யாழ் பல்கலைகழக பட்டதாரிகள் சங்கத்தின், அரங்காடல் 2019 - குலன் விசாகுலன்


கடந்த சனிக்கிழமை 22 ஆனி 2019,  5.30 மணி இனிய மாலைப்பொழுதில் Silverwaterல் உள்ள  பஹாய் (Bhai Centre  ) மண்டபத்தில், யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின்,  அரங்காடல் 2019 அரங்கேறியது  . நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் குமரசிறி தம்பதிகள்,Dr பரன் தம்பதிகளுடன், தலைவர்  நாகேந்திரம் தம்பதிகள்   குத்துவிளக்கை ஏற்றி   நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.அதனை தொடர்ந்து.தமிழ்மொழி வாழ்த்தும் ஆஸ்திரேலிய தேசிய கீதமும் இசைக்கப்பட விழாவுக்கு வருகை தந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
முதல் நிகழ்வாக கோகுலதர்ஷன்  கர்நாடக சங்கீத அகாடமியின் மாணவமாணவிகள் புல்லாங்குழல் இசையை ஏனைய பக்க வாத்தியங்களுடன் வழங்கினர். அவர்கள் இசைத்த பாடல்கள் அனைத்தும் ஜனரஞ்சிதமான  சங்கீத ராகங்களுடன்  மனதுக்கு இதமாக இருந்தது. ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிடங்கள் அவர்களுடைய இசை வெள்ளத்தில் சபையினர் மூழ்கிகிடந்தனர். புல்லாங்குழல் இசைக் கச்சேரியின் முடிவில், கோகுலதர்ஷன்  சங்கீத அகாடமியின் அசிரியை ஸ்ரீமதி திலகா ஜெயானந்தனை இந்நிகழ்வின்  பிரதான அனுசரணையாளர்களில் ஒருவரும், ஆஸ்திரேலிய யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின் முதல் தலைவருமான டாகடர் பரன் சிதம்பரகுமார் தம்பதிகள் இவர்களை   கௌரவித்தனர்,   
அதனை தொடர்ந்து நிரித்யகிரிகா இந்தியன் நடனபள்ளி பத்மா பாலகுமாரின் மாணவிகளின் நடனவிருந்து  இடம் பெற்றது, நான்கு மாணவிகள் மிகவும் நளினமாக தாளத்துக்கு ஏற்ற லயத்துடன் நடனமாடி வந்திருந்த பார்வையாளர்களின்  மனதை கொள்ளைகொண்டனர். இதன் பின்னர் அஜந்தினியின் மாணவி  நிரோஷினி சுரேஷ் ஒரு அருமையான நடனத்தை வழங்கினார்.  

அதனை தொடர்ந்து யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் நாகேந்திரம் கந்தையா தலைமையுரையில்  வந்தோரை வரவேற்றார் . குறிப்பாக வெளியிடங்களில்   இருந்து வந்திருந்த யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின் மெல்போர்ன்  தலைவர் முரளி அவர்களையும், கன்பராவில் இருந்து வந்திருந்த யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின் ஜெயசிங்கம்  மோகன்  அவர்கள் குடும்பத்தினரையும் வரவேற்றார். மேலும் சங்கத்தின் பணிகளை பற்றி கூறினார் குறிப்பாக கல்வி அறிவு ஒரு சமூகத்திற்கு  எவ்வளவு முக்கியமானது என்றும் கல்வி இல்லாத சமூகம் முதுகெலும்பில்லாத மனிதன் ஆகிவிடும் என்றும், மஹாகவி பாரதியார் பாடிய  "அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ...........அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"  என்பதை முற்கோள் காட்டியும் யாழ் பல்கலைகழக   பட்டதாரிகள் சங்கத்தின் இலங்கையின்  வடக்கு கிழக்கு சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு பணிகளை சபையினருக்கு அறியத்தந்தார்.


அதற்கு அடுத்ததாக விழாவின் பிரதான நிகழ்வான சக்தி இசைக்குழுவின் இன்னிசை மழை இடம்பெற்றது. மிருதங்கம், தபேலா ஒக்டோபாட், ட்ரம்(drum) போன்ற தாள வாத்திய கருவிகளும், கிட்டார்(Guitar) போன்ற தந்தி வாத்திய  கருவிகளும், புல்லாங்குழல் போன்ற காற்று வாத்திய கருவிகளுடன், இசைக்குழுவின்  ஸ்தாபகர் செல்வன் டேவிட்டுடைய Keyboardடுடனும் பாடகர்கள் நிகழ்வை தொடங்கினர். எல்லோருக்கும் மிகவும் அறிமுகமான SBS பிரபா இந்த இசைநிகழ்வை நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கினார். கோபி, கிரி  ஹீதாஷா, காவியா, சத்யன், தக்க்ஷி, விமல் ஆகியோர் பல சிறந்த பாடல்களை அருமையாக பாடினர்.

இவர்களது  பாடல்களுக்கு இடையே சங்கத்தின்  செயலாளர் தேவன் வைரமுத்து நன்றியுரையை வழங்கினார். முதற்கண் வந்திருந்தபார்வையாளர்களுக்கு நன்றி கூறி பின்னர் அனுசரணையாளர்கள், கலைஞர்கள், ஒலி, ஒளி   வழங்கியவர்கள் என்று உதவி வழங்கிய எல்லோருக்கும் , நன்றி கூறினார். அதன் பின்னர் முப்பது நிமிட  இராப்போசன இடைவேளை. TCC அமைப்பினர் சுவையான கொத்து ரொட்டி,  சிற்றுண்டி பொதி, மென்பானங்கள், தேனீர் ஆகியவற்   வினயோகித்தனர். இன்னோரு  யாழ் பல்கலைகழக பழையமாணவர் சமூக சேவை  குழு மென்பான வெற்றுபோத்தல்களை சேகரித்து அதை பணமாக்கும் நிகழ்ச்சிதிட்டத்தின்  ஊடக அதனை சேகரித்து வாழ்வாதார  உதவி புரிந்தனர். எல்லா நிதிகளுமே எமது தாயகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு பயன்படுத்த படுகின்றன.


இடைவேளைக்கு பின் மீண்டும் இசை கச்சேரி தொடர்ந்தது. ஏறத்தாழ இருபது பாடல்களை இனிமையை இனிமையுடன் பாடி சபையை  தமது இசையால் கட்டிபோட்டனர்.  இந்நிகழ்வு ஏறத்தாழ இரண்டரை மணித்தியாலங்கள் பெற்றபோதிலும் சபையினர் மெய்மறந்து பாடல்களை ரசித்தனர்.


இதனை தொடர்ந்து  மீண்டும் பத்மா பாலகுமாரின் மாணவிகள் நால்வரும் இன்னோரு சிறந்த நடனத்தை வழங்கினர். இந்த நடனகுழுவினரை   Titus தம்பதிகள் கௌரவித்தனர்,  அதனையடுத்து நிரோஷி சுரேஷ் மீண்டும் ஒரு நடனத்தை "கொஞ்சம்  நிலவு கொஞ்சம் நெருப்பு" என்ற பாடலுக்கு அருமையாக ஆடினார்.  

அதன் பின்னர் பலராலும் ஆவலாக எதிர் பார்க்கப்பட்ட  திரிசங்கு நாடக குழுவினரின் "நானும் நிரபராதி" என்ற நகைசுவை நாடகம் மேடையேறியது. இந்திரன் தலைமையிலான நாடக குழு பூலோகத்தில் டாக்டர்கள், செய்தி நிறுவனங்கள், சாமியார்கள் செய்யும் கைங்கரியங்களால்  எமலோகத்தில் யமனும் சித்தரகுப்தனும் படும் இன்னல்களை வெகு நகைச்சுவையாக நடித்து காட்டினார்கள். நேரம் ஏறத்தாழ நள்ளிரவான போதும் பலர் நாடகத்தை ரசித்து பார்த்தார்கள்.


--> ஆரம்பமுதல் இறுதிவரை நிகழ்ச்சியை மைக்கேலும், சங்கீதாவும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கினார்கள். விழா முடிவில்  அவர்களை மன்ற தலைவர் நாகேந்திரமும் அவர் பாரியாரும் கௌரவித்தனர். மொத்தத்தில்  இயல், இசை நாடகம் ஆகிய முத்தமிழும் கலந்த  முழுமையான நிகழ்வை பார்த்த மன நிறைவுடன்  சபையினர் விழாமுடிந்து வீடு திரும்பினர்.














No comments: