வழியெனக்குப் பிறந்திடுமா ? மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மாடியொடு வீடிருந்தும்  
 மனநிறைவு வருகுதில்லை 
 கோடிபல வந்தாலும் 
 குறைமனதில் நிறைகிறது 
 நாடிவரும் நண்பருமே 
 நலனுரைக்க வகையற்றார் 
 வாடிநின்று வதங்குகிறேன்
 வழியெனக்கு பிறந்திடுமா 
என்செல்வம் தனையெண்ணி 
எல்லோரும் நாடுகிறார்
 என்மனதை பார்ப்பதற்கு
 எவர்மனமும் விரும்பவில்ல  
சுயநலமாய் சிந்தித்து
சுயலாபம் விரும்புகிறார்
சுத்தமுடை  மனம்தேட
நித்தமுமே  அலைகின்றேன் 

 தத்துவங்கள் சொல்லுகிறார்
  சித்தமதில் கொள்ளாமல் 
  அர்த்தமின்றி பழகுகிறார்
 அரிதாரப் பூச்சுடனே 
  எப்பவுமே தம்சுகத்தை
  தப்பாமல் காத்திடுவார்
  பக்கமதில் வரும்வேளை
  பதறிநான் நிற்கின்றேன் 

No comments: