ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் - 04 ( பகுதி - 02)


மலையக  இலக்கியத்தில்  தெளிவத்தை ஜோசப்பின் வகிபாகம்
துன்பக்கேணியில் உழன்ற மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவுசெய்தவர்
                                                                              முருகபூபதி


தமிழில் சிறுகதை இலக்கியத்தின் மூலவர் .வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம்,  கு..ராஜகோபலனின் சிறிது வெளிச்சம் முதலான சிறுகதைகளையும் இந்த தொடரில்தான் அன்றைய இளம் தலைமுறை படைப்பாளிகள் படித்துத்தெரிந்துகொண்டார்கள்.
 தமிழக, ஈழத்து படைப்பாளிகள் பலரது சிறுகதைகளை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேடி எடுத்து அந்தத் தொடரில் பதிவுசெய்து வந்தார். அதற்காக கொழும்பில் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இவர் செலவிட்ட நேரம் அதிகம். பெறுமதியானது.
 இலக்கியத்தில் பல முகங்கள் இருப்பது போன்று பல முகாம்களும் இயங்குகின்றன. ஆனால்,  எந்த முகாமுடனும் முரண்பாடுகொள்ளாமல், தனது கருத்தை தெளிவாகவே முன்வைப்பார். அதனால் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இலக்கியவாதி.
 மலையக இலக்கியவாதிகள் மாத்திரமன்றி முழு தமிழ் இலக்கிய உலகமுமே இவரை காலம் பூராவும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அளப்பரிய பணியையும் மேற்கொண்டவர்.
 மலையகச்சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் ஆகிய கதைத்தொகுப்புகளை துரைவி பதிப்பகத்திற்காக உருவாக்கிக்கொடுத்தவர். அமரர் துரை.விஸ்வநாதனும் இந்தப்பணியினால் இலக்கிய உலகில் விதந்து பேசப்பட்டவர்.  தெளிவத்தை ஜோசப்பின் வாழ்வே ஒரு இலக்கிய வரலாறுதான்.
மிகவும் பெறுமதிவாய்ந்த இந்த இலக்கியவாதியை மலையக அரசியல் கட்சிகளோ தொழிற்சங்க அமைப்புகளோ தகுந்த முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற மனக்குறை எனக்கு நீண்ட காலமாகவே இருந்திருக்கிறது. கண்களுக்கு அருகில் இருக்கும் கண்ணிமைகள் கண்களுக்குத்தெரிவதில்லை.
தெளிவத்தைக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபின்னர் கொழும்பில் நடந்த பாராட்டுவிழாவில், தெளிவத்தையை வைத்து கதை வசனம் எழுதி புதிய காற்று திரைப்படம் எடுத்த வி. பி. கணேசனின் மகன் மனோ கணேசன் பாரட்டுரை வழங்கியபோது இந்தப்பதிவின் தொடக்கத்தில் வரும் அந்தத் திரைப்படத்தின் காட்சியைத்தான் குறிப்பிட்டுப்பேசியதுடன்,  மலையக மக்களின் அந்த லயன் குடியிருப்பு அவல வாழ்க்கைக்கு இன்னமும் முற்றுப்புள்ளி இடப்படவில்லை என்றார்.
 துன்பக்கேணியில் உழன்ற மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவுசெய்தவர்களின் வரிசையில் தெளிவத்தைஜோசப்பும் ஒருவர்.

 இலங்கையில் மலையக இலக்கியம் குறித்து ஒரு வெளிநாட்டவரோ அல்லது பல்கலைக்கழக மாணவனோ ஆராயப்புறப்படும்பொழுது அவர்களுக்கு உசாத்துணை ஆவணங்களாக இருப்பவை தெளிவத்தை ஜோசப்பின் ஆய்வுகள்தான். இவர் இலங்கை இலக்கிய இதழ்கள் குறித்தும் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சி தொடர்பாகவும் விரிவாக எழுதியிருப்பவர்.
எழுபத்தியைந்து சிறுகதைகளாவது எழுதியிருப்பார் என்பது எனது கணிப்பு. இவரது காலங்கள் சாவதில்லை என்ற நாவலில், ஒரு தோட்டத்தொழிலாளி பாடிச்செல்லும் பாடலை 1977 இல் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி ஐக்கிய முன்னணியின் பிரசாரக்கூட்டங்களில் பேசும்போது பயன்படுத்தியிருக்கின்றேன்.
" யூ. என்.பி வந்தாலும் ஶ்ரீலங்கா( சுதந்திரக்கட்சி)  வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே..."
துலாபாரம் படத்தில் " பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே " எனத் தொடங்கும் பாடல் வருகிறது.  இந்தப்பாடலில் ஒரு வரியைத்தான் அந்தத் தோட்டத்தொழிலாளி அவ்வாறு மாற்றிப்பாடுவான்.

தெளிவத்தையின் தீர்க்கதரிசனம் இன்றும் நிதர்சனமானது.  எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் தெளிவத்தை மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்த  மனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை  நயப்புரைக்காக எடுத்துக்கொண்டேன்.
காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தையும்  வென்றும் வாழும் கதையாக  அது என்னை கவர்ந்தது.


இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.

இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.
பதுளையில் உள்ள தேயிலைத்தோட்டங்களுக்குச்செல்லும் பஸ்வண்டிகளையும் அங்கதச்சுவையுடன்தான் சித்திரிக்கிறார். பஸ்வண்டிகளை மாநகரசபை மின்விளக்குகளுக்கு ஒப்பிடுகிறார். அந்த விளக்குகள் இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல் அணைந்துவிடும். இவ்வளவு விடயங்களும் சிறுகதையின் முதற் பக்கத்திலேயே வந்துவிடுகின்றன. வசனங்கள் சின்னச்சின்ன சொற்களினால் இணைகின்றன. அதனால் நீண்ட வாக்கியங்கள் இல்லை.
கதையின் மூன்றாவது வரி: கை நிறைந்த பைகளும் பை நிறைந்த சாமான்களுமாய்என கவித்துவமாக தொடங்குகிறது. பண்டிகைக்காலத்தில் பஸ் நிலையம் எப்படி இருக்கும் என்பதை ஒரு ஓவியம்போலவே சித்திரிக்கின்றார்.
இலங்கையில் நீங்கள் சிங்களப்பிரதேசங்களில் கவிக்கொலகாரயாவை பார்த்திருப்பீர்கள். பஸ் நிலையங்களில் பிரசுரங்களை வைத்துக்கொண்டு இராகத்துடன் பாடிப்பாடி விற்பார்கள்.
அவற்றில் ஒரு உண்மைச்சம்பவம் பாட்டாக புனையப்பட்டிருக்கும். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கோகிலாம்பாள் கொலைச்சம்பவமும் இவ்வாறு பாடலாக புனையப்பட்டு பஸ்நிலையங்களில் பாடப்பட்டதாக புஷ்பராணி தமது அகாலம் நூலில் பதிவுசெய்துள்ளார்.

இலங்கையில் தம்புள்ள தொகுதி முன்னாள் எம்.பி. டி.பி. தென்னக்கோன் சமூக சேவைகள் அமைச்சராகவும் கலாசார அமைச்சராகவும் இருந்தவர். ஒரு தேர்தலில் தோல்வியுற்றபின்னர் அவரும் பஸ்நிலையங்களில் கவிக்கொல விற்று பாடிக்கொண்டிருந்தார்.
தெளிவத்தையின் கதையிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது. ஒரு தெருப்பாடகன், பீடா வெற்றிலை விற்பவர், பேனை கண்ணாடி விற்பவர், பொம்பாய் நைஸ் மற்றும் டொபி விற்பவர்கள் இவர்களின் கூக்குரலுக்கு மத்தியில் ஐயா தர்மஞ் சாமி என்ற பிச்சைக்காரனின் குரலும் கேட்கிறது. எப்படி சன்னமாககிணற்றுள்ளிருந்து கேட்பது போல். என எழுதுகிறார். கதைசொல்லிக்கு சிகரட் தேவைப்படுகிறது. ஆனால்,  அவர் கேட்ட சிகரட் நடைவியாபாரியிடம் இல்லை.
தருமஞ்சாமிமீண்டும் சன்னமான குரல். காட்சியில் ஒரு கமிரா கோணம். பஸ்ஸில் நிற்கும் ஒருவர்அட ராமா பிச்சையா கேட்கிறாய் இந்தச்சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார் காதில் விழும். சற்றுப்பலமாகக் கத்தேன்என்கிறார். அவரிடம் கருணை இருப்பதாக கதை சொல்லி நினைக்கிறார். ஆனால்,  சொன்னவரின் கை மட்டும் சட்டைப்பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்துவிடுவோம் என்ற எண்ணமாக இருக்கும் எனச்சொல்கிறார் கதைசொல்லி. 12 வரிகளுக்குள் ஒரு திரைப்படக்காட்சியே வந்துவிடுகிறது. அனுபவித்துப்படித்துப்பாருங்கள்.
அந்த பஸ்ஸில் எத்தனையோ பாத்திரங்கள், ஆனால் அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். கதைசொல்லி அவனது தோற்றத்தை வர்ணிக்கிறார். சிகரட்டுக்கு வைத்திருந்த ஒரு ரூபாவில் சிகரட் வாங்கியிருந்தால் அது எவருக்கும் பிரயோசனமில்லாமல் புகைந்துபோயிருக்கும். தொலையட்டும் பாவம் என்று அதனை அந்தப்பிச்சைக்காரனுக்கு கொடுக்கிறார்.
இதனைப்பார்த்த ஏனைய பயணிகள் இப்பொழுது பிச்சைக்காரனை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒரு ரூபாய் பிச்சை இட்ட கதைசொல்லியை விமர்சிக்கிறார்கள். பஸ் கிளம்பிவிட்டது. ( இந்த வார்த்தையையும் கவனியுங்கள். கிளம்பிவிட்டது என்ற மொழிவழக்கு மலையகத்திலிருக்கிறது. எம்மில் பெரும்பாலானோர் புறப்பட்டுவிட்டது என்போம், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டை விட்டு வெளிக்கிடும்பொழுது இறங்கிவிட்டோம் எனச்சொல்வார்கள். பல சொல் ஒரு பொருள்கிளம்பியாச்சு- புறப்பட்டாயிற்றுவெளிக்கிட்டோம்இறங்கிட்டோம்….இன்னும் இருக்கலாம்)
கதையில் மீண்டும் மற்றுமொரு கமிராக்கோணம்: இன்று தீபாவளி என்று அந்தக்காட்சி தொடங்குகிறது.
எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்:
கிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக்கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன. விடியுமுன்னர் குளித்துவிடவேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது என தெளிவத்தை எழுதுகிறார். மலையகத்தின் பனிக்குளிரை சில வாக்கியங்களிலேயே சித்திரித்துவிடுகிறார்.
ஒரு கதையின் காட்சியை பாத்திரங்கள் பேசும் உரையாடல்களின் மூலமாகவும் சித்திரிக்க முடியும். சம்பவக்கோர்வையினூடாகவும் சொல்ல முடியும். நீட்டி முழக்காத செப்பனிட்ட இறுக்கமான சொற்களிலும் படிமமாக காண்பிக்கமுடியும். தெளிவத்தையின் படிமக்கலை அவரது கைவந்த கலை.
தீபாவளி வந்தால் சின்னஞ்சிறுசுகளுக்கு மட்டுமல்ல லயத்தில் அலையும் நாய்களுக்கும் கொண்டாட்டம்தான் என்கிறார். அங்கே மனிதர்களையும் நாய்களையும் மட்டும் காட்சிப்படுத்தாமல் கடவுளையும் அழைத்துவிடுகிறார். கடவுள் இருக்கிறாரா? என நாத்திகம் பேசிய மறுகணமே இருக்கிறார். உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தானே வேண்டும் என்பது கடவுளின் சித்தமாக்கும் என்று வேதாந்தம் சொல்லப்படுகிறது.
கதைசொல்லி தீபாவளிக்கு முதல் நாள் பஸ் நிலைய காட்சியையும் தீபாவளியன்று தோட்ட லயத்துக்காட்சிகளையும் மனதில் அசைபோடுகிறார். மறுநாள் மீண்டும் பஸ்நிலையம் வருகிறார்.
தீபாவளிக்கு முதல் நாள் கண்ட பிச்சைக்காரனைத்தேடுகிறார். அவனைக்காணவில்லை. பஸ் நிலைய ஹோட்டல் முதலாளி ஏற்கனவே நண்பர். பேசுவதற்கு பிடித்துக்கொள்கிறார். அவரும் முதல் நாள் ஒரு ரூபா கொடுத்து வடை கேட்ட அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் விமர்சனம் செய்கிறார். அங்கே தேநீர் தயாரிப்பவனும் கடுமையான வார்த்தைகளினால் அந்தப்பிச்சைக்காரனை திட்டுகிறான்.
பிச்சைக்காரனுக்கு எப்படி ஒரு ரூபா கிடைத்திருக்கும் என்பது ஹோட்டல் முதலாளியினதும் தேநீர் தயாரிக்கும் சர்வரினதும் சந்தேகம்.
ஆனால்,  அதனை தீபாவளிக்கு முதல் நாள் அந்த ஒரு ரூபாவை பிச்சையிட்ட கதைசொல்லி- உளுத்துப்போயிருக்கும் ஓட்டைக்குடிலுக்கு ஓடு போடப்போய் குடிலையே உடைத்துவிட்ட குற்ற உணர்வுடன் நடக்கிறார். பிச்சைக்காரனுக்கும் முதலாளிக்கும் தனக்கும் இடையே இருப்பது என்ன என்ற சுயவிசாரணையிலும் சுயவிமர்சனத்திலும் கதைசொல்லி ஈடுபடுகிறார்.

தெளிவத்தையின் பார்வையில் மனிதர்கள் நல்லவர்கள்தான். ஆனால் காலமும் சூழலும் சந்தர்ப்பங்களும்தான் அவர்களை கெட்டவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. எத்தனை கோணம்? எத்தனை பார்வை? இந்த வாழ்க்கையில்தான் எத்தனை முடிச்சுகள்? இதனைத்தான் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச்சொல்கிறோமோ?
1972 இல் தெளிவத்தையுடன் எனக்குத் தொடங்கிய நட்புறவு இற்றைவரையில் நீடிக்கிறது. நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட இந்த உறவு எந்தவிக்கினமும் இல்லாமல் தொடருகிறது. இலக்கிய உலகில் இவ்வாறு நட்புறவு நீடிப்பது அபூர்வம். என்னுடன் மட்டுமல்ல  எவருடனும் தெளிவத்தை நட்பை ஆரோக்கியமாகப்பேணும் இயல்புகொண்டவர்.
இலங்கையில் எழுத்தாளர்கள், சிற்றிதழ் ஆசிரியர்கள், தேசிய ஊடகங்களின் ஆசிரியர்கள், கலை, இலக்கியவாதிகள், சமூகப்பணியாளர்கள் உட்பட அனைவராலும் நேசிக்கப்படும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தற்போது 85 வயதும் கடந்துவிட்டது.
இன்றும் வாசிக்கிறார். எழுதுகிறார். இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசுகிறார். பஸ்களில்தான் பெரும்பாலும் பயணிக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் இருதயத்தில் பைபாஸ் சத்திர சிகிச்சையும் செய்துகொண்டார். எனினும் இளமைத்துடிப்புடன் இயங்கி, இளைய தலைமுறை எழுத்தாளர்களையும் ஊக்குவித்துவருகிறார்.
ஈழத்து இலக்கியத்தின் ஒரு பொக்கிஷமான தெளிவத்தை அவர்களுக்கு நடு இணைய இதழின் ஊடாக வாழ்த்துத் தெரிவிக்கின்றேன்.
( நன்றி : நடு இணைய இதழ் பிரான்ஸ் - ஜூன் 2019)


                 
-->
No comments: