பயணியின் பார்வையில் - அங்கம் -01 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் வாழ்க்கை ! "ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் - போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்குதல் இல்லாத அமைதி ஞானம்" - மகாகவி பாரதி - முருகபூபதி


இந்த ஆண்டு பிறந்தவேளையில், எனது பிள்ளைகளின் குடும்பத்தினருடன் ஒன்றுகூடல் நடந்தது. இந்நிகழ்வு எமது வருடாந்த சந்திப்புகளில் ஒன்று. பெரியவர்கள் முதல் பேரக்குழந்தைகள் வரையில்  மலர்ந்துள்ள புதிய ஆண்டில் என்ன என்ன செய்யவிருக்கிறோம் என்பது பற்றி பேசிக்கொண்டோம்.
இரண்டாவது மகள், என்னை எப்போதும் செல்லமாக " Pathy "என்று அழைப்பவள். " Pathy இலிருந்து தொடங்குவோம் " என்றாள்.
" பிரான்ஸ் செல்லவிருக்கின்றேன்" எனச்சொன்னதும், எனது மனைவி உட்பட அனைவரும் என்னை ஆச்சரியத்துடன் நோக்கினார்கள். பயணத்தின் காரணத்தை கேட்டார்கள். "பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, இலங்கை எங்கும் செல்லவிருக்கின்றேன்" எனச்சொன்னதும், " என்ன ஜோக்கா? " என்றார்கள்.
 " உண்மைதான் எனது ஆசானுக்கு பிரான்ஸில் நூற்றாண்டு விழா எடுக்கிறார்கள். என்னையும்  அழைத்துள்ளனர்" எனச்சொன்னதும், " ஆசான் என்றால், யார்? எங்களுக்கு புரியும் தமிழில் சொல்லுங்கள்" என்றனர் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வதியும் பிள்ளைகள். தமிழ் ஆசிரியையாக இருந்த எனது மனைவி சிரிப்பை அடக்குவது தெரிந்தது.  
அவர்களுக்கு கதைசொல்லியாக மாறி, எனக்கு 1954 இல் அரிச்சுவடி சொல்லித்தந்த ஆசான் பண்டிதர் கதிரேசு மயில்வாகனன் அவர்களைப்பற்றிச்சொன்னேன். எனது கதை கேட்டவர்கள், வியப்பு மேலிட ஏக குரலில், " இன்னுமா உங்கள் ஆசிரியர்களை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்!? நீங்கள் அபூர்வமானவர்தான் " என்றனர்.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கம்தான் வாழ்க்கை! எனது பதிவுகளில் இந்த வசனம் தவிர்க்கமுடியாதது. 1954 ஆம் ஆண்டு விஜயதசமி காலத்தில் எங்கள் ஊரில் பண்டிதர் அவர்களின் மடியில் அமர்ந்து தமிழ் எழுதபடிக்க கற்றுக்கொண்டதும், அன்று தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயம் 32 குழந்தைகளுடன் உதயமானதும், சேர்விலக்க பதிவேட்டில் முதல் மாணவனாக எனது பெயர் எழுதப்பட்டதும் எதிர்பாராத நிகழ்வுகள்தான்!

சுற்றிலும் கத்தோலிக்க தேவாலயங்களும் கத்தோலிக்க பாடசாலைகளும் எழுந்திருந்த பிரதேசத்தில் பிறந்த - எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் சைவத்தமிழ்க்குழந்தைகளுக்கென ஒரு கல்வி நிலையம் தேவை என்று அங்கு வாழ்ந்த முன்னோர்கள் கனவு கண்டார்கள்.
அவர்களின் கனவை நனவாக்குவதற்கு அக்காலப்பகுதியில் முயன்றவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுருட்டுக்கைத்தொழிலில் ஈடுபட்டவர்களும் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தொழில் நிமித்தம் குடியேறியவர்களும் நீண்ட நெடுங்காலமாக அங்கு வாழ்ந்தவர்களும்தான்.
எனினும் அவர்களின் கனவு நனவாவதற்கு தூண்டுகோளாகவிருந்தது கடற்கரை வீதியில் அமைந்த இந்து வாலிபர் சங்கம். அதனை உருவாக்கிய முன்னோடிகளில் எனது தாய் மாமனார் சுப்பையா, அவரது தாய் மாமனார் வெற்றிவேல், மற்றும் சுருட்டுக்கம்பனிகள் நடத்திய செல்லையா, பீதாம்பரம், தனுஷ்கோடி, கார்த்திகேசு, மற்றும் அக்காலப்பகுதியில் இளைஞராகவிருந்த எனது மற்றும் ஒரு உறவினரான மயில்வாகனன் மாமா உட்பட பலர்.
நீர்கொழும்பு பிரதேச வர்த்தக பிரமுகர் இ. நல்லதம்பி, மற்றும் தொழில் நிமித்தம் வடக்கிலிருந்து வந்து அங்கு குடியேறிய சண்முகநாதன், சுரேந்திரன் உட்பட பலர் இந்து வாலிபர் சங்கத்தில் அங்கம் வகித்தபோது, அதன் தலைவராக பதவியேற்றிருந்தவர் எஸ்.கே. விஜயரத்தினம். இவர் அக்காலப்பகுதியில் நீர்கொழும்பு நகரபிதாவாகவுமிருந்தார்.
( இவர் தற்போதைய இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி மற்றும் ஐ.நா. சபையின் சிறுவர்களுக்கான துறையில் பணியாற்றிய ராதிகா குமாரசாமி ஆகியோரின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தகுந்தது)
1950 களில் எங்கள் ஊரில் ஒரு தமிழ் மேயர் இருந்தார் என்பது வரலாறு!
இச்சங்கத்தினரின் தீர்மானத்தின் பிரகாரம் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று தொடங்கப்பட்ட வித்தியாலயத்தில் நான் இணைத்துக்கொள்ளப்பட்டபோது எனக்கு மூன்றரை வயதும் பூர்த்தியாகியிருக்கவில்லை.
அன்றைய தினத்திற்கு முதல்நாள் நான் பிறந்த வீட்டுக்கு முன்னாலிருந்த ஶ்ரீ சிங்கமாகாளி கோயிலில் சரஸ்வதி பூசை நாளன்று எங்கள் குடும்பத்தின் 9 ஆம் திருவிழா. ( இன்றும் இந்தத் திருவிழா எங்கள் குடும்பத்தினரால் நடத்தப்பட்டுவருகிறது.)
திருவிழா பார்த்துவிட்டு வந்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை தட்டி எழுப்பியவர் எங்கள் மயில்வாகனன் மாமா. கண்களை கசக்கி சிணுங்கியவாறு துயில் களைந்து பார்த்தபோது, " ஏன், பிள்ளையை எழுப்புறீங்க?" என்று அம்மா கடிந்தார்.
" இன்று நாம் தமிழ்ப்பாடசாலை தொடங்குகிறோம். இவனையும் சேர்க்கப்போகின்றோம்" என்றார் மாமா.
" உங்கள்  பாடசாலை எத்தனை நாட்களுக்கு நடக்கும்? " எனக்கேட்டார் அம்மா.
" பல காலம் நடக்கும். இருந்து பாருங்கள்"  என்றார் மாமா.
அந்த மாமாவும் அம்மாவும் இன்றில்லை. அந்தப்பாடசாலைக்கு வித்திட்டவர்கள், உருவாக்கியவர்கள், முதல் அதிபராக இருந்தவர், தொடக்க காலத்தில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் எவரும் இன்றில்லை!
ஆனால், ஆழ்போல் தழைத்து அருகுபோல் வேரூண்றிய அந்தப்பாடசாலை பெரு விருட்சமாக அந்தப்பிரதேச தமிழ் மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக மேற்கிலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக இன்று திகழ்கின்றது.
" உங்கள்  பாடசாலை எத்தனை நாட்களுக்கு நடக்கும்? " எனக்கேட்ட  எமது அம்மாவின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களின் குழந்தைகளும் அங்கே படித்தார்கள் - படிக்கிறார்கள். நீங்களும்தான் படித்தீர்கள் என்று எனது மகள்மாருக்குச்சொன்னதும், தங்கள் ஆசிரியர்களின் பெயர்களைச்சொன்னார்கள்.
இக்காலத்து மாணவர்கள் தமது ஆசான்களை பாடசாலை விட்டு வெளியேறியதும் மறந்துவிடுகிறார்கள் என்றும் சொல்லமுடியாது! சமகாலத்தில் முகநூல் கலாசாரம் வந்ததும், தேடித்தேடி தொடர்புகளை பேணிக்கொள்கிறார்கள். எனது மனைவி மாலதியும் அதே கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தவர். அத்துடன் அங்கே ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.
மாலதியின் மாணவர்கள் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலுமிருந்து முகநூல் வாயிலாக தொடர்புகொள்வதை அவதானிக்கின்றேன். நான் சென்ற நாடுகளில் அவர்களையும் சந்தித்திருக்கின்றேன்.
" உங்களை பிரான்ஸிலிருந்து  அழைப்பதன் பின்னணி என்ன? " எனக்கேட்டாள் மூத்த மகள் பாரதி.
அதற்கும் ஒரு கதை இருக்கிறது! யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில், "சொல்லத்தவறிய கதைகள்"  என்ற தொடரை எழுதினேன். இருபது அங்கங்களில் நிறைவுற்றது. அந்தத் தொடரில்  சில ஆக்கங்கள்  தேனி ( ஜெர்மனி) பதிவுகள் ( கனடா) தமிழ்முரசு - அக்கினிக்குஞ்சு ( அவுஸ்திரேலியா) முதலான இணைய இதழ்களிலும்  மல்லிகை - தினக்குரல் ( இலங்கை) ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
அந்தத் தொடரில் ஒரு அங்கம்  எனது முதல் ஆசான் பண்டிதர் க. மயில்வாகனன் பற்றியது.  அவர் எனது பால்யகாலத்தில் என்னை ஒரு கரகாட்டக்கலைஞனாக பார்த்து ரசித்த கதை அதில் சொல்லப்பட்டிருந்தது. யாழ். காலைக்கதிரில் அதனைப்பார்த்த பண்டிதரின் மகன் பாபுஜி, குறித்த பத்திரிகையின் நறுக்கை சமகால தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாக அய்ரோப்பாவிலிருந்த தனது சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பிவிட்டார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் எனது மின்னஞ்சலுக்கு நோர்வேயிலிருந்து ஒரு மடல் வந்தது. எழுதியிருந்தவர் தியாகராஜா உமைபாலன்.
தான் பண்டிதரின் மூத்த சகோதரனின் பேரன் என்றும் அறிமுகப்படுத்தியிருந்தார். 1919 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்திருக்கும் பண்டிதரின் நூற்றாண்டு தினம்  2019 ஜனவரி இறுதியில் வருகிறது. அதற்கான விழாவை பிரான்ஸில் வதியும் அவரது மக்கள் மருமக்களும் மற்றும் உறவினர்களும் முன்னெடுக்கவிருப்பதாகவும், விழாக்குழுவில் தானும் இருப்பதாகவும், வெளியிடப்படவிருக்கும் மலரில் பங்களிப்புச்செய்வதுடன் விழாவுக்கு அவசியம் வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த அழைப்பின் ரிஷிமூலம் நான் பண்டிதர் பற்றி எழுதியிருந்த சொல்லத்தவறிய கதைதான்! எமது ஆசான் பண்டிதர் மயில்வாகனன் அவர்கள் என்னையும் எனது பால்யகாலத்தில் எங்கள் ஊரில் அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களையும் சராசரி மாணவர்களாகப்  பார்க்கவில்லை. தனது சொந்தப்பிள்ளைகளாகவே அன்பு பாராட்டியவர்.
அந்த  சொல்லத்தவறிய கதையில் அவரது பரிவு - கண்டிப்பு - தந்தைக்கு நிகரான பாசம் பற்றியெல்லாம் நெகிழ்ச்சியுடன் எழுதியிருக்கின்றேன். இந்த பயணியின் பார்வையில் தொடரை படிக்கும் வாசகர்கள் அதனையும் படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், கடந்து வருகின்றேன்.
உமைபாலன் தினமும் என்னுடன் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டார். மலருக்கு வந்த ஆக்கங்களை அடுத்தடுத்து அனுப்பிக்கொண்டிருந்தார். அவற்றை ஒப்புநோக்கி - செம்மைப்படுத்தி கொடுத்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பண்டிதரின் பிள்ளைகள் மகேசானந்தன், சிவானந்தன் ஆகியோரும் தொலைபேசியில் தொடர்பிலிருந்தனர்.
பண்டிதர் நூற்றாண்டு மலர் பூர்த்தியாகி அச்சுக்குத்தயாரானது. எனினும் அதில் அச்சுப்பிழைகள் நேர்ந்துவிடக்கூடாது என்பதில், உமைபாலன் மிகுந்த அக்கறையோடு உழைத்தார்.
அவர், இலங்கையில் வட்டுக்கோட்டையில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் பண்டிதரிடம் தமிழ் கற்றவர். பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்தவர். எனக்கும் உமைபாலனுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தன.
இருவரும் பண்டிதரிடம் தமிழ் கற்றவர்கள். பொதுப்பணிகளில் ஆர்வமுடையவர்கள். இருவருமே 1987 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியே புலம்பெயர்ந்தவர்கள். நான் அவுஸ்திரேலியாவுக்கும் அவர் நோர்வேக்கும்  வந்தவர்கள். ஊடகத்துறையில் ஈடுபடுபவர்கள். இலக்கியம் - கல்வி சார்ந்த பணிகளில் விமர்சனங்களை ஏற்றவாறு அயராமல் ஈடுபடுபவர்கள். என்னைவிட வயதால் இளைமையானவராயிருந்தாலும் சமூகப்பணிகளில் சக பயணியாக இணைந்திருப்பவர். இத்தனைக்கும் நான் அவரது முகத்தையும் பார்த்ததில்லை. தினமும் எம்மிருவருக்கும் இடையில் உரையாடல் நிகழ்ந்தமையால் நெருக்கம் அதிகரித்தது.
இறுதியில் அழைப்பிதழ் - நிகழ்ச்சி நிரல் யாவும் தாயாரித்துவிட்டு,  அதன் வடிவமைப்புகளுடன் தொடர்புகொண்டார். எனது இலக்கிய நண்பர்கள் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ( இலங்கை) பேராசிரியர் பாலசுகுமார் (இங்கிலாந்து) ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இவர்கள் இருவரும் குறிப்பிட்ட மலரிலும் ஆக்கங்கள் எழுதியிருந்தவர்கள்.
உமைபாலன்,  நோர்வேக்கு வந்தபின்னரும் கல்வியை தொடர்ந்திருக்கிறார். கலை, இலக்கிய மற்றும் தமிழ் ஊடகத்துறை ஈடுபாடு அவரை அவை சார்ந்த துறைகளிலும் இயங்கவைத்துள்ளது.
அவற்றில் உள்ளார்ந்த ஈடுபாடு மிக்கவர்கள் உலகின் எந்தப்பாகத்திற்குச்சென்றாலும், அந்த இயல்புகளுடன்தான் இயங்குவார்கள் என்பதற்கு உமைபாலனும் ஒரு சாட்சி. வடக்கு நோர்வேயில் தனது நண்பர்களுடன் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் ஊடாக தாயக உறவுகளுக்கு உதவுவதில் முன்னின்று உழைப்பவர். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ்முரசம் வானொலியில் பணியாற்றுகிறார்.
அத்துடன் அங்கு கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். புகலிட நாடுகளில் எமது குழந்தைகளுக்கு எவ்வாறு தமிழை  கற்பிப்பது தொடர்பாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர்.
புலத்தில் தமிழ் என்ற விரிவான நூலை வெளியிட்டுள்ளார். இதனை அவர் அங்கம் வகிக்கும் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் சார்பாக பதிப்பித்துள்ளார். 
அதனால், பண்டிதர் மயில்வாகனன் அவர்களின் நேரடி வாரிசு என்றும் இவரை அழைக்கமுடியும். பண்டிதரும் தனது வாழ்வில் பெரும்பகுதியை தமிழ் மாணவர்களுக்கான நூல்களை எழுதுவதிலும், இலக்கண சுத்தமாக கட்டுரைகள் எழுதுவதற்கு பயிற்றுவிப்பதிலும் செலவிட்டவர்.
உமைபாலனின் அயராத உழைப்பு என்னை பெரிதும் கவர்ந்தது. பண்டிதரின் நூற்றாண்டு விழாவை முன்னெடுப்பதில் அவர் காண்பித்த ஆர்வமும் அக்கறையும் முன்னுதாரணமானது.
தங்களுக்கு கற்பித்த ஆசிரியப்பெருந்தகைகளை மறந்துவிடாமல் தொடர்ச்சியாக அவர்களை  நினைவுகூரத்தக்க ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுப்பவர்கள் சமூகத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்கள்.
அத்திவாரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், பிரமாண்டமான கட்டிடங்களும் வியப்புத்தரும் கோபுரங்களும் அத்திவாரங்களில்தான் தங்கியிருந்து வாழ்கின்றன. அந்த அத்திவாரங்களின் மகத்துவத்தை வெளியுலகிற்கு தெரியவைத்து  சமூகத்திற்கு உணர்த்துபவர்கள் -  "ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் -  போருக்கு நின்றிடும்போதும் - உளம் பொங்குதல் இல்லாத அமைதி ஞானம்" என்ற மகாகவி பாரதியின் கூற்றையும் நினைவுபடுத்துகிறார்கள்.
( பயணம் தொடரும்)

-->No comments: