06/07/2019 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் அனைத்தும் முளையில் கருகிப் போயுள்ளன. பயனுள்ள வகையில் அவற்றை வளர்த்தெடுத்து, முன்னோக்கி நகர்த்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளை, அரசியல் தீர்வு காணப்படுவதை விரும்பாத சக்திகளின் ஆதிக்கச் செயற்பாடுகளும் இந்த முயற்சிகளுக்குத் தடைக்கற்களாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது.
அரசியல் தீர்வென்பது, நாட்டின் ஒட்டு மொத்த நலன்சார்ந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது. இனப்பிரச்சினை விவகாரத்தில் இரு கூர்களாகப் பிரிந்து செயற்படுகின்ற தமிழ்த்தரப்பும், சிங்களத் தரப்பும் மேலாண்மையுடைய தனித்துவமான இன அடையாளம் அல்லது தனித்துவமான அரசியல் அடையாளத்தைத் தீவிரமாக முதன்மைப்படுத்திச் செயற்படுகின்ற போக்கே அரசியல் தீர்வுக்கான பெரும் முட்டுக்கட்டை.
இன அடையாளமும், அரசியல் அடையாளமும் அரசியல் தீர்வில் தற்போது வலியுறுத்தப்படுகின்ற ஐக்கிய இலங்கை என்ற பரந்துபட்ட கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் வரையில் அரசியல் தீர்வு சாத்தியமாகாது என்பதை ஆழமாக மனதில்; கொள்ள வேண்டியது அவசியம்.
தனித்துவம் என்பது நல்லிணக்கம், விட்டுக் கொடுப்பு, இணக்கப்பாடு, அரசியல் ரீதியான சகிப்புத் தன்மை என்பவற் றின் அடிப்படையில் ஒன்றிணைந்த தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டதாகவும், அந்த நலன்களுக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டியதும் அவசியம்.
தேசியம் என்பதும் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய பங்கேற்றல், பங்களிப்பு என்பவற்றால் கட்டியெழுப்பப்பட வேண்டும். நாடு சிறியதோ பெரியதோ அது முக்கியமல்ல. நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் அனைவருக்கும் அது உரித்துடையது என்ற பரந்த சிந்தனையே முக்கியம்.
தனிக்குடும்பங்கள் எவ்வாறு தனித்துவத்தைப் பேணிக் கொண்டு பிற குடும்பங்களுடனும், சமூகத்துடனும் இணைந்து வாழ்கின்றனவோ அதேபோன்று இனங்களும், மதங்களும் தமக்குள் தனித்துவத்தைப் பேணிக்கொண்டு, அதற்கான எல்லைகளை வரையறுத்துக் கொண்டு பிற இனங்களுடனும், மதங்களுடனும் இணைந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பங்கள் சமூகங்களுடன் கொண்டுள்ள இணைப்பையும் பிணைப்பையும் அடிப்படையாகக் கொண்ட வழிமுறையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் முன் னெடுக்கப்பட வேண்டும். அத்தகையதோர் அரசியல் முனைப்பே நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு வழிசமைக்கும்.
ஆனால் துரதிஷ்டவசமாக இத்தகைய பரந்துபட்ட சிந்தனையின் அடிப்படையில் அரசியல் காரியங்களை முன்னெடுக்கின்ற வல்லமை கொண்ட அரசியல்வாதிகளை நாட்டில் காண முடியவில்லை.
இனப்பிரச்சினையைச் சூழ்ந்து பல்கிப் பெருகியுள்ள ஏனைய பிரச்சினைகளில் இன்று நாடு குழம்பிப் போயுள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறியதன் விளைவே முப்பது வருடங்களாகத் தொடர்ந்த மோசமான யுத்தமும், அதனால் ஏற்பட்ட பேரழிவுகளும்.
வாழ்க்கையில் பட்டுத் தெளிவது அவசியம். அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள், கஷ்டங்களையும் எதிர்கொண்ட அனுபவம் இந்த நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தாராளமாக உண்டு.
ஆனால் அந்தப் பட்டறிவைப் பயன் படுத்தி நாட்டின் எதிர்கால சுபிட்சத்திற்கும், எதிர்கால சந்ததியினரின் நன்மைக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிந்தனையை அந்த அரசியல்வாதிகளிடமும், மதத் தலைவர்களிடமும், சமூகப் பெரியார்களிடமும் காண முடியவில்லை. இந்தச் சிந்தனை ஒரு சிலரிடம் மிக அரிதாகக் காணப்பட்டாலும், அது ஒரு பெரிய வட்டத்தில் விரிவடைந்து செல்வதற்கான வாய்ப்புக்களைக் காண முடியவில்லை.
இத்தகைய ஒரு பின்னணியில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காண்பதென்பது இலகுவான காரியமல்ல. ஆனாலும் அதற்குரிய ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்துவிட முடியாது. முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது முக்கியம்.
பேச்சுக்களும் போராட்டங்களும்
அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் உண்மையான பற்று கொண்டவர்களிடமிருந்து ஊற்றெடுத்திருக்க வேண்டும். தேசிய நலன் கருதிய செயற்பாடாக அது வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முயற்சி இதுவரையில் இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலைமை, நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் உண்மையான பற்றுகொண்டவர்கள் இலங்கையில் இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகின்றது. அத்தகைய நகர்வு மேற்கொள்ளப்படாமைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், இந்த முயற்சி பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து முன்னெடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதற்குரிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் அந்தத் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா?
பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்கள் தரப்பில் இருந்து, தமிழ் மக்களின் அரசியல் தரப்புக்களில் இருந்து அத்தகைய முயற்சிகள் எத்தனையோ மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவே, இது தெரியாதா என்ற எதிர்க் கேள்வி எழலாம். இல்லை என்று சொல்வதற்கில்லை.
எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இவை வெற்றிபெறத் தவறியதனால், சாத்வீகப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருக்கின்றன. அந்தப் போராட்டங்களின் தோல்வி காரணமாகவே ஆயுதப் போராட்டம் முப்பது வருடங்களாகத் தொடர்ந்தது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, சாத்வீக வழிமுறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாத்வீக வழியிலான போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன என்று அரசியல் தீர்வுக்கான தமிழர் தரப்பின் செயற்பாடுகள் குறித்து விபரங்கள் தெரிவிக்கப்படலாம். விளக்கங்கள் அளிக்கப்படலாம். இந்த விபரங்களையும் விளக்கங்களையும் மறுத்துரைக்க முடியாது.
ஆனால் செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் பற்றியும் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிந்திக்கப்பட்டிருக்கின்றதா? ஒரு பொது வெளியில் விவாதிக்கப்பட்டிருக்கின்றதா? அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை குறித்து விரிவாக சிந்திக்கப்பட்டிருக்கின்றதா? – போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
சலித்துப்போன வழிமுறைகள்
பாராளுமன்ற அரசியலிலும், ஆயுத வழியிலுமே அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டு வழிகளிலும் தீர்வுக்கான முன்னேற்றத்தைக் காண முடியவில்லை என்பதே வரலாறு.
யுத்த மோதல்கள் தீவிரமடைந்திருந்தபோது, போர் நிறுத்தம் ஒன்றின் ஊடாக நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான அரசியல் தீர்வில் முக்கிய பங்கேற்றிருந்த இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பாராளுமன்ற அரசியல் சலித்துப்போன வழி என்று வர்ணித்துள்ளார்.
எனவே, தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்ற அரசியலுக்கும் போருக்கும் இடைப்பட்ட மூன்றாவது வழியொன்றைக் கண்டறிய வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் மூலோபாய கற்கைகள் நிலையத்தின் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே சொல்ஹெய்ம் இதனைக் கூறியுள்ளார். இன்றைய அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் முடங்கிப் போயுள்ள இன்றைய அரசியல் சூழலில் அவருடைய கருத்து முக்கியத்துவம்மிக்கதாகவே திகழ்கின்றது.
காலம் காலமாக சாத்வீக வழிகள் என்று ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் பேரணிகளும், ஒத்துழையாத போக்குகளுமே போராட்ட வழிகளாகவும், அரசியல் தீர்வு மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு விடயங்களில் தமிழர் தரப்பினால் கையாளப்பட்டு வந்துள்ளன.
சாத்வீகப் போராட்டத்திலும் பார்க்க ஆட்சியாளர்களுக்கு மோசமான நெருக்கடிகளையும் தேசிய அளவில் பாதிப்பு களையும் ஏற்படுத்திய ஆயுதப் போராட்டமே அரசாங்கங்களை அரசியல் தீர்வுக்கான வழிக்குக் கொண்டு வருவதில் வெற்றிபெற முடியவில்லை.
சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினாலேயே ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற்றது. ஆனால், ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு தமிழர் தரப்பு அரசியல் ரீதியாக தோல்வி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு சூழலில் மீண்டும் சாத்வீகப் போராட்டங்களின் ஊடான தீர்வு முயற்சிகள் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கரை வருடகால அனுபவங்கள், எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருப்பதுபோன்று, பாராளுமன்ற அரசியல் வழி அரசியல் தீர்வு முயற்சி களுக்கு வாய்ப்பானதல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.
இந்த நான்கரை ஆண்டுகளிலும் நல்லாட்சி அரசாங்கம் தங்களையும் தமிழ் மக்களையும் ஏமாற்றியிருப்பதாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கசப்புணர்வுடன் தெரிவித்திருக்கின்றனர்.
கைநழுவிய பொன்னான சந்தர்ப்பம்
புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணலாம் என்ற உடன்பாட்டின் அடிப்படையிலேயே நிபந்தனை யற்ற ஆதரவு நல்கப்பட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது எதிர்பார்த்த வகையில் வெற்றிகரமாக நிறைவேறவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி, புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைகளைப் போட்டது.
அதிகாரப் போட்டியில் பிரதமரை அதிகாரம் இழக்கச் செய்வதற்காக மகிந்த ராஜபக்ஷவைப் புதிய பிரதமராக நியமித்து, அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுத்திருந்தது.
பிரதமரைப் பதவி நீக்கம் செய்து, அமைச்சரவையைக் கலைத்து, பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவின் மூலம், அரசியலமைப்பையும், ஜனநாயக வழிமுறைகளையும் மீறிய ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி நியாயத்தை நிலைநாட்டியதன் மூலம், அவரது அதிருப்தியை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சம்பாதித்துக் கொண்டது. ஜனாதிபதியின் இந்த அதிருப்தியை அரசியல் ரீதியான கோபமாகவும்கூட எடுத்துக் கொள்ளலாம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இல்லாவிட்டால் அரசியல் தீர்வும் இல்லையென்ற நிலைமையிலேயே அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் குழம்பிக் கிடக்கின்றன.
இந்த நாட்டின் இருபெரும் பேரினவாத அரசியல் சக்திகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் செய்வதே வழமை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஒரு கட்சி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு மற்றைய கட்சி எதிர்ப்பு தெரிவித்து, அதனைக் குழப்பியடிப்பதே அரசியல் வரலாறாகும்.
இந்த நிலையில் அந்தக் கட்சிகள் இரண்டும் இணைந்த அமைத்த நல்லாட்சி அரசாங்க ஆட்சிக காலமே இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீரவு காண்பதற்குரிய பொன்னான சந்தர்ப்பமாகக் கருதப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் வெற்றிகரமாகவும், துரிதமாகவும் நிறைவேற்றப்படவில்லை.
மாறாக பிரச்சினைகளை இழுத்தடித்து இழுத்தடித்து, ஆறப்போட்டு குழப்பியடிக்கின்ற ஆட்சிப் போக்கிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும் கையாளப்பட்டிருக்கின்றது.
நெருக்குதல்களின் அவசியம்
இத்தகைய ஒரு நிலைமையில்தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். அதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளும் ஏனைய தரப்புக்களும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
இங்கு உரையாற்றிய அவர், 'ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள். ஆயுதபலம் இல்லாவிடில், அதைக் கைவிடுவோம் என நினைப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான நிலைப்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது' என குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்றின் மூலம், நெருக்கடிகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே, ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வு குறித்து அக்கறை கொள்வார்கள். இல்லையேல் அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதை சம்பந்தன் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
எனவே, அரசியல் தீர்வு காண்பதற்குரிய புள்ளியை நோக்கி ஆட்சியாளர்களை நகர்த்தி, செயற்படச் செய்ய வேண்டுமானால், நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவருடைய அனுபவ கூற்று வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஆகவே அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் சலித்துப் போன வழிமுறைகளில் இருந்து விலகி, அரசும், அரசியல் தீர்வைக் குழப்புகின்ற தரப்பினரும் நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்ற வழிமுறைகள் குறித்து சிந்தித்து, அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து, தமிழ் அரசியல் தரப்பினர் செயற்பட வேண்டியது அவசியம்.
அந்த வழிமுறைகள் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டிருப்பது போல சாத்வீக வழிமுறையில், ஒன்றிணைந்த சிவில் நடவடிக்கைகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.
கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால், தமிழ் அரசியல் சக்திகளை ஒன்று திரட்டி, பொது நலனைக் கருத்திற் கொண்டு பொது வெளியில் மனந் திறந்த கலந்துரையாடல்களை நடத்தி அவற்றின் ஊடாக அரசியல் தீர்வுக்குரிய அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும்.
அதுவல்லாமல், அரசும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தங்களுடைய நலன்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தைக் கையாள்கின்ற வழிமுறைகளில் இழுபட்டுச் சென்று ஒருபோதும் தீர்வு காண முடியாது.
இனப்பிரச்சினை விவகாரத்தையும் அரசியல் தீர்வு விடயத்தையும் எந்த சக்தி அல்லது எந்தத் தரப்பினர் கையில் எடுத்தாலும், தமிழர் தரப்புக்கென திட்டமிட்டு வகுத்துத் தீர்மானிக்கப்பட்ட வழிமுறையில், அது கையாளப்படுவதற்காகப் பாடுபட வேண்டும்.
இல்லையேல் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையைப் போல அரசியல் தீர்வு வந்தும் வராததும் போன்ற நிலைமைக்கே தமிழ் மக்கள் மீண்டும் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பி.மாணிக்கவாசகம்
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment