காரானாய் ககனமதில்
பார்மீது உனைக்காணா
பலரிப்போ தவிக்கின்றார்
மோர்விற்கும் ஆச்சியரை
கண்டுவிட முடியவில்லை
பீர்விற்கும் கடைகளைத்தான்
காணுகிறோம் தெருவெல்லாம் !
பயிருக்கு உயிர்கொடுத்தாய்
பசிபோக்க துணையானாய்
பாலோடும் நீகலந்தாய்
பழச்சாறாய் வெளியும்வந்தாய்
நிலவாராய்ச்சி செய்கின்றார்
நினைத்தேடி அலைகின்றார்
நிறம்நிறமாய் நீமாறி
நிற்கின்றாய் குடிவகையாய் !
அரசுகட்டில் அமர்வதற்கு
அடிப்படையாய் நீயமைந்தாய்
அரசியலார் உன்பெயரால்
ஆட்சியினைத் தொடருகிறார்
அவரமர துணைநின்ற
அப்பாவி மக்களெலாம்
அருந்துதற்கு உனைக்காணா
அலமந்தே நிற்கின்றார் !
அக்கால அரசுகளோ
குளம்வெட்டி உனைக்காத்தார்
இக்கால அரசுகளோ
உனைவைத்தே வாழுகிறார்
விவசாயம் உனைக்காணா
வீணாகிப் போகிறது
வீணாகிப் போகுமுனை
விவசாயம் கேட்கிறதே !
ஆறாக ஓடுகிறாய்
அருவியாய் கொட்டுகிறாய்
சிவனாரின் தலையிருந்தும்
சீறியே பாய்கின்றாய்
குடிப்பதற்கு உனைக்காணா
குழந்தைகளே தவிக்கின்றார்
குடிவகையாய் உனைமாற்றி
குவிக்கின்றார் பணத்தையெங்கும் !
No comments:
Post a Comment