ஸ்ரத்பீல்ட் (Strathfield) MP ஜோடி மக்கேவுடன் பேட்டி கண்டவர் - உஷா ஜவகார்

Ms Jodi Leyanne MCKAY, MPA(Syd), GAICD MP

Member Photo
Member of the Legislative Assembly
Member for Strathfield
Shadow Minister for Transport, and Shadow Minister for Roads, Maritime and Freight
Member of the Australian Labor Party

1 நீங்கள் எந்த ஊரில் எந்த நாட்டில் பிறந்தீர்கள்?

நான் கிளவுஸ்டர் (Gloucester) என்ற சிறு நகரில் பிறந்து வளர்ந்தேன்.  கிளவுஸ்டர் என்ற ஊர்  NSW மாநிலத்தில்  உள்ளது. ஏறக்குறைய 2500 பேர் மட்டுமே வாழ்கிறார்கள்.

2 உங்களது பெற்றொரின் பெயர் என்ன?
அவர்கள் எந்த நாட்டில் பிறந்தார்கள்?

என் தந்தையில் பெயர் புஷ் ( Bush )
என் தாயாரின் பெயர் கொலின் ( Coleen )
அவர்கள் அவுஸ்திரேலியாவில் தான் பிறந்தார்கள்.

3 உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.

எனக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

4 உங்களது ஆரம்பகால கல்வியை எந்தப் பாடசாலையில் கற்றீர்கள்?

கிளவுஸ்டர் ஆரம்ப பாடசாலையில் ( primary ) ஆரம்ப கல்வியைப் பயின்றேன்.

5 உங்களது உயர்தர கல்வியை எங்கு கற்றீர்கள்?

கிளவுஸ்டர் உயர் தர பாடசாலையில் (high ) உயர் கல்வியைக் கற்றேன்.

6 உங்கள் டிகிரியை எந்த பல்கலைகழகத்தில் படித்து முடித்தீர்கள்?

யுனிவர்சிட்டி ஒஃப் சிட்னியில் Masters in Public Administration ஐ பெற்றேன்.

7 உங்களது குடும்பம்  மகள் பற்றி கூறுங்களேன்!

பதினெட்டு வயதில் எனக்கு ஒரு அழகான பெறா மகள் ( step daughter ) இருக்கிறாள். அவள் இப்போது யுனிவர்சிட்டியில் படித்து வருகிறாள்.

8 உங்களது சிறுவயது முதலே உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததா? ஏதாவது அரசியல் கூட்டங்களுக்கு உங்கள் பெற்றோருடன் சென்றிருக்கறீர்களா?

என் சிறு வயதில்  எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கவில்லை. ஜேர்னலிஸ்ட் ( Journalist ) ஆக வர விரும்பினேன்.  அதன்படியே ஜேர்னலிஸ்ட் ஆகி  NBN தொலைகாட்சியிலும் வானொலி ஒன்றிலும் வேலை பார்த்தேன்.9 உங்களது குடும்பத்தினர் யாருக்காவது அரசியலில் ஆர்வம் இருந்தது உண்டா?

எனது குடும்பத்தில் ஒருவருக்கும் அரசியலில் ஈடுபாடு இருக்கவில்லை. அப்பா கிளவுஸ்டர் கவுன்சிலில் வேலை பார்த்தார். அம்மா துணிகளை வைத்து சிறு வியாபாரம் செய்து வந்தார். அதனால் தான் எனக்கும் தற்போது சேலைகள் மீது பிரியம் வந்திருக்கிறது.

10 அவுஸ்திரேலிய நாட்டுக்கு இலங்கை, சோமலியா, நைஜீரியா, ஆஃகானிஸ்தான், ஈரான், ஈராக் என பல நாடுகளிலிருந்தும் அகதிகள் தஞ்சம் கோரி வருகிறார்கள். அத்தனை மக்களிலும் நீங்கள் தமிழ் மக்கள் மீது தான் கூடுதலான அக்கறை காட்டுகிறீர்கள் போலத் தெரிகிறது அது ஏன்?

நான் ஸ்ரத்பீல்டை ( Strathfield ) சுற்றியிருக்கும் பகுதிக்கு Member of Parliament ஆக உள்ளேன். இந்தப் பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். எனவே தான் இங்குள்ள தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்துகிறேன்.

11 தமிழர்களிடம் உங்களுக்கு பிடித்த குணம் என்ன?  பிடிக்காத குணம் என்ன?

தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது கொண்ட அதீத பற்று எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர்களது நடனம், நாடகம், தமிழ் கலாசாரம் எல்லாமே என்னைக் கவர்ந்திருக்கின்றன.
தமிழர்களிடம் எனக்குப் பிடிக்காத குணம் என்று ஒன்றும் இல்லை.

12 நீங்கள் எங்கள் ஹோம்புஷ் தமிழ் பாடசாலைக்கு மினிபஸ் ஒன்றை நன்கொடையாக அளித்துள்ளீர்கள்.  அது ஹோம்புஷ் பாடசாலைக்கு மிகவும் உதவியாக உள்ளது.  உங்களுக்கு ஏன் அப்படி அந்த மினிபஸ்ஸை ஹோம்புஷ் தமிழ் பாடசாலைக்கு அளிக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது.

Community Building Partnership program மூலமாக தமிழ் பாடசாலையைச் சேர்ந்தவர்கள் மனு போட்டார்கள். அவர்களுக்கு நான் எனது ஆதரவை வழங்கினேன்.

13 HSC இல் அதாவது பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து திறம்பட சித்தியடையும் மாணவர்களுக்கு நீங்கள் பரிசுகள் வழங்குகிறீர்கள் என அறிகிறேன். அதைப் பற்றிய விபரங்களைத் தரவும்.

அதி கூடிய புள்ளிகளை தமிழ் பாடத்திற்கு எடுத்த மாணவன்/மாணவிக்கு கடந்த 4 வருடங்களாக $1000 பரிசு வழங்கி வருகிறேன். இதுவரை மாணவிகள் தான் அந்தப் பரிசை தட்டிச் சென்றுள்ளார்கள். இனிவரும் காலங்களில் ஒரு மாணவனும் அந்தப் பரிசை வாங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அந்த மாணவன்/மாணவி ஸ்ரத்பீல்ட் ஏரியாவில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கிறது.

14 நீங்கள் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறீhகள்?

தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ளேன். அதைவிட இலங்கைக்கு 25 வருடங்களுக்கு முன்னரும்  சென்ற வருடமும் சென்றிருந்தேன். போரால்  பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது. அங்குள்ள கோயில்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அங்குள்ள மக்களும் என்னோடு வாஞ்சையுடன் பழகினார்கள்.

15 உங்களுக்குத் தமிழ் விளங்குகிறதா?  உங்களுக்குத் தெரிந்த தமிழ் சொற்களைக் கூறுவீர்களா?

எனக்குத் தமிழ் பெரிதாக விளங்கவில்லை. ஆனால் வணக்கம், நன்றி போன்ற தமிழ் சொற்களை நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

16 இங்கு ஸ்ரத்பீல்டை (Strathfield) சுற்றியிருக்கும் மக்களுக்காக Strathfield Connector என்ற மினிபஸ் ஒடிக்கொண்டிருக்கின்றது. மக்கள் அதில் இலவசமாக சென்று வரலாம் என அறிகிறேன். நிறைய வாகனங்கள் ஒடினால் நிறையப புகை வரும். சுற்றாடல் மாசுபடும். சுற்றாடல் மாசுபடுவதைத் தடுப்பதற்காக இந்த Strathfield Connector Serviceஐ ஆரம்பித்தீர்களா? அல்லது காரோட்டத் தெரியாத மக்களின் நன்மைக்காக இந்த சேவையை ஆரம்பித்தீர்களா? மேலும் இது போல் வேறு ஏதாவது திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?

ஸ்ரத்பீல்ட் கவுன்சில் தான் இந்த சேவையை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

17 Burwood, Croydon  போன்ற மற்ற suburbகளிலும் இந்த இலவச போக்குவரத்து சேவை இருக்கிறதா?

இல்லை.

18 இங்கு வாழும் தமிழ் இளைஞர்கள், யுவதிகளுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும்.

19 NSW Community Language Schools இன் கட்டமைப்பலும் நீங்கள் அங்கம் வகிக்கின்றீர்கள்h?

நான் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அவர்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவேன்.

20 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு  என்று புறப்பட்டு வந்து நவ்ரூதீவில் வசிக்கும் தமிழ் அகதிகளுக்கு ஏதாவது உதவி செய்கிறீர்களா?

நவ்ரூ தீவிலிலுள்ள தமிழ் அகதிகளின் நலனை federal government பார்த்து கொள்கிறது. நான் state government க்காக  வேலை செய்கிறேன்.

21 உங்களது பொழுதுபோக்குகள் என்ன?

எனக்கு பொழுதுபோக்குவதற்கு நேரம் கிடைப்பது அரிது. பற்பல விழாக்களில் கலந்து கொள்வதில் நேரம் சந்தோஷமாகக் கழிந்து விடுகிறது.

22 நீங்கள் தியானம் அதாவது மெடிடேஷன் செய்வீர்களா?

தியானம் செய்யாவிட்டாலும் நீண்ட தூரம் நடந்து விட்டு வருவேன்.

23 உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

நிச்சயம் கடவுள் நம்பிக்கை உண்டு. நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பெண். இறைவனைப் பிரார்த்திப்பதால் மனச்சாந்தி கிட்டுகிறது.

24 இப்போது அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் பெண்கள் போதிய முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் என எண்ணுகிறீர்களா? 

இலங்கையில் உள்ள பெண்களுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் பெண்கள் கூடிய முன்னேற்றம் அடைந்து விட்டதாக தோன்றுகிறது.

25 நீங்கள் வெற்றி மிக்க அரசியல் திறமை கொண்ட பெண்மணியாக  திகழ்ந்து வருகிறீர்கள். உங்களது  வெற்றிக்கு  காரணம் அதிர்ஸ்டமா? திறமையா? கடின உழைப்பா? இதில் எதைக் கூறுவீர்கள் அல்லது  இது மூன்றும் சேர்ந்த கலவைதான் உங்கள் வெற்றிக்கு காரணமா?

எனது வெற்றிக்கு முக்கிய காரணம் கடின உழைப்பு. அதை விட என் வேலை மீது நான் கொண்டிருக்கும் அதீத பற்றும் ஒரு காரணமாக அமைகிறது.

26 கல்வி, சுகாதாரம், நிதித்துறை (Education, Health, Finance) என பல துறைகள் இருக்கும் போது நீங்கள் போக்குவரத்து துறையை தேர்ந்தெடுக்கு என்ன முக்கிய காரணம்?

எனது தலைவர் போக்குவரத்து துறையில் வேலை பார்க்குமாறு கூறினார்.

27 யார் வேண்டுமானாலும் அரசியல் களத்துக்கு வரலாமா? இல்லை
political science  படிப்பு படித்தவர்கள் மட்டும் தான் அரசியலுக்கு வர முடியுமா?

யார் வேண்டுமானாலும் அரசியல் களத்துக்கு வரலாம். கட்டாயம் political science படித்து விட்டு தான் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எந்த நிபந்தனையும் இல்லை.

28   நீங்கள் அரசியலுக்கு வந்திருக்காவிட்டால் வேறு எந்தத் துறையில் வேலை பார்க்கச் சென்றிருப்பீர்கள்?

ஜேர்னலிஸ்ட்டாகத் தான் வேலை பார்த்திருப்பேன்

29 அவுஸ்திரேலியாவில் சில வேலைகளில் ஆண்களுக்கு அதிக சம்பளமும் அதே உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு குறைவான சம்பளமும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற அங்கத்தினர்களின் சம்பளத்திலும் இந்த ஆண், பெண் வேறுபாடு உள்ளதா?

அப்படி வேறுபாடு இல்லை. ஆண்கள், பெண்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு சமமாகவே சம்பளம் பெறுகிறார்கள்.

30 உங்களது வேலைப் பளுவுக்கிடையில் இந்தப் பேட்டியை தந்தமைக்கு தமிழ்முரசு அவுஸ்திரேலியா பத்திரிகை சார்பில் மிக்க நன்றி ஜோடி மக்கே!

மிக்க நன்றி உஷா

No comments: