கதிரில் எழுதியிருந்தேன்.
அதனையடுத்து, சொல்லத்தவறிய கதைகள் தொடரில் 20 அங்கங்கள் ( 20 வாரங்கள் ) எழுதியிருக்கின்றேன். அதனையடுத்து காலமும் கணங்களும் என்ற தொடரையும் சில வாரங்கள் எழுதியிருக்கின்றேன்.
சொல்லத்தவறிய கதைகளில் இடம்பெற்ற அங்கங்கள் சில ஜெர்மனி தேனீ – கனடா பதிவுகள் – அவுஸ்திரேலியா  தமிழ்முரசு – அக்கினிக்குஞ்சு  இலங்கை தினக்குரல்  முதலான ஊடகங்களிலும் வந்துள்ளன.  கிளிநொச்சியில் வதியும் நண்பர் கருணாகரன் தனது மகிழ் பதிப்பகத்தினால் அதனை வெளியிட்டிருந்தார். அதற்கான முகப்போவியத்தை சிட்னியில் வதியும் கலை இலக்கியவாதி கீதா மதிவாணன் வரைந்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்திலும்  அதனை அறிமுகப்படுத்துவதில்  கருணாகரன் அக்கறை கொண்டிருந்தார்.
அவரது ஏற்பாட்டில் எமது யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள் அந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்கள்.
அந்தத் தொடர் வெளிவந்த காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரனே நிகழ்ச்சிக்கு வந்து வெளியிட்டுவைக்கவேண்டும் என  நான் விரும்பியிருந்தவாறு அவரும் வந்திருந்தார்.
ஜீவநதி வெளியீடாக முன்னர் வந்திருந்த எனது சொல்லவேண்டிய கதைகள் நூல் பற்றி கோகிலா மகேந்திரனும் சொல்லத்தவறிய கதைகள் நூல் பற்றி கவிஞர் சோ. பத்மநாதனும் உரையாற்றினர்.
இலக்கியவாதியும் யாழ். மகாஜனாக்கல்லூரியின் ஆசிரியருமான சிதம்பரநாதன் ரமேஷ்  நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். இவர் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலனின் உறவினர் எனவும் பேராசிரியர் எம். ஏ. நு.ஃமானின் மாணவர் எனவும் கருணாகரன் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்.
யாழ்ப்பாணத்தில் வதியும் கலை, இலக்கியவாதிகளான பலர் எனது நீண்ட கால நண்பர்கள். இவர்களுடனான நட்புறவு இற்றைவரையில் எந்தவொரு விக்கினமுமில்லாமல் தொடருகிறது.
அதனால் நண்பர் கருணாகரனும் நானும்  விடுத்த அழைப்பை ஏற்று பலரும் வருகைதந்து ஒன்றுகூடினர். அவர்கள் வதியும் இல்லங்களுக்கு நேரில் சென்று சந்தித்து உரையாடுவதற்கு நேர அவகாசம் இல்லாதமையினால் அத்தகைய ஒரு சந்திப்பையே நான் பெரிதும் விரும்பினேன்.
எனது நூல்களின்  அறிமுகத்தை விட,  அவர்களை நேருக்கு நேர் பார்த்து உரையாடுவதுதான் மனதிற்கு நிறைவானது.
கோகிலா மகேந்திரன், சோ. பத்மநாதன், வித்தியாதரன், டான் தொலைக்காட்சி குகநாதன், தேசிய கலை இலக்கியப்பேரவையைச் சேர்ந்த தணிகாசலம், அ. யேசுராசா, சட்டநாதன், நீலாம்பிகை, சித்தாந்தன், ரவிவர்மா, வன்னியகுலம், வதிரி சி. ரவீந்திரன், கொற்றாவத்தை கிருஷ்ணானந்தன், பேராசிரியர்கள் சிவச்சந்திரன், சிவலிங்க ராஜா உட்பட பலர் வந்திருந்தனர்.
அத்துடன் , அக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கே வந்திருந்த நண்பர் இராஜரட்ணம் சிவநாதன், லண்டனிலிருந்து ராகவன், பிரான்ஸிலிருந்து அன்டனிப்பிள்ளை ராயப்பு   ( அழகிரி) தம்பதியர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
கோகிலாமகேந்திரன் எழுத்தாளராகவும் சீர்மியத்தொண்டராகவும் இரண்டு தளங்களில் இயங்கிவருபவர்.  உளவியல் ரீதியாகவும் இலக்கியப்பிரதிகள் எழுதுபவர்.
சொல்லவேண்டிய கதைகள் நூலில் இடம்பெற்ற தனிமையிலே இனிமை  என்ற அங்கம் குறித்து சிலாகித்துப்பேசினார்.
அந்த அங்கத்தில் அவரும் நன்கறிந்த சில எழுத்தாளுமைகளின் அந்திமகாலத்தின்  தனிமை பற்றி நான் பதிவுசெய்திருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
கவிஞர் சோ. பத்மநாதன் ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, மொழிபெயர்ப்புத் துறையில் ஆளுமையாக போற்றப்படுபவர். கொண்டாடப்படுபவர்.  அன்றைய சந்திப்பில் அவர் மொழிபெயர்த்து எழுதிய தென்னாசியக் கவிதைகள் நூலை எனக்குத்தந்தார்.
இந்நூல் பற்றிய சுருக்கமான குறிப்பினை இந்த நூலிலிருந்தே தருகின்றேன்.
“ இத் தொகுதியில் அடங்கியுள்ள 86 கவிதைகளும் சார்க் நாடுகளைச்சேர்ந்த 65 கவிஞர்களால் ஆக்கப்பட்டவை. இப் பிராந்தியத்து நவீன கவிதை முயற்சிகள்   “ கொமன்வெல்த் “ எனத் தொடங்கி,  “ பின் காலனியக்கவிதை  “ என வளர்ந்து, இன்று உலகக்கவிதை என மலர்ந்துள்ளன.
அந்நியர் ஆட்சியுள் அகப்பட்டு அடையாளமிழந்த சார்க் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மெல்ல மெல்ல விடுதலை பெற்று நிமிர்ந்தபோதும், சாதி சமய மோதல்களுக்கும் ஏழ்மை , அறியாமை, சுரண்டல், பெண்ணடிமை எனப்புதிய சவால்களுக்கும் எவ்வாறு முகம்கொடுத்து வந்துள்ளன என்பதை இக்கவிதைகள் பேசுகின்றன. எல்லைகள் தாண்டி இக்கவிக்குரல்கள் ஒலிப்பது காலத்தின் தேவை.
எழுத்துலகில் சோ. பா. என அறியப்பட்ட சோ. பத்மநாதன் கவிஞராக, பேச்சாளராக, மொழிபெயர்ப்பாளரக தம் பெயர் நிறுவியவர். சொந்தக்கவிதைகள் மூன்று தொகுதிகளும் இசைப்பாக்களாக ஐந்து இறுவட்டுக்களும் வெளியிட்டவர்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரண்டு கவிதைத் தொகுதிகளும் ஃபிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஒரு நெடும் பாவும் இவர் மொழிபெயர்ப்புகள்.
பர்மியப்பிக்கு சொன்ன கதைகள் சாகித்திய விருது பெற்ற மொழிபெயர்ப்பு.
Sri Lankan Tamil Poetry , Tamil Short Stories from Sri Lanka என்பனவும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்களும் சோ.ப. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவை.
SAARC இலக்கிய  விழாக்களில் நான்கு முறை கலந்துகொண்ட சோ.ப. Goethe Institute என்ற ஜேர்மன் கலாசார மையத்தினால் 51  தென்னாசிய  கவிஞர்களில் ஒருவராக இனங்காணப்பட்டு, Poets  Translating Poets  விழாவுக்கு அழைக்கப்பட்டவர்.
சோ.ப.வின் தென்னாசியக்கவிதைகள் நூலில் இலங்கை சிங்கள எழுத்தாளர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.
அதனால் அண்மையில் எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெல்பனில் நடத்திய தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சியிலும் இந்த நூலை இடம்பெறச்செய்தேன்.
இந்த நூலை கொழும்பில் எஸ். கொடகே சகோதரர்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் பற்றி கனடாவில் வதியும் எழுத்தாளர் தேவகாந்தன் விரிவான மதிப்பீட்டை கனடா பதிவுகள் இணையத்தில்  சிறப்பாக எழுதியுள்ளார்.  அதனை இந்த இணைப்பில் காணலாம்.
அன்றைய நிகழ்ச்சியில் எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில்,  விடுதலைப் போராட்டங்களில்  உறைபொருளும் மறைபொருளும்- என்ற அங்கத்தில் இடம்பெற்ற  கலெக்டர்  ஆஷ்துரை -  உரும்பராய்   சிவகுமாரன் பார்வையில்   சாதி   அமைப்பு தொடர்பான ஒப்பீட்டை  சோ.ப.  சிலாகித்துப் பேசினார்.
நூல்களின் சிறப்பு பிரதிகளை காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் வெளியிட்டு வைக்க,  டான் தொலைக்காட்சி இயக்குநர் குகநாதன் பெற்றுக்கொண்டார்.
அந்த இனிமையான மாலைநேரச்சந்திப்பை முடித்துக்கொண்டு, அன்று இரவே கிளிநொச்சிக்குப் பயணமானேன்.
( தொடரும்)
-->






No comments: