குறைகளைவோம் வாருங்கள் ! - மகாதேவஐயர் ..... ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


image1.JPG         காதலித்துக் கைபிடித்து கல்யாணம்  செய்துநின்று 
         கருவளரக் காரணமாய்  காதலினைப் பரிசாக்கி 
         பிள்ளைதனைப் பெற்றெடுத்து பெருவிருந்து கொடுத்தாலும்
         வேறொருபால் மனம்நாடல் விளையாட்டாய் அமைகிறதே  ! 

         நம்பிவந்த பெண்ணவளை நம்பவைத்து நம்பவைத்து
         நயவுரைகள் சொல்லியவள் நரம்பெல்லாம் உணர்வேற்றி 
         இவ்வுலகில் நீயின்றேல் என்றுமே வாழேனென்று 
         பொய்யுரைத்து பொய்யுரைத்து போக்குகின்றார் பலரிப்போ ! 

             காவியத்து நாயகர்கள் காதலுரை பகர்வதுவும் 
             காவியத்து நாயகிகள் கண்ணீரில் மிதப்பதுவும் 
             காவியத்தில் கண்டுவிட்டு காவியத்தை பாராட்டி
             காவியத்தை வியந்தெழுதி காட்டிடுவோம் புலமைதனை ! 

             வெள்ளித்திரை நாயகர்கள் விதம்விதமாய் ஏமாற்றி
             கள்ளத்தனம் செய்வதையும் கண்கொட்டா பார்த்துநிற்போம் 
             உள்ளமதில் அவர்நடிப்பை உவந்தேற்றி பாராட்டி
             கள்ளத்தனம் காட்டியதை கருத்தைவிட்டே அகற்றிநிற்போம் ! 


             உண்மையிலே நடக்கின்ற ஒழுக்கமற்ற செயல்கள்தமை
             செய்கின்றார் முகத்திரையை கிழித்தெறிந்து விடல்வேண்டும்
             பெண்மைதனை சீரழிக்கும் பேய்க்குணத்தைக் கொண்டாரை 
             கண்ணெதிரே நிறுத்திவைத்து கயமைதனைக் களையவேண்டும் ! 

          பெற்றவளும் பெண்தானே பேணிநிற்கும் சகோதரியும் பெண்தானே 
           நற்றெய்வம் பெண்தானே என்பதையும் மறந்துவிட்டார் 
           குற்றமது செய்கின்றோம் எனுமுணர்வை அறுத்துவிட்டார்
           குற்றமதை இடித்துரைத்து  குறைகளைவோம்  வாருங்கள்  !                           
        No comments: