உலகச் செய்திகள்


மோடி அரசாங்கத்தின் ஊழல் குறித்த நூலிற்கு தடை

இன்று முதல் அமுலாகிறது புதிய சட்டம் ; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை சீனா அழிக்க முடிவு

அரைநிர்வாண கோலத்தில் விசித்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிதாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டு

கின்னஸ் சாதனைப் படைத்த இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே

சீன கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  எச்சரிக்கை

பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு



மோடி அரசாங்கத்தின் ஊழல் குறித்த நூலிற்கு தடை

03/04/2019 ரபேல் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய நூலிற்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ரபேல் ரக விமானங்களை கொள்வனவு செய்வதில் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி இதில்  பிரதமர் மோடிக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது
இந்நிலையில் நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல் என்ற பெயரில் எழுத்தாளர் விஜயன் நூலொன்றை எழுதியுள்ளார்.
இந்த நூலை நேற்று வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இந்தியாவின் தேர்தல் ஆணையம் இந்த நூலிற்கு தடைவிதித்துள்ளதாக தெரிவித்த தேர்தல்கால பறக்கும் படையினர் குறிப்பிட்ட நூலை அதனை வெளியிட்ட பாரதி பதிப்பகத்திலிருந்து பறிமுதல் செய்தனர்
இதேவேளை இவ்வாறு நூலை பறிமுதல் செய்வது ஜனநாயகவிரோத சட்டவிரோத நடவடிக்கை என இந்து ராம்; கருத்து வெளியிட்டுள்ளார்.
இது கருத்துசுதந்திரம் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என ராம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட நூலை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது  நன்றி வீரகேசரி










இன்று முதல் அமுலாகிறது புதிய சட்டம் ; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

03/04/2019 தென்கிழக்காசிய நாடான புரூணையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனைக்குட்படுத்தும் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை புரூணை இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய சட்டத்தின் நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இப்புதிய மரண தண்டனைச் சட்டமானது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.
புரூணையின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களை தூண்டிவிட்டுள்ளதோடு,புரூணையில் ஓரினச்சேர்க்கை ஏற்கனவே சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் குற்றமாகும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 









3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை சீனா அழிக்க முடிவு

03/04/2019 அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது.
அருணாசலப் பிரதேச மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அந்த மாநிலத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்து சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 
அதேபோல் தைவான் தீவையும் சீனா தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்த போக்கால், அந்நாட்டுக்கும் இந்தியா, தைவான் நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்நிலையிலேயே அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது. 
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளை தவறாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்டிருந்த உலக வரைபடம், தைவானை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட வரைபடம் என மொத்தம் 30,000 உலக வரைபடங்களை சீனா கடந்த மாதம் அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










அரைநிர்வாண கோலத்தில் விசித்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

02/04/2019 இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசி எதிர்ப்பில் ஈடுபட்டதைப்போன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர். 
பிரித்தானியாவில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் அரைநிர்வாண கோலத்தில் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளது. 
பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது தொடர்பில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே குறித்த குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

பாராளுமன்றத்தின் ஒழுக்க விதிகளை மீறி குறித்த குழுவினர் அரைநிர்வாண கோலத்தில் பின்புறத்தைக் காட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
குறித்த குழுவினர் பாராளுமன்றத்தின் விவாத்திற்கு பாதகம் விளைத்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. "காலநிலை நீதிக்கான போர்" என்ற தொனிப்பொருளில்  ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர். 
பாராளுமன்றத்தில் பொதுமக்கள் கலரியில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர். குறித்த விவகாரம் பாராளுமன்றத்துக்கு பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர். 
பாராளுமன்றத்தில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 12 பேரையும் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 










 நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிதாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டு

04/04/2019 நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருப்பதாக நியூசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நியூசிலாந்து பொலிஸார் தெரிவிக்கையில்,
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்திய குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவுள்ளார்.
மேலும் 36 பேரை கொலைசெய்ய முயன்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
இந்நிலையில் வழக்கில் அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் குற்றவாளி பயன்படுத்திய  தானியங்கி துப்பாக்கி மற்றும் ரைபிள் ரக துப்பாக்கிகளை  பாரதூரமான  துப்பாக்கிகளுக்கான விதிகளின் கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக  நியூசிலாந்து  அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











கின்னஸ் சாதனைப் படைத்த இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே

05/04/2019 இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ரசிகர்களின் ஆதரவைக் குவித்த இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே தம்பதியின் சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது.
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே தம்பதியர் கடந்த செவ்வாய்க்கிழமை முதன் முதலில் தங்களுக்கான இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினர்.
தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கதைத் தொடங்கிய உடனேயே 1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர இணைந்தனர்.
" sussexroyal " என்ற இந்த அரச குடும்ப தம்பதியரின் இன்ஸ்டாகிராம் கணக்கு படைத்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகம் இச்சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளது.
மூன்று நாட்களில் தற்போது 3.8 மில்லியன் பேர் இந்த அரச குடும்பத்து தம்பதியரை பின் தொடர்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடத்தான் என இந்தத் தம்பதியர் என இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
இதேவேளை ஹரியும் மனைவியும் 33000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் செலவில் ஹம்சயரில் உள்ள ஹம்சயரில் உள்ள  ஹெக்பீல்ட் பிளேஸ் ஆடம்பர ஹோட்டலில் இருவரும் தற்போது தங்கியுள்ளனர். குறிப்பிட்ட ஹோட்டலுக்கு சர்வதேச அளவில் முக்கியமான பிரமுகர்கள் பலர் விரும்பிச்செல்வது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











சீன கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  எச்சரிக்கை

05/04/2019 பிரச்சினைக்குரிய தீவுப் பகுதியிலிருந்து சீனா தனது கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாகவே தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினைக்குரிய இடங்களில் சீனா அத்துமீறி நுழைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனாவுடன் பிலிப்பைன்ஸ் போர் செய்தால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரவிக்கையில்,
''நான் எந்தக் கோரிக்கையையும், பிச்சையையும் எடுக்கவில்லை. என்னிடம் இராணுவம் உள்ளது.  நீங்கள் தொட்டீர்கள் என்றால் இது வேறு கதையாகும். நான் எனது வீரர்களை தற்கொலைப் படை தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறுவேன்'' என தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

06/04/2019 பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரச அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்படும் மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர். 
பாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்குமாறு டில்லிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையகத்திடம் இந்திய அரசு அண்மையில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
பாகிஸ்தான் சிறைகளில் 385 இந்திய மீனவர்கள் உள்ளனர். அவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர அவசர நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளது. என இந்திய வெளிவிவகாரக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 
இம்மாதத்தில் மொத்தம் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது எனவும் வாரத்திற்கு 100 கைதிகள் என்ற அடிப்படையில் ஏப்பரல் 29 ஆம் திகதி அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 









No comments: