இலங்கைச் செய்திகள்


வீட்டுக்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நடந்து சென்றவர் மீது வாள்வெட்டு

வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்

மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்றுக்கொண்ட ஹலீம், ஹாசிம்

மலை­ய­கத்தில் நவீன் வழங்கிவைத்த வீட்டு அனு­ம­திப்­பத்­திரங்களிற்கு திகாம்­பரம் கடும் எதிர்ப்பு

யாழில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் ; இதுவரை 11 பேர் கைது

இலங்கை தாக்குதல்கள் குறித்து ரஸ்யா புதிய தகவல்

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்



வீட்டுக்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

17/06/2019 கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
குறித்தச்  சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களை நேரடிப் பேச்சுக்கு வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அழைப்புவிடுத்திருந்த நிலையில் வன்முறைக் கும்பல் ஒன்று இந்தத் துணிகரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருட்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர்.
மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக இன்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள், மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
இதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்றி எந்த இடத்திலும் பேச்சு நடத்த தான் தயார் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்திருந்தார்.
அவர் அழைப்புவிடுத்து மூன்று தினங்களுக்குள் பகல்வேளை வீதியால் பயணித்த இந்த தாக்குதலை வன்முறைக் கும்பல் ஒன்று முன்னெடுத்துள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் சென்ற மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்கள் தனது நடவடிக்கையால் திருந்தி வாழ்கின்றனர் எனவும் அதற்கு அவர்களது பெற்றோர் தனக்கு நன்றி தெரிவித்திருந்தனர் என்றும் கூறிவிட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







நடந்து சென்றவர் மீது வாள்வெட்டு

17/06/2019 யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானவர் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலையின் பின்பகுதி வெட்டுக் காயமடைந்த குறித்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 






வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

19/06/2019 இந்திய அரசின் 45 இலட்சம் நிதியுதவியில் வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இன்று காலை (19) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் இதன்போது கலந்துகொண்டார். இந்த நிகழ்வில்  ஆளுநரினால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
நன்றி வீரகேசரநன்றி வீரகேசரி 












பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்

19/06/2019 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று காலை கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் நடைபெற்றது.
கல்முனையில் மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இணைவாக இந்த போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று காலை இந்த கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் காந்திபூங்காவில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையம் வரையில் சென்று மீண்டும் காந்திபூங்காவினை வந்தடைந்தது.
அதனைத்தொடர்ந்து காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறு அரசாங்கத்தினை வலிறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என்பதான பதாகைகளையும் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  நன்றி வீரகேசரி 






மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்றுக்கொண்ட ஹலீம், ஹாசிம்

19/06/2019 தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 
ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த இருவரும் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது குறித்து பிரதமர் ரணில் இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். 
இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக விலகியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது உசிதமானது அல்லவென ரவூப் ஹக்கீம் இதன்போது ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் முஸ்லிம் மக்கள் அரசின் மீது வெறுப்படையும் நிலை ஏற்படலாம் என்பதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கூட்டு ஒற்றுமையை அது பாதிக்குமெனவும் ஹக்கீம் ரணிலிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது நன்றி வீரகேசரி 








மலை­ய­கத்தில் நவீன் வழங்கிவைத்த வீட்டு அனு­ம­திப்­பத்­திரங்களிற்கு திகாம்­பரம் கடும் எதிர்ப்பு

19/06/2019 மலை­ய­கத்தில் கடந்த காலத்தில் அமைக்­கப்­பட்ட 12 ஆயிரம் வீடு­க­ளுக்கு 99 வருட குத்­தகை அடிப்­ப­டை­யி­லான அனு­மதிப் பத்­தி­ரங்கள் வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை நேற்று பெருந்­தோட்ட அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­ததை அடுத்து அதற்கு தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் கடும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது மலை­ய­கத்தில் கடந்த காலத்தில் அமைக்­கப்­பட்ட 12 ஆயிரம் வீடு­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கு­வது தொடர்பில் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க சமர்ப்­பித்தார். 
இதில் 99 வருட கால குத்­தகை அடிப்­ப­டையில் அனு­மதிப் பத்­தி­ரத்தை வழங்­கு­வது என்றும் சகோ­த­ரர்­க­ளுக்குள் வீடு­களை விற்­பனை செய்ய முடியும் என்றும் கோரப்­பட்­டி­ருந்தது. 
இந்த அமைச்சரவைப் பத்­தி­ரத்­திற்கு அமைச்சர் திகாம்­பரம் மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோர் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளனர். 
புதி­தாகக் கட்­டப்­படும் வீடு­க­ளுக்கு காணி உறு­திப்­பத்­திரம் வழங்கும் நடவ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவ்­வாறு இந்த வீடு­க­ளுக்கும் உறு­திப்­பத்­தி­ரங்கள் உரியவகையில் வழங்­கப்­படவேண்டும். இதனை விடுத்து தற்போதைய செயற்பாடுகளை குழப்பும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது. மலையக மக்களுக்கு காணிகள் சொந்தமாக்கப்படும் வகையிலேயே உறுதிப் பத்திரம் வழங்கப்படவேண்டும் என்று அமைச்சர் திகாம்பரம் இதன்போது தெரிவித்துள்ளார்  நன்றி வீரகேசரி 







யாழில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள் ; இதுவரை 11 பேர் கைது

19/06/2019 கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு  முற்படுத்தப்பட்டனர். 
அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
அத்துடன், கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனுரொக் என்ற இளைஞர் நேற்று  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரையும் எதிர்வரும் வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்ச வனப்பதியில் நேற்றுமுன்தினம் மாலை வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட தளபாடங்களை அடித்து உடைத்து பெற்றோல் ஊற்றிக் கொழுத்தினர்.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியது. அவர்கள் வினோதன் (ஆவா) என்பவரின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், தாக்குதலுக்குள்ளான வீடு தனுரொக் என்றழைக்கப்படுபவரின் உறவினர்கள் வசிக்கும் வீடு என்பதுடன் அங்கு நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், கொக்குவில் சந்திக்கு வந்து சில நிமிடங்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலையடுத்து மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கு இருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் வாள்களால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.
அதனையடுத்து சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது. அந்த வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், கடந்த பெப்ரவரியில் கொக்குவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வேன் உள்ளிட்டவற்றுக்கு தீவைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளி வந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களையடுத்து கொக்குவில் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில்  விளையாடிவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய 10 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஆவா குழுவில் முன்பு இருந்து அடாவடிகளில் ஈடுபட்டு வந்த அசோக் மோகன் என்பவரும் அடங்குகிறார் என்று பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். சிலர் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு ஒன்றில் முன்னிலையாகி வீடுதிரும்பிய போது, அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு  8.30 மணியளவில் முற்படுத்தப்பட்டனர். சந்கேதநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.
இதேவேளை, 11 சந்தேகநபர்கள் தொடர்பிலும் தகுந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் கைது செய்துள்ள பொலிஸார், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க வழிவகை செய்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரும்பலான வன்முறைச் சம்பவம் தொடர்பிலான வழக்குகள் பொலிஸாரின் இந்தச் சோடிப்பு நடவடிக்கைகளால் தோல்வியுற்றன. அதனால் உண்மையான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விடுபடும் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 






இலங்கை தாக்குதல்கள் குறித்து ரஸ்யா புதிய தகவல்
20/06/2019 சிரியா ஈராக்கில் முன்னர் தீவிரமாக செயற்பட்ட ஐஎஸ் உறுப்பினர்களே இலங்கையில் குண்டுவெடிப்புகளை திட்டமிட்டார்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் உவா நகரில் இடம்பெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டு இலங்கையில் உள்ள சர்வதேச ஜிகாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் இலங்கை திரும்பிய உள்ளுர் தீவிரவாத குழுவொன்றே குண்டுவெடிப்புகளை திட்டமிட்டது எனவும் ரஸ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னர் ஐஎஸ் அமைப்பினர் உறுப்பினர்களை சிரியா ஈராக்கிற்கு வருமாறு அழைத்தனர் தற்போது சொந்த நாடுகளில் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய நாடுகளிற்கும் பொருந்தக்கூடியவை எனவும் ரஸ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்  நன்றி வீரகேசரி 










கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

20/06/2019 கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து கண்டன  ஆர்ப்பாட்டம்  ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இன்று (20-06-2019)  கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர்  பேரணியாக மாவட்டச்  செயலகம் வரை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம்  கையளிக்கப்பட்டது.
புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் பொது மக்கள் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என்று பேசியிருந்தனர். இதற்கு எதிராகவே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  கௌரவ சிறிதரன், அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள் எங்கள் வேலைக்கு அடிப்படைத் தகுதியுண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தவிர, தகுதிகான காலத்தை பெற்றும்  தகுதியில்லை  என கூறுவது நியாயமா? கல்வி இராஜாங்க அமைச்சரே! பாராளுமன்ற உறுப்பினரே தகுதியில்லை என கூறுவதற்கு  என்ன ஆதாரம் உண்டு? மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் தகுதியில்லை என்ற பொய்யுரைக்கு மன்னிப்புக் கேள்? கௌரவ சிறிதரன் அவர்களே, கௌரவ விஜயகலா அவர்களே  எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி  என்ன? கை வைக்காதே கை வைக்காதே சமுர்த்தி படையணியில் கை வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, அதன் பொருளாளர், சிளிநொச்சி சமுர்த்தி சங்கத்தின் தலைவர் ஆகியோர்  கருத்து தெரிவிக்கையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் நிறைவான தகுதியுடன் காணப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் தகுதிகான் காலம் நிறைவுற்று அதற்கான உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் அவர்களை தகுதியில்லை என கூறுவதனை நாம் வன்மையாக கண்டிருக்கின்றோம்,  இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா ஆகியோர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தங்களின்  அரசியல் இருப்புக்கான பொய்யான கருத்துககைள கூறுவதனை நிறுத்த வேண்டும், அவர்களை ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் இலங்கையில் உள்ள எல்லாத பதவிகளுக்கும் அடிப்படைத் தகுதியுண்டு அது நாட்டின் சட்டம். சாதாரண சிற்றூழியர்கள் கூட தரம் எட்டில் கல்வி கற்றிருக்க  வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த அடிப்படைக் கல்வித் தகுதியும் கேட்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் சாதாரண அடிப்படைத் கல்வித்தகுதியே இல்லாதவர்கள் எனத் தெரிவித்தார்கள்.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர்  கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர் கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி








No comments: