பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் 1969 - 2019 பகுதி 2 - ச. சுந்தரதாஸ்

அன்பளிப்பு

கிராமங்களில் இருக்கும் விசசாய நிலங்கள் எல்லாம் மெல்ல மெல்ல தொழிற்சாலைகளாகவும் குடியிருப்புகளாகவும் மாறி வருவதை பார்த்து வருகிறோம். இந்தப் பிரச்சனையை அடிப்படையாக வைத்து 69ல் உருவான படம் தான் அன்பளிப்பு.
இதில் சிவாஜியுடன் ஜெய்சங்கரும் இணைந்து நடித்திருந்தது ஒரு சிறப்பாகும். சிவாஜியின் ஜோடியாக சரோஜாதேவி நடித்தார். ஜெய்சங்கருக்கு ஜோடியாக அண்மையில் மறைந்த விஜயநிர்மலா நடித்திருந்தார். குழந்தை நடிகையாக அறிமுகமான விஜயநிர்மலா கதாநாயகியாக நடித்த முதற்படம் எங்க வீட்டுப் பெண். இதில் அவர் நடித்த முதற்படப்பிடிப்பு நடந்த போது அவருடன் நடித்த எஸ். வி. ரங்கராவ், விஜயநிர்மலாவின் நடிப்பு சரியில்லை என கூறி சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். தயாரிப்பாளர் நாகிரெட்டி அசரவில்லை. ரங்கராவை படத்திலிருந்து நீக்கி விட்டு எம்.ஆர்.ராதாவை அந்த வேடத்திற்கு ஒப்பந்தம்  செய்து விஜயநிர்மலா நடிப்பால் படத்தை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்த விஜயநிர்மலா 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி கின்னஸ் சாதனையாளரானார்!

அன்பளிப்பு படத்தில் சிவாஜியின் தங்கையாக விஜயநிர்மலா தோன்றினார். விவசாய நிலங்கள் சுரண்டப்படக் கூடாது என்பதை உணர்த்தும் இப்படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். வள்ளி மலைமான்குட்டி. எங்கே போறே தேரு வந்தது போலிருந்து நீ வந்தபோது போன்ற பாடல்களை கொண்ட இந்தப்படம் சுமாராகவே போனது.


தாலாட்டு

காலத்திற்கு காலம் சிறிய நடிகர்கள் நடித்த படங்களும் வெளியாவது உண்டு. அந்த வகையில் வெளிவந்த படம்தான் தாலாட்டு. இதில் கதாநாயனாக நடித்தவர் ராஜபாண்டியன். இவர் ஏற்கனவே சிலபடங்களில் நடித்ததோடு பிற்காலத்தில் மேடையேற்றப்பட்ட தங்கப்பதக்கம் நாடகத்திலும் நடித்தவர். எஸ்.டி.சௌத்ரியாக செந்தாமரை நடிக்க அவரின் மகனாக நடித்தவர் இந்த ராஜபாண்டியன். பின்னர் தங்கப்பதக்கம் படமான போது செந்தாமரைக்குப்பதில் சிவாஜியும் ராஜபாண்டியனுக்கு பதில் ஸ்ரீகாந்தும் நடித்தனர். இதனால் ராஜபாண்டியன் வேதனைக்குள்ளாகியிருந்தார். ஆனாலும் 69ம் ஆண்டிலேயே தாலாட்டு படத்தில் அவர் கீரோவாகி விட்டார்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற மல்லிகைப்பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ராஜபாண்டியனுக்கு இணையாக பிரபல கவர்ச்சி நடிகை விஜயஸ்ரீ நடித்திருந்தார். விபின்தாஸ் இயக்கிய இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் இசையமைத்திருந்தார். படத்தில் ஜோடியாக நடித்த ராஜபாண்டியனும் விஜயஸ்ரீயும் பின்னர் வேறுபட்ட காலத்தில் வேறுபட்ட சூழநிலையில் தற்கொலை செய்து கொண்டது சோகமானதுதான்!

துலாபாரம்

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் துலாபாரம். இதில் கதாநாயகியாக நடித்த சாரதாவிற்கு அகில இந்திய சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருது கிடைத்தது. இதனை அதே சாரதாவின் நடிப்பில் தமிழில் உருவாக்கினார். பிரபல டைரக்டர் ராமண்ணா. ஆனால் படத்தை இயக்கும் பொறுப்பை மலையாளப் படத்தை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்டிடமே விட்டுவிட்டார். படத்திற்கு ஆழமான வசனங்களை மல்லியம் ராஜகோபால் எழுதினார். இவரும் பிரபல இயக்குனர்தான். கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயலும் அபாக்கியவதியாக சாரதா நடித்திருந்தார்.
முதலாளி தொழிலாளி வர்க்கப் போராட்டம், கல்லூரியில் ஏற்படும் தற்காலிக காதல், வறுமை பசி பஞ்சம் என்று பல பிரச்சினைகளை உள்ளடக்கி இப்படம் வெளிவந்தது. காற்றினிலே பெரும் காற்றினிலே, பூங்சிட்டு கன்னங்கள், சங்கம் வளர்த்த தமிழ் போன்ற கண்ணதாசனின் அருமையான பாடல்களுக்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார். சாரதாவுடன் ஏவி. எம். ராஜன் நாகேஷ் காஞ்சனா முத்துராமன் பாலையா போன்றோரும் நடித்திருந்தனர்.
முதல்மரியாதை படத்தில் தோன்றி சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் என்று வசனம் பேசி நடித்த ஏ.கே.வீராசாமி துலாபாரம் படத்தில் காற்றினிலே பெரும் காற்றினிலே பாடலுக்கு நடித்திருந்தார்.

பூவா தலையா

மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்படும் பலப் பரீட்சையை கருவாகக் கொண்டு பல இயக்குனர்கள் பல படங்களை உருவாக்கியுள்ளார்கள். அந்த வரிசையில் கே.பாலசந்தர் டைரக்ட் செய்த படம் தான் பூவா தலையா. ஏற்கனவே பணமா பாசமாவில் ஆணவம் பிக்க மாமியாராக நடித்த எஸ். வரலஷ்மி, இதிலும் அதிகாரம் ஆணவம் கொண்ட அத்தையாக நடித்திருந்தார்.
அவருக்கு அடங்கிப் போகும் மருமகனாக ஜெமினியும் அவரை அடக்க நினைக்கும் மற்றொரு மருமகனாக ஜெய்சங்கரும் சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் சீண்டும் இன்னுமொரு மருமகனாக நாகேசும் நடித்திருந்தனர். இவர்களுடன் நிர்மலா ராஜஸ்ரீ சச்சு, எம்.ஆர்.வாசு ஆகியோரும் நடித்த பூவாதலையா பாலசந்தருடைய  ஆரம்ப கால படங்களில் வெற்றிப் படமாகும். இதில் வாலி எழுதிய மதுரையில் பிறந்த மீன்கொடியை பாடல் முதலில் படத்தில் இடம் பெற்று பின்னர் ஏனோ நீக்கப்பட்டது.



கப்டன் ரஞ்சன்

ரஞ்சனுக்கு ஓரளவு மார்க்கட் இருக்கம் போது தொடங்கப்பட்ட படம்தான் கப்டன் ரஞ்சன். நாகலாந்து பகுதியிலுள்ள தீவிரவாதிகளை அடக்க முனையும் கப்டனாக ரஞ்சன் நடிததார். அவருக்கு ஜோடியாக எப்போதும் சோக நடிப்பை வெளிப்படுத்தும் ஸ்ரீரஞ்சனி நடித்திருந்தார். இசையை பிரபல இசையமைப்பாளர் ஜி. ராமனாதன் வழங்கியிருந்தார். ஸ்டன்ட் சோமுவின் சண்டைக்காட்சிகள் அருமையாக இருந்தன. நீண்ட காலம் தயாரிப்பில் தத்தளித்த இந்தப் படம் ஒரு வழியாக 69ல் வெளிவந்தது. சந்திரலேகா மங்கம்மா சபதம் புகழ் சகலகலா வல்லவன் என்று பெயர் பெற்ற ரஞ்சன் தமிழில் அவரின் கடைசிப் படமாகவும் திருஷ்டிபரிகாரமாகவும் அமைந்ததுதான் மிச்சம்!




தொடரும் 








1 comment:

முருகபூபதி said...

தமிழ் சினிமா தகவல்கள் நிறைந்த இந்த ஆக்கம், பழைய தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு உவப்பானதுதான். ஆனால், பதிவேற்றும்போது நேர்ந்துவிடும் எழுத்துப்பிழைகளை சரிபார்ப்பதும் நல்லது.
முருகபூபதி